Election bannerElection banner
Published:Updated:

பிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றுக் கேள்வி... ஸோஸிபினியின் வலிமையான பதில்! #MissUniverse2019

மிஸ் யுனிவர்ஸ் 2019
மிஸ் யுனிவர்ஸ் 2019

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இவருக்கு, 2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி கேட்ரியோனா கிரே கிரீடத்தை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடும் சமூக ஆர்வலராக இருக்கும் துன்ஸிக்கு, ட்விட்டரில் பாராட்டு மழை பொழிந்தது.

உலகம் முழுவதிலுமிருந்து பங்குபெற்ற 90 போட்டியாளர்களை வென்று, 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தைத் தன்வசமாக்கியுள்ளார், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஸோஸிபினி துன்ஸி (Zozibini Tunzi) . 26 வயதான துன்ஸி, இறுதிச் சுற்றில் போர்டோரிகோ மற்றும் மெக்ஸிகோ நாட்டுப் பெண்களை பின்னுக்குத் தள்ளி, 2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடியுள்ளார்.

Tunzi with Steve Harvey
Tunzi with Steve Harvey

2019-ம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி, கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி, அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்றது. அமெரிக்காவின் பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி நிகழ்ச்சியை கலகலவெனத் தொகுத்து வழங்க, மக்களின் கரவொலிகளோடு கோலாகலமாக ஜொலித்தது அன்றைய மாலை. பர்சனாலிட்டி, உடலமைப்பு, பொதுஅறிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சிபெற்ற 90 போட்டியாளர்கள் முதல்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தியா சார்பாகக் கலந்துகொண்ட வர்திகா சிங், டாப் 10 போட்டியாளர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.

அரையிறுதியின் ஸ்விம்சூட் மற்றும் ஈவ்னிங் கவுன் சுற்றுகளின் முடிவில் மெக்ஸிகோ, தாய்லாந்து, கொலம்பியா, போர்டோரிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tunzi with her Family
Tunzi with her Family

ஏழு பெண் நடுவர்களின் முன்னிலையில் கேள்வி-பதில் நேரம் தொடங்கியது. சிறப்பாகப் பதிலளித்த மெக்ஸிகோ, போர்டோரிகோ மற்றும் தென்னாப்பிரிக்க அழகிகள், இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இறுதிச் சுற்றில், மூவருக்கும் ஒரே கேள்வி முன்வைக்கப்பட்டது.

"இந்தக் காலத்து இளம்பெண்களுக்கு நீங்கள் கற்பிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன?"

45 நொடிக்குள் இதற்கான பதிலை யோசித்துக் கூறவேண்டும் என்பதுதான் நிபந்தனை. மூவர் சொன்ன பதில்களில், நடுவர்களின் மனதை வென்ற பதில்...

Miss Universe 2019 Zozibini Tunzi
Miss Universe 2019 Zozibini Tunzi

"இளம் பெண்களுக்கு நாம் கற்பிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம், தலைமைப் பொறுப்பு. இது, நீண்ட காலமாக இளம் பெண்கள் பின்தங்குகிற ஒரு விஷயம். நாங்கள் விரும்பாததால் அல்ல, இந்தச் சமூகம் பெண்களுக்கான சில கட்டுப்பாடுகளை விதித்ததால் ஏற்பட்ட நிலை அது. பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். அவர்களுக்கு எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அதைத்தான் நாம் இந்தச் சமுதாயத்தின் இளம் பெண்களுக்குக் கற்பிக்க வேண்டும். சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தைப் பிடித்து, உங்களை நீங்களே நிரூபிப்பதைவிட வேறெதுவும் முக்கியமில்லை!"

மக்களை மட்டுமல்ல, நடுவர்களின் மனதையும் வென்ற அந்த பதிலைக் கூறிய துன்ஸி, 2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இவருக்கு, 2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி கேட்ரியோனா கிரே கிரீடத்தை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடும் சமூக ஆர்வலராக இருக்கும் துன்ஸிக்கு, ட்விட்டரில் பாராட்டு மழை பொழிந்தது.

Miss Universe Crown 2019
Miss Universe Crown 2019

இந்த ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி கிரீடம், 'ஒற்றுமையின் சக்தி (Power of Unity)' என்று அழைக்கப்படுகிறது. இது, 18 காரட் தங்கம் மற்றும் 1,770 வைரக் கற்களைக்கொண்டு தயார்செய்யப்பட்டது. கிரீடத்தின் மையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கல்லின் எடை, 62.83 காரட். கிரீடத்தின் ஏழு மலரிதழ்கள் போன்ற வடிவமைப்பு, ஏழு கண்டங்களிலிருக்கும் பெண்களுக்கிடையேயான ஒற்றுமையைக் குறிக்கிறது. மொத்தத்தில் இந்தக் கிரீடத்தின் இன்ஸ்பிரேஷன், 'இயற்கை, வலிமை, அழகு, பெண்மை மற்றும் ஒற்றுமை'.

இந்த பிரத்யேக கிரீடத்தை அணிந்து, மிகவும் தன்னம்பிக்கையுடன் காட்சியளித்தார் துன்ஸி. இறுதிச்சுற்றில் கோல்டு மற்றும் நீல நிற முழுநீள சீக்வென்ஸ் கவுனில் இருந்த துன்ஸியை, உலகின் கேமராக்கள் உள்வாங்கிக்கொண்டே இருந்தன.

Tunzi
Tunzi
`மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019' வென்றார் சென்னைப் பெண் அக்‌ஷரா ரெட்டி!

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மூன்றாவது தென்னாப்பிரிக்கர் துன்ஸி என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக 1978-ல் மார்கரெட் கார்டினர் பெற்றார். அவரைத் தொடர்ந்து, 2017-ல் டெமி-லே நெல்-பீட்டர்ஸ் மகுடத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்.

வாழ்த்துகள் ஸோஸிபினி!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு