
ரேஸ்: ஃபார்முலா 1

2022 ஃபார்முலா 1 சீசனின் சாம்பியன் ஷிப் ரேஸ் கிட்டத் தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இன்னும் 6 பந்தயங்கள் மீதமிருந்தாலும், மேக்ஸ் வெர்ஸ்டப்பனின் அசத்தல் செயல்பாடுகளும், தொடரும் ஃபெராரியின் செயல்பாடுகளும் இனி எதுவும் மாறப்போவதில்லை என்பதைத் தெரியப்படுத்தியிருக்கின்றன. செப்டம்பர் மாதம் நடந்த 2 ரேஸ்களிலும் எளிதாக வெற்றியைத் தனதாக்கியிருக்கும் வெர்ஸ்டப்பன், சார்ல் லெக்லர்க்கை விட 116 புள்ளிகள் முன்னிலை பெற்றிருக்கிறார்.
டட்ச் கிராண்ட் ப்ரீ
டிராக்: சாண்ட்வூர்ட்
மொத்த லேப்கள்: 72
ரேஸ் தேதி: செப்டம்பர் 4, 2022
போல் பொசிஷன்: மேக்ஸ் வெர்ஸ்டப்பன்
வெற்றியாளர்: மேக்ஸ் வெர்ஸ்டப்பன்
அதிவேக லேப்: மேக்ஸ் வெர்ஸ்டப்பன்
தொடர்ந்து இரண்டு ரேஸ்களாக கிரிட்டில் பின்னால் இருந்து தொடங்கிய மேக்ஸ் வெர்ஸ்டப்பன், இந்த முறை போல் பொசிஷனில் ரேஸைத் தொடங்கினார். பத்தாவது மற்றும் பதினான்காவது இடத்தில் இருந்து தொடங்கி ரேஸை வென்றவருக்கு இது மிகவும் எளிதாக இருந்தது.
ஃபெராரியின் சொதப்பல் பதினெட்டாவது லேப்பில் தொடங்கியது. கார்லோஸ் சைன்ஸ் பிட் ஸ்டாப்புக்கு வந்துபோது இடது பின் பக்க டயர் தயாராக இருக்கவில்லை. இதனால் அவர் சில நொடிகள் கூடுதலாகக் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. அதனால் அவர் 11-வது இடத்துக்குப் பின் தள்ளப்பட்டார். அது மட்டுமல்லாமல், அந்த அணியினர் தங்களுடைய வீல் கன்னை செர்ஜியோ பெரஸின் பாதையில் வைக்க, அவர் கார் அதில் ஏறிச் சென்ற காமெடியும் அரங்கேறியது. சைன்ஸின் அடுத்த பிட் ஸ்டாப்பில் இன்னொரு பிரச்னை. பின்னால் வந்த அலோன்சோவை இடிக்கும் வகையில் ரிலீஸ் செய்யப்பட்டார். அதனால் அவருக்கு 5 நொடி பெனால்டி கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக ஐந்தாவது இடத்தில் ரேஸை முடித்த சைன்ஸ், எட்டாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டார்.
இப்படி வழக்கமான சொதப்பல்களில் ஃபெராரி ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காட்டியது மெர்சிடீஸ். தன் பிட் ஸ்டாப்புக்குப் பிறகு சீறிப் பாய்ந்த லூயிஸ் ஹாமில்ட்டன் ரேஸை வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னிலையை நோக்கி அவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, வால்ட்டேரி போட்டாஸின் கார் மெயின் ஸ்டிரெய்ட்டில் நின்றது. 55-வது லேப்பில் சேஃப்டி கார் வரவழைக்கப்பட்டது. அதையடுத்து, வெர்ஸ்டப்பன் பிட் ஸ்டாப் எடுத்து சாஃப்ட் டயரோடு வெளியேறினார்.
சேஃப்டி கார் முடிந்ததும் இரண்டாம் இடத்தில் இருந்த வெர்ஸ்டப்பன், அடுத்த நொடியே ஹாமில்ட்டனை முந்தி முதலிடத்துக்கு முன்னேறினார். ஹாமில்ட்டனின் டயர் பழையதானதால், அவரால் மேக்ஸோடு போட்டியிட முடியவில்லை. இந்த சேஃப்டி கார் சமயத்தில் மெர்சிடீஸ் அணி தங்கள் டிரைவர்களை பிட்டுக்குள் அழைக்கத் திட்டமிடவில்லை. ஆனால் பிட் எடுத்தே ஆகவேண்டும் என்று தானாக வற்புறுத்தி உள்ளே நுழைந்தார் ஜார்ஜ் ரஸல். அது அவருக்குப் பெரிய வகையில் உதவியது. தன் டீம் மேட் ஹாமில்ட்டன், லெக்லர்க் இருவரையும் முந்தி இரண்டாம் இடம் பிடித்தார் ரஸல். இதனால் ஹாமில்ட்டன் கடும் கோபத்துக்கு ஆளானார். இந்த வெற்றி வெர்ஸ்டப்பனின் முப்பதாவது ஃபார்முலா ஒன் வெற்றியாக அமைந்தது.

இத்தாலியன் கிராண்ட் ப்ரீ
டிராக்: மான்சா
மொத்த லேப்கள்: 53
ரேஸ் தேதி: செப்டம்பர் 11, 2022
போல் பொசிஷன்: சார்ல் லெக்லர்க்
வெற்றியாளர்: மேக்ஸ் வெர்ஸ்டப்பன்
அதிவேக லேப்: செர்ஜியோ பெரஸ்
வேகத்தின் கோயில் என்றழைக்கப்படும் மான்சாவில் பல வீரர்கள் இன்ஜின் பெனால்டி எடுத்தனர். மேக்ஸ் வெர்ஸ்டப்பன் (5 இடங்கள்), எஸ்டபன் ஓகான் (5), செர்ஜியோ பெரஸ் (10), வால்ட்டேரி போட்டாஸ் (15), கெவின் மேக்னசன் (15), மிக் ஷூமேக்கர் (15) ஆகியோர் குறிப்பிட்ட இடங்கள் பின்னால் தள்ளப்பட, கார்லோஸ் சைன்ஸ், லூயிஸ் ஹாமில்ட்டன், யூகி சுனோடா ஆகியோர் பின்னால் இருந்து தொடங்க வேண்டியிருந்தது. இன்னொரு மாற்றமாக, உடல்நிலை சரியில்லாத வில்லியம்ஸ் வீரர் அலெக்ஸ் ஆல்பானுக்குப் பதிலாகக் களமிறங்கினார் நெதர்லாந்து வீரர் நிக் டி ஃப்ரைஸ். தன்னுடைய ஃபார்முலா 1 அறிமுக ரேஸிலேயே மிகப் பெரிய தாக்கமும் ஏற்படுத்தினார் அவர்.


ஏழாவது இடத்தில் இருந்து ரேஸைத் தொடங்கிய வெர்ஸ்டப்பன், நான்காவது லேப்பில் மூன்றாவது இடம் வரை முன்னேறினார். அடுத்த லேப்பிலேயே இரண்டாவது இடமும் பிடித்தார். பத்தாவது லேப்பில் விர்sசுவல் சேஃப்டி கார் பயன்பாட்டுக்கு வந்ததால், அதைப் பயன்படுத்தி பிட் எடுத்தார் லெக்லர்க். புதிய டயரோடு அதிவேகமாகச் செயல்பட்டவர், 26-வது லேப்பில் வெர்ஸ்டப்பனை முந்தி முதலிடத்துக்கு முன்னேறினார். ஆனால் அவர் 34-வது லேப்பில் இன்னொரு பிட் எடுத்தபோது, வெர்ஸ்டப்பன் மீண்டும் முதலிடம் பிடித்தார். 53-வது லேப்பில் ரிக்கார்டோ தன் காரை டிராக்கிலேயே நிறுத்தினார். அதனால் சேஃப்டி கார் வரவழைக்கப்பட்டது. காரை சீக்கிரம் டிராக்கில் இருந்து அகற்ற முடியாததால், சேஃப்டி காருக்குப் பின்னாலேயே ரேஸ் முடிவுக்கு வந்தது. அதனால் லெக்லர்க்கால், வெர்ஸ்டப்பனை முந்தி வெற்றி பெற முடியவில்லை.
தொடர்ந்து 10 ரேஸ்களாக புள்ளிகள் பெற்றுக் கொண்டே இருந்த முன்னாள் உலக சாம்பியன் ஃபெர்னாண்டோ அலோன்சோ, இந்த ரேஸில் தண்ணீர் அழுத்தப் பிரச்னையால் 31-வது லேப்பில் ஓய்வு பெற்றார். அதேசமயம் தன்னுடைய அறிமுக ரேஸில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் டி ஃப்ரைஸ். பல வீரர்கள் பெனால்ட்டி எடுத்ததால், ரேஸை எட்டாவது இடத்தில் இருந்து தொடங்கினார் அவர். முன்னணி வீரர்கள் பலர் அவரை முந்தி பின்னுக்குத் தள்ளினாலும் சிறப்பாகச் செயல்பட்டு டாப் 10 இடங்களுக்குள்ளேயெ இருந்தார். ஜோ குவான்யூ, எஸ்டபான் ஓகான் போன்றவர்கள் சவால் கொடுத்தாலும் அதையெல்லாம் சமாளித்து ஒன்பதாவது இடத்தில் முடித்தார். வில்லியம்ஸ் வீரர் நிகோலஸ் லடிஃபி இன்னும் புள்ளிகள் எடுக்கத் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தன்னுடைய முதல் ரேஸிலேயே 2 புள்ளிகள் கைப்பற்றினார் டி ஃப்ரைஸ். அதனால் இந்த ரேஸின் சிறந்த டிரைவருக்கான விருது அவருக்குக் கிடைத்தது.
```அது ஆபத்தான ரிலீஸ் கிடையாது. நான் பிட் லேனில் இருந்து சரியாகவே ரிலீஸ் செய்யப்பட்டேன். அப்போது காரிலிருந்து பார்த்தேன்; என்னை ரிலீஸ் செய்தபோது, அலோன்சோ சற்று தொலைவாகவே இருந்தார். ஆனால் மெக்லரன் இன்ஜினீயர் ஒருவர் என்னுடைய பாதையில் திடீரென்று ஓடினார். அதனால் நான் பிரேக்கைப் பயன்படுத்த வேண்டியதாக இருந்தது. ஒருவரின் உயிரைப் பாதுகாத்திருக்கிறேன். ஆனால் அதற்கு பெனால்டி பெற்றிருக்கிறேன். இது மிகவும் விரக்தியளிப்பதாக உள்ளது!"
- பெனால்டி குறித்து கார்லோஸ் சைன்ஸ்




