
பொங்கல் ஸ்பெஷல்...
நாள் முழுக்க வேலை வேலையென சுற்றித் திரிந்தாலும், இரவில் வீடடைதல் பெரும் சுகம். அந்த வீடு சுத்தமாகவும், கண்களுக்கு இதமாகவும் இருந்துவிட்டால், ‘என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்’ என ஹேப்பி மோடில் வாழலாம். பொங்கல் காலத்தில் அனைவரும் வீட்டை சுத்தப் படுத்தவிருக்கும் நிலையில், வாட்டர் டேங்க் முதல் வார்ட்ரோப் வரை வீட்டை ஒரு ஒழுங்குமுறையுடன் சுத்தம் செய்யும் டெக்னிக்கை இந்த இணைப்பிதழ் புத்தகம் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும். அது குறித்த தகவல்கள் தருபவர்கள், சென்னை ‘நீட் அண்ட் க்ளீன்’ ஹவுஸ்கீப்பிங் நிறுவனத்தைச் சேர்ந்த பவானி மற்றும் அஸ்வின்.

முதல் ஸ்டெப்... அடுத்த அறைக்கு மாற்றுங்கள்!
‘`உங்கள் வீட்டை சுத்தம் செய்யப்போகிறீர்கள் என்றாலும் சரி, ஒயிட் வாஷ், பெயின்டிங் என்று வீட்டின் லுக்கையே மாற்றப்போகிறீர்கள் என்றாலும் சரி, சுத்தம் செய்வதற்கான பேஸிக் ஃபார்முலாவை பின்பற்றினால், உங்கள் கண்ணே பட்டுவிடுகிற அளவுக்கு உங்கள் வீடு லட்சணமாகவும் சுத்தமாகவும் மாறிவிடும். அதென்ன பேஸிக் ஃபார்முலா என்கிறீர்களா? உதாரணத்துடன் சொல்வதென்றால், வரவேற்பறையை சுத்தம் செய்து பெயின்ட் அடிக்கப்போகிறீர்கள் என்றால், அந்த அறையில் இருக்கிற பொருள்களையெல்லாம் இழுத்து நடு ஹாலில் வைத்துவிட்டு, சுவரை சுரண்டுவது, ஒயிட் வாஷ் செய்வது, பெயின்ட் அடிப்பது கூடவே கூடாது. இப்படிச் செய்யும்போது பொருள்கள்மீது அழுக்குப்பட்டுவிடுமோ, பெயின்ட் தெறித்துவிடுமோ என்கிற பயத்திலேயே சரியாகச் சுத்தம் செய்யவும் முடியாது; பெயின்ட் செய்யவும் முடியாது. இதற்கு மாற்றாக, ஓர் அறையிலிருக்கிற அத்தனை பொருள்களையும் அடுத்த அறைக்கு மாற்றிவிட்டு, பிறகு சுத்தம், ஒயிட் வாஷ் என்று உங்கள் வீட்டைப் பளிச்சிட வையுங்கள்.
மூடி வைத்துவிட்டும் நோ!
சிலர் ‘நடு ஹால்ல சாமான்களை மூடி வெச்சுட்டு ரூமை க்ளீன் பண்ணலாமே’ என்று யோசிப்பார்கள். ஆனால், அதுவும் பொருள்களுக்கு பாதுகாப்பில்லை என்பதுதான் உண்மை. எப்படியும் அறையைத் தண்ணீர் விட்டுக் கழுவத்தான் வேண்டும். அந்த நேரத்தில் சோப்பு நுரையும் தண்ணீரும் பொருள்கள் மீது படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்பதால், அடுத்த அறைக்குப் பொருள்களை நகர்த்திவிட்டுச் செய்வதுதான் பாதுகாப்பு.

இந்தப் பொருள்களே போதும்!
வீட்டை சுத்தம் செய்வதற்கு இந்த பிரெஷ் வாங்க வேண்டும், அந்த பிரெஷ் வாங்க வேண்டுமென்று அதற்காகத் தனியாகச் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருக்கிற கம்பி நார், சால்ட் பேப்பர், ஸ்பான்ஜ், பயன்படுத்திய பல் தேய்க்கும் பிரெஷ், வினிகர், எலுமிச்சைப்பழம் ஆகியவையே போதும்.
ஹாலில் இருந்து ஆரம்பிப்போம்!
வீட்டை சுத்தம் செய்வது என முடிவெடுத்துவிட்டால் பொதுவாக முதலில் ஹாலில் இருந்துதான் ஆரம்பிப்போம். அதிலும் ஷோகேஸ் அல்லது செல்ஃபை சுத்தம் செய்யத்தான் முதலில் ஆர்வம்காட்டுவோம். வீட்டுக்குள் நுழைந்தவுடன் இந்தப் பகுதிதான் நம் கண்களில் முதலில் தென்படும் என்பதுதான் இதற்குக் காரணம். அது சரியான அணுகுமுறைதான்.

பிரெஷ் முதல் பட்ஸ் வரை...
முதலில் ஷோகேஸ் அல்லது ஷெல்ஃபில் இருக்கிற பொருள்களையெல்லாம் கவனமாக எடுத்து அடுத்த அறையில் வைக்கவும். இப்போது ஷோகேஸ் அல்லது ஷெல்ஃபை மெத்தென்ற துணியால் துடைக்கவும்.
ஷெல்ஃப் என்றால் கார்னர்களிலும், ஷோகேஷ் என்றால் கண்ணாடியை நகர்த்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் மெட்டல் பகுதிகளிலும் தூசி அடைந்து போய் கிடக்கும். அதில் பழைய டூத் பிரஷ் கொண்டு தூசி, அழுக்கை வெளியேற்றவும். காதுகளை சுத்தம் செய்யப் பயன்படும் ‘இயர் பட்ஸை’ வைத்தும் சுத்தம் செய்யலாம். ஷெல்ஃப் கார்னர்களை டூத் பிரெஷ்ஷை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

சிலந்திகளை விரட்டுங்கள்!
சில வீடுகளில் மேல் ஷெல்ஃபை சுத்தம் செய்யும்போது, அதற்கடுத்த ஷெல்ஃபில் தூசிக் கொட்டுகிற அளவுக்கு இடைவெளி இருக்கும்; மேல் ஷெல்ஃபில் குடியிருக்கிற சிலந்தி அதற்கடுத்த ஷெல்ஃபில் இருக்கிற இடைவெளியில் குடி புகுந்துவிடும். அந்த இடைவெளிகளில் மெல்லிய துடைப்பம் குச்சிகளைவிட்டு சுத்தம் செய்ய வேண்டும். தூசியை மொத்தமாகத் துடைத்து நீக்கிவிட்ட பிறகு, வெறும் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அதன்பிறகு, சுத்தம் செய்வதற்கென கடைகளில் விற்பனை செய்யப்படுகிற லிக்விடை தண்ணீரில் ஊற்றி, அந்தத் தண்ணீரால் துடைக்க வேண்டும்.
கண்ணாடி, விபூதி, கொஞ்சம் டிஷ்யூ பேப்பர்ஸ்!
ஷெல்ஃப் அல்லது ஷோகேஷ் முழுக்க முழுக்கக் கண்ணாடியால் ஆனது என்றால், முதலில் வெறும் துணி கொண்டும், பிறகு அதற்கென இருக்கிற க்ளீனர் கலக்கப்பட்ட தண்ணீரில் முக்கிய துணியைப் பயன்படுத்தியும் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட கண்ணாடியில் வரிவரியாக தெரியும். இப்படி வராமல் இருக்க, கண்ணாடியை இட வலமாகத் துடைக்காமல், வட்ட வட்டமாகத் துடையுங்கள். கண்ணாடி நன்கு உலர்ந்த பிறகு டிஷ்யூ பேப்பரால் மென்மையாகத் துடைத்தெடுக்க வேண்டும். ‘எனக்கு விபூதி போதும்’ என்பவர்கள், விபூதியை நன்கு சலித்துப் பிறகு பயன்படுத்துங்கள். அப்போது தான் விபூதியில் இருக்கிற மண் துகள்களால் கண்ணாடியில் கீறல் விழுவதைத் தடுக்க முடியும். பிறகு இயற்கையான காற்றில் ஷெல்ஃப் அல்லது ஷோகேஸை உலர விடுங்கள்.

உலர வைக்க ஏன் ஃபேன் வேண்டாம்?
ஷெல்ஃப் அல்லது ஷோகேஸை ஈரத்துணியால் துடைத்த பிறகு அவை இயற்கையான காற்றில் உலர்வதுதான் சரி. ஏனென்றால், ஹாலின் மற்ற இடங்களை நீங்கள் சுத்தம் செய்யாமல், சீலிங் ஃபேன், டேபிள் அல்லது பெடஸ்டல் ஃபேன் மூலம் சுத்தம் செய்யப்பட்ட இடங்களை உலர வைக்க முயன்றால், தூசு எழும்பி துடைத்த ஷெல்ஃபையும் தூசியாக்கி விடும். இந்தப் பிரச்னை நிகழாமல் இருக்க, மற்ற அறைகளை மூடிவிட்டு, ஹால் முழுவதையும் முதலில் துணி, பிறகு ஈரத்துணியால் சுத்தம் செய்துவிட்டு, பிறகு ஃபேன் போட்டு உலர விடலாம்.
ஷோகேஸ் கண்ணாடிகளை இப்படி சுத்தம் செய்யுங்கள்!
‘ஷோகேஸ் கண்ணாடியை எப்படித் துடைச்சாலும் மங்கலா இருக்கு’ என்று பலரும் வருத்தப்படுவார்கள். இதற்கு சிம்பிளான தீர்வொன்று இருக்கிறது. பலரும் ஷோகேஸ் கண்ணாடியின் வெளியே தெரியும் பக்கத்தை மட்டும் நன்கு துடைத்துவிட்டு, அதன் உள்பக்கத்தை விட்டு விடுவார்கள். கண்ணாடியின் இரண்டு பக்கத்தையும் சுத்தம் செய்தால் மட்டுமே ஷோகேஸ் பளிச்சென்று இருக்கும்.
தெருவுக்கு மிக அருகில் இருக்கிறதா?
வண்டிகள் செல்லும் தெருவிலிருந்து தள்ளி சந்துக்குள் இருக்கும் வீடுகளைவிட, மெயின் ரோட்டை ஒட்டியிருக்கும் வீடுகளில் சீக்கிரமாகவும் அதிகமாகவும் தூசு படியும். அதிலும் குறிப்பாக கதவுகளிலும் ஜன்னல்களிலும். எனவே, அதுபோன்ற வீடுகளில் தினமும் பல் தேய்ப்பது எப்படி அவசியமோ, அதுபோல இவையிரண்டையும் தினமும் துணியால் தட்டிவிட்டு விடுங்கள். இல்லையென்றால், இவற்றின் அருகில் தெரியாமல் நின்றுவிட்டாலும் நீங்கள் அணிந்திருக்கிற ஆடை தூசியாகி விடும்.

சோஃபா... எப்படி சுத்தம் செய்வது?
இன்றைய சோஃபாக்கள் பெரும்பாலும் முழுவதுமாக வெல்வெட்டில் இருக்கின்றன அல்லது பாதியளவாவது வெல்வெட்டில் இருக்கின்றன. இவற்றை வேக்வம் க்ளீனரால் சுலபமாக சுத்தம் செய்துவிடலாம். அது இல்லாதபட்சத்தில், வீட்டுக்கு வெளியே இடமிருந்தால் சோஃபாக்களை வெளியே நகர்த்திச் சென்று போட்டு, கனமான துணியால் தட்டித் தட்டி சுத்தம் செய்யலாம். வெளியில் இடமில்லை, வீட்டுக்குள் வைத்துதான் சுத்தம் செய்ய வேண்டுமென்றால், மற்ற அறைகளை மூடிவிட்டு சோஃபாக்களைத் தட்ட ஆரம்பிக்க வேண்டும். வெல்வெட் சோஃபா வைத்திருப்பவர்கள், முதலில் அதை தூசி தட்டிவிட்டு, பிறகே ஹாலில் இருக்கிற மற்ற பொருள்களையும் இடங்களையும் சுத்தப்படுத்த வேண்டும். ஏனென்றால், சோஃபாவை தட்டும்போது அதிலிருந்து வெளியேறுகிற தூசி யெல்லாம் டி.வி உள்ளிட்ட மற்ற பொருள்களின் மீது படிந்துவிடும்.
தரையில் கறையா..?
தரையில் ஏதாவது கறை பட்டு மாப் போட்டு துடைத்தும் போகவில்லையென்றால், எலுமிச்சைச் சாறு அல்லது வினிகரை துணியில் தொட்டுத் துடைத்தால் கறையும் போகும்; டைல்ஸ் நிறமும் மாறாது.
தினமும் குளிக்கட்டும்!
வீட்டின் சில பொருள்களை தினமும் சுத்தம் செய்தால்தான் வீட்டுக்குள் புழங்கவே முடியும். அப்படிப்பட்ட பொருள்களில் ஒன்றுதான் சமையற்கட்டில் இருக்கிற சிங்க். அதனாலேயே, சிங்க்கை சுத்தப்படுத்தும் வேலையை லகுவாக இருக்கும்படி பழக்கிக்கொள்வது அவசியம். எப்படி என்கிறீர்களா? காலையோ, மாலையோ அல்லது இரவோ உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில், பாத்திரங்களைக் கழுவியவுடன் வினிகரை சிங்க் முழுக்கத் தெளித்து, பிரெஷ் அல்லது கம்பி நாரால் பரபரவென தேய்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றிவிடுங்கள் போதும். இதைத் தவிர, இட்லி அவிக்கும்போதெல்லாம், இட்லிப் பாத்திரத்தில் இருக்கிற வெந்நீருடன் கொஞ்சம் குழாய்த்தண்ணீரைக் கலந்து சிங்கில் ஊற்றி விடுங்கள். சுத்தமாக, துர்நாற்றம் வீசாமல் எப்போதும் புதிதுபோல் இருக்கும் உங்கள் வீட்டு சிங்க்.
துருவுக்கு சால்ட் பேப்பர்!
இன்றைய வீடுகளில் ஜன்னல்களில் மட்டுமல்ல, கதவுக்கு முன்னாலும் இரும்பாலான கிரில் கேட் இருக்கிறது. மழை மற்றும் குளிர்காலங்களையொட்டி இவற்றில் புள்ளி புள்ளியாகத் துருப்பிடிக்க ஆரம்பிக்கும். இந்தப் புள்ளிகள் கண்ணில்பட்ட உடனே சால்ட் பேப்பர் எனப்படும் உப்பு காகித்தால் அந்த இடத்தைத் தேய்த்து, பனியன் துணி அல்லது காட்டன் துணியால் அழுத்தித் துடைத்து விடுங்கள். தேவைப்பட்டால், துரு நீக்கிய இடத்தில் எண்ணெய் பூசியும் விடலாம்.

ஜன்னலுக்கு வெளியே...
பொதுவாக நம் வீடுகளில் கதவுக்கு வெளியே திரைச்சீலைப் போட்டிருப்போம். ஆனால், ஜன்னல்களுக்கு திரைச்சீலை உள்பக்கமாகப் போட்டிருப்போம். ஒருவேளை, உங்கள் வீடு பேருந்தும் லாரியும் செல்கிற மெயின் ரோட்டில் இருந்தால், கதவுக்குப் போடுவதுபோல ஜன்னல்களுக்கும் வெளியே திரைச்சீலை போடலாம்.
வீட்டுக்கு உள்ளே; வீட்டுக்கு வெளியே...
திரைச்சீலைகளின் நிறங்களை வீட்டின் டிஸ்டம்பருக்கு ஏற்றபடி மட்டுமல்லாமல், உங்கள் வீடு இருக்கிற தெருவின் தன்மையைப் பொறுத்தும் தீர்மானிக்க வேண்டும். தூசி வேகமாக படியக்கூடிய தெருக்களில் வசிக்கிறீர்கள் என்றால், வீட்டுக்குள்ளே பிங்க், யெல்லோ போன்ற லைட் கலர்ஸ் திரைச்சீலைகளையும், வீட்டுக்கு வெளியே அடர் மெரூன், அடர் நீலம், பிரவுன் போன்ற அழுத்தமான, அழுக்குத் தெரியாத நிறங்களில் திரைச்சீலைகளையும் மாட்டுங்கள்.
‘மாப்’ திருப்தி ஏற்படுத்தவில்லையா?
வீட்டை ‘மாப்’ மட்டுமே செய்வது எல்லோருக்கும் திருப்தி தரும் என்று சொல்ல முடியாது. ‘என்னதான் மாப் போட்டாலும் சுவர் ஓரங்கள்ல அழுக்கு அப்படியே நின்னுடுது’ என்று வருத்தப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் மாதம் ஒருமுறை வீட்டைத் தண்ணீரால் அலம்பி விடலாம். தண்ணீர் செல்வதற்கு வழியே இல்லையென்றால், மாப் போடுவதற்கு முன்னால் சுவர் ஓரங்களில் லிக்விட் சோப்பில் நனைத்த ஸ்பான்ஜால் நன்கு சுத்தப்படுத்தி விடலாம்.
பிள்ளைகளின் பொருள்களே போதும்!
தரையின் எக்ஸ்டென்ஷனாக சுவரில் ஒட்டப்பட்டிருக்கிற டைல்ஸின் ஓரங்களில் இருக்கிற தூசியை, பிள்ளைகளின் பழைய காட்டன் சாக்ஸ் கொண்டு துடைக்கலாம். ரொம்பவும் மெல்லியக் கீற்றாக ஓரங்களில் தூசி படிந்திருந்தால் பிள்ளைகளின் பெயின்டிங் பிரெஷ்ஷால் சுத்தம் செய்யலாம்.
தொலைக்காட்சி சுத்தம்!
தொலைக்காட்சியைச் சுத்தம் செய்யும் முன்னர், மின் இணைப்பு வயர்களை எல்லாம் நீக்கிவிட்டு சுத்தம் செய்யவும். காட்டன் துணியால் சுத்தம் செய்ய முடியாத ஓரப்பகுதிகளை, பெயின்ட் பிரெஷ்ஷால் துடைக்கலாம்.
ஸ்பிரே பாட்டில் ப்ளீஸ்!
தண்ணீரைப் பீய்ச்சி துடைக்க வேண்டிய பொருள்கள் மீது ஸ்பிரே பாட்டில்களில் நிரப்பிய தண்ணீரைப் பீய்ச்சியடித்து சுத்தம் செய்தால், பொருள்கள் நன்றாக சுத்தமாகும். அந்தத் தண்ணீரில் சிறிதளவு வினிகரை கலந்தால், பொருள்களின் மீதிருக்கிற கறைகள்கூட போய் விடும்.
ஃபேனை எப்படித் துடைப்பது?
ஃபேன், பரண் என்று சுத்தம் செய்ய ஒரு போர்ட்டபிள் ஏணியை வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஃபேனை கழற்றி நன்றாகச் சுத்தம் செய்தால், அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பராமரிப்பு அதிகம் தேவைப்படாது. அப்படிக் கழற்றி சுத்தம் செய்யும்போது, முதலில் துணியால் துடைத்து தூசியை நீக்கிவிட்டு, பிறகு சோப்புக் கலந்த தண்ணீரில் நனைத்தெடுத்துப் பிழிந்த துணியால் துடைத்தெடுக்க வேண்டும். இறக்கைகளில் இருக்கிற அழுக்கு மற்றும் பிசுக்கைப் பொறுத்து எத்தனை முறை துடைப்பது என்பதை முடிவெடுங்கள். இறக்கைகளை தனித்தனியாகக் கழற்றிவிட்டீர்களென்றால், சோப்புத் தண்ணீரில் ஊற வைத்தே சுத்தம் செய்யலாம். பிசுக்குப் போகவில்லை என்றால், தண்ணீரில் வினிகர் கலந்தும் பயன்படுத்தலாம். போர்டபிள் ஏணி இல்லாதவர்கள், சேரை போட்டு ஏறினாலே சுத்தமாகத் துடைத்துவிடலாம் என்ற உயரத்தில் இருக்கும் சீலிங் ஃபேனை கழற்றாமலே துடைத்துவிடவும்.
பூஞ்சையை எப்படி சுத்தம் செய்வது?
மழைக்காலத்தில் மழை நீர் புகுந்தவர்களுடைய வீடுகளில் மட்டுமல்லாமல், மழைக்காலம் வந்தாலே பலருடைய வீட்டுச் சுவர்களிலும் பூஞ்சை (ஃபங்கஸ்) வந்து விடும். இதை வெறும் ஈரத்துணியால் துடைத்தால் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பரவுமே தவிர, சரியாகாது. தண்ணீரை ஃபோர்ஸாக சுவர்களின் மீது அடித்து, தேய்த்துக் கழுவினால்தான் இதை நீக்க முடியும். பிறகு இந்த இடங்களில் ஃபேன் காற்றையோ அல்லது ஹேர் டிரையரின் சூடான காற்றையோ காட்டி நன்கு உலரவிட வேண்டும்.
பூஞ்சை... சில தகவல்கள்!
பெயின்ட் செய்த இடங்களில் கறுப்பாகப் படிந்திருக்கிற பூஞ்சையை டிஸ்இன்ஃபெக்டன்ட் பயன்படுத்தியே சுத்தமாக்கிவிடலாம். ஆனால், சுண்ணாம்பு அடித்த சுவர்களில் வட்ட வட்டமாக வருகிற பூஞ்சையை நீக்குவது மிகக் கடினம். உங்களால் முடிந்தவரை சுத்தம் செய்தும், முழுமையாக சுத்தம் செய்ய முடியவில்லை யென்றால், எங்களைப் போன்ற நிபுணர்களை அணுகலாம். நாங்கள் அதற்கென இருக்கிற மெஷின்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்துவிடுவோம்.
சமையலறை டைல்ஸ் கறை!
சமையலறையின் டைல்ஸில் இருக்கிற எண்ணெய்க் கறையின் மேல் வினிகர் கலந்த தண்ணீரைப் பீய்ச்சியடித்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, பாத்திரம் துலக்கப் பயன்படுத்திய பழைய கம்பி நார் பிரஷ்ஷால் தேய்த்தாலே சுத்தமாகிவிடும். புதிய கம்பி நாரைவிட பழைய கம்பி நார் கொஞ்சம் கூர்மை மழுங்கியிருக்கும் என்பதால், டைல்ஸில் கீறல் விழாது. ஆனால், சமையலறை மேடையில் படிந்திருக்கிற எண்ணெய்ப் பிசுக்கை அத்தனை சுலபமாக அகற்ற முடியாது. இதற்கு, எலுமிச்சையை இரண்டாக நறுக்கி சோப்புத்தூளில் தொட்டுத் தொட்டு எண்ணெய்ப் பிசுக்கின் மேல் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு கம்பி நாரால் தேய்த்தால் மொத்த பிசுக்கும் நீங்கி மேடை வழுவழுப்பாக மாறிவிடும்.
சமையலறை மேடையையும் டைல்ஸையும் வாரம் ஒருமுறை மேலே சொன்ன முறையில் சுத்தம் செய்துவந்தால் சமையலறையை அழகாகப் பராமரிக்க முடியும். நேரமில்லை என தள்ளித் தள்ளிப் போட்டீர்கள் என்றால், டைல்ஸில் படிந்த எண்ணெய்ப் பிசுக்கு வடிந்து டைல்ஸும் மேடையும் சேரும் இடத்தில் ஒரு கோடு போல கடினமாகப் படிந்துவிடும். இதேபோல மேடையிலும் பிசுக்கு விடாப்படியாகப் பிடித்துக்கொள்ளும். பிறகு, கத்தி வைத்து சுரண்டி சுத்தம் செய்ய வேண்டிய அளவுக்கு ஆகிவிடும். இதனால், டைல்ஸிலும் மேடையிலும் கீறல்கள் விழுந்துவிடும்... கவனம்.

கொசு சேர்கிறதா?
மற்ற அறைகளைவிட சமையற்கட்டில் கொசு சீக்கிரமாக சேர்ந்துவிடும். வெங்காயம், பூண்டு போன்றவற்றை அப்படியே திறந்து வைப்பதும், அதில் சில அழுகியிருப்பது நமக்குத் தெரியாமல் இருப்பதும்தான் இதற்கு காரணம். வெங்காயம், பூண்டை நன்கு காற்றோட்டம்படும்படி விரவி வைக்கலாம். தினமும், அதில் ஏதாவது அழுக ஆரம்பித்திருக்கிறதா என்பதை கையில் அள்ளியெடுத்துப் பார்த்து, அதை உடனே அப்புறப்படுத்தலாம். தவிர, சமையற்கட்டுக்குள் சாம் பிராணி புகை போட்டால், கொசுக்கள் வெளியேறிவிடும்.
உங்கள் வீட்டில் மாடுலர் கிச்சனா?
அழகாக இருக்க வேண்டிய அறைகள் என்றாலே, வரவேற்பறையும் பெட்ரூமும்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். இதுவே சமையலறை என்றால் அது சுத்தமாக மட்டும் இருந்தால் போதும் என்றே பலரும் திருப்திப் பட்டுக்கொள்கிறோம். உங்கள் சமையலறையில் மாடுலர் கிச்சன் வசதியிருந்தால் சமையற்கட்டும் அழகான இடங்களின் பட்டியலில் வந்துவிடும்.
கண்ணில்படும் இடமெல்லாம் பாத்திரங்களாக கிடக்காமல், எல்லாமும் உள்ளே அடுக்கி வைக்கப்பட்ட குளோஸ்டு கிச்சன்; கூடுதலாக உங்களுக்குப் பிடித்த நிறத்திலும் மாடுலர் கிச்சன் அமைத்த பின்னர், ‘சொர்க்கமே என்றாலும் அது எங்கள் வீட்டு சமையலறைதான்’ என்பீர்கள். ஆனால், அந்த மாடுலர் கிச்சனை பராமரிப்பதும் சுத்தம் செய்வதும் மிகவும் முக்கியம்.
மாடுலர் கிச்சனின் மூடப்பட்ட ஷெல்ஃப்களில் இருந்து, மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பாத்திரங்கள் அனைத்தையும் வெளியே எடுத்து வைத்துவிட்டு, முதலில் துணியால் துடைக்க வேண்டும். பிறகு எலுமிச்சையை வினிகரில் தொட்டு துடைத்துவிட்டு, நன்கு உலரும் வரை கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும். பூச்சிகள் எதுவும் இருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்த்து விட்டு மூடிவிடலாம். மாடுலர் கிச்சனில் இருக்கிற கம்பிகளில் துருப்பிடித்திருந்தால் சால்ட் பேப்பரால் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, துணியில் எண்ணெய் தொட்டு துடைத்து விடவும்.
எக்ஸாஸ்டு ஃபேன்... இப்படி சுத்தம் செய்யுங்கள்!
சமையலறையில் இருக்கிற எக்ஸாஸ்டு ஃபேன்தான் வீட்டிலேயே பாவப்பட்டது எனலாம். அந்தளவுக்கு அதைப் பலரும் கண்டுகொள்வதில்லை. சமையலறை மேடைமீது ஏறி நின்றாலே கைக்கு எட்டுகிற உயரத்தில் இருந்தால், வாரம் ஒருமுறை தண்ணீருடன் வினிகரை கலந்து ஃபேன் மேல் தடவி துடைத்து எடுங்கள்.
எப்போதாவது ஒருமுறைதான் துடைப்பீர்களென்றால், எக்ஸாஸ்டு ஃபேனில் ஒட்டடை, எண்ணெய்ப் பிசுக்கு என மோசமான நிலையில் இருக்கும். இந்த நிலையில் எக்ஸாஸ்டு ஃபேனை கழற்றி எடுத்து சுத்தம் செய்வதுதான் சரி. தண்ணீருடன் வினிகர், பேக்கிங் சோடா இரண்டையும் கலந்து ஃபேன் மீது ஸ்பிரே செய்து, ஊறவைக்க வேண்டும். பிறகு, பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரப்பரால் தேய்த்துக் கழுவிவிடலாம். ஸ்கிரப்பர் சுத்தம் செய்ய முடியாத இடங்களைச் சுத்தப்படுத்த, பயன்படுத்தாத பழைய பல் தேய்க்கும் பிரெஷ்ஷால் தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.
படுக்கையறை சுத்தம்!
பொதுவாக நாம் படுக்கையறையை சுத்தமாகவே வைத்துக்கொள்வோம். அங்கே வைத்திருக்கும் கட்டில் மற்றும் பீரோவை துணியால் துடைத்தாலே போதும். ஒருவேளை கட்டிலையோ, பீரோவையோ சுவரை ஒட்டி வைத்திருக் கிறீர்கள் என்றால், உங்கள் கைக்கு எட்டாத பகுதிகளை அதற்கேற்ற ஃபெதர் பிரெஷ்ஷால் துடைத்து விடலாம். வாராந்தர க்ளீனிங்கின்போது, சுவரில் இருந்து அதை சற்றே நகர்த்தி தரை மற்றும் சுவர்ப்பகுதியைச் சுத்தப்படுத்தாலம்.

வார்ட்ரோப் நேர்த்தி!
படுக்கையறையை சுத்தமாக வைத்துக்கொள்வதில், வார்ட்ரோபின் பங்கு அதிகம். துணிகளை மடிப்புக் கலையாமல் அடுக்கி வைத்திருந்தாலே வார்ட்ரோப் அழகாக இருக்கும். ஆனால், சுத்தம்..? மாதத்துக்கு ஒருமுறையோ அல்லது இன்றைக்கு நாள் முழுக்க எந்த வேலையும் இல்லை என்பது போன்ற நாள்களிலோ, வார்ட்ரோபை சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பிக்கலாம். படுக்கையறை தாழ்ப்பாளைப் போட்டுக்கொண்டு, வார்ட்ரோபில் இருக்கிற அத்தனை துணிகளையும் படுக்கை மீது அடுக்கி வையுங்கள் (தாழ்ப்பாள் போடவில்லை என்றால், வீட்டிலிருக்கிற குட்டீஸ் படுக்கையறைக்குள் நுழைந்து துணிகளை கலைத்து உங்களுக்கு இரட்டை வேலை வைத்து விடும்). பிறகு, பேக்கிங் சோடாவில் எண்ணெய் கலந்து வார்ட்ரோப் முழுக்கத் தடவி, துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் நன்கு துடைத்து எடுங்கள். வார்ட்ரோப் நன்கு உலர்ந்த பின், துணிகளை அடுக்கி, உங்களுக்குப் பிடித்த வாசனை உருண்டைகளைப் போடுங்கள்.
குளியலறையும் கழிவறையும்...
இன்றைக்கு குளியலறையும் கழிவறையும் ஒரே அறைக்குள்தான் இருக்கின்றன. ஆனால், இரண்டையும் சுத்தம் செய்யும் முறையில் சின்னச் சின்ன மாற்றங்கள் இருக்கின்றன. குளிக்கும் இடத்தில் அதிகமாகத் தண்ணீர்ப்படும் என்பதால், அந்தப் பகுதி தரையில், தண்ணீரில் இருக்கிற உப்பு சீக்கிரம் படிந்துவிடும். உப்பு லேசாக படிந்திருந்தால் தண்ணீருடன் பேக்கிங் சோடா கலந்து தெளித்து, 10 நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு பாத்ரூம் கழுவும் பிரெஷ்ஷால் தேய்த்துக் கழுவினாலே போதும். அழுத்தமாகப் படிந்துவிட்டிருந்தால், தண்ணீருடன் ஆசிட் கலந்து தெளித்து, பிறகு தேய்த்துக் கழுவலாம். இந்தியக் கழிவறை என்றால், கடைகளில் விற்கப்படுகிற டாய்லெட் லிக்விட்களில் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தலாம். அப்படியும் கிருமிகள் இருக்கலாம் என்று சந்தேகப் பட்டீர்கள் என்றால் தண்ணீரில் சிறிதளவு ஆசிட் கலந்து, பீங்கான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் ஊற்றி, 10 நிமிடங்கள் கழித்து அலசிவிடலாம்.
தினமும் செய்ய வேண்டும்!
வெஸ்டர்ன் கம்மோடில் (Western Commode), கழிவு செல்லும் பாதையிலும் நாம் உட்காரும் இடத்திலும் மட்டுமே அழுக்கு சேரும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், கம்மோடின் கீழ்ப்பகுதியிலும் அழுக்குச் சேரும். சோப்புத்தூள், பழைய ஷாம்பூ, காலாவதியான வினிகர் இப்படி எதையாவது ஒன்றை கம்மோடை சுற்றிலும் தடவி, 15 நிமிடங்கள் ஊறவைத்து, பிரெஷ்ஷால் தேய்த்துக் கழுவினாலே போதும். மற்றபடி உட்காரும் இடத்தையும் கழிவு செல்லும் பாதையையும் அதற்கான லிக்விட்களை ஊற்றி, இரண்டு பக்க நாருள்ள பிரெஷ்ஷை பயன்படுத்தி தினமும் சுத்தம் செய்ய வேண்டும். இந்தியக் கழிவறையோடு ஒப்பிடும்போது, வெஸ்டர்ன் கம்மோடில் நம்முடைய சருமம் நேரடியாகப்படுகிறது என்பதால், தினமும் சுத்தம் செய்தால்தான் நமக்கு நல்லது.

வாஷ் பேஸின்... தினமும்!
கை கழுவ, வாய் கொப்பளிக்க என தினமும் பயன்படுத்தும் வாஷ் பேஸின் சிலருக்கு கழிவறையில் இல்லாமல் ஹாலில், அறையில் என இருக்கும். எனவே அதை சுத்தமாகப் பராமரிக்கவிட்டால் வீட்டுக்குள் புழங்கும்போது அது கண்களில்பட நேர்கையில் சங்கடமாக இருக்கும். எனவே, தினமும் காலை ஒரு லிக்விட் கொண்டு அதன் பீங்கான் கோப்பையைச் சுத்தப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். வாராந்தர, மாதாந்தர க்ளீனிங்கின்போது, குழாயை எலுமிச்சைச்சாறு, பிரஷ் எனத் தேய்த்துக் கழுவலாம்.
சம்ப் முதல் வாட்டர் டேங்க் வரை...
அது சம்ப்போ அல்லது வாட்டர் டேங்க்கோ, தண்ணீரில் புழு வரும் வரைக்கும் அவற்றை சுத்தம் செய்யாமல் வைத்திருப்பதுதான் பலருடைய பழக்கம். அப்படியல்லாமல் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறையாவது இவை இரண்டையும் சுத்தம் செய்தால்தான் நாம் பயன்படுத்துகிற தண்ணீர் சுத்தமாக இருக்கும்.
சம்ப், வாட்டர் டேங்க் இரண்டுக்குமான சுத்தப்படுத்தும் முறையும் ஒன்றுதான். இரண்டையும் 5 முதல் 10 நிமிடங்கள் வரைக்கும் திறந்து வைத்துவிட்டு அதன் பிறகே உள்ளே இறங்க வேண்டும். விஷவாயுப் பிரச்னை கிடையாது என்றாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

முதலில், சம்ப்/வாட்டர் டேங்கில் இருக்கிற மிச்ச நீரை அள்ளியள்ளி சம்ப்பின் சுவர்களின் மீதும் வாட்டர் டேங்கின் உட்புறங்களிலும் தெளிக்க வேண்டும். பிறகு சம்ப் என்றால், பெரிய பிரெஷ்ஷாலும், வாட்டர் டேங்க் என்றால் ஸ்கிரப்பராலும் நன்கு தேய்க்க வேண்டும். பிறகு, நல்ல தண்ணீரால் கழுவ வேண்டும். இப்போது அவற்றிலிருக்கிற மண், அழுக்கு இரண்டும் அடிப்பகுதியில் வந்து நிற்கும். இவற்றை அள்ளியெடுத்து விட்டு, மிச்சம் மீதியை ஸ்பாஞ்சால் சுத்தமாகத் துடைத்து எடுக்க வேண்டும். தண்ணீரில் 10 மில்லி லிக்விட் குளோரினை கலந்து, அதை சம்ப் மற்றும் வாட்டர் டேங்குக்குள் தெளித்து, மேலே சொன்ன முறையில் சுத்தம் செய்தாலும் ஓகே தான்.

மெஷின் நல்லது!
வாட்டர் டேங்கையும் சம்ப்பையும் நீங்களாகவே இறங்கி சுத்தம் செய்வதைவிட, அதற்கான துறையைச் சேர்ந்தவர்களை நாடுவது நல்லது. அவர்கள் இந்த வேலைக்கான மெஷின்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதால், வாட்டர் டேங்கும் சம்ப்பும் நன்கு சுத்தமாகும். அந்த சுத்தம் பல மாதங்கள் வரை தாங்கும் என்பதால், நீங்களும் திருப்தியாக உணர்வீர்கள்.

பரண்களையும் பராமரியுங்கள்!
தேவையற்ற பொருள்களையும் அடிக்கடி தேவைப்படாத பொருள் களையும் ஸ்டோர் ரூம் இல்லாதவர்கள் பரணில் போட்டு வைப்பார்கள். பரண்களை வருடத்துக்கு ஒருமுறை சுத்தப்படுத்தினாலே அதிகம் என்று நம்மில் பலரும் நினைப்பதால், பரண்களுக்கு அடர்த்தியான வண்ணங் களில், தடிமனான துணியில் திரைச்சீலைகளை போட்டு விடுங்கள். அவ்வளவு சுலபமாக தூசி உள் செல்லாது. திரைச்சீலை சீக்கிரம் அழுக்கும் ஆகாது. போதுமான அளவுக்கு பரண்கள் இல்லையென்றால், ஏற்கெனவே சொன்னதுபோல காலியான டி.வி பெட்டி, வாஷிங் மெஷின் பெட்டி, ஃபிரிட்ஜின் பெட்டி போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தோட்டம் இருக்கிறதா?
உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தாலும் சரி, நாலைந்து தொட்டிகளில் செடி வளர்க்கிறீர்கள் என்றாலும் சரி, காய்கறிக் கழிவுகள், பழங்களின் தோல்கள் மற்றும் முட்டை ஓடுகளை அதற்குரிய முறையில் உலர்த்தி உரமாக்கிய பிறகு செடிகளுக்கு உரமாகப் போடுங்கள். நேரடியாகப் போட்டால் உங்கள் தோட்டம் அல்லது வீட்டு வாசல் பார்ப்பதற்கு சுத்தமில்லாமல் இருப்பதோடு, இதன் காரணமாக வீட்டுக்குள் கொசுக்களும் வரும்.

டஸ்ட் அலர்ஜியா?
டஸ்ட் அலர்ஜி இருப்பவர்கள், அதற்குரிய பாதுகாப்புகளோடு வீட்டை சுத்தம் செய்யுங்கள். அது முடியாதவர்கள் இதற்கென இருக்கிற நிறுவனங்களை நாடுங்கள்.’’
சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதானே..!
******
எத்தனை நாள்களுக்கு ஒருமுறை..?
இன்று பல வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால், அவர்களால் தினமும் வீட்டிலுள்ள பொருள்களை சுத்தம் செய்துகொண்டிருக்க முடியாது. அதனால், எந்தெந்தப் பொருள்களை எத்தனை நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யலாம் எனப் பார்ப்போம்.
தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று முறை வீட்டைப் பெருக்கலாம். அப்படிப் பெருக்கும்போது, ஒருமுறை மட்டும் இரண்டு சுவர்கள் சந்திக்கும் இடங்களில், கதவுகளுக்குப் பின்னால், துடைப்பத்தைக் கொண்டு மேலிருந்து கீழாக ஒரு துடை துடைத்துவிட வேண்டும். தினமும் இப்படிச் செய்வதால், இந்த இடங்களில் ஒட்டடை சேராமல் இருக்கும்.

ஸ்டவ்வையும் கிச்சன் மேடையையும் தினமும் இரவில் ஈரத்துணியால் துடைக்கலாம்.
வீட்டை வாரத்துக்கு ஒருமுறை `மாப்' போட்டால் போதும்.
சோஃபாக்களை வாரம் ஒருமுறை சுத்தம் செய்துவிடலாம்.
குளிப்பதற்கு முன்னால் பாத்ரூமையும் டாய்லெட்டையும் சுத்தம் செய்து விடலாம்.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, அதாவது சனியும் ஞாயிறும் சேர்ந்து விடுமுறை கிடைக்கும் வாரங்களில், மொத்த வீட்டையும் ஒட்டடையடித்து, மாப் போட்டு விடலாம். இயலாதவர்கள் மாதத்துக்கு ஒருமுறையாவது செய்யலாம்.

பொங்கல் காலத்தில் ஏன் பெயின்டிங்?!
நம் ஊரில் பொதுவாக பொங்கலுக்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்து, வெள்ளையடிப்பார்கள். அதற்கு காரணம் பொங்கல் பண்டிகை மட்டுமல்ல, அதையொட்டி தை மாதத்தில் வீடுகளில் நடக்கவிருக்கிற திருமணமும்தான். இன்றைய காலம், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதைப்போல, வெள்ளையடிப்பதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தை மாதத்தில் மட்டுமல்ல, மற்ற மாதங்களின் சுப முகூர்த்த தினங்களிலும் திருமணம் நடத்துகிறார்கள். சில நேரங்களில் மழைப்பொழியும் மாதங்களில்கூட திருமணங்கள் நடைபெறுகின்றன. அந்த நேரத்தில் வீட்டுக்கு சுண்ணாம்பு அடித்தாலோ, பெயின்ட் செய்தாலோ சுவர்களில் இருக்கிற ஈரம் காரணமாக சுண்ணாம்பையும் பெயின்டையும் அவற்றால் முழுமையாக ஈர்க்க முடியாமல் போகலாம். இதனால், சுண்ணாம்பும் பெயின்டும் சுவர்களில் ஆங்காங்கே மேலெழுந்து கொள்ளலாம். இப்படி நிகழாமல் தடுப்பதற்கு ஒரே வழி, வெயில் காலங்களில் பெயின்ட் வேலையை மேற்கொள்வதுதான்.

ஸ்டோர் ரூம் இல்லையா... நோ பிராப்ளம்!
வீட்டை சுத்தம் செய்யும்போதெல்லாம் குழப்பம் ஒன்று வரும். சில பொருள்களை வேண்டவே வேண்டாமென்று தூக்கி வீசிவிடலாமா அல்லது ஸ்டோர் ரூமில் போட்டு வைத்துவிட்டு தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாமா என்பதுதான் அந்தக் குழப்பம். ஆனால், எல்லோருடைய வீட்டிலும் ஸ்டோர் ரூம் இருக்குமா என்பது சந்தேகமே. அப்படி ஸ்டோர் ரூம் இல்லாதவர்கள், காலியாக இருக்கிற டி.வியின் அட்டைப்பெட்டி அல்லது வாஷிங் மெஷினின் அட்டைப்பெட்டி போன்றவற்றுக்குள் ‘வேணாம்; ஆனா வேணும்’ ரக பொருள்களைப் போட்டு வைக்கலாம்.

மழைத்தண்ணீர் வீட்டுக்குள் வந்திருந்தால்...
மழைக்காலம் வந்தாலே பலருடைய வீடுகளில் மழை நீர் புகுந்துவிடுகிற காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படி உங்கள் வீட்டிலும் மழை நீர் புகுந்துவிட்டால், வெறுமனே தண்ணீரும் சோப்புத்தூளும் போட்டு சுத்தம் செய்தால் வீடு முழுமையாக சுத்தம் ஆகவே ஆகாது. தண்ணீருடன் குளோரின் லிக்விட்டை கலந்து வீட்டை சுத்தம் செய்தால்தான், மழைத் தண்ணீரால் வீட்டுக்குள் வந்து நுண்ணுயிர்கள் அழியும். மற்ற லிக்விட்களால் இந்த நுண்ணுயிர்களை முழுமையாக அழிக்க முடியாது.

சுவரெங்கும் க்ரையான்ஸா?
பல வீடுகளிலும் சுவரெங்கும் குழந்தைகள் கிறுக்கிய க்ரையான்ஸ் கோடுகள்தான். இதை நீக்க, பேக்கிங் சோடா, வாஷிங் சோடா, டூத் பேஸ்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றை சிறிதளவு தண்ணீருடன் கலந்து க்ரையான்ஸ் கோடுகள் மீது தடவி, பயன்படுத்திய பல் துலக்கும் பிரெஷ்ஷால் மென்மையாகத் தேய்த்து, துணியால் துடைத்தாலே போதும். கோடுகளுக்கு பதில் குழந்தைகள் ஓவியங்கள் வரைந்திருந்தார்கள் என்றால், அவை அப்படியே இருப்பதுதான் சுவர்களுக்கு அழகு!
நோ பிளீச்சிங் பவுடர்!
சம்ப் மற்றும் வாட்டர் டேங்க்கை பிளீச்சிங் பவுடரால் சுத்தம் செய்யக் கூடாது. முயன்றால், சுவரிலும் டேங்கிலும் ஒட்டிக்கொள்ளும்.

அழுக்குக் கூடையும் அழகும்!
உங்கள் படுக்கையறை அழகாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டுமென்றால், அங்கு மூடிபோட்ட அழுக்குக் கூடை ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் துவைக்க வேண்டிய துணிகளை இந்தக் கூடையைத் தவிர்த்து வேறெங்கும் போடக் கூடாது என்பதில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கொசுக்கள் அழுக்குத் துணிக்குள்தான் குடியேறியிருக்கும். அதனால், துளைகளில்லாத கூடையாக வாங்கினால் நல்லது.
கையுறை கட்டாயம்!
வீட்டின் எந்தப் பகுதியை சுத்தம் செய்தாலும் சரி, அதற்கு முன் கையுறை கட்டாயம் அணியுங்கள். ஈரம், கெமிக்கல்ஸ் என்று நம் கைகளில் தொடர்ந்து பட்டுக்கொண்டே இருந்தால், கைகளிலுள்ள ஈரப்பதம் நீங்கி உள்ளங்கைகள் வறண்டு, அலர்ஜி ஏற்பட ஆரம்பிக்கும்.