Election bannerElection banner
Published:Updated:

மைக்கேல் ஜாக்ஸன் தொப்பி, இளையராஜா குர்தா, விஜயலட்சுமியின் பொட்டு... இசைஞர்களின் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்!

பாப் மார்லே முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை, இசையோடு தங்களின் காஸ்ட்யூம்களையும் டிரெண்ட் செட் செய்த இசையமைப்பாளர்கள் இவர்கள்.

'இசையோடு வந்தோம்

இசையோடு வாழ்வோம்

இசையோடு போவோம்

இசையாவோம்..!'

ஆம், நம் வாழ்க்கையில் எல்லா காலகட்டங்களிலும் இசை முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்பை இரட்டிப்பாக்கவும், கண்ணீருக்கு ஆறுதலாகவும், கோபத்துக்கு வடிகாலாகவும் என... இசை பலருக்கும் இங்கே தோழன், தோழி, தெரபி. இசை மீது உள்ள காதலால், இசைக் கலைஞர்களின் அன்றாட வாழ்க்கையைப் பின்பற்றும் ஏராளமானவர்கள் உலகில் இருக்கிறார்கள். அந்த வகையில், பாப் மார்லே முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை இசையோடு தங்களின் காஸ்ட்யூம்களையும் டிரெண்ட் செட் செய்த இசையமைப்பாளர்கள் இவர்கள்.

2
Bob Marley ( Pinterest )

சர்வதேச ஃபேஷன்

கலகக்கார பாப் மார்லே

''இசையில் ஸ்வரங்களை மட்டுமல்ல, அரசியலையும் சேர்க்கலாம்'' என்று உலகிற்குப் பாடம் எடுத்தவர், பாப் மார்லே. சென்ற நூற்றாண்டில், பலரின் பேச்சிலர் அறைகளைத் தன் புகைப்படத்தால் அலங்கரித்தவர். மார்லே, தனது இசையின் மூலம் அரசியல் மற்றும் கலாசாரத்தைத் தொடர்ந்து ஊக்குவித்துக்கொண்டிருந்தார். அவர் உடுத்திய ஆடையிலும் அரசியல் இருந்தது. பாப் மார்லே உடுத்தும் வரை, ராணுவ உடை என்பது சர்வாதிகாரிகள் மற்றும் புரட்சியாளர்களுக்கான உடையாக மட்டுமே இருந்தது. ஆனால், ரஸ்தா கொடி நிறத்திலான தொப்பி அணிந்திருக்கும் மார்லே, இந்த மிலிட்டரி உடையான M-65-யை அணிந்த நாள் முதல் புதிய புரட்சி உருவானது என்று சொல்லலாம். இப்படி ஆடையிலும் புரட்சியை உருவாக்கியவர் மார்லே. இந்த உடையில் இருக்கும் ஆழமான முன் பைகளைத் தன்னுடைய 'கஞ்சா' சேமிப்பிற்காகப் பயன்படுத்தினார் மார்லே என்று சொல்லப்படுவதுண்டு.

3
Michael Jackson ( Pinterest )

'கிங் ஆஃப் பாப்' மைக்கேல் ஜாக்ஸன்

நீண்ட சுருண்ட முடி, தலைக்கு ஃபெடோரா (Fedora) தொப்பி, கைக்கு கறுப்புக் கையுறை, காலுக்கு வெள்ளை சாக்ஸ் மற்றும் கறுப்பு லோஃபர்ஸ் (Loafers), கண்களுக்கு கறுப்புக் கண்ணாடி... உருவமே இல்லையென்றாலும் இவை அனைத்தையும் இணைத்தாலே மைக்கேல் ஜாக்ஸன் இன்றி வேறு யாராக இருக்க முடியும்?! பாப் இசையில் மட்டுமல்ல, தன் தனித்துவமான நடனத்தால் உலகையே தன்வசமாக்கியவர். சீக்வென்ஸ், க்ளிட்டர்ஸ் என்று ஆடைகளில் ஏராளமான புதுவித ஸ்டைல்களை அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டே இருந்தார். 2009-ம் ஆண்டு இவ்வுலகைவிட்டுப் பிரிந்தாலும், ஜாக்ஸனின் ஸ்டைலை அப்படியே பின்பற்றும் ஏராளமான ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

4
M S Vishwanathan

வெள்ளையில் வித்தியாசம்

'மெல்லிசை மன்னன்' எம்.எஸ்.விஸ்வநாதன்

'மழைக்காகத்தான் மேகம்!

அட, கலைக்காகத்தான் நீயும்!

உயிர் கலந்தாடுவோம் நாளும், மகனே வா...'

இந்தக் குரலுக்கு சொந்தக்காரர், எம்.எஸ்.விஸ்வநாதன். நெற்றி நிறைய விபூதி மற்றும் சந்தனம், பெரிய குங்குமம், வெள்ளை நிற முழுநீளக்கை சட்டை, வெள்ளை வேட்டி. இந்த உடையில்தான் மெல்லிசை மன்னரை எப்போதும் பார்க்க முடியும். சுமார் 1,200 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் எம்.எஸ்.வி, 'காதல் மன்னன்', 'காதலா காதலா' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். 'காதலா காதலா' திரைப்படத்தில், வார்த்தைக்கு வார்த்தை 'முருகா முருகா' என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். நிஜ வாழ்க்கையிலும் எம்.எஸ்.வி அப்படித்தான். திரைப்படத்திற்காக உடையில் சில மாற்றங்கள் செய்திருந்தாலும், தீவிர முருகன் பக்தரான இவர், விபூதி வைக்காமல் இருந்ததில்லை. தமிழ் இசையுலகில் பலருக்கும் முன்னோடியாக இருக்கும் இவர், அந்தக் கால 'இசைக் கலைஞன்' தோற்றத்திற்கு டிரெண்ட் செட் செய்தவர்.

5
Ilaiyaraja

'இசைஞானி' இளையராஜா

காதல் பிறந்ததும் - 'இளைய நிலா பொழிகிறதே...

'காதலில் ஊடலா? -'ஈரமான ரோஜாவே...'

மனச்சோர்வுக்கு - 'நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்...'

பயண நேரத்திற்கு - 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...'

ஆடலுக்கு - 'அடியே, மனம் நில்லுன்னா நிக்காதடி...'

அவ்வளவு ஏன், புத்தாண்டு என்றாலே இன்றைக்கும் 'இளமை இதோ இதோ' பாடல் ஒலிக்காத புது வருடமே இல்லை.

Ilaiyaraja

இப்படி ஒவ்வோர் உணர்வையும் எந்தக் காலகட்டத்திலும் இசையால் கட்டிப்போடும் ஞானி, இளையராஜா. இவரின் உடை அடையாளம் என்னவோ வெள்ளை முழுநீளக்கை குர்தா மற்றும் வேட்டிதான். ஆனால், காலத்திற்கு ஏற்ப சில ட்ரெண்டுகளையும் இணைத்தே உடுத்தியிருப்பார். நீளமான குர்தா, ஷார்ட் குர்தா, வேட்டி குர்தாவோடு தோள்பட்டைகளில் துண்டு என வித்தியாசங்களைப் புகுத்திக்கொண்டே இருந்தார். 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜா, யாரும் எதிர்பாராவிதமாக, சாம்பல் வண்ண பிளேஸர் சூட் அணிந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைப்பு, 20,000 கச்சேரிகள், ஏராளமான விருதுகள் என இவர் இசையின் பயணம் இன்றும் தொடர்ந்து, மக்களின் மனத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.

6
Deva

'தேனிசைத் தென்றல்' தேவா

'றெக்கைகட்டிப் பறக்குதடி அண்ணாமல சைக்கிள்...'

'நலம் நலமறிய ஆவல்...' போன்ற பாடல்கள் தேனிசைத் தாளங்கள் என்றால்,

'சுண்டக் கஞ்சி சோறுடா, சுதும்பு கருவாடுடா...'

'மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி...' போன்ற பாடல்கள் அனைத்தும் எமோஷனல் மெட்டுகள்.

இவைதான் தேனிசைத் தென்றல் தேவாவின் ஸ்பெஷாலிட்டியும்கூட. நூற்றுக்கணக்கில் மெலடிகள் இசையமைத்திருந்தாலும், 'கானா' பாடல்கள் என்றால் தேவா இல்லாமல் நிச்சயம் தமிழிசை சகாப்தம் நிறைவுபெறாது. அப்படிப்பட்ட கானா நாயகனின் ஐகானிக் காஸ்ட்யூம், எப்போதும் 'ஒயிட் அண்டு ஒயிட்'. வெள்ளை நிற குர்தா, முழங்கை அளவு மடித்துவிட்ட ஸ்லீவ், வெள்ளை பைஜாமா, அதை மேட்ச் செய்யும் விதமாகக் காலணி, நெற்றியில் குங்குமம், எப்போதும் சிரித்த முகம். இவைதான் தேவநேசன் சொக்கலிங்கத்தின் அடையாளம். இந்தக் காலத்து 'புள்ளிங்கோ'களுக்கெல்லாம் முன்னோடியான இவரின் ஸ்டைல் சிம்பிள் என்றாலும் 'பக்கா மாஸ்'.

``ராணாபோல உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்றால்..!" ஃபிட்னஸ் கைடன்ஸ்
7
M S Subbulakshmi

மண்மணம்

'இசையரசி' எம்.எஸ்.சுப்புலட்சுமி

'காற்றினிலே வரும் கீதம், கண்கள் பணித்திடப் பொங்கும் கீதம்...'

வரிகளைப் படிக்கும்போதே நிச்சயம் அவரின் இனிமையான குரலும் சேர்ந்தே ஒலிக்கும். இசையுலகில் சிம்மாசனமிட்டு, இசையரசியாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி. பஃப் கை சட்டை, பெரிய புரூச் இணைத்த தாவணி, தளும்பத் தளும்ப எண்ணெய் தேய்த்து, ஒருபக்க வகிடெடுத்து வாழைநார் கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்ட தலைமுடி, நெற்றி நிறைய பொட்டு, காதில் நீண்ட காதணி, கழுத்தில் மணிகள், மூக்குத்தி, வளையல் எனச் சிறுவயது முதலே தன்னை மிடுக்காகவே வெளிப்படுத்திக்கொண்டார் எம்.எஸ். 'சேவா சதனம்', 'சகுந்தலை', 'மீரா' உள்ளிட்ட சில திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்திருந்தாலும், 25 பைசா அளவில் குங்குமப் பொட்டு, பூக்கள் சுற்றிய கொண்டை, இரண்டு பக்க மூக்குத்திகள், கற்கள் பதித்த கம்மல், பெரிய கண்ணாடி என எளிமையான பாடகியாகத்தான் அனைவரின் மனத்திலும் நீங்கா இடம்பிடித்தார்.

Carnatic Singers

இசைமூலம் பலரை கட்டிப்போட்டு, இந்தியப் பெண்களின் அடையாளமாய் வாழ்ந்தவர், 2004-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி மறைந்தார்.

பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், மஹதி, அருணா சாய்ராம் உள்ளிட்ட சங்கீத ராணிகளும் புடவையில் தங்களுக்கான தனித்துவமான ஸ்டைலை இன்று வரை பின்பற்றிவருகின்றனர்.

8
Vijayalakshmi Navaneethakrishnan

நாட்டுப்புறக் கலைஞர்கள் விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன்

'ஏய், தோட்டு கட ஓரத்திலே

தோடு ஒண்ணாங்க தோடு ரெண்டாங்க

தோடு மூணாங்க வாங்கச் சொன்னேன்...'

இந்த வரிகளை முடிப்பதற்குள், அடுத்தடுத்த வரிகள் நம் மனத்தில் அசைபோடும். தமிழ்நாட்டின் பாரம்பர்ய நாட்டுப்புற இசையை உலகெங்கும் கொண்டுசேர்த்தவர்கள் விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன் ஜோடி. இசை, நடனம் மட்டுமல்ல இவர்கள் உடுத்தும் உடைகளே ஆயிரம் கதைகள் சொல்லும். கொசுவம் வைத்துக் கட்டிய புடவை, நெற்றியில் சந்தனமும் பெரிய பொட்டும், பக்கவாட்டில் முடித்த கொண்டை, அதைச் சுற்றி பூச்சரம், கைநிறைய வளையல்கள், காதுகள் நிறையும் ஜிமிக்கி, அதனோடு இணைத்த மாட்டல், கழுத்தைச் சுற்றி ஏராளமான ஆபரணங்கள், அதில் கழுத்தை ஒட்டிய நெக்லேஸ் ஹைலைட். இதுதான் விஜயலட்சுமியின் தமிழ்மணம் கொஞ்சும் அலங்காரம்.

Vijayalakshmi Navaneethakrishnan

வெள்ளைப் பனியன், கழுத்தைச் சுற்றி விழும் துண்டு, ருத்திராட்ச மாலை, நெற்றியில் விபூதி மற்றும் குங்குமப் பொட்டு, முறுக்கு மீசை, இழுத்துக் கட்டிய வேட்டி, இடுப்பைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் துண்டு. இப்படி, பார்த்ததும் 'தமிழன்டா' என்று பெருமையாக நினைக்கவைக்கும் தோற்றத்தில்தான் எப்போதும் நவநீதகிருஷ்ணன் இருப்பார். இவர்கள் கச்சேரி செய்யும்போது, பெரும்பாலும் பூமாலைகளைக் கழுத்தில் அணிந்துகொண்டுதான் பாடுவார்கள். இருவரும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. பாடல்களோடு நம் நாட்டின் பாரம்பர்யத்தையும் கொண்டாடின இவர்களின் கச்சேரிகள்.

9
Shankar Ganesh

டிரெண்ட் செட்டர்ஸ்!

'இரட்டையர்கள்' கணேஷ் (ஷங்கர் - கணேஷ்)

'உன்னை அழைத்தது கண்... உறவை நினைத்தது பெண்...' என்று அந்தக் காலகட்டத்தில் அனைவரையும் டிஸ்க்கோ ஆடவைத்தவர்கள் ஷங்கர் - கணேஷ்.

இசையுலகின் ஜாம்பவான்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஜோடியின் உதவியாளர்களாகச் சேர்ந்து, கண்ணதாசன் போன்ற கவிஞர்களோடு பணியாற்றி, பிறகு தங்களின் தனித்துவமான இசையால் மக்களைக் கவர்ந்தவர்கள், ஷங்கர் - கணேஷ். எதிர்பாராதவிதமாக ஷங்கர் இறந்துவிட, ஷங்கர் - கணேஷ் என்ற பெயரிலேயே நூற்றுக்கணக்கான பாடல்களை இசையமைத்திருக்கிறார் கணேஷ். 1986-ம் வருடம் ஏற்பட்ட விபத்து காரணமாக, அவர் கைகளில் கையுறையும், கண்களில் கண்ணாடியும் எப்போதும் இருக்கும். இவர் உடுத்தும் உடைகள் பெரும்பாலும் கறுப்பு அல்லது வெள்ளை நிறங்களில் ப்ளெய்ன் பேட்டர்ன்களில்தான் இருக்கும். அதேபோல, ஒரே நிறத்திலான டைட் ஃபிட்டிங் சட்டை மற்றும் பேன்ட் அணிவது வழக்கம். கைகளில் கையுறை, பிரேஸ்லெட், கைக்கடிகாரம், கழுத்தில் மூன்று நான்கு நெக்லேஸ் மற்றும் செயின்கள், நெற்றியில் மெலிதாகப் படர்ந்திருக்கும் விபூதி மற்றும் குங்குமம் எனத் தமிழ் இசையுலகில் தனி டிரெண்ட் செட் செய்தவர் இவர்.

10
A R Rahman

'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான்

'சின்னச் சின்ன ஆசை

சிறகடிக்கும் ஆசை...'

என்று தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அத்தனை ஆசைகளையும் இசையால் நிரப்பியவர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

பத்ம பூஷன் முதல் ஆஸ்கர் விருதுகள் வரை உலகின் அத்தனை விருதுகளும் இவரின் இசைக்கு வசமாயின. எத்தனையோ திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும், 'தாய்மண்ணே வணக்கம்' என்று இந்தியாவின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது இவருடைய 'வந்தே மாதரம்' ஆல்பம். வெள்ளை உடைகள் அணிந்து மேடை ஏறிய இசைக்கலைஞர்களுக்கு மத்தியில், சுருண்டு விழும் அடர்த்தியான ஹேர்ஸ்டைலில் புதிய டிரெண்டை உருவாக்கினார் ரஹ்மான். எப்போதும் நீண்ட கேசத்தோடு பார்த்துப் பழகிய ரஹ்மான், திடீரென 'ஷார்ட் ஹேர் கட்' செய்து, சட்டை அல்லது டி-ஷர்ட் அணிந்து, அதன் மேல் பிளேஸர் அணியத் தொடங்கினார். இன்று வரை இதுதான் இசைப்புயலின் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டாக இருக்கிறது.

11
Hariharan

'கஸல்' ஹரிஹரன்

'வெண்ணிலவே வெண்ணிலவே, விண்ணைத் தாண்டி வருவாயா', 'உயிரே... உயிரே... வந்து என்னோடு கலந்துவிடு...', 'என் மனவானில் சிறகை விரிக்கும்...' என்று இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் நம் உணர்வின் ஆழத்திற்கே நம்மைக் கொண்டுசேர்த்துவிடும். அதிலும் இவருடைய 'தமிழா தமிழா நாளை நம் நாளே...' பாடல் முடிகையில், நிச்சயம் மொழி அறியாதவர்கள் கண்களும் கலங்கியிருக்கும். அப்படிப்பட்ட உணர்ச்சிமிக்க பாடகர், ஹரிஹரன். ஆனாலும், 'கஸல்' பாடல்கள்தான் இவருடைய தேர்வு. அந்தக் காலத்திலேயே இவருடைய நீண்ட தலைமுடி மற்றும் விதவிதமான தாடி ஸ்டைல், பல இளைஞர்களைப் பின்பற்றவைத்தது. கச்சேரிகளுக்கு ஏற்ப விதவிதமான காதணிகள் அணியும் பழக்கமுடையவர். கதைக்களத்திற்கு ஏற்ற பாடலின் உணர்வு வரவில்லை என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் ரீ-டேக் எடுக்கும் இவர், பெரும்பாலும் பின்பற்றுவது இண்டோ-வெஸ்டர்ன் உடைகள்தான். வித்தியாச நிறங்களில் குர்தா பைஜாமா, பிளேஸர் சூட், ஷெர்வானி உள்ளிட்ட ஆடை வகைகள்தான் இவருடைய சாய்ஸ்.

12
Benny Dayal

S 5 பென்னி தயாள்

'நீ மர்லின் மன்ரோ க்ளோனிங்கா...', 'புதுப் புது வழியது பிறந்தது...', 'டாக்சி டாக்சி நண்பா நீ ஒரு இலவச...'

இப்படி இசையில் புதிய பரிமாணத்தில் அனைவரையும் ரீங்காரம் செய்யவைத்தவர், பென்னி. பாடல்களில் மட்டுமல்ல தன்னுடைய உடைகளிலும் வித்தியாசங்களைப் புகுத்திக்கொண்டே இருப்பவர். SS மியூசிக் சேனலால் தொடங்கப்பட்ட S5 இசைக்குழுவில் உறுப்பினராக இருந்த இவர், ஏ.ஆர்.ரகுமானால் கண்டுபிடிக்கப்பட்டு, இப்போது தன் பாடல் தேர்வுகளால் அனைவரின் மனத்திலும் ரிங்-டோனாக ஒலித்துக்கொண்டிருக்கிறார். 'வித்தியாசம்' என்பதே இவருடைய அடையாளம். முற்றிலும் ஷேவ் செய்த தலை, தடித்த ஃபிரேம் கொண்ட கண்ணாடி, காதுகளில் காதணி, டிரெண்டுக்கு ஏற்ற தாடி ஸ்டைல் என ஒவ்வொரு கான்செர்ட்டிற்கும் பாடல்களில் மட்டுமல்ல உடையிலும் வித்தியாசங்களைப் புகுத்திக்கொண்டே இருப்பவர். 'இந்த விழாவிற்கு எப்படி வருவார்!' என்கிற எதிர்பார்ப்பே இவர் உருவாக்கிய ஃபேஷன் ஸ்டேட்மென்ட்.

13
Usha Uthup

'நைட் கிளப்' பாடகி உஷா உதுப்

பாடுவது மட்டுமல்ல, பாடல் வரிகளுக்கேற்ற பாவனைகளையும் கச்சேரிகளில் கொண்டுவந்து அனைவரையும் கவர்ந்தவர், உஷா உதுப். 'பாப்', 'ஜாஸ்', 'ஃபில்மி', 'வெஸ்டர்ன்' உள்ளிட்ட வித்தியாசப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். தமிழ் சினிமாவில் உஷா உதுப்பின் பங்களிப்பு குறைவு என்றாலும், இவருடைய கம்பீர குரலுக்காகவே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதில், பிரபலங்களின் பட்டியலும் உண்டு. தன்னுடைய 'போல்டு' குரலால் பலரையும் மயக்கிய உஷா-வின் அடையாளங்களை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. புடவைதான் இவருடைய சாய்ஸ். புடவைக்கு மேட்ச்சாக அவருடைய ஐம்பது பைசா அளவிலான பொட்டு, ஹைலைட். முழுநீளக்கை, அரை நீளக்கை, 3/4 ஸ்லீவ், காலர் நெக் என பிளவுஸ்களில் பல வெரைட்டிகளைப் புகுத்தி, 90-களில் பலருக்கும் ஃபேஷன் ஐகானாகவே வாழ்ந்தவர்.

14
Ananth Vaithiyanathan ( Pinterest )

'வாய்ஸ் எக்ஸ்பெர்ட்' அனந்த் வைத்தியநாதன்

``நான் அழகிப் போட்டியில் பங்கேற்றதே இதற்காகத்தான்!’’ - `மிஸ் இந்தியா’ சுமன் ராவ்

பாத்ரூம் சிங்கரையும் பக்கா சிங்கராக மாற்றும் வாய்ஸ் எக்ஸ்பெர்ட் அனந்த் வைத்தியநாதனின் ஸ்டைலை எப்படி விடுவது! வெவ்வேறு வண்ணங்களில் புரொகேட், எம்பிராய்டரி, சீக்வென்ஸ் போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த குர்தா பைஜாமாதான் இவருடைய ஆல் டைம் ஃபேவரைட். உடைக்கு மேட்சாக நான்கைந்து மோதிரங்கள், கற்கள் அல்லது முத்துகள் பதித்த மாலை என ட்ரெண்டி மேன் இவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு