Published:Updated:

`` `பொங்கிப் போட்டுட்டு வீட்ல கிட'ன்னாங்க. ஆனா, அந்த ஒத்த மனுஷி..!'' ஒரு பெண்ணின் வெற்றிக் கதை

அத்தனைபேரும் எதிர்ப்பு தெரிவிச்ச அதே வீட்டுல என் மாமியார் ரத்னகுமாரி மட்டும் எனக்கு ஆதரவா இருந்தாங்க. நான் டெய்லரிங் க்ளாஸ் போறப்போ எங்க பசங்களைப் பார்த்துக்கிட்டவங்க அவங்கதான்.

கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரமான பொள்ளாச்சியில், வெறும் 5,000 ரூபாய் முதலீட்டில் பெண்களுக்கான பிரத்யேகமான ஆடைகளைத் தயாரிக்கத் தொடங்கிய ஶ்ரீநிதி மஞ்சுளா, இன்று கோடிக்கணக்கில் வரவு - செலவு செய்கிறார். அங்குள்ள பல வி.ஐ.பி வீட்டுப் பெண்களின் உடைகளை வடிவமைப்பது ஶ்ரீநிதிதான். இந்த உயரத்தைத் தொடுவதற்கு முன்னால் உறவுகள் பலரால் தன் கால்கள் இழுக்கப்பட்ட கதையையும், தன்னை கைதூக்கிவிட்ட ஒரேயொரு உறவைப்பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

SriNithi Manjula
SriNithi Manjula

``நான் பொறந்து வளர்ந்தது, ஸ்கூல் படிச்சதெல்லாம் பொள்ளாச்சியிலதான். காலேஜ் மட்டும் திருப்பூர்ல முடிச்சேன். அங்கேதான் எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டுச்சு. ரெண்டு பேருமே வசதியான வீட்டுப் பிள்ளைங்க. பெரிய எதிர்ப்புகள் இல்லாம நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது. அவருடைய வீட்டுல அவருடைய பெற்றோர், கூடப் பிறந்த அக்காவோட குடும்பம்னு எல்லாரும் கூட்டுக்குடும்பமா இருந்தாங்க. வீடு நிறைய மனுஷங்கன்னு எல்லாம் ஆரம்பத்துல நல்லாதான் இருந்துச்சு. எங்களுக்கு சக்தி ஆதர்ஷ், நிஜிந்திரவாணன்னு ரெண்டு பசங்க பிறந்தாங்க.

காதலிக்கிறப்போ எல்லாமே நல்லவிதமாதானே தெரியும். எனக்கும், அப்போ அவர்கிட்டே இருந்த பாசிட்டிவ் மட்டுமே கண்ணுக்குத் தெரிஞ்சது. கல்யாணம், குழந்தைகள்னு ஆன பிறகுதான் அவரோட இன்னொருப்பக்கம் தெரிய ஆரம்பிச்சது. நான் ஒரு தப்பான நபரைத் தேர்வு பண்ணிட்டேங்கிறது தெள்ளத்தெளிவா தெரிய ஆரம்பிச்சுது. ஆனாலும், எல்லா பொண்ணுங்க மாதிரி நானும் புகுந்த வீட்டுக்கு ஏத்தபடி, கணவருக்கு ஏத்தபடி என்னை நிறைய விஷயங்கள்ல மாத்திக்கிட்டேன். ஆனா, அவர் எதற்காகவும் தன்னை மாத்திக்கிறதா இல்ல'' என்ற ஶ்ரீநிதி தொடர்ந்தார்.

Designed dress
Designed dress

``அவர் எல்லா விஷயத்தையுமே அவங்க அக்காவைக் கேட்டு செய்யறவராகவும், எங்க குழந்தைங்களைவிட, அக்கா குழந்தைங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவராகவும் இருந்தார். இதனால, அந்த வீட்டுல ஒரு மனைவியா எனக்குக் கிடைக்கவேண்டிய முக்கியத்துவம் எதுவுமே கிடைக்கலை. தவிர, கல்யாணத்துக்கு முன்னாடிக் கொடுத்த காதலையோ, அன்பையோ பாதிக்கூட வேணாம், முழுசாவே கொடுக்கலைன்னா எப்படி? என்னுடைய சுயமரியாதையும் சுதந்திரமும் மெல்ல மெல்ல நசுங்க ஆரம்பிச்சது. என்னோட சந்தோஷம் போயிடுச்சு. என் குழந்தைகளும் சுயசிந்தனை, சுயசார்பு இல்லாம வளர்ந்திடக்கூடான்னு முடிவெடுத்தேன்'' என்று வருத்தமாகச் சொல்பவர், அதே வீட்டில் தனக்குக் கிடைத்த ஒரு ஆதரவையும் நெகிழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார் ஶ்ரீநிதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சின்ன வயசிலேருந்தே மாடர்ன் டிசைனிங் டெய்லரிங்ல எனக்கு ரொம்பவும் ஈடுபாடு இருந்துச்சு. அதனால, டெய்லரிங் கோர்ஸ்ல சேர்ந்தேன். என் கணவர் வீட்டுல, `நம்ம ஸ்டேட்டஸுக்கு இது தேவையா, பேசாம வீட்டுல இரு'னு சொன்னாங்க. சொந்தக்காரங்களோ இன்னும் ஒருபடி மேலேபோயி `பொம்பளைப் புள்ளையா பொங்கிப் போட்டுட்டு சிவனேனு மூலையில கிடக்க வேண்டியதுதானே. நம்மகிட்ட இல்லாத பணம், காசா'ன்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பணம், காசு, சொத்து இதெல்லாத்தையும்தாண்டி ஒரு பொண்ணுக்கு கனவுகள், லட்சியங்கள் இருக்கக் கூடாதா? தன் மனசுக்குப் பிடிச்ச ஒரு கலைத்திறமையைப் பெண்கள் வெளிப்படுத்தக் கூடாதா? என் மனசுல ஆயிரம் கேள்விகள்...

SriNithiManjula
SriNithiManjula

அத்தனைபேரும் எதிர்ப்பு தெரிவிச்ச அதே வீட்டுல என் மாமியார் ரத்னகுமாரி மட்டும் எனக்கு ஆதரவா இருந்தாங்க. நான் டெய்லரிங் க்ளாஸ் போறப்போ எங்க பசங்களைப் பார்த்துக்கிட்டவங்க அவங்கதான். என்னுடைய துரதிர்ஷ்டம் அவங்க சீக்கிரமே கேன்சர்ல இறந்துப்போயிட்டாங்க. அவங்க மறைவுக்குப் பிறகு அந்த வீட்டுல என்னால இருக்கமுடியாத சூழ்நிலை. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் நிறைய போராட வேண்டியிருந்துச்சு. அவர், குழந்தைகளை ஹாஸ்டல்ல சேர்த்துப் படிக்க வைக்க நினைச்சார். எனக்கு அது பிடிக்கலை.

என் பிள்ளைகளைப் பிரிஞ்சிருக்க என்னால முடியாது. வேறவழியில்லாம 2004 -ல எங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். ஒரு தையல் மெஷின், ஒரு உதவியாளர், 5,000 ரூபாய் முதலீட்டில் டெய்லரிங் பிசினஸை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல என்னுடைய வாடிக்கையாளர்கள் என் தோழிகள்தான். பெண்களுக்கான பிரத்யேகமான சேலைகளையும் வித்தியாசமான டிசைன்களுடன் கூடிய ஜாக்கெட்டுகளையும் நானே தைச்சுத் தர ஆரம்பிச்சேன்.

Designed dress
Designed dress

பிசினஸ்ல சின்ஸியராவும், என்னோட வேலைப்பாடுகள் வித்தியாசமாவும் இருந்ததால, வந்த கஸ்டமர்ஸ் என்னைவிட்டுப் போகலை. அவங்க மூலமா இன்னும் இன்னும் கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சாங்க. இவ்வளவு ஏன், அவங்களோட குழந்தைகளுக்கும் நான்தான் டிரெஸ் டிசைன் பண்றேன். என் பிள்ளைகளோட பெயர்களைச் சேர்த்து `ஆதுநிஸ்'னு என் நிறுவனத்துக்கு பேர் வெச்சேன்'' என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிற ஶ்ரீநிதியின் வாழ்க்கையும் பிசினஸும் அடுத்தடுத்த அடிகளை எடுத்துவைக்க, இதோ, ஶ்ரீநிதியின் மூத்தப் பையன் சென்னை சட்டக்கல்லூரியில நான்காவது வருடமும் சிறிய மகன் பள்ளியிலும் படிக்கிறார்கள்.

Designed dress
Designed dress

இன்னிக்கு என்கிட்டே 50 பேர் வேலை பார்க்கிறாங்க. இவங்கள்ல பலரும் நான் இந்தத் தொழிலுக்கு வந்தப்போ இருந்தே எங்கூட இருந்தவங்க. அவங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் நான் செஞ்சுக் கொடுக்கிறதால, என் வேலையைத் தன் வேலையா நினைச்சு செய்றாங்க. தமிழ்நாடு முழுக்கவே `ஆதுநிஸ்' கிளைகளைத் தொடங்க எதிர்காலத்துல திட்டமிருக்கு. கணவனால் கைவிடப்பட்டவங்க, விதவைகள், பெற்றோரால் கைவிடப்பட்டவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தத் தொழிலை நான் அவங்களுக்குக் கத்துக் கொடுப்பேன்.

உனக்கெல்லாம் பிசினஸ் செய்யறதுக்கு என்ன தகுதியிருக்குன்னு கேட்டவங்க முன்னாடி சாதனைப் பெண்ணா இன்னிக்கு இருக்கிறேன்னா அதுக்குக் காரணம் என் மாமியார்தான். சக மனுஷியா என்னோட உணர்வைப் புரிஞ்சுக்கிட்டு என்னை என்கரேஜ் பண்ண அவங்களுக்குத்தான் என்னோட இந்த வெற்றிகளை சமர்ப்பணம் பண்றேன்'' என்று கண் கலங்கியவர்,

SriNithi Manjula
SriNithi Manjula

``பிசினஸ் தொடங்க பெரிய அளவுல பணம், முதலீடுனு இருக்கணுங்கிற அவசியமில்லை. நமக்குள்ள என்ன திறமை இருக்குங்கிறதைக் கண்டுபிடிச்சு, அதையே நம்முடைய மூலதனமாக்கி உழைச்சோம்னா நிச்சயம் ஜெயிக்கலாம்'' என்கிறார்.

பார்க்க முடியாத அந்த மாமியாருக்கு நாமும் நன்றிகளைச் சொல்வோம்!

ஃபேஷன்: டிரெண்டில் கலக்கும் ரஃபில் ஆடைகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு