Published:Updated:

அழகான கணவர், தாழ்வுமனப்பான்மையில் நான்; அதிகமாகும் மனஉளைச்சல் தீர வழியென்ன?|#PennDiary92

#PennDiary
News
#PennDiary

கணவரின் கல்லூரிக் கால தோழிகள், அலுவலக தோழிகள், உறவுப் பெண்கள் என அவர் யாராவது அழகான பெண்களுடன் இயல்பாகப் பேசினால்கூட, என் மனம் சோர்ந்துவிடுகிறது.

Published:Updated:

அழகான கணவர், தாழ்வுமனப்பான்மையில் நான்; அதிகமாகும் மனஉளைச்சல் தீர வழியென்ன?|#PennDiary92

கணவரின் கல்லூரிக் கால தோழிகள், அலுவலக தோழிகள், உறவுப் பெண்கள் என அவர் யாராவது அழகான பெண்களுடன் இயல்பாகப் பேசினால்கூட, என் மனம் சோர்ந்துவிடுகிறது.

#PennDiary
News
#PennDiary

எனக்குத் திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகின்றன. என் கணவர் மிகவும் அழகாக இருப்பார். நான் அவர் அழகுக்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறேன் என்கிறார்கள் அனைவரும். என்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் இதைச் சொல்லிக்காட்டி என்னை தாழ்வுமனப்பான்மையில் தள்ளுகிறார்கள்.

என் கணவர் பெண் பார்க்க வந்தபோதே இந்தப் பேச்சுகள் ஆரம்பித்துவிட்டன. அவர் நல்ல நிறம், உயரம், உயரத்துக்கு ஏற்ற எடை. பார்க்க ஆஜானுபாகுவாக இருப்பார். நான் சராசரி பெண். ஆனால், அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் திருமணத்துக்கு முன் வரை இருந்ததில்லை. சொல்லப்போனால், நான் செல்ஃப் லவ் அதிகம் உள்ள பெண்ணாக இருந்தேன். துடிப்பான, தன்னம்பிக்கையான மாணவி என்பதே கல்லூரியில் என் அடையாளமாக இருந்தது.

கணவன் - மனைவி
கணவன் - மனைவி
மாதிரிப் படம்

திருமணம் நிச்சயமானபோது, என் கணவரிடம் எங்களுடைய உருவ வேற்றுமை பற்றி நான் வெளிப்படையாகக் கேட்கவும் தவறவில்லை. `நீங்க அழகா இருக்கீங்க. எத்தனையோ பொண்ணு பார்த்திருப்பீங்க... எனக்கு ஓ.கே சொல்லிட்டீங்க... ஏன்..?’ என்று கேட்டபோது, `அழகுக்கு எல்லாம் நான் முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல. நல்ல குணம்தான் முக்கியம்னு நினைப்பேன். உன்கிட்ட, இதோ இப்படி கேக்குற இந்தத் துடுக்குத்தனம் எனக்கு பிடிச்சிருக்கு’ என்றபோது, நான் சந்தோஷமாகி திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன்.

முடிந்தது திருமணம். `உங்க பொண்ணுக்கு சூப்பர் மாப்பிள்ளையா பிடிச்சுட்டீங்களே... எல்லாம் லக்குதான்’ என்ற ரீதீயில் என் பெற்றோர் வீட்டு உறவினர்கள் பேசினார்கள். என் கணவர் வீட்டு உறவினர்களோ, `எங்க பையனுக்கு நீ பொருத்தம் இல்லாத பொண்ணுதான்...’ என்றார்கள். என் தோழிகளும்கூட, `உனக்குப் போய் இப்படி ஒரு மாப்பிள்ளையா...’ என்ற கமென்ட்களை பறக்கவிட்டார்கள். இதனால், புதுமணப்பெண் காலத்தில் அதற்குரிய சந்தோஷங்களைக்கூட முழுமையாக என்னால் அனுபவிக்க முடியவில்லை.

என் கணவர், `நீ ஏன் அவங்க சொல்றதை எல்லாம் நினைச்சு வருத்தப்படுற? நான்தான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன்... எனக்கு அழகு முக்கியமில்ல, குணம்தான்னு’ என்று எனக்கு ஆறுதல் சொல்கிறார். என்றாலும், கணவரின் கல்லூரிக் கால தோழிகள், அலுவலக தோழிகள், உறவுப் பெண்கள் என அவர் யாராவது அழகான பெண்களுடன் இயல்பாகப் பேசினால்கூட, என் மனம் சோர்ந்துவிடுகிறது.

பெண் டைரி
பெண் டைரி

இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். `குழந்தை உன்னை மாதிரி பிறக்காம, அவரை மாதிரி பிறக்கட்டும்’ என்பதைச் சொல்ல யாருமே தவறுவதில்லை. அது எனக்குக் கோபமாக வருகிறது. இப்படி தாழ்வுமனப்பான்மை, எரிச்சல், கோபம், மன உளைச்சல் என இந்த மனநிலையிலேயே இருக்கிறேன். சமீபத்தில் என் கணவர், அவர் தோழி ஒருவரை இது குறித்து என்னிடம் கவுன்சலிங் போல பேசச் சொன்னார். அந்தளவுக்கு, நான் என் கணவரின் நிம்மதியையும் தொந்தரவு செய்கிறேன் என்று புரிந்தபோது, அது என் மனஅழுத்தத்தை இன்னும் அதிகரித்துவிட்டது.

என்னதான் தீர்வு?