Published:Updated:

``நான் அழகிப் போட்டியில் பங்கேற்றதே இதற்காகத்தான்!’’ - `மிஸ் இந்தியா’ சுமன் ராவ்

சுமன் ராவ்
சுமன் ராவ்

பல கனவுகளைச் சுமந்துகொண்டு அழகிப் போட்டியில் களமிறங்கி, 'மிஸ் ஆசியா 2019' மற்றும் 'மிஸ் வேர்ல்டு இரண்டாம் ரன்னர்-அப் 2019' பட்டங்களோடு இந்தியா திரும்பிய சுமனோடு உரையாடினோம்.

வருடா வருடம், 'உலக அழகி யார்?' என்ற தேடல் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தப் போட்டி, அழகு சாதனப் பொருள்களை விற்பதற்கான யுக்தி என்ற விவாதம் ஒரு பக்கம் இருந்தாலும், அதன் பின்னணியில் சமூக வளர்ச்சிக்கான தொண்டுப் பணிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றின் மூலம் பயனடைந்தவர்களும் ஏராளம். அந்த வகையில், 2019-ம் ஆண்டின் உலக அழகிப் போட்டியில் இந்தியாவிலிருந்து பங்குபெற்ற உதய்பூரைச் சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ், ஏராளமான சமூக நலப் பணிகளைத் தொடர்ந்து இந்திய மக்களுக்கு செய்யப்போவதாகக் கூறியிருந்தார்.

Suman rao
Suman rao

பல கனவுகளைச் சுமந்துகொண்டு அழகிப் போட்டியில் களமிறங்கி, 'மிஸ் ஆசியா 2019' மற்றும் 'மிஸ் வேர்ல்டு இரண்டாம் ரன்னர்-அப் 2019' பட்டங்களோடு இந்தியா திரும்பிய சுமனோடு உரையாடினோம்.

அழகிப் போட்டியில் பங்குபெறுவதற்கான காரணம் என்ன?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அழகிப் போட்டியில் அழகுக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், சரியான சமூக நோக்கம் கொண்ட திட்டத்துக்கான அங்கீகாரமும் கிடைக்கும் என்பதைக் கேள்விப்பட்டபோது, உலக அழகிக் கனவு என்னுள் பிறந்தது. தற்போது கிடைத்திருக்கும் வெற்றியின் மூலம் என்னுடைய கனவான 'புராஜெக்ட் பிரகதி' திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரப்போகிறது. ஏற்கெனவே, நான் ராஜஸ்தான் பெண்கள் சிலருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளேன்.

Suman with a Rajasthani woman
Suman with a Rajasthani woman

மேலும், அவர்கள் தயாரித்த சில கைவினைப்பொருள்களைப் போட்டியின்போது லண்டனுக்கு எடுத்துச்சென்றேன். அதை ஏற்றுக்கொண்ட தலைவர் ஜூலியா மோர்லி, அவர்களைப் பாராட்டினார்.

அழகிப் போட்டியின் ஒரு பகுதியாக, 'பியூட்டி வித் எ பர்ப்பஸ் (Beauty with a Purpose)' தலைப்பிற்காக 'பாலின சமத்துவம்' பற்றிப் பேசியிருந்தீர்கள். அதைப் பற்றிய சுருக்கமான குறிப்பு?

என்னுடைய சொந்த மாநிலமான ராஜஸ்தான் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கு, தற்போது என்னால் முடிந்த வேலைவாய்ப்புகளை வழங்கிவருகிறேன். இதனால், அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்கிறது. இதுபோன்ற செயல்களின் மூலம், இந்தச் சமூகத்தின் நிலைமையை மேம்படுத்தி, பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முடியும். இதுவே, என்னுடைய 'புராஜெக்ட் பிரகதி'யின் நோக்கம். இதைத்தான் 'பியூட்டி வித் எ பர்ப்பஸ்' தலைப்பின்போது பகிர்ந்துகொண்டேன். பெண்கள் வலிமையானவர்கள்தான். அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவற்றை நான் வழங்கிவருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

Project Pragathi
Project Pragathi

மிஸ் வேர்ல்டு பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

இந்தப் போட்டியில் பங்குபெறுவதற்கான என்னுடைய நோக்கம் தெளிவாக இருந்ததால், தடைகள் என்று பெரிதாக என் மனத்தில் எதுவும் பதியவில்லை. எல்லாவற்றையும் சுமுகமாகக் கையாள முடிந்ததற்கு நான் லக்கி என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களைப் பிரிந்து நீண்ட நாள்கள் தனியாக இருந்தது மட்டுமே வருத்தம்.

உங்கள் இன்ஸ்பிரேஷன் யார்?

Suman with her Father
Suman with her Father

என் பெற்றோர்தான். எத்தனை தடைகள் வந்தபோதிலும், ஒருபோதும் அவர்கள் மனம் தளர்ந்து நான் பார்த்ததில்லை. எங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து செய்தனர். அம்மாவும், அப்பாவும் தங்களின் எல்லா கடமைகளையும் முழுமையாகச் செய்தனர். சிறு வயதிலிருந்தே அவர்களைப் பார்த்து வளர்ந்ததால், அவர்களே என்னுடைய ஆசிரியர்கள், இன்ஸ்பிரேஷன் எல்லாம்.

மாடலிங் துறையில் ஈடுபடும் இளைய தலைமுறைப் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான உங்கள் ஆலோசனை என்ன?

எந்தத் துறையிலும் முழுமையான ஈடுபாடு, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் வேலையில் நேர்மை போன்றவை அதிகம் தேவை என்பதை மாடலிங் துறைக்கு வந்த பிறகுதான் உணர்ந்தேன். இந்தத் துறையில் உள்ள அனைவரும், தாங்கள் செய்துவரும் வேலையைப் பற்றி பெருமைப்பட வேண்டும். ஏனென்றால், இது அழகுக்கான உலகம் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான மிகப் பெரிய அடித்தளமும்கூட. இந்த உலகில், மிகச் சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் பொழுதுபோக்கு?

Suman' s dance
Suman' s dance

என்னுடைய முதன்மையான பொழுதுபோக்கு, நடனம். பாலிவுட் பாடல்களின் தீவிர ரசிகை நான். ஃப்ரீ டைம் எப்போது கிடைத்தாலும், பாடல்கள் அதிகம் கேட்பேன். நண்பர்களுடன் சேர்ந்து பேட்மின்டன் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.

உலக அழகிப் பட்டம் பெற்று, பின் இந்தியத் திரையுலகில் தடம் பதித்த ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ் வரிசையில் நீங்களும் இணைவீர்களா?

'மிஸ் வேர்ல்டு' போட்டிக்காகத் தயாரானபோது, மாடலிங் மற்றும் பாலிவுட் திரையுலகம் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால், அதைப் பற்றி தற்போது யோசிக்கவில்லை. என்னுடைய முழு ஈடுபாடும் 'புராஜெக்ட் பிரகதி'யின்மேல் உள்ளது. பிற்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் நடிப்பேன். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த உச்சியை அடைவதற்கு நான் நிறைய உழைக்க வேண்டும். தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ராவின் ரசிகை நான். வாய்ப்பு கிடைத்தால், அவர்களோடு இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்.

இந்த வெற்றியின் தருணத்தை உங்கள் குடும்பம் எப்படிக் கொண்டாடுகிறது?

Suman rao with her mom
Suman rao with her mom
கறுப்பினப் பெண்கள், 5 கிரீடங்கள், அழகியலின் பரிணாமம்.. 2019-ம் ஆண்டு அழகிப் போட்டியின் வைரங்கள்!

அப்பா, நகை வியாபாரி. அம்மா, ஹோம் மேக்கர். இரண்டு சகோதரர்கள். இவர்கள்தான் என்னுடைய உலகம். சந்தோஷம், துக்கம், வெற்றி, தோல்வி என என் எல்லாத் தருணங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்ததற்கு அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். இன்று நான் யாரென்று இந்த உலகத்திற்குத் தெரிகிறது என்றால், அதற்கு முழுக் காரணம் என் குடும்பம் மட்டுமே. போட்டி முடிந்து வீடு திரும்பியவுடன், ''யார் உலக அழகிப் பட்டம் வென்றிருக்கிறார் என்பது முக்கியமில்லை. எங்களைப் பொறுத்தவரை நீதான் எங்களின் மிஸ் வேர்ல்டு. இப்போது, பலரின் இதயங்களை வென்றிருக்கும் ராணி'' என்று கூறினார்கள் எனப் புன்னகையோடு விடைகொடுத்தார், சுமன் ராவ்.

அடுத்த கட்டுரைக்கு