Election bannerElection banner
Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோமை உற்சாகமாக்க உடைகளிலும் கவனம் செலுத்துங்கள்! சில அவசிய வழிகாட்டல்கள் #WorkFromHome

உடைகளிலும் கவனம் செலுத்துங்கள்
உடைகளிலும் கவனம் செலுத்துங்கள்

சோம்பலை உருவாக்குவதில் இந்த உடைகளுக்கு அதிக பங்குண்டு. எனவே, கலர்ஃபுல் கேஷுவல் உடைகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

`ஆசை ஆசையாக வாங்கிய உடைகளெல்லாம் அலமாரியில் உறங்கிக்கொண்டிருக்கின்றனவே' என்று ஏங்கிக்கொண்டிருக்கும் கலர்ஃபுல் பட்டாளம் ஒரு பக்கம் என்றால், `இரண்டு நாள்களுக்கு ஒரு டிரெஸ் போதாதா' என்று சோம்பல் முறிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம். ஆனால், இந்த லாக் டௌன் நாள்களை தினந்தோறும் புத்துணர்வாக்குவதில் நீங்கள் உடுத்தும் உடைக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது.

Work From Home
Work From Home

``இந்த லாக் டௌன் நாள்களில் தினமும் ஃப்ரெஷ் லுக் பெறுவதற்கு, இதையெல்லாம் முயற்சி செய்து பாருங்கள். வீட்டிலேயே முடங்கி மனஉளைச்சலில் சிக்கித் தவிப்பவர்கள் நிச்சயம் வித்தியாசத்தை உணர்வீர்கள்" என்று உற்சாகமாய் பல சுவாரஸ்ய குறிப்புகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார் ஆடை வடிவமைப்பாளரும் ஸ்டைலிஸ்ட்டுமான தீக்ஷிதா நிக்கம்.

``இந்த க்வாரன்டீன் நாள்களில் வீட்டில் இருப்பவர்களை பிசியாக வைத்திருப்பது சமையலும் உடைகளும்தான். ஆனால், உடைகள்மீது நாம் அவ்வளவு கவனம் செலுத்துவதேயில்லை. உடையைப் பொறுத்தவரை அனைவரும் கவனத்தில்கொள்ளவேண்டியது கம்ஃபோர்ட்.

Casual wear
Casual wear

வீட்டிலிருந்தாலும் வெளியில் சென்றாலும் நாம் உடுத்தும் உடை நமக்கு வசதியானதாக இல்லையென்றால், நிச்சயம் நம்மீது நமக்கே நம்பிக்கை இருக்காது. செய்யும் வேலையைவிட்டு உடைகள் மீதே அதிக கவனம் செலுத்துவோம். அதனால், மெல்லிய துணியிலான ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள். வீட்டிலிருக்கும் நேரங்களில் முழுநீளக்கை உடைகளை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

தற்போதையசூழலில் ஏராளமானவர்கள் வீட்டிலிருந்தபடி வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பெரும்பாலானவர்களுக்கு `வீட்டில்தான் இருக்கிறோம், நைட்டி அல்லது ஷார்ட்ஸ் அணிந்தபடி வேலை செய்யலாம்' என்ற மனநிலை ஏற்படும். இது மிகவும் தவறான விஷயம். இதுபோன்ற உடைகள் வேலை செய்கிற மனப்பான்மையை முற்றிலும் மாற்றிவிடும். சோம்பலை உருவாக்குவதில் இந்த உடைகளுக்கு அதிக பங்குண்டு. எனவே, கலர்ஃபுல் கேஷுவல் உடைகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

Colors
Colors

நிறைய பேருக்கு விதவிதமான உடைகளை உடுத்தி அலுவலகம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும். ஆனால், அலுவலகக் கட்டுப்பாடு காரணமாக அவற்றை உடுத்தமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும். உங்களுக்குப் பிடித்த உடைகளை அணிந்து அலுவலக வேலையை வீட்டிலிருந்தபடியே பார்ப்பதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ஊரடங்கு நேரம்தான். தினம் ஒன்றை அணிந்து கூடுதல் உற்சாகத்துடன் வேலை பாருங்கள்.

நம் உணர்ச்சிகளுக்கும் நிறத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு. பிரைட் நிறங்கள் உங்களைச் சுறுசுறுப்பாக்கி வைத்திருக்க உதவும். டார்க் நிறங்கள் சோம்பல் உணர்வைத் தரும். கறுப்பு, கருஞ்சிவப்பு போன்ற அடர்ந்த நிறங்கள் இறுக்கமான மனநிலையை ஏற்படுத்தும். மேலும், இவை வியர்வையை அதிகப்படுத்தி தேவையில்லாத கோபத்தையும் ஏற்படுத்தும். எனவே, வொர்க் ஃப்ரம் ஹோமில் டார்க் நிறங்களைத் தவிர்த்து பிரைட் நிறங்களை உபயோகப்படுத்துங்கள்.

Twinning
Twinning

குடும்பத்தோடு இணைந்திருக்கும் இந்த க்வாரன்டீன் நாள்களை மேலும் சுவாரஸ்யமாக்க, `ட்வின்னிங்' கான்செப்ட் கொண்டுவரலாம். அதாவது, அம்மா, அப்பா, குழந்தைகள் என அனைவரும் ஒரேமாதிரியான அல்லது ஒரே நிறத்திலான உடைகள் அணிந்து இந்த நாள்களைக் கொண்டாடலாம். குடும்பம் முழுவதும் ஒன்றாக இருக்கும் இந்தக் காலத்தை ஏன் மிஸ் பண்ண வேண்டும். உடனே ட்வின்னிங் பண்ணுங்கள்.

குழந்தைகளுக்குப் பழம் காய்கறிகள், வண்ணத்துப்பூச்சிகள் டிசைன்களிலும் கார்ட்டூன் கதாபாத்திரங்களிலும் விதவிதமான ஆடைகளை வீட்டிலிருந்தபடியே உருவாக்கி அவற்றை உடுத்தி அழகு பார்க்கலாம். கூடவே அவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். அலுவலகம் செல்லும் ஆண்கள், அவசர அவசரமாக ஏதோ ஓர் உடையணிந்து செல்வார்கள். அவர்கள் இந்த க்வாரன்டீன் நாள்களைப் பயன்படுத்தி `மிக்ஸ் அண்ட் மேட்ச்' செய்து பார்க்கலாம். அலுவலகம் திறந்ததும், அந்த ஸ்டைலில் அசத்தலாம்.

தீக்ஷிதா நிக்கம்
தீக்ஷிதா நிக்கம்

'எனக்குப் புடவை கட்டத் தெரியாதே' என்பதை ஏராளமான பெண்கள் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டாகப் பயன்படுத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான டிரேப்பிங் (draping) ஸ்டைல்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்ளலாம். ஆண்கள் வேஷ்டி மற்றும் `டை (Tie)' கட்டிப் பழகிக்கலாம். இப்படி உடைகளிலும் ஏராளமான வகைகளில் முயற்சிகள் செய்து, போரடிக்கும் க்வாரன்டீன் நாள்களை கலர்ஃபுல்லாக்கலாம்"

மனநிறைவான நேரமே மனச்சோர்வுக்கு மருந்து... க்வாரன்டீன் நாள்களை சுறுசுறுப்பாக்கும் டிப்ஸ்! #StayHome
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு