69 வயதில் அசாத்திய சாதனை... 11 வகை கனரக வாகனங்களை இயக்கும் அசத்தல் ஓட்டுநர்! - ராதாமணி

வாவ் பெண்கள்
கடவுள் தேசத்தின் இரும்புப் பெண்மணி இவர். கிரேன், ரோடு ரோலர், டிராக்டர், எக்ஸ்கவேட்டர், ஃபோர்க் லிஃப்ட், லாரி, பேருந்து உட்பட 11 வகை கனரக வாகனங்களை இயக்குவார். கார், ஆட்டோ, டூவீலர் ஓட்டுவதும் இவருக்கு கை வந்த கலை. கேரளாவில் கனரக வாகனங்கள் இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் பெண்ணும் இவர்தான். இப்படி தன்னுடைய 69-வது வயதிலும் கனரக வாகனங்களை இயக்கிக் கலக்கிக்கொண்டிருக்கிறார் கொச்சியைச் சேர்ந்த ராதாமணி.
“ஆழப்புழா மாவட்டம் சேர்தலா என்னுடைய சொந்த ஊர். அப்பா தொழிலதிபர். எனக்கு நான்கு சகோதரர்கள். நான் மட்டும் பெண். திருமணத்துக்கு முன்புவரை எனக்கு வாகனங்கள்மீது ஈடுபாடு இல்லை. திருமணத்துக்குப் பிறகு கொச்சி வந்துவிட்டேன். என் கணவர் A2Z என்ற டிரைவிங் ஸ்கூல் தொடங்கினார். கேரளாவின் முதல் டிரைவிங் ஸ்கூலும் அதுதான். கார் மட்டுமல்லாமல் பேருந்து, லாரி என்று கனரக வாகனங்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. எங்கள் வீட்டில் இருந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனை வருக்கும் டிரைவிங் தெரியும். அதையெல்லாம் பார்த்து தான் எனக்கும் டிரைவிங்மீது ஆர்வம் வந்தது.
1981-ம் ஆண்டு முதன்முதலாக அம்பாஸிடர் காரை ஓட்டினேன். நம்பிக்கையே இல்லாமல் ஓட்டிய போது எனக்கு எதிரில் ஒரு வண்டி வந்தது. பயத்தில் நான் கண்ணை மூடி, கன்ட்ரோலை விட்டுட்டேன். உடனே அருகில் இருந்த என் கணவர்தான் சாமர்த்தியமாக நிலைமையைச் சமாளித்து, ‘தைரியமாக ஓட்டு’ என்ற நம்பிக்கையைக் கொடுத்தார்.
எனக்கு மட்டுமல்ல... என் மகன்கள், மகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் என அனைவருக்குமே எல்லாவிதமான வாகனங்களையும் இயக்கத் தெரியும்.
அப்போதெல்லாம் பெண்கள் கார் ஓட்டுவதே அரிது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எல்லா வாகனங்களையும் ஓட்டிப் பழகினேன். 1988-ம் ஆண்டு கனரக வாகனங்களை இயக்குவதற்கான லைசென்ஸ் பெற விண்ணப்பித்தேன். விதிமுறையின்படி, கொச்சியில் இருந்து 18 கி.மீ தூரம் கனரக வாகனத்தை இயக்க வேண்டும். பலமுறை கனரக வாகனத்தை இயக்கிய அனுபவத்தில், லைசென்ஸ் தேர்வு அன்றும் வாகனத்தைப் பயமின்றி இயக்கினேன். லைசென்ஸை கைகளில் வாங்கிய அந்தத் தருணத்தை மறக்கவே முடியாது. இதற்கெல்லாம் காரணம் என் கணவர்தான். ஆனால், 2004-ம் வருஷம் அவர் தவறிட்டார்” என்கிற ராதாமணியின் குரல் இறுகுகிறது.
“சிறு வயதில் நான் வீட்டைவிட்டு வெளியிலேயே வரமாட்டேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள்... அப்போது எனக்கு சைக்கிள்கூட ஓட்டத் தெரியாது. இப்போது அனைத்துவிதமான கனரக வாகனங்களையும் இயக்குகிறேன்.

கொரோனாவுக்காக ஊரடங்கு உத்தரவு வரும் முன்னர் வரை நான் வாகனங்களை இயக்கிக்கொண்டுதான் இருந்தேன். எனக்கு மட்டுமல்ல... என் மகன்கள், மகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் என அனைவருக்குமே எல்லாவிதமான வாகனங்களையும் இயக்கத் தெரியும். கேரளாவில், ஆட்டோமொபைல் டிப்ளோமா முடித்த முதல்பெண் என்னுடைய மகள்தான்” என்று பெருமிதப்படும் ராதா மணியின் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் கேரளாவில் 13 இடங்களில் செயல்படுகின்றன.
‘‘நான் கனரக வாகனங்களை இயக்கும்போது, ‘வீட்டுக்குப் போய் உட்காருங்க’ என்று கிண்டலடிப்பார்கள். பெண்களால் கனரக வாகனங்களை இயக்க முடியாது என்கிற தவறான எண்ணமே கிண்டலுக்குக் காரணம். அந்த முன்முடிவை நான் உடைத்தேன். இன்று எங்கள் டிரைவிங் ஸ்கூல் மூலம் பல பெண்கள் லைசென்ஸ் பெற்றிருப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. கனரக வாகனங்களை ஓட்டத் தெரிந்த பெண்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப்பு இருக்கிறது. நிதானமும் தீவிரப் பயிற்சியும் இருந்தால் எல்லா பெண்களும் கனரக வாகனங்களை நேர்த்தியாக இயக்க முடியும்.

என்னுடைய 32 வருட டிரைவிங் சர்வீஸில் இதுவரை ஒரு விபத்தைக்கூட நான் ஏற்படுத்தியது கிடையாது. இனியும் அது நடக்கப்போவதில்லை. பெண்கள் எந்த வயதிலும் கற்பதையோ, பிடித்த விஷயத்தைச் செய்யவோ கூச்சப்படக் கூடாது. வயது என்பது சாதாரண எண்ணிக்கைதான். அதை நினைத்து நம் கனவுகளுக்கு நாமே தடை போடக் கூடாது. நம்மை ஏளனம் செய்தவர்கள் வியந்து பார்க்கும் வகையில் சிறகடித்து பறந்துகொண்டே இருக்க வேண்டும்” என்று பெரும் சிரிப்போடு சொல்லி நமக்கும் உற்சாகம் அளிக்கிறார் ராதாமணி!