Published:Updated:

மைக்கேல் ஜாக்சனின் நன்றி... ஸ்ரீதேவியின் அன்பு... ஸ்டைல் ஐகான் ரன்வீர்... டிசைனர் மனீஷ் மல்ஹோத்ரா ஷேரிங்ஸ்!

Manish Malhotra with Ranbir and Deepika
Manish Malhotra with Ranbir and Deepika

`ஃபிலிம் ஃபேர் விருதுகள்' முதன்முதலில் ஆடை வடிவமைப்புக்கென தனி விருதை ஒதுக்கியது, இவரின் வேலைப்பாடுகளைப் பார்த்துத்தான்.

`ஃபேஷன் டிசைன்' பற்றிய எந்தவிதப் படிப்பும் இவர் படிக்கவில்லை... ஆனால் இந்தியாவின் `நம்பர் ஒன் டிசைனர்' என்கிற பட்டம் 30 ஆண்டுகளாக தொடர்ந்து இவரிடம்தான் இருக்கிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி முதல் மைக்கேல் ஜாக்சன் வரை உலகளவில் பல பிரபலங்களுக்கு இவரது கைவண்ணத்தில்தான் ஆடைகள் உருவாகியிருக்கின்றன. இப்போதும் ஆலியா பட் முதல் ரன்வீர் வரை பாலிவுட்டின் உச்சநட்சத்திரங்கள் அனைவருக்கும் இவர்தான் டிசைனர்.

ராதிகா ஆப்தே போன்றவர்கள் மிகவும் எளிமையான உடைகளை விரும்புவார்கள். அவர்களுக்கு ஆடை வடிவமைப்பதுதான் சவாலாக இருக்கும்.
மனிஷ் மல்ஹோத்ரா

`ஃபிலிம் ஃபேர் விருதுகள்' முதன்முதலில் ஆடை வடிவமைப்புக்கென தனி விருதை ஒதுக்கியது இவரின் வேலைப்பாடுகளைப் பார்த்துத்தான். `ரங்கீலா', `இந்தியன்', `3 இடியட்ஸ்', `கபி குஷி கபி கம்', `ரா ஒன்', `சென்னை எக்ஸ்பிரஸ்', `சிவாஜி', `எந்திரன்', `புலி' உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார் இவர். ஆமாம்... ஃபேஷன் உலகில் கொண்டாடப்படும் மாபெரும் உச்சநட்சத்திரம்தான், இந்த மனிஷ் மல்ஹோத்ரா.

FLO எனும் பெண்கள் அமைப்போடு இணைந்து, `Adventures of Fashion' என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்திருந்த மனிஷ் மல்ஹோத்ராவிடம் பேசினேன்.

ஆடை வடிவமைப்புத் துறைக்கு முதலில் எப்படி வந்தீர்கள்?

Manish Malhotra
Manish Malhotra

சிறு வயதிலிருந்தே படங்கள் என்றால் அவ்வளவு ஆசை. என் கனவு, லட்சியம் அனைத்தும் திரைப்படங்களைச் சுற்றியே இருந்தன. இயக்குநராக வேண்டும் என்பது என் கண்மூடித்தனமான கனவு. அதேநேரத்தில், டிசைனிங் மீதும் அதிகளவு ஈர்ப்பு இருந்தது. பத்தொன்பது வயதில் மாடலாக என் வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆனாலும், எனக்கு அந்தத் துறை மீது விருப்பமில்லை. பிறகு, ஒரு துணிக்கடையில் விற்பனையாளனாக சில காலம் வேலை செய்தேன். டிசைனிங் மீதுள்ள ஆர்வத்தால், இரண்டு தையல் மெஷின்களை வாங்கி வீட்டிலேயே வைத்து பெண்களின் சுடிதார்களைத் தைக்க ஆரம்பித்தேன். என் புதுமையான டிசைன் பலருக்கும் பிடித்திருந்தது. நான் வடிவமைத்த ஆடைகள் இறுதியாக நான் மிகவும் ஆசைப்பட்ட திரைத் துறைக்கே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தது.

என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த மனிதர்களில் ஸ்ரீதேவிக்கு தனி இடம் எப்போதும் உண்டு
மனிஷ் மல்ஹோத்ரா

ஸ்ரீதேவி முதல் அவர் மகள் ஜான்வி வரை எல்லா காலத்துக்கும் ஏற்ப ஆடைகளை வடிவமைக்கிறீர்கள். உங்களுடைய இன்ஸ்பிரேஷன் யார்?

Manish with Sridevi and Kushi Kapoor
Manish with Sridevi and Kushi Kapoor

என்னைச் சுற்றியுள்ள மரம், பூக்கள், நபர்கள், வண்ணங்கள், நகரங்கள், துணிவகைகள் என அனைத்தையும் எனக்கான இன்ஸ்பிரேஷனாகவே நான் பார்க்கிறேன். நான் காணும் ஒவ்வொரு பொருளைக் கொண்டும், என் கற்பனைத்திறனை வளர்த்துக்கொள்ளவே நினைப்பேன். எனக்கான இலக்கை ஒவ்வொரு நாளும் அதிகப்படுத்திக்கொண்டே நகர்வேன்.

நீங்கள் எதிர்கொண்ட சவால்கள்?

Bollywood stars
Bollywood stars

ஃபேஷன் அல்லது தொழில் சம்பந்தப்பட்ட படிப்புகள் எதுவும் நான் கற்கவில்லை. இதுவே எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய படிப்பு, 'பயணம்' மட்டுமே. ஏராளமான படித்த வடிவமைப்பாளர்களோடு எப்படிப் போட்டியிடுவது என்பது கடினமான கனவாகவே தோன்றியது. அதனாலேயே கடுமையாக உழைக்கத் தொடங்கினேன். திரைப்படங்களில், கதைகளுக்கேற்றபடி ஆடைகளை வடிவமைப்பவர்கள் மிகவும் குறைவாக இருந்த காலகட்டம் அது. முன்கூட்டியே கதையை என்னிடம் சொல்லிவிடுங்கள் என இயக்குநர்களிடம் கேட்டுக்கொண்டிருப்பேன். என் ஆடைகள் ஒவ்வொன்றும் அழகிய கதை சொல்லவேண்டும் என்கிற பயணத்தில் நான் எதிர்கொண்ட சவால்கள் பல.

ஸ்ரீதேவியுடனான உங்கள் பயணம்?

Sridevi
Sridevi

நான் மிகவும் நேசிக்கும் என் திரைத்துறைப் பயணம் தொடங்கியது சூப்பர்ஸ்டார் ஸ்ரீதேவியுடன்தான். 1983-ம் ஆண்டு வெளிவந்த 'ஹிம்மத்வாலா' திரைப்படத்தில் ஸ்ரீதேவியைக் கண்டு வியந்த நான், அவரோடு பயணிப்பேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் காலகட்டத்தின் புகழ்பெற்ற புகைப்படக்காரரான ராகேஷ் ஷ்ரேஷ்தா, மும்பையில் நடைபெற்றுக்கொண்டிருந்த திரைப்பட ஷூட்டிங்கின்போது ஸ்ரீதேவியை முதன்முதலில் அறிமுகம் செய்துவைத்தார். கள்ளங்கபடமற்றப் புன்னகையோடு ஶ்ரீதேவி என்னை வரவேற்றது இன்றும் நினைவில் இருக்கிறது. ஏராளமான படங்களில் அவரோடு சேர்ந்து வேலை செய்திருக்கிறேன். இடையில் 15 வருடங்கள் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த காலகட்டத்திலும், எங்களின் நட்பு தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த மனிதர்களில் ஸ்ரீதேவிக்கு தனி இடம் எப்போதும் உண்டு.

மைக்கேல் ஜாக்சனுக்கு ஆடை வடிவமைத்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?

With Michael Jackson
With Michael Jackson

1999-ம் ஆண்டு, நியூயார்க்கில் நடைபெற்ற 'பாலிவுட் விருதுகள்' விழாவில், மைக்கேல் ஜாக்சனுக்கு 'Humanitarian Award' வழங்கப்பட்டது. அதில் கலந்துகொள்வதற்காக மைக்கேல் ஜாக்சனுக்கு ஆடை வடிவமைக்கவேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டனர். தகவல் வந்த ஒரே நாளில், அவருக்கான ஆடையை வடிவமைத்தேன். ஜாக்சன், நான் வடிவமைத்த ஆடையை அணிந்தது மட்டுமல்லாமல் மேடையில் எனக்கு நன்றியும் கூறினார். 'இந்த ஆடை மிகவும் அழகாக இருக்கிறது' என்று அவர் சொன்ன தருணம் தரையில் என் கால் நிற்கவேயில்லை. நான் மதிக்கும் மிகப்பெரிய பாராட்டு அது.

உங்களுக்குப் பிடித்த 'ஸ்டைல் ஐகான்' யார்?

With Ranveer and Alia
With Ranveer and Alia

70-களின் பாலிவுட் நடிகர், நடிகைகள் மிகவும் பிடிக்கும். குர்தாவை அறிமுகம் செய்த ராஜேஷ் கண்ணா, புடவையை வித்தியாசமாக அணிந்த மும்தாஜ், ரேகாவின் 'ஸ்டேட்மென்ட்' தோற்றம், அமிதாப்பின் பெரிய கூலர்ஸ் என அந்தக் காலகட்டத்திலேயே புதுமையான ஸ்டைல்களை உருவாக்கினார்கள். அந்த வரிசையில், ரன்வீர் சிங் இப்போது பல புதிய ஸ்டைல்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு