`பெண்களின் ரெட்ரோ ஃபேஷன் உடைகளில் ரன்வீர்!'- தீபிகாவையும் தொற்றிக்கொண்ட `அதே' ஸ்டைல்
2012-ம் ஆண்டு, ரன்வீர்-தீபிகாவின் காதல் பயணம் தொடங்குவதற்கு முன்பு வரை தீபிகாவின் ஸ்டைல், பாரம்பர்ய உடைகளைச் சுற்றி மட்டுமே பெரும்பாலும் இருந்தன.
'பத்மாவத்' திரைப்படத்தின்மூலம் அலாவுதீன் கில்ஜியாகத் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர், ரன்வீர் சிங். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்பவர் இவர். என்னதான் கதாபாத்திரத்திற்கு ஏற்ற பல வித்தியாச உடைகளில் ரன்வீரைப் பார்த்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் 'இந்திய ஃபேஷன் உலகின் ராஜா' ரன்வீர் என்று சொன்னால் அது மிகையாகாது.
கடை திறப்புவிழா முதல் விருது வழங்கும் விழா வரை இவருடைய ஸ்டைல் ஒவ்வொன்றும் ஆயிரம் கதைகள் பேசும். விதவிதமான உடையணிந்து, ராம்ப் வாக்கிடும் பெண்களுக்கு மத்தியில் ஆண்களும் அதில் சளைத்தவர்கள் அல்ல என்று பலமுறை நிரூபித்திருப்பவர் ரன்வீர். உடைகளில் பாலினக் கோட்பாடுகளைத் தகர்த்திய நட்சத்திரம் ரன்வீர் மட்டுமே.
அந்த வரிசையில், சமீபத்தில் கறுப்பு-வெள்ளை போல்கா-டாட் சட்டை, அதற்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத மல்டி கலர் ஸ்ட்ரைப்டு பேன்ட், உடைக்கு மேட்சான டிசைனர் கூலர்ஸ், Mauve வண்ண ஷூ, சட்டை பேட்டர்னில் 'ஹெட்-கியர், அளவாக நறுக்கிய மீசை என வித்தியாசத் தோற்றத்தில் மிளிர்ந்தார் ரன்வீர்.
இந்த காம்போ அனைத்தும், பெண்கள் அணியும் ரெட்ரோ-ஃபேஷன் காஸ்ட்யூம்.
வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரன்வீர், மஸ்டர்டு நிறத்தில் பலூன் ஸ்லீவ் வைத்த போல்கா-டாட் சட்டை, கோல்டு நிற பிரின்டட் பேன்ட் மற்றும் ஷூ, உடைக்கு மேட்சாக பெரிய கண்ணாடி என அடையாளம் கண்டறிய முடியாத தோற்றத்தில் வந்தார்.
இதுபோன்ற மெட்டீரியல்களில் சட்டை, பேன்ட் என்று ஆண்கள் யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தன்வசமாக்கிக்கொண்டிருக்கிறார் ரன்வீர் சிங்.
பலரின் கேலி, கிண்டல்களுக்கு உள்ளானபோதிலும், தான் அணியும் ஒவ்வோர் உடையையும் மனதார காதலிப்பவர் இவர் . ஸ்மார்ட் லுக் பெறுவதற்கு மற்ற கலைஞர்கள் ஏராளமான முயற்சிகள் எடுக்கும் வேளையில், யாரும் எதிர்பார்க்காத பல 'ஃபங்க்கி (Funky)' ஸ்டைல்களை அறிமுகம் செய்துகொண்டே இருப்பார் ரன்வீர்.
இப்படி வித்தியாச உடைகள் அணிவது பற்றி ரன்வீரிடம் ஒருமுறை வட இந்தியப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "பள்ளிப் பருவத்திலிருந்தே வித்தியாச ஸ்டைல்கள்மீது எனக்கு தனி ஈர்ப்பு உண்டு. ஸ்டைல் என்பது நம்முடைய வெளிப்பாடு என்று நம்புகிறேன். என்னுடைய முழுமையான வெளிப்பாட்டை வடிகட்டி, மற்றவர்களுக்காக உடைகள் அணிய எனக்கு விருப்பமில்லை.
என் உள்மனது என்ன சொல்கிறதோ அதைத்தான் நான் செய்கிறேன். அதற்காக மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிய அச்சம் எனக்கில்லை. எனக்குப் பிடித்த உடையை ஒரேயொரு முறை அணிந்து, 'நான் இப்படித்தான்' என்பதை வெளிப்படுத்தினேன். அதன்பிறகு, இன்றுவரை நான் நானாகவே இருக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.
இவருடைய இந்த ஃபேஷன் சென்ஸ், தன் மனைவி தீபிகா படுகோனையும் தாக்கியிருக்கிறது. ஆம். 2012-ம் ஆண்டு, ரன்வீர்-தீபிகாவின் காதல் பயணம் தொடங்குவதற்கு முன்பு வரை தீபிகாவின் ஸ்டைல் பாரம்பர்ய உடைகளைச் சுற்றி மட்டுமே பெரும்பாலும் இருந்தன. ஆனால், ரன்வீரின் என்ட்ரிக்குப் பிறகு இன்று வரை தீபிகாவின் ஃபேஷன் வளர்ச்சி ரன்வீருக்கு இணையாகவே இருக்கிறது. கலர்ஃபுல் கப்புள்!