Published:Updated:

`போனி டெயில்' பார்பி டால் இனி வெண்புள்ளிகளுடன்..!- விழிப்புணர்வு ஏற்படுத்தும் கியூட் பார்பிஸ்

பார்பி
பார்பி

கடந்த ஐந்து வருடங்களில் உலகளாவிய பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக மொத்தம் 170-க்கும் மேற்பட்ட வெவ்வேறு தோற்றங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது மேட்டல் நிறுவனம்.

`பார்த்தல் பல்பு எரிய..

`பார்பி டால்' போல..

போனி டெயிலோட..

தேவை கேர்ள் ஃபிரெண்டுதான்"

என்று பல இளைஞர்களின் கனவு தேவதைகளுக்கான உருவகமாக மாறியிருக்கும் பார்பி தற்போது புதிய தோற்றதைப் பெற்றிருக்கிறது.

Barbie with Vitiligo
Barbie with Vitiligo

ஏராளமான பொம்மைகள் மார்க்கெட்டில் குவிந்திருந்தாலும் `பார்பி' பொம்மைகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. ஆரம்பத்தில் ஒரே உடையில் வலம்வந்துகொண்டிருந்த பார்பிகள் நாளடைவில் வெவ்வேறு உடை மற்றும் வண்ணங்களில் வரத் தொடங்கின. இதன் புதிய பரிணாமமாக 2020-ம் ஆண்டின் முதல் வரவாக `விட்டிலிகோ பார்பி' பொம்மைகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

வெளிர் நிறம், அழகிய முகம், பெரிய கண்கள், மெல்லிய இடை, நீண்டு சுருண்ட தலைமுடி என அழகின் அம்சமாக பெரும்பாலான குழந்தைகளின் கையில் தவழும் பொம்மை பார்பி. ஆரம்பத்தில் மேற்கத்திய நாடுகளின் பிரதிபலிப்பைக்கொண்டு தயாரிக்கப்பட்டாலும், நாளடைவில் ஒவ்வொரு நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன.

Ken with Long Hair
Ken with Long Hair

இனம், மதம் என எந்தவிதப் பாகுபாடுகளும் இன்றி கறுப்பின பார்பி, பருமனான பார்பி என அழகியலின் மாற்றத்தை பொம்மைகள் மூலம் கொண்டுவந்தனர்.

கடந்த செய்வாய்கிழமையன்று மேட்டல் நிறுவனம், சரும நிற மாற்றத்துக்குக் காரணமாக இருக்கும் `பிக்மென்ட்' குறைபாட்டால் ஏற்படும் வெண்புள்ளி பாதிப்பு (`விட்டிலிகோ') கொண்ட ஒரு புதிய பார்பி பொம்மையை அறிமுகம் செய்திருக்கிறது. பார்பி பொம்மையின் நண்பனான கென் எப்போதும் ஷார்ட் ஹேர்ஸ்டைலில்தான் இருப்பார். ஆனால், அவருடைய உருவம் நீண்ட கூந்தல் கொண்டு தயாரிக்கப்பட்ட பொம்மையாக வெளியிடப்பட்டிருக்கிறது.

Barbie dolls
Barbie dolls
`சிவில் உரிமைகளின் முதல் பெண்மணி' அவதாரத்தில் பார்பி!

இந்த விட்டிலிகோ பொம்மையை உருவாக்குவதற்கு முன்பு, பார்பி நிறுவனம் சரும நோய் மருத்துவர்களிடமிருந்து ஆலோசனைகளையும் பெற்றிருக்கிறது. இந்தப் புது வடிவ பொம்மைகள் 2020-ம் ஆண்டின் ஃபேஷனிஸ்ட்டா வரிசைக்கான வெளியீட்டின் ஒரு பகுதிதான். மேலும், மாற்றுத்திறனாளிகள், சமூகப் போராளிகள், முடியில்லா பொம்மைகள் எனக் கடந்த ஐந்து வருடங்களில் உலகளாவிய பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக மொத்தம் 170-க்கும் மேற்பட்ட வெவ்வேறு தோற்றங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது மேட்டல் நிறுவனம்.

பொம்மையில் சமூக சிந்தனையையும் புகுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன இந்த கியூட் பார்பிஸ்.

பின் செல்ல