Published:Updated:

ஆண்களுக்கு தாடி, பெண்களுக்கு மீசை... ஆரம்பம் நோ ஷேவ் `நவம்பர்'!

நோ ஷேவ்
நோ ஷேவ் ( Blackpearl photography )

ஆரம்பித்துவிட்டது `நோ ஷேவ் நவம்பர்' ஃபீவர். இது எங்கிருந்து தொடங்கியது தெரியுமா?

சிகாகோவில் வசித்துவந்த மாத்யூ, பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தபின் அவருடைய பிள்ளைகள், வலைதளத்தில் ஆரம்பித்ததுதான் `நோ ஷேவ் நவம்பர்' எனப்படும் அமைப்பு. இந்த அமைப்பின்மூலம் திரட்டப்படும் நிதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

குடும்பத்தினருடன் மாத்யூ
குடும்பத்தினருடன் மாத்யூ
today.com

நவம்பர் மாதம் தொடங்கியதும் மீசை, தாடி வளர்க்க ஆரம்பித்து நவம்பர் முடிவில் ஷேவ் செய்துகொள்ள வேண்டும். ஒரு மாதம் முழுவதும் ஷேவ் செய்யச் செலவாகும் தொகையை மிச்சப்படுத்தி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, புற்றுநோய் வருமுன் காப்பதற்கு எனப் பல்வேறு விஷயங்களுக்கு வழங்கப்படுகிறது. 

2009-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின்மூலம் முதன்முதலாகத் திரட்டப்பட்ட நிதி ரூ.1,41,808. கடந்த வருடம் திரட்டப்பட்ட நிதி ரூ.10,35,29,330. 2013-ம் ஆண்டு இந்த அமைப்பின் தீவிரச்செயல்பாட்டினால் அமெரிக்க கேன்சர் சொசைட்டி `நோ ஷேவ் நவம்பர்' அமைப்புடன் கைகோத்தது.   

நோ ஷேவ் நவம்பர்
நோ ஷேவ் நவம்பர்
no-shave.org

சாமான்ய மனிதர்கள் முதல் சினிமா பிரபலங்கள்வரை அனைவரிடமும் சென்றடைந்திருக்கும் இந்த `நோ ஷேவ் நவம்பர்' அமைப்பில் இணைவதற்கு அவர்களுடைய வலைதளத்தில் தனி நபராகவோ குழுவாகவோ பதிவு செய்துகொள்ளலாம். 

இந்தியாவில் 2015-ல் சிறிதுசிறிதாகப் பரவத்தொடங்கி கிட்டத்தட்ட பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மோலிவுட் எனப் பல சினிமா பிரபலங்கள் மீசை, தாடியுடன் வலம் வந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் பிரேமம் ஹீரோ நிவின் பாலியின் மூலம்தான் இளைஞர்கள் முதல் சாமான்ய மக்கள் வரை அனைத்துத் தரப்பையும் மீசை, தாடி கலாசாரம் சென்றடைந்தது. 

நிவின் பாலி
நிவின் பாலி

பிரேமம் நிவின் பாலியின் மூலம் பெண்களுக்கும் தாடி கலாசாரம் பிடித்துப்போக, எல்லா இளைஞர்களும் தாடி வளர்க்க ஆரம்பித்தனர். `நோ ஷேவ் நவம்பர்' தொண்டு நிறுவனத்தின் இந்தப் பயணம் பிரபலங்களின் மூலம், உலக அளவில் வேகமாகப் பரவ ஆரம்பித்துவிட்டது.

சேவைக்காக ஆரம்பித்த விஷயம் டிரெண்டாக மாறியது.  ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ், மாதவன், எஸ்.ஜே.சூர்யா, ஜி.வி.பிரகாஷ், சிம்பு, அருண் விஜய், சசிகுமார், விஜய் ஆண்டனி, அதர்வா, சந்தானம் எனக் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் ஹீரோக்களும் மீசை தாடியுடன் வலம்வர ஆரம்பித்தனர்.

ரஜினி, விஜய்சேதுபதி, அஜித், மாதவன், தனுஷ்
ரஜினி, விஜய்சேதுபதி, அஜித், மாதவன், தனுஷ்
indiatoday.in varnam.my instagram

சேவை நோக்கத்துடனோ அல்லது ஸ்டைலுக்காகவோ, மீசை, தாடி வளர்ப்பவர்கள் அனைவருமே அதைத் தவறாமல் பராமரிக்க வேண்டும். தலைமுடியைவிடவும் மீசை, தாடியை அதிக அக்கறையுடன் பராமரிக்க வேண்டும். முகத்தின் சருமம் மிகவும் சென்சிட்டிவானது என்பதால் பராமரிக்கப்படாத தாடி மீசையால் சருமப் பிரச்னைகள் ஏற்படும்.

வெளியே சென்று வீடு திரும்பியதும் முகத்தைக் கழுவுவதோடு நிற்காமல், தினமும் தவறாமல் தாடியை நன்கு அலசவேண்டும். இல்லாவிட்டால் சருமத்தில் முகப்பருக்களும் பொடுகும் வரலாம். 

மீசை, தாடி பராமரிப்பு பொருள்கள்
மீசை, தாடி பராமரிப்பு பொருள்கள்

மீசை, தாடியைப் பராமரிப்பதற்காகவே சந்தையில் நிறைய தயாரிப்புகள் கிடைக்கின்றன. இதில் முடி நன்கு வளர்வதற்கான எண்ணெய், ஷாம்பூ, வீட்டிலேயே மீசை, தாடியை ட்ரிம் செய்துகொள்வதற்கான கத்தரிக்கோல், விரும்பிய வடிவத்தில் ஷேப் செய்துகொள்வதற்கான ஷேப்பிங் ஸ்கேல் போன்ற பல பொருள்கள் கிடைக்கின்றன. 

`நோ ஷேவ் நவம்பரை'ப் போன்று `மோவம்பர் (Mo - Moustache + November = Movember) என்ற ஓர் அமைப்பும் உள்ளது. இதில் உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன் விதிமுறைப்படி தாடியை வளர்க்காமல் மீசையை மட்டும் வளர்க்க வேண்டும். நவம்பர் மாதம் முழுக்க மீசையை வளர்ப்பதோடு, ஆண்களின் மனநலம், ஆண்களுக்கு வரக்கூடிய புற்றுநோய்கள் மற்றும் தற்கொலை எண்ணத்தைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நிதி திரட்டி `மோவம்பர்' அமைப்பின் மூலம் ஆண்களின் நலன் குறித்த விஷயங்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த வருடம் `பில்லி' எனும் ரேஸர் பிராண்டு `பெண்களுக்கும் மீசை இருக்கிறது' என உலகுக்குச் சொல்லும் விதமாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதில் ஹார்மோன் குறைபாடுகளால் பெண்களுக்கு மேல் உதட்டின் மேல் ஏற்படும் ரோம வளர்ச்சியை இயல்பாக அணுக வலியுறுத்துகிறது. இதன் மூலமாக, பெண்களையும் `மோவம்பரி'ல் பங்களிக்க இது அழைக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு