`எங்கள் பெருந்தன்மைக்கு வருத்தப்படமாட்டோம்!' - கவுனில் எழுதி ஆஸ்கரில் சிரியாவின் கண்ணீரை சொன்ன இயக்குநர்

இந்த 92-வது ஆஸ்கர் விருதுகளில் வார்த்தைகளைவிட ஆடைகள் அதிகம் பேசிய தருணங்களின் தொகுப்பு இதோ...
'நிச்சயம் இந்தத் திரைப்படம்தான் வெற்றிபெறும்', 'இவருக்குத்தான் சிறந்த நடிகருக்கான விருது கொடுப்பார்கள்', 'அந்த பிரபலம் இந்தமுறை என்ன உடை அணிந்து வருவார்', 'இந்தப் படத்துக்கு விருது இல்லைனா இந்த விழாவே வேஸ்ட்' என்றெல்லாம் உலக சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு எதிர்பார்பை தூண்டும் ஒரு நாள், ஆஸ்கர் விருது நாள்.

திரைத்துறை உலகின் மிக உயரிய விருதெனக் கருதப்படும் 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெற்றது. இந்த 92-வது ஆஸ்கர் விருதுகளில் வார்த்தைகளைவிட ஆடைகள் அதிகம் பேசிய தருணங்களின் தொகுப்பு இதோ...
விதவிதமான உயர்தர லென்ஸ்கள் பொருத்திய கேமராக்களை கையிலேந்தி ஒவ்வொரு பிரபலத்தின் வருகைக்காகவும் சிவப்புக் கம்பளத்தில் காத்திருந்தனர் புகைப்படக் கலைஞர்கள். உலகெங்கிலுமிருந்து ஏராளமான பிரபலங்கள் வருகை தந்துகொண்டிருக்க, நொடி நேரத்தில் அந்த இடமே மின்மினிகளின் கூடாரம் போன்று மாறியது. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் கலந்துகொண்ட சில பிரபலங்கள், தாங்கள் உடுத்திய ஆடைகளில் அழகுடன் சமூக நலனையும் இணைத்து உடுத்தியிருந்தனர்.

`திரைத்துறை பிரபலங்கள் எல்லாம் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய ஆடைகளையே அணிவார்கள். ஒருமுறை அணிந்த உடைகளை மற்றொரு முறை உடுத்த மாட்டார்கள்' போன்ற பிம்பம் மக்களிடத்தில் உள்ளது. இதனால், ஏராளமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்ற வாதங்களும் ஒருபுறம் எழுந்தன. இதற்குத் தீர்வாக `சஸ்டெயினபிள் (Sustainable)', அதாவது மறுசுழற்சி செய்து உடைகளை உடுத்தும் கலாசாரத்தை அவர்கள் ஆதரிக்கவேண்டும், முன்னெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளைப் பலரும் முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த முறை ஆஸ்கரில் பங்குபெற்ற சில பிரபலங்கள் சஸ்டெயினபிள் ஃபேஷன் கான்செப்டை பின்பற்றியுள்ளனர்.
ஆம், இன்றுவரை விதவிதமான புத்தம் புது ஆடைகளை மட்டுமே உடுத்தி இதுபோன்ற விழாக்களுக்கு வருகைதந்த பிரபலங்கள், இந்த ஆஸ்கருக்கு, ஏற்கெனவே மற்ற நிகழ்ச்சிகளில் உடுத்தியிருந்த உடைகளை அணிந்து வந்திருந்தனர். கடந்த வாரம் நடைபெற்ற BOFTA நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடில்டன், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு உடுத்தியிருந்த அதே உடையை அணிந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அவரை தொடர்ந்து, இந்த ஆஸ்கர் விழாவில் கலந்துகொண்ட ஜெனிஃபர் அனிஸ்டன், மார்கட் ராபி, லில்லி அல்ட்ரிட்ஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களிடம் ஏற்கெனவே இருக்கும் உடைகளையோ அல்லது எஞ்சிய துணிகளிலிருந்து வடிவமைக்கப்பட்ட உடைகளையோதான் அணிந்துள்ளனர். இவர்களின் இந்த சிறிய முயற்சி நிச்சயம் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்டிருக்கும் முதல் அடி எனலாம்.
அழகிய கறுப்பு நிற கேப் பொருத்திய உடையில் தோன்றிய பிரபல நடிகை நடாலி போர்ட்மேன், வலுவான செய்தியையும் தன் உடையின்மூலம் உலகுக்குச் சொல்லியிருக்கிறார். ஆஸ்கர் வரலாற்றிலேயே சிறந்த இயக்குநர்கள் பிரிவில் இதுவரை ஐந்து பெண்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர்.

அதிலும், ஒரே ஒரு இயக்குநர் மட்டுமே விருது பெற்றிருக்கிறார். இதைப் பதிவுசெய்யும் விதமாக, லோரின் ஸ்கஃபாரியா (Lorene Scafaria), மெலினா மேட்ஸோகாஸ் (Melina Matsoukas), லூலூ வாங்கி (Lulu Wang), அல்மா ஹரேல் (Alma Har’el), கிரேட்டா கெர்விக் (Greta Gerwig), மெரியெல் ஹெல்லர்(Marielle Heller) உள்ளிட்ட பெண் இயக்குநர்களின் பெயர்களைப் பதித்த ஆடையை அணிந்துவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடாலி.
பிரபல அமெரிக்க விளையாட்டு வீரர் கோப் பிரயன்ட்டின் இழப்பு, உலகக் கூடைப்பந்து ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவரின் தீவிர ரசிகரான பிரபல அமெரிக்க இயக்குநர் ஸ்பைக் லீ, பிரயன்ட்டிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரத்யேக ஆடையை அணிந்து ஆஸ்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஊதா வண்ண ப்ளேஸரில் பிரயன்ட்டின் ஜெர்ஸி எண் 24 தைக்கப்பட்ட வித்தியாச உடையை உடுத்தியிருந்தார் லீ.

மேலும், நைகீ நிறுவனத்துடன் இணைந்து பிரயன்ட் கோப் வெளியிட்ட 'ஸ்ட்ராடஜி(Strategy)' எனும் சீரிஸ் கலெக்ஷனிலிருந்து அவருடைய காலணிகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே பிரயன்ட்டின் வாழ்க்கைப் பயணத்தை ஆவணப்படமாகத் தயாரித்து வெளியிட்டவர் லீ என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் உடுத்தும் உடையே நம் ஆளுமையை வெளிப்படுத்தும். அந்த வரிசையில், சிரியாவில் வாழும் மக்களின் நிலையை தன் ஆவணப்படமான 'சாமா' மூலம் உலகமெங்கும் கொண்டு சேர்த்த இயக்குநர் வாத் அல் கதீப் (Waad Al-Kateab), அராபிக் எழுத்துகள் பொறிக்கப்பட்ட அழகிய ஆடையை அணிந்து ஆஸ்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பிங்க் மற்றும் சில்வர் காம்போ கவுன் மேல், 'நாங்கள் கனவு காணத் துணிந்தோம். எங்கள் பெருந்தன்மைக்கு வருத்தப்பட மாட்டோம்' என்று அரேபிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்தப் பிரத்யேக உடை பல ஆழமான வலிகளையும் சுமந்திருந்தது.
பிரிட்டிஷ் ஆடை வடிவமைப்பாளரான சாண்டி பவல், லைட் க்ரீம் வண்ண ப்ளேஸர் சூட்டின் மேல் பல பிரபலங்களின் கையொப்பமிட்ட உடை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்களின் கையொப்பங்களைச் சேகரித்து, அவற்றை ஆடையில் அச்சடித்தார் சாண்டி. பிறகு அந்தப் பிரத்யேக ஆடையை ஒரு தொண்டு நிறுவனம் மூலம் ஏலத்தில் எடுக்க விரும்பினார்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி, தன் நீண்டகால நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான டெரிக் ஜர்மனின்(Derek Jarman) வீட்டை வாங்கிப் பராமரிக்க உதவியாக இருக்கும் என்று எண்ணினார் சாண்டி.
இந்த வருட ஆஸ்கர் விருதுகளில் கலந்துகொள்ள முடியாத பிரியங்கா சோப்ரா ஜோனஸ் 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளின் ஆஸ்கர் விருதுகள் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு தன் வருத்தத்தையும் விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்துகளையும் பதிவிட்டுள்ளார்.
2016-ம் ஆண்டு பிரியங்கா அணிந்திருந்த வெள்ளை நிற கவுன், அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆஸ்கர் உடை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விழாவில் ஃப்ரீடா பின்டோ, ஐஸ்வர்யா ராய் பச்சன், மல்லிகா ஷெராவத், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட சில பிரபலங்கள் மட்டுமே பங்குபெற்றுள்ளனர். சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 1983-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து பானு அத்தையா முதன்முதலாகப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து `ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படத்தில் இடம்பெற்ற `ஜெய் ஹோ' பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் விருதும், குல்ஸாருக்கு சிறந்த ஒரிஜினல் சாங்க்கான விருதும், அதே படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங் விருது ரசூல் பூக்குட்டிக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.