Published:Updated:

`ஆண்கள் ஏன் புடவை அணியக் கூடாது..?' - `டை அண்டு சாரி டே’யில் அசத்திய கல்லூரி மாணவர்கள்

புடவைகளை ஏற்பாடு செய்வதில் எங்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தன. மேலும், புடவை உடுத்துவதும் மிகவும் கடினம் என்று நாங்கள் உணர்ந்துகொண்டோம்.

புனே மாணவர்கள்
புனே மாணவர்கள்

ன்னதான் ஆண்-பெண் பாலின சமத்துவம் மேம்பட்டு வருகிறது என்று சொன்னாலும், சில விஷயங்களை மாற்றவே முடியாது. அதில் ஒன்று, பெண்களின் ஆடைகள் குறித்து ஆண்களால் எழுப்பப்படும் கேலிகளும் கிண்டல்களும். ஆண்களைக் கேலிசெய்ய, `புடவையை வாங்கிக் கட்டிக்கோ' என்று எழுதப்பட்ட வசனங்களையும் காட்சிகளையும் எத்தனையோ முறை சினிமாக்களில் பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையிலும் ஓர் ஆணை கேலி செய்ய இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது நிதர்சனம்.

புனே மாணவர்கள்
புனே மாணவர்கள்

இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில் பெண்கள் ஆண்களைப்போல உடை உடுத்தவும், சிகை அலங்காரம் செய்துகொள்ளவும் தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஆண்கள்..? அதற்காக ஆண்களும் பெண்களைப்போல் ஆடை அணிய வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால், வீரம் குறைந்த ஆண்களை, புடவை கட்டிக்கொள்ளச் செல்லும் பேச்சுவழக்கை ஒழிக்க வேண்டும். விண்வெளி முதல் வயர்உமன் வரை நம் கண்களுக்கு முன்னரே சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் பெண்கள். எனவே, அவர்கள் தைரியமற்றவர்களும் அல்லர்; புடவை என்பது தைரியத்துக்குப் பொருந்தாத உடையும் அல்ல.

ஆண்கள் இது குறித்து சிந்தித்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்ற நிலையில், அப்படியொரு மாற்றத்திற்கான முன்னெடுப்பை புனேவைச் சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

புனேவில் உள்ள பெர்குசன் கல்லூரியில் இந்த வருடத்திற்கான `டை மற்றும் புடவை நாள்’(Tie and Saree day’) கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் ஆண்கள் கோட்-சூட்டிலும், பெண்கள் புடவையிலும் வருவது வழக்கம்.

புடவை
புடவை

ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஆகாஷ் பவார், சுமித் ஹொன்வாட்கர் மற்றும் ருஷிகேஷ் சனப் ஆகிய மூன்று மாணவர்கள் புடவை அணிந்து அதற்கேற்ற அலங்காரங்களுடன் வந்துள்ளனர். மாணவர்களின் இச்செயல், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து அந்த மாணவர்கள் கூறும்போது, ``பெண்கள் மட்டும்தான் புடவை உடுத்த வேண்டும்; ஆண்கள் அதை அணியக் கூடாது' போன்ற வரைமுறைகள் எங்கும் எழுதப்படவில்லை. பெண்கள் ஆண்களின் உடையை அணிகிறார்கள். ஆனால், பெண்களுக்கான உடை அவர்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டதுபோல் உள்ளது. அவர்களின் உடையை ஆண்கள் அணிவது இழிவான செயலாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்-பெண் பாலின பாகுபாடுகள் மாற வேண்டும்.

``திங்கள் கிழமையும், மிட் வீக் பிரேக்கும்!’’- ஆல் டே ஜாலிடேவாக இருக்க சின்ன டிப்ஸ்

பெண்களின் உடையை ஆண்கள் அணிவது இழிவான செயல் அல்ல. எனவே, `ஏன் ஆண்கள் புடவை அணியக் கூடாது?' என்று தோன்றியது. பெண்களின் உடைகளை ஆண்கள் அணிந்தால் அது கீழானது, கேலிக்குரியது என்ற பொது எண்ணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்விதமாக நாங்களே இதைச் செயல்படுத்தினோம்.

புனே மாணவர்கள்
புனே மாணவர்கள்

புடவைகளை ஏற்பாடு செய்வதில் எங்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தன. மேலும், புடவை உடுத்துவதும் மிகவும் கடினம் என்று நாங்கள் உணர்ந்துகொண்டோம். உதவிக்காக, நாங்கள் எங்கள் தோழி ஷ்ரத்தாவை அழைக்க வேண்டியிருந்தது. ஆடை அணிந்து விழாவில் கலந்துகொண்ட பிறகுதான், சேலை அணிவதன் சிக்கல்களைப் புரிந்துகொண்டோம். பெண்கள் ஏன் ஆடை அணிவதில் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதும் இப்போது எங்களுக்குப் புரிகிறது" என்றனர்.

மாணவர்களின் செயலையும் அதற்கான காரணத்தையும் அறிந்த கல்லூரி பேராசிரியர்களும் சக மாணவ-மாணவிகளும் புடவை அணிந்து வந்த புரட்சியாளர்கள் மூவரையும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.