Published:Updated:

"குடும்பத்தைக் காப்பாத்த வேற வழி தெரியலங்க!"- குப்பைக் குவியலுக்கு நடுவே உழைக்கும் பழங்குடி தம்பதி

பழங்குடி தம்பதி
News
பழங்குடி தம்பதி ( தே.சிலம்பரசன் )

"ஒரு 3 வருஷமாதான் இப்படி வந்து, குப்பையில இருந்து பழைய பொருளைத் தேடி எடுத்து எடைக்கு போட்டு வரோம். ஆரம்பத்துல கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்துச்சு. ஆனா குடும்பத்து நிலைமையை நினைக்கும்போது அந்தக் கூச்சம் பெரிசா தெரியலிங்க."

நாம் அனைவரும், நம்முடைய தேவைகளுக்கு பின்னர் குப்பைகளாக தூக்கி எறிந்திடும் பொருள்கள் ஒவ்வொன்றும் நமது குடியிருப்புகளை ஒட்டிய குப்பைக் கிடங்குகளில் மலை போல சேர்ந்திருப்பதை கண்டிருப்போம். மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து கொட்டும்படி அரசுகள் அறிவுறுத்தினாலும், பல்வேறு காரணங்களால் நம்மில் பெரும்பாலானோர் அப்படிச் செய்வதில்லை. அவை அனைத்தும் ஒரு பெருங்குவியலில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு விடுகின்றன.

குப்பைக் குவியலுக்கு மத்தியில் அம்மு
குப்பைக் குவியலுக்கு மத்தியில் அம்மு
தே.சிலம்பரசன்

ஒவ்வொரு தினமும் மலைபோல் உருப்பெற்று வரும் இது போன்ற குப்பைகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயம். சோகத்திலும் சோகமாக, இத்தகைய ஆபத்துடைய குப்பைக் குவியலை நம்பியே ஒரு சில எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நகர்கிறது. அப்படி ஒரு தம்பதியைதான், விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி நகராட்சி குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் சந்தித்தோம். மேல்மலையனூர் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த அந்தக் குப்பை கிடங்கில், எளிதில் மக்கும் வாழைத்தாரின் கழிவுகள் முதற்கொண்டு மக்காத பாலிதீன் பொருள்கள் வரை குப்பைகள் அனைத்தும் மலைபோல் காணப்பட்டன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த அந்தக் குப்பை குவியலுக்கு மத்தியில், சாக்குப் பையை சுமந்தபடி பழைய பொருள்களைத் தேடி எடுத்துக் கொண்டிருந்தது ஒரு பெண்ணின் கரங்கள். சாலையின் ஓரமாக அமர்ந்து அந்த பொருள்களைத் தரம்பிரித்து கொண்டிருந்தார் அப்பெண்ணின் கணவர். வீரப்பன், அம்மு என்ற அந்த இருவரையும் சந்தித்து பேசினோம்.

"நாங்க செஞ்சிக்குப் பக்கத்துல இருக்கிற ஊரணித்தாங்கல் பகுதியில்தான் சுமார் 20 வருஷமா வசிக்கிறோம். அதே ஊர்க்காரர் ஒருத்தருடைய கழனியில இருக்கிற வேலைய செஞ்சுகிட்டு அங்கியேதான் தங்கியிருக்கோம். எங்களுக்குனு சொந்தமா வீடோ, ரேஷன் அட்டையோ, ஆதார் அட்டையோ எதுவும் கிடையாது.

வீரப்பன் - அம்மு
வீரப்பன் - அம்மு

எங்களுக்குக் கல்யாணமாகி இப்போ 4 பசங்க இருக்காங்க. அவங்களுக்கு மட்டும்தான் ஆதார் அட்டை எடுத்து வைச்சிருக்கோம். ரேஷன் அட்டை கேட்டு இரண்டு தடவை எழுதி போட்டோம், ஆனா வரவேயில்ல. நாங்க இருளர் பழங்குடி சமூகத்துக்காரங்க என்பதால் அடையாளம் இன்றி கஷ்டப்படுறோம். நாங்களே உழைச்சுதான் தினமும் கஞ்சி குடிச்சுட்டு வரோம். எங்களுக்கு நிரந்தர பொழப்பு இந்தமாதிரி பொருள்களைத் தேடி எடுக்கிறது இல்லைங்க. செங்கல் சூலை வேலைக்கு போவோம், ஊர்ல யாராவது கழனிக்காட்டு வேலைக்குக் கூப்பிட்டா போவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கழனிக்காட்டு வேலையும் தொடர்ச்சியா இருக்காது. அந்த மாதிரி சமயத்துல கிணறு, குட்டையில மீன் பிடிச்சு விற்போம். வேலையே இல்லாத போதுதான், குடும்பத்தை நடத்தணுமேன்னு இந்த மாதிரி வந்து குப்பையில இருக்கிற பழைய பொருள்களைத் தேடி எடுத்து எடைக்குப் போடுவோம். மீதி நேரத்துல வரமாட்டோம். ஒரு 3 வருஷமாதான் இப்படி வந்துக்கிட்டு இருக்கோம். ஆரம்பத்துல கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்துச்சு... ஆனா குடும்பத்து நிலைமையை நினைக்கும்போது அந்தக் கூச்சம் பெரிசா தெரியலிங்க.

நாங்க ரெண்டு பேரும், பொழுது விடிஞ்சதுமே இங்க வந்து ஒரு நாள் முழுக்க இந்த மாதிரி கஷ்டப்பட்டு பழைய பொருள்களைத் தேடி எடுத்து காயிலாங்கடையில எடைக்குப் போட்ட 400 ரூபா வரைக்கும் கிடைக்கும். மதியத்துக்கு மேல வந்தா ஒரு 250 ரூபா வரைக்கும் கிடைக்கும். ஒரு நாள் எங்க குடும்பத்தை நகர்த்திப் போக அது போதுமானதாக இருக்கும்" என்றனர் வருத்தமான குரலில்.