Published:Updated:

அடிக்கடி ஷாப்பிங்... அது அடிக்‌ஷனாக மாறாமலிருக்க அவசிய ஆலோசனைகள்!

தேவைக்கு மீறியும், வருமானத்துக்கு அதிகமாகவும் செலவு செய்பவர்களுக்கு நிச்சயம் உதவி தேவை. அவற்றைச் சரி செய்யாவிட்டால் மற்ற போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதைப் போன்று இதற்கும் அடிமையாகிப் பல பிரச்னைகளைச் சந்திப்பார்கள்.

'பார்த்ததும் பிடித்திருந்தால் வாங்கிவிடுவேன்' என்பது முதல் 'ஒன்றுக்கு நூறு முறை விசாரிக்காமல் எந்தப் பொருளையும் வாங்கவே மாட்டேன்' என்று கூறும் ஸ்ட்ரிக்ட் பையர்ஸ்வரை ஏராளமான ஷாப்பர்ஸ், மால்களிலும் இணையங்களிலும் உலா வந்துகொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நீங்கள் எந்த வகையான ஷாப்பர் என்பதைப் பார்க்கலாமா...

Shopping
Shopping

இம்பல்ஸ் ஷாப்பர்:

தேவை இல்லையென்றாலும், அந்தப் பொருளுக்காக ஒரு தேவையைப் புதிதாக உருவாக்கி அதை நியாயப்படுத்தப் போராடும் கூட்டத்தினர்தான் இம்பல்ஸ் ஷாப்பர்ஸ். சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஜோடி சாக்ஸ் வாங்கச் சென்று இரண்டு ஜோடி காலணிகள் வாங்கி வருபவர்கள்.

Impulse Shoppers
Impulse Shoppers

இவர்கள் எப்போதும் இன்ஸ்டன்ட் முடிவு எடுப்பவர்கள். பொருள்கள் வாங்குவதற்காக இவர்களுக்கென்று எந்தவித எண்ணமும் இருக்காது. பார்க்கும் பொருள் பிடித்துவிட்டால் உடனே பில்லிங் கவுன்டருக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள். பொதுவாகவே இவர்கள், பொருள்களின் விலையைப் பற்றி கவலைப் படமாட்டார்கள். மேலும், தங்களின் வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஷாப்பிங் என்பது 'த்ரில் அனுபவம்.'

ஆராய்ச்சியாளர்கள்:

இவர்களிடம் ஒரு பொருளை விற்பதற்குள், கடைக்காரர் ஒரு வழி ஆகிவிடுவார். ஒரு ரூபாய் ஷாம்பூ என்றாலும் சரி பல்லாயிரம் ரூபாய் டிவி என்றாலும் சரி, எந்தப் பொருளை வாங்குவதென்றாலும் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி வேலைகளை மேற்கொண்ட பிறகே வாங்குவார்கள். வாங்கப்போகும் பொருளுக்கான ரிவ்யூஸ், கமென்ட்ஸ், பிலாக்ஸ் (Blogs) போன்றவற்றை நன்கு ஆராய்ந்த பிறகே அதை வாங்குவதற்கான முடிவையே எடுப்பார்கள்.

Researcher
Researcher

என்ன பொருளை எந்த விலைக்கு வாங்க வேண்டும் என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். மேலும், அவர்கள் வாங்கப்போகும் பொருள்களின் விலையை சந்தை விலையைவிடக் குறைத்தே கேட்பார்கள். ஏனெனில், அந்தப் பொருளின் உண்மையான தயாரிப்பு விலையை இவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். மொத்தத்தில் சிறந்த பொருளைச் சிறந்த விலையில் வாங்கும் புத்திசாலிகள் இவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேரம் பேசுபவர்கள்:

'உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் நியாமான ஒரு விலைல கொடுப்பா' போன்ற வசனங்களை நிச்சயம் ரோட்டோரக் கடைகளில் கேட்டிருப்போம். எவ்வளவோ போராட்டத்துக்குப் பிறகு கடைக்காரர் குறைத்தது 'ஒரு ரூபாய்' என்றாலும், இவர்கள் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது.

Bargainers
Bargainers

ஆஃபர் கூப்பன், ஆன்லைன் கோட்ஸ், ரிவார்டு கார்டு போன்றவை இவர்களிடம் எந்நேரமும் குவிந்திருக்கும். சலுகை குறிப்பெழுதி இவர்களிடம் சிறிய 'டைரியும்' இருக்கலாம். எந்தப் பொருளையும் மிகவும் குறைந்த விலையில் வாங்குவதற்கு இவர்களைவிடச் சிறந்தவர்கள் இல்லை. இந்த வகை ஷார்ப்பார்ஸ்க்கு கொஞ்சம் வாய் நீளம்.

விஸ்வாசிகள்:

என்னதான் சந்தையில் நூற்றுக்கணக்கில் தரமான பிராண்டுகள் இருந்தாலும், இந்த விஸ்வாசக்காரர்களுக்கு அவர்கள் உபயோகித்து வரும் பிராண்டைத் தவிர வேறெதுவும் பெரிதாகத் தோன்றாது. 'பிராண்டு' என்பது பொருள்கள் மட்டுமல்ல, இடம், கடை உள்ளிட்ட அனைத்துமே இவர்களின் கோட்பாட்டில் இருக்கும்.

Brands
Brands

ஆம், சிலர், குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் பொருள்களை வாங்கினால் மட்டுமே நிம்மதி அடைவார்கள். வேறிடத்தில் வாங்கிய பொருள்களில் எந்தவிதக் குறைபாடும் இல்லையென்றாலும் அந்தப் பொருள் மீதான இவர்களின் நம்பிக்கை குறைவாகவே இருக்கும். மொத்தத்தில் வெறித்தனமான விஸ்வாசிகள் இவர்கள்.

விண்டோ ஷாப்பர்ஸ்:

பொருள்களை வாங்குபவர்கள் மட்டும் ஷாப்பர்ஸ் அல்ல, கடையினுள் நுழைந்தாலே அவர்கள் ஷாப்பர்ஸ்தான். அந்த வரிசையில் தற்போது அதிகமாக உலா வந்துகொண்டிருப்பவர்கள் விண்டோ ஷாப்பர்ஸ். இவர்களின் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பார்வை ஒன்றே போதும். டிபார்ட்மென்டல் ஸ்டோர் முதல் ஷாப்பிங் மால்வரை சந்தையில் புதிதாக இறங்கிய பொருள்களைப் பார்ப்பதற்கு மட்டுமே செல்லும் கூட்டத்தினர்தான் விண்டோ ஷாப்பர்ஸ்.

Window Shoppers
Window Shoppers

கடைகடையாக ஏறி இறங்கி, பொருள்களைப் பார்த்து ரசித்து, 'விலை என்ன' என்று கேட்டு, சிலரோ ஆடைகள் முதல் காலணிகள்வரை உடுத்தி அழகு பார்த்து, இறுதியில் 'எனக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை' என்று கடைக்காரர்களுக்கு 'டாட்டா' சொல்லும் விநோத கும்பல் இது. என்றாலும், நம் நாட்டில் இவர்களைப் போன்ற ஷாப்பர்ஸ்தான் அதிகம்.

மற்றவர்களிடம் இருக்கிறது என்பதற்காகத் தேவையே இல்லையென்றாலும் தங்களின் வரவையும் மீறி செலவு செய்து, பொருள்களை வாங்கிக் குவிக்கும் ஏராளமானவர்களின் மனநிலை குறித்தும் பெருகிவரும் 'ஷாப்பிங் அடிக்ஷன்' பற்றியும் சுயமுன்னேற்றப் பேச்சாளர் சுரேந்திரனிடம் பேசினோம்.

Surendran
Surendran

"தற்போதுள்ள தலைமுறையினர் வருமானத்துக்கும் அதிகமாகச் செலவு செய்கின்றனர். இதுவே, பல பிரச்னைகளின் அடித்தளம். இ.எம்.ஐ, கிரெடிட் கார்டு போன்ற வசதிகள் இந்தக் காலத்தில் அதிகம். இவை மக்களைப் பெரிதும் ஈர்க்கின்றன. முன்பெல்லாம் குறைந்த வருமானம் என்றாலும், அதற்கேற்றபடி சிக்கனமாகச் செலவு செய்தனர்.

இப்போது அப்படியல்ல. 'இலவசம்', 'சலுகைகள்' உள்ளிட்ட வார்த்தைகள், வண்ண வண்ண விளம்பரங்கள் போன்றவை தேவை என்பதையும் தாண்டி சுய விளம்பரத்துக்காக அவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்துவிடுகின்றன.

Credit Cards
Credit Cards

எங்கள் ஆய்வின்படி ஒரு நாளைக்குத் தெரிந்தோ தெரியாமலோ 4,000 முதல் 6,000 மார்க்கெட்டிங் பொருள்களை ஒருவர் மொபைல், லேப்டாப், டிவி, ஹோர்டிங்ஸ் உள்ளிட்டவை மூலம் பார்க்க நேரிடுகிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினரையும் ஈர்க்கும் விதமாக இருக்கும் இந்த விளம்பரங்கள் எளிதில் மக்களை ஷாப்பிங் மால் அல்லது ஆன்லைன் பிளாட்ஃபார்ம் பக்கம் திசை திருப்பிவிடுகின்றன.

மேலும், 'ஷாப்பிங்' என்பது தற்போதைய காலகட்டத்தில் ரீடெயில் தெரபியாகிவிட்டது. 'ஷாப்பிங் சென்றால் மனம் சற்று நன்றாக இருக்கும்' என்ற மனப்பான்மை எல்லோரிடத்திலும் வந்துவிட்டது. இந்த நிலைதான் அடிக்ஷன். மற்ற எந்தவித போதை பழக்கத்தைப் போன்றும் இந்த அடிக்ஷனும் கொஞ்சம் நேர சந்தோஷத்தை மட்டுமே தரும். அதன் பின்விளைவுகள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

Shopping
Shopping
திருமணநாள்.. கேட்ஜெட்ஸ்.. ஷாப்பிங்.. இவற்றை விடவும் பரவசமான `ஒன்று’! - அசத்தலான ஆய்வு முடிவுகள்

தேவைக்கு மீறியும் வருமானத்துக்கு அதிகமாகவும் செலவு செய்பவர்களுக்கு நிச்சயம் உதவி தேவை. அவற்றை சரி செய்யாவிட்டால் மற்ற போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதைப் போன்று இதற்கும் அடிமையாகிப் பல பிரச்னைகளைச் சந்திப்பார்கள். ஷாப்பிங் செல்வது தவறல்ல. அவரவர்களுக்கான கோட்பாடுகளையும் அதன் பின்விளைவுகளையும் மனதில்கொண்டு முழு பிளானிங்கோடு ஷாப்பிங் செய்தால் நூறு சதவிகிதம் நிம்மதியான ஷாப்பிங் செய்து வரலாம்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு