Published:Updated:

``ஸ்ருதி, சமந்தா, ஐஸ்வர்யா... யார் லுக் ரொம்ப சவாலா இருந்துச்சு தெரியுமா?!" - `நாம்' காலண்டர் ஸ்டைலிஸ்ட்

`நாம்' காலண்டர் ஷூட்
`நாம்' காலண்டர் ஷூட்

``ஓவியத்தில் இருக்கும் பெண்களின் கைகளில் வளையல்கள் எல்லாமே `கிராவிட்டி' இல்லாமல் மணிக்கட்டிலேயே நிற்பதுபோல க்ரியேட்டிவ்வாக இருக்கும். அதுபோலவே வளையல்களை நிற்கவைத்து டபுள்டேப், ஸ்பாஞ்சு என்று... நிறைய நிறைய சவால்கள் மட்டுமல்லாமல், நிறைய நிறைய கற்றுக்கொள்ளவும் முடிந்தது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வாழ்க்கையில் தனி நபராகப் போராடிக்கொண்டிருக்கும் பெண்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் செயல்படும் சுஹாசினி மணிரத்னத்தின் `நாம்' அறக்கட்டளையின் 10-வது ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதற்காகப் புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் உருவாக்கிய 2020-ம் ஆண்டுக்கான காலண்டர் வைரலானது.

காண்பவர்களை மெய் மறக்கச்செய்யும் ரவிவர்மாவின் ஓவியங்களை, காலண்டர் ஷூட்டுக்கான கான்செப்டாக எடுத்தது ஹைலைட். சவாலான விஷயமும்கூட.

`நாம்' காலண்டர் ஷூட்
`நாம்' காலண்டர் ஷூட்

அந்தச் சவாலை தொய்வில்லாமல் நிகழ்த்தி அசத்தியிருக்கும் டீமில் முக்கியப் பங்கு, காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் அம்ரிதா ராமுக்கு உண்டு. ரவிவர்மாவின் ஓவியங்களை `ரீ க்ரியேட்' செய்வதற்கான வேலைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்கிறார் அம்ரிதா.

`` `வட சென்னை' படத்துக்காக வெற்றிமாறன் சாருடன் இணைந்து பணியாற்றும்போது, அந்தப் படத்தின் கருவுக்கு ஏற்ற வகையில் உடை, அலங்காரம் எப்படி என்பதைக் கிட்டத்தட்ட ரிசர்ச் மாதிரி செய்து அவர் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்தோம். அந்த அனுபவம், ஜி.வெங்கட்ராமின் காலண்டர் ஷூட்டுக்குக் கைகொடுப்பதாக இருந்தது.

வட சென்னை டீம்
வட சென்னை டீம்

பொதுவாக, ரவிவர்மாவின் ஓவியங்களில் உள்ள உடை, நகைகள், அலங்காரம் என எல்லாமே பார்த்து ஆச்சர்யப்படும் அளவுக்கு இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாரம்பர்ய உடை, நகை போன்ற விஷயங்களை இப்போது தேடிக் கண்டுபிடிப்பது சற்று கடினமான விஷயம். சொல்லப்போனால், போன வருடம் ட்ரெண்டில் இருந்த ஒரு விஷயம் இந்த வருடம் அவுட் ஆஃப் ட்ரெண்ட் ஆகிவிட்டாலே அந்த அயிட்டம் கடைகளில் கிடைக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த காலண்டரில், நடிகை குஷ்பூ மற்றும் லிசி என இருவருக்கான போட்டோ ஷூட் சில மாதங்களுக்கு முன்பே நடந்துவிட்டது. என்றாலும், மற்ற செலிப்ரிட்டிகளுடன் வொர்க் செய்த இந்த புராஜெக்ட்டில் என்னையும் சேர்த்துக்கொண்டதற்கு சுஹாசினி மேமுக்கும், வெங்கட் சாருக்கும்தான் தேங்க்ஸ் சொல்ல வேண்டும்.

சுஹாசினி
சுஹாசினி

இந்த ஷூட்டுக்கான ஓவியங்கள், அதற்குப் பொருத்தமான பிரபலங்கள் என எல்லாமே சுஹாசினி மேம் மற்றும் வெங்கட் சார்தான் முடிவெடுத்தார்கள். இருவரும் தங்களின் வேலைகளில் தெளிவாகவும் ஆர்வமாகவும் ஈடுபாட்டோடும் இருப்பார்கள். இது எனக்கு சப்போர்ட்டிவ்வாக இருந்தது.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

இந்த வித்தியாசமான முயற்சியில், அவரவர்களின் ரோல்களைத் தாண்டி எல்லாருமே ஒருவருக்கு ஒருவர் சப்போர்ட் செய்து வேலைகளைச் செய்தோம். இந்த டீம் வொர்க்குக்குக் கிடைத்த வெற்றிதான் இந்த காலண்டரின் `ரீச்' " எனும் அம்ரிதா, `பிக் பாஸ் சீசன் 3' கமல் மற்றும் `கோடீஸ்வரி' ராதிகாவின் கெட்டப்புகளுக்குச் சொந்தக்காரர். பல படங்களில் காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றிவரும் இவரின் சமீபத்திய புராஜெக்ட், `இந்தியன் - 2'. அதில் இந்தியன் தாத்தா மற்றும் அவரின் மனைவிக்கு இவர் ஆடை வடிவமைப்பாளர்.

``ரவிவர்மா ஓவியங்களின் ரீ க்ரியேஷன் ஷூட்டில் நிறைய இன்ட்ரஸ்டிங்கான சவால்கள் இருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களும் அதற்குப் பொருத்தமான பிரபலங்களும் யாரென்று முடிவானதும், ஒவ்வொரு ஓவியத்திலும், தலை முதல் கால்வரையிலான அனைத்து அலங்கார விஷயங்களையும் கவனித்து ஒரு செக் லிஸ்ட் செய்தோம்.

ரம்யாகிருஷ்ணன்
ரம்யாகிருஷ்ணன்

ரவிவர்மாவின் ஓவியத்தில் தமயந்தி காதில் தொங்கும் நீர்த்துளி போன்ற மணிகள் இருக்கும் கம்மல்தான் வேண்டும் என்று, காம்ப்ரமைஸ் ஆகாமல் பிடிவாதமாத் தேடிப்பிடித்து, ரம்யாகிருஷ்ணனுக்குப் பயன்படுத்தினோம்.

அவரின் காலில் இருப்பது `பட்டுச் சலங்கை' கொலுசு. இப்போது பெரிதாகப் பயன்பாட்டில் இல்லாத, தென் இந்தியாவின் பாரம்பர்யக் கொலுசு இது.

கையில் பழம் வைத்திருக்கும் பெண்ணின் ஓவியத்தில் அவரின் காதுமடலின் மேல் பகுதியில் அணிந்திருக்கும் வித்தியாசமான கம்மலுக்குப் பெயர் `புகாடி'. அதேபோன்ற மாடலில் சமந்தாவுக்குத் தேடிக் கண்டுபிடித்தோம்.

சமந்தா
சமந்தா

சமந்தா தோற்றத்தின் ஹைலைட்டே அந்த பிளவுஸ்தான். எப்பவுமே க்யூட்டாக இருக்கும் சமந்தாவை ஒரு மெச்சூர்டான சாஃப்ட் நேச்சர் பெண்ணாக மாற்றுவதே வித்தியாசமான அனுபவம்.

இந்த ஷூட்டில் ஸ்ருதிஹாசனுக்கு மட்டும் ரெண்டு லுக். அதில் ராணி தோற்றத்துக்குத் தலை முதல் இடுப்புவரை எல்லாமே வித்தியாசமான நகைகளாக இருக்கும்.

தலையில் இருக்கும் சூரியன் மற்றும் சந்திரப்பிறைக்கு நடுவில் ஒரு முத்துச்சரம் இருக்கும். அதே மாதிரி கனெக்ட் செய்ய முத்து மாட்டலை வாங்கி கஸ்டமைஸ் செய்தோம்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

இதில் புடவை, நகை என்று எல்லாவற்றிலும் புளூ கலர் டாமினேஷன் இருக்கும். குறிப்பாக, கழுத்தில் லேயர் லேயராக வரும் மணிமாலையை, சுஹாசினி மேடம் தனக்குத் தெரிந்தவரிடம் ஆர்டர் செய்தார்.

கையில் இருக்கும் அந்த நீலக்கல் வளையலை, சென்னையில் தேடாத கடைகள் இல்லை. எல்லாக் கடைகளிலும் சிவப்பு, வெள்ளைக் கற்கள் அல்லது பச்சை, வெள்ளைக் கற்கள் பதித்த வளையல்தான் இருந்தன, நீலக்கல் இல்லை.

ஸ்ருதியின் இன்னொரு லுக் `ராதா இன் மூன்லைட்'. இந்த ஓவியத்தில் ராதா 9 கஜம் மடிசார் கட்டியிருப்பார். அந்தப் புடவைக்குப் பட்டுப்புடவையை யூஸ் செய்தால் ஓவியத்தில் இருப்பதுபோல நிறைய மடிப்புகள் வராது. அதனால் சுஹாசினி மேம் ஒரு ஜியார்ஜெட் புடவை, 9 கஜத்திலேயே வாங்கினார். அதை ஒருமுறை மடிசாராகக் கட்டி ட்ரையல் பார்த்துக்கொண்டோம்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

பட்டுத்துணிக்கும் ஜியார்ஜெட்டுக்கும் வித்தியாசம் இருப்பதால், போட்டோவுக்குச் சரியாக வருமா, கலர் ஏதாவது மாறுமா என்று சந்தேகம். வெங்கட் சாரிடமே கேட்டோம். அவர் ஓகே என்றதும்தான் `அப்பாடா' என்று இருந்தது. குறிப்பாக சுஹாசினி மேம், `இந்த ஓவியத்துல ராதா கழுத்துல இருக்குறது மாதிரியே ஒரு வைர அட்டிகை, என் கல்யாணத்துக்கு வாங்கினது இருக்கு. என் கசின் ஸ்ருதிக்கு அதைப் போட்டுத்தான் ஷூட் பண்ணணும்' என்றார். அதையே செய்துவிட்டோம்.

ரவிவர்மாவின் மகள், மாஹாபிரபாவும் அவரது மகனும் உள்ள ஓவியத்துக்கு ஷோபனா மேடம் மாடல் பண்ணினார். நாட்டியக் கலைஞரான ஷோபனா, தன் மேக்கப், ஹேர்ஸ்டைல் அனைத்தையும் தானே செய்துகொண்டார். குழந்தைக்கான காப்பு, என் வீட்டிலிருந்ததை எடுத்துப் பயன்படுத்தினேன்.

ஷோபனா
ஷோபனா

இதில், அந்தக் கொண்டையில் உள்ள பூக்கள் ரொம்பக் கூர்மையான நுனிகளோடு இருந்தன. அதுக்கு மல்லி, முல்லை, ஜாதிப்பூ எதுவுமே செட்டாகவில்லை. பின்னர் ஆர்டிஃபிஷியல் பூ வாங்க கடைக்குப் போனால், ஒருவழியாகக் கிடைத்தது. அது அந்தக் கடையில் இருந்த கடைசி பீஸ் என்பதுடன், டேமேஜ் ஆகியும் இருந்தது. வேற வழியில்லாமல் அதை வாங்கி, சில ஒட்டு வேலைகள் செய்து பயன்படுத்தினோம்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராணியான சுப்பம்மா பாயி சாகிப் ஓவியத்தின் ரீ க்ரியேஷன் மாடலாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்தார். இருப்பதிலேயே அதிக சாவால்கள் இந்தத் தோற்றத்துக்குத்தான். காரணம், இதில் அதிக நகைகள் இருந்ததுடன், அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவும் இருந்தன.

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

கையில் அடுக்கடுக்காக வளையல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். குறிப்பாக, முதல் வளையலில் ஒரு டாலர் மாதிரி தொங்கிக்கொண்டிருக்கும். அது வளையலாக இல்லாமல் சிவப்பு மற்றும் தங்க மணிகள் கோக்கப்பட்டு வித்தியாசமாக இருந்தது. இந்த இரண்டு நிற மணிகளையும் வாங்கி, அட்டிகை மாதிரியான நெக்லஸில் இருக்கும் பென்டன்டை கட் செய்துகொண்டோம்.

ஷூட் ஸ்பாட்டுக்கு ராணி கெட்டப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் ரெடி ஆன பின்னர், இந்த மணிகளைக் கம்பியில் கோத்து, அதில் பென்டன்ட் சேர்த்து கைகளுக்கான சரியான அளவில் வைத்து கட்டிவிட்டு ஷூட் செய்தோம். இது தவிர, கழுத்தில் இருந்த பட்டையான தங்க நகைக்கு, வேறு ஒரு நகையின் பாதியை கட் செய்து பயன்படுத்தினோம். காலுக்கு இரண்டு டைப் கொலுசுகள். இப்படி இந்தத் தோற்றத்துக்கு கட்டிங் ஒட்டிங் என்று கஸ்டமைஸ்டு நகைகள் மட்டுமே பயன்படுத்தினோம்.

சாமுண்டீஸ்வரி
சாமுண்டீஸ்வரி

இந்த ஷூட்டின்போதே `நாம்' அமைப்பில் உதவிபெறும் சாமுண்டீஸ்வரிக்கு ஒரு ட்ரையல் ஷூட் செய்து பார்த்தோம். அவருக்கு முழு சப்போர்ட் செய்து தன்னம்பிக்கை கொடுக்கிற பொறுப்பை சுஹாசினி மேம் ஏற்றுக்கொண்டார். வெங்கட்ராம் சாரும், முதன்முறையாக கேமிரா முன் நின்ற சாமுண்டீஸ்வரிக்கு `இப்படி பாருங்க, அப்படி நில்லுங்க' என்று பொறுமையாகச் சொல்லிக்கொடுத்து ஷூட் செய்தார்.

ஓவியத்தில் இருக்கும் பெண்களின் கைகளில் வளையல்கள் எல்லாமே `கிராவிட்டி' இல்லாமல் மணிக்கட்டிலேயே நிற்பதுபோல க்ரியேட்டிவ்வாக இருக்கும். அதுபோலவே வளையல்களை நிற்கவைத்து டபுள்டேப், ஸ்பாஞ்சு என்று... நிறைய நிறைய சவால்கள் மட்டுமல்லாமல், நிறைய நிறைய கற்றுக்கொள்ளவும் முடிந்தது.

ஜி வெங்கட்ராம் உடன்
ஜி வெங்கட்ராம் உடன்
ஸ்ருதி முதல் சமந்தா வரை ரவிவர்மாவின் ஓவிய வெர்ஷன்! ஜி.வெங்கட்ராம் போட்டோஷுட் கதை

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு இருந்தாலும், சுஹாசினி மேம் ஆல் இன் ஆல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பெரும்பாலான உடைகள் அவர் புதிதாக வாங்கியது. ஷூட் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷனில் நினைத்ததையெல்லாம் மாற்றக்கூடிய வாய்ப்பிருந்தும், வெங்கட்ராம் சார் `நோ காம்ப்ரமைஸ்' சொல்லிவிட்டார். கலர்சென்ஸ், லைட்டிங் என்று மிகவும் அர்ப்பணிப்புடன் வேலைபார்த்தார்.

இதில் பங்கெடுத்துக்கொண்ட எல்லா பிரபலங்களும் முழு ஈடுபாட்டோடு வேலைசெய்து, தரமான ஒரு அவுட்புட்டை கொடுப்பதுதான், அந்த மகத்தான ஓவியக் கலைஞருக்கு கலைத்துறையில் இருக்கும் நாம் செய்யும் மரியாதை என்பதை மனதில்வைத்து, மனநிறைவோடு வேலைபார்த்தோம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு