`எங்கள் ஆட்சி அமைந்தால் கல்விக்கடனை ரத்து செய்வோம்' எனத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.
#HerMoney-ல் கல்விக்கடன் குறித்த விழிப்புணர்வு கட்டுரை எழுதலாமா, அதற்கு வாசகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்குமா போன்ற கேள்விகள் இருந்தன. அக்கேள்விகளை அடித்து நொறுக்கும்படி கட்டுரையை வாசித்த பலரும் எங்களைத் தொடர்பு கொண்டு கல்விக்கடன் குறித்த பல கேள்விகளை அடுக்க, இதோ அக்கேள்விகளுக்கான பதில்களுடன் இந்த வாரமும் தொடர்கிறோம்.
ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கல்விக்கடன் கிடைக்குமா?
பெரும்பாலானோருக்கு இருக்கும் சந்தேகம், `ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் உயர்கல்வி படிக்க அவர்களுக்கு வங்கியில் கல்விக்கடன் கிடைக்குமா?' என்பது.
ஆம்... அவர்கள் அனைவருமே கல்விக்கடன் பெறலாம்.

ஒரு குடும்பத்தில் ஒரு மாணவருக்குக் கல்விக்கடன் வாங்கினாலும், அந்த மாணவரின் சகோதர, சகோதரிகளின் படிப்புக்கு வங்கிகள் கல்விக்கடன் வழங்கத் தடையில்லை. போலவே, இக்கடனை பெறுவதற்கு வயது வரம்பில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டோர் கல்விக்கடன் பெறும்போது, கடன் பெறும் மாணவி மைனராகயிருந்தால் அக்கடனுக்குப் பெற்றோர்கள் ஜாமீன் அல்லது உறுதியளிக்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு ரூ. 4.5 லட்சமும், இரண்டாவது மாணவருக்கு ரூ. 5.5 லட்சமும் கல்விக் கடன் வாங்குவதாகக் கொண்டால், அக்குடும்பத்துக்கான மொத்தக் கல்விக் கடன் தொகையைக் கணக்கிட்டு அதற்கான ஜாமீனை மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் (மேற்சொன்ன உதாரணத்தில் 1 லட்ச ரூபாய்க்கு). அதேசமயம், அவ்விருவரும் வாங்கிய கடன் மீதான வட்டிக்கு மானியம் பெறும் தகுதியிருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்த, கல்விக்கடன் பெற்று படிக்கும் எல்லாருக்கும் அச்சலுகை கிடைக்கும். அதற்குத் தடை எதுவும் இல்லை.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்குமா?
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்பது கல்விக் கடன் வழங்குவதற்கான விதி. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நேரடியாகச் சேரும் மாணவர்கள், இந்தியன் வங்கிகள் சங்கத்தின் திட்டத்தின் கீழ் இயங்கும் (IBA – INDIAN BANK’S ASSOCIATION) வங்கிகளிலிருந்து கல்விக்கடன் பெற முடியாது.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் மாணவர்களுக்கு அரசு ஓதுக்கீட்டின் கீழ் தாங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதனால், அரசு நடத்தும் கவுன்சலிங்கில் பங்கேற்று அங்கு கிடைக்கின்ற கல்லூரியையும் படிப்பையும் தேர்வு செய்ய வேண்டும். பிறகு, தாங்கள் விரும்பும் கல்லூரியில் தாங்கள் விரும்பிய பிரிவில் படிக்க இடம் கிடைக்காததைச் சொல்லி, அந்த அட்மிஷனை சரண்டர் செய்த பின் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பெற்ற கல்லூரியில் சேர வேண்டும்.

அப்போதுதான் இந்தியன் வங்கிகள் சங்கத்தின் திட்டத்தின் கீழ் கல்விக்கடன் பெறலாம். இதைச் செய்தால்தான் வட்டியும் வட்டிக்கான மானியமும் கிடைக்கும். இல்லையெனில் இந்தியன் வங்கிகள் சங்கத்தின் இத்திட்டம் சாராத வங்கிகளை அணுகி கல்விக்கடன் பெறலாம். ஆனால், இப்படி பெறப்படும் கடனுக்கு மத்திய அரசு வழங்கும் வட்டியின் மீதான மானியச் சலுகை கிடைக்காது. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு நிர்ணயம் செய்த கட்டணத்தையும் கூடவே தங்குமிடம், உணவு, லேப்டாப் போன்ற பல்வேறு செலவுகளுக்கு ஆகும் பணத்தையும் கல்விக் கடனாகப் பெறலாம்.
கல்விக் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பது எப்படி?
சென்ற அத்தியாயத்தில் சொன்னதுபோல கல்வி நிறுவனத்தில் அட்மிஷன் பெறுவதற்கு முன்னதாகக் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க முடியாது. வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடப் பிரிவில் சேர அட்மிஷன் கிடைத்திருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து படிப்புக்கு ஆகும் செலவுகள் பற்றிய மதிப்பீட்டை (எஸ்டிமேஷன்) பெறுவது முக்கியம்.
இந்த மாதங்களில்தான் என்றில்லாமல் வருடம் முழுவதிலும் எப்போது வேண்டுமானாலும் கல்விக்கடன் வேண்டி வங்கிகளை அணுகலாம். குறிப்பிட்ட இந்த வங்கியில்தான் கல்விக்கடன் பெறமுடியும் என்ற விதி இல்லை. அந்த ஊரில் உள்ள எந்த வங்கியிலும் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம். வங்கியில் உங்களுக்குக் கணக்கு இல்லை என்றாலும், நீங்கள் கடன் வேண்டி எந்த வங்கியையும் அணுகலாம்.
கல்விக்கடன் கேட்டு ஆன்லைன் மூலமோ, வங்கிகளில் விண்ணப்பங்களைப் பெற்று நேரிலுமோ சமர்ப்பிக்கலாம். நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் வங்கியில் தரும் ரசீதை பத்திரப்படுத்துவதும் அவசியம்.
சென்ற அத்தியாயத்தில் பட்டியலிட்டிருந்த ஆவணங்களுடன் கடனுக்கான உத்தரவாதம் கொடுக்கும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களும் தேவைப்படும். வங்கிகளின் இணையதளத்திலும் இதுகுறித்த விவரங்கள் உள்ளன என்றாலும், சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு நேரில்சென்று, எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கேட்டறிந்து, அதற்கேற்றாற்போல ஆவணங்களைத் தயார்நிலையில் வைத்திருக்கலாம்.

நமது விண்ணப்பத்தை நிராகரிக்க வங்கிக்கு அதிகாரம் உள்ளதா?
உரிய ஆவணங்களுடன் கொடுக்கப்படும் கல்விக்கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை.
கல்விக்கடன் கிடையாது என மறுக்கவோ, நம் விண்ணப்பத்தை நிராகரிக்கவோ வங்கிக்கிளை அதிகாரிக்குஅதிகாரமில்லை.
ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணங்களை எழுத்து மூலம் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும்.
கல்விக்கடன் வழங்குவதற்கான இலக்கு முடிந்துவிட்டது போன்றவற்றை வங்கி அதிகாரிகள் கடனை மறுக்கும் காரணமாகக் கூற முடியாது. சில வங்கிகளில் கல்விக்கடனுக்கான விண்ணப்பம் ஸ்டாக் இல்லை என்று கூறி வந்தார்கள். முன்பு இருந்ததைப்போல சம்பந்தப்பட்ட வங்கிக்கிளையிலிருந்துதான் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியின் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, குறிப்பிட்ட காலத்துக்குள் நம் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படவில்லையென்றால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் முறையிடலாம். வங்கித் தலைவருக்குக் கடிதம் எழுதியும் தீர்வை கண்டுபிடிக்கலாம். ரிசர்வ் வங்கியிலும் மாணவர் கல்விக்கடன் குறை தீர்ப்புக்கென்றே தனிப்பிரிவு உள்ளது. அதையும் அணுகலாம்.
ஆனால், கடன் பெறுபவர்கள் நிச்சயமாக கடனைத் திரும்ப செலுத்த முடியாது என்று தெரியவரும் பட்சத்தில், கடன் பெறுபவர் அல்லது பெறுபவருக்கு ஜாமீன் கொடுப்பவர் இதற்கு முன் பல கடன்களின் இஎம்ஐ அல்லது வட்டித் தொகையை சரியான நேரத்தில் கட்டத் தவறியிருந்தாலோ, மிகக் குறைவான சிபில் ஸ்கொரை உடையவராக இருந்தாலோ, வங்கிகளால் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியும்.
வங்கிகளில் கல்விக் கடன் எத்தனை நாள்களில் கிடைக்கும்?
பொதுவாகக் கல்விக்கடன் வழங்குவதற்கு பரிசீலனை செய்ய 10, 15 நாள்கள் முதல் ஒருமாதம் வரை வங்கிகள் கால அவகாசம் எடுத்துக்கொள்கின்றன.
வங்கிக்கடன் பெற்று கல்வி கற்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை...
* எக்காரணம் கொண்டும் மாணவ - மாணவிகள் எந்த ஒரு பாடத்திலும் ஃபெயிலாகிவிடக் கூடாது. ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக்கான கடன் தருவதை நிறுத்திவிடும் சூழல் இன்று நிலவுகிறது. இன்னும் சில வங்கிகள் ஒருவருக்கு வருடத்துக்கு இத்தனை பாடங்களில் மட்டுமே அரியர் இருக்கலாம் என்கின்றன. அதைத்தாண்டி அதிக எண்ணிக்கையில் அரியர்கள் வைக்கும் பட்சத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான தொகையைக் கொடுப்பதில் சிக்கல்கள் எழும் வாய்ப்பும் அதிகம்.
* ஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தும்பட்சத்தில் அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டிவரும்.

வரிச்சலுகை...
கல்விக்கடனை திரும்பச் செலுத்தும்போது 80-இ பிரிவின் கீழ் நாம் செலுத்தும் வட்டிக்கு மட்டுமே வரிச்சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை கிடையாது. பெரும்பாலானோரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட் டமற்றொரு விஷயம்... மகள்/மகனின் கல்விக்கடனுக்கு ஜாமீன் கொடுத்த அப்பா அல்லது அம்மாவுக்கும் இந்த வரிச்சலுகை உண்டு என்பது. ஆனால், எவருடைய படிப்புக்காகக் கடன் பெறப்பட்டதோ அவருக்கு மாத்திரமே வரிச்சலுகை உண்டு. கல்விக்கடனை திரும்பச்செலுத்த ஆரம்பித்த எட்டு வருடங்கள் வரை கல்விக்கடன் மீதான வட்டிக்கு வருமான வரிவிலக்கு உண்டு.
கல்விக் கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்?
படிப்பை முடித்த ஓராண்டுக்குப் பின் அல்லது வேலைக்குப் போகத்தொடங்கிய 6 மாதங்களிலிருந்து... எது முதலில் வருகிறதோ அக்காலகட்டத்துக்குள் கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும். ரூ.7.5 லட்சம்வரை கடன் வாங்குபவர்கள் பத்து ஆண்டுகளுக்குள்ளும், கடன் தொகை ரூ. 7.5 லட்சத்துக்கு மேல் என்று இருப்பவர்கள் 15 ஆண்டுகளுக்குள்ளும் கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டும்.
வங்கிக்கடன் வாங்கிப் படித்து முடித்தவர்கள், வேலையில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கினாலும்கூட, தொடக்கத்தில் குறைந்த ஊதியம் பெறுபவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த சிரமப்படுவார்கள். அதனால், `டெலஸ்கோப்பிக்’ என்ற முறையை இந்திய வங்கிகள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது அவர்களால் முடிந்த குறைந்தபட்சத் தொகையைச் செலுத்தலாம். பின்னர், கடன் பெற்ற நபரின் வருமான உயர்வுக்கு/பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றபடி படிப்படியாக, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து, கடன் பெற்ற வங்கி அதிகாரிகளிடம் பேசி மேலதிக தகவல்களை அறியலாம்.
கட்டுரையில் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், எழுதியிருப்பதுபோல எந்த வங்கியும் எளிதாகக் கல்விக்கடனை கொடுப்பதில்லை என்ற முணுமுணுப்புகள் கேட்கின்றன. மேலே சொன்னதுபோல கல்விக் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாது, அப்படி நிராகரிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கியானது கடன் மறுக்கப்படுவதற்கான காரணங்களை எழுத்துபூர்வமாகத் தர வேண்டும். நிறைய வங்கிகள் கடன் தர மறுக்காமல், ஆனால் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன. அதற்கான காரணங்கள் என்னவெனப் பார்ப்போமா?
இன்றளவும் கல்விக்கடன் கொடுப்பதும், மறுக்கப்படுவதும் குறிப்பிட்ட வங்கியின் மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது.
சட்டப்படி, மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே அவருக்குக் கடன் வழங்க வேண்டும் என்பதே அரசு நிர்ணயித்திருக்கும் விதி. இருப்பினும் இவ்விதியை பொருட்படுத்தாமல் குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு (பெரும்பாலான வங்கிகள்) கடன் வழங்குவதில்லை. அதேபோல் சில படிப்புகளுக்கான எதிர்காலமும் வேலைவாய்ப்புகளும் அவ்வளவு பிரகாசமாக இருக்காது என வங்கிகள் நினைக்கும் பட்சத்தில் அந்த படிப்புகளுக்கான கடன் கிடைப்பது கடினம்.

கல்விக் கடன் வாங்கிய பலர் கடனை சரியாகத் திருப்பிச் செலுத்துவதில்லை என்பதாலும், தங்களின் வாராக் கடன் அதிகரிக்கும் என்பதாலும் பல வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன.
பொதுவாகவே ability to repay/willingness to repay (திருப்பிச் செலுத்தும் திறன்/திருப்பிச் செலுத்த விருப்பம்) என்ற அடிப்படையில்தான் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. இதன்படி பார்த்தால் தாங்கள் கொடுக்கும் கடன் மீண்டும் திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கையிருந்தால் வங்கிகள் கல்விக்கடன் கொடுக்கத் தயங்காது.
கல்விக் கடன் பெறுவதற்கு வங்கியின் ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என எதிர்பார்க்கிறோமோ அதுபோல நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதும் முக்கியம். ஏனெனில், கல்விக்கடன் என்பது நம் உரிமையல்ல; அரசு நமக்கு வழங்கும் சலுகை மாத்திரமே.
``நேரடியாகவோ, குறிப்பிட்ட வங்கியின் இணையதளத்தின் மூலமாகவோ மாத்திரமே கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியுமா? அல்லது அதற்கு வேறு ஏதேனும் மாற்று வழி இருக்கிறதா?” எனச் சென்னையைச் சேர்ந்த கலைவாணி கேட்டிருந்தார். மாற்று வழி உள்ளது. இந்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் NSDL - நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (National Securities Depository Limited) யினால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் https://www.vidyalakshmi.co.in/Students/about-us என்ற இணையதளமே அது. அதைப்பற்றி அடுத்த வாரத்தில் விரிவாகப் பார்க்கலாம்.