Published:Updated:

தெய்வங்களும் அல்ல... தேவதைகளும் அல்ல... குழந்தைகள் யார்?! மேடம் ஷகிலா – 3

மேடம் ஷகிலா
News
மேடம் ஷகிலா

”எல்லா குழந்தைகளும் ஒன்றுபோல கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் தனித் திறமையுடன் இருக்கும்” என்று வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்ட் செய்யும் பெற்றோர்கள் நிஜத்தில் தன் குழந்தையை பந்தயக் குதிரையைப்போல நினைத்துக் கொள்கிறார்கள்.

Published:Updated:

தெய்வங்களும் அல்ல... தேவதைகளும் அல்ல... குழந்தைகள் யார்?! மேடம் ஷகிலா – 3

”எல்லா குழந்தைகளும் ஒன்றுபோல கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் தனித் திறமையுடன் இருக்கும்” என்று வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்ட் செய்யும் பெற்றோர்கள் நிஜத்தில் தன் குழந்தையை பந்தயக் குதிரையைப்போல நினைத்துக் கொள்கிறார்கள்.

மேடம் ஷகிலா
News
மேடம் ஷகிலா
”ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்சதும் யூனிஃபார்ம் மாட்டி ஸ்கூலுக்கு அனுப்பிடுவாங்க. அதனாலதான் நான் இன்னும் நாலு கால்ல நடக்குறேன்” - இப்படி ஒரு பூனைக்குட்டி, தவழும் குழந்தையிடம் சொல்லும் மீம் ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. அதைப்பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் பல கேள்விகள் எழும்.

எந்நேரமும் 'படி படி' என டார்ச்சர் செய்வதில் ஆரம்பித்து, குழந்தைகள் மீதான வன்முறைகளும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டே போகும் காலமாக இது மாறிக்கொண்டேயிருப்பது வாழ்வின் மீதான நம்பிக்கையை சிதைக்கிறது. எதிர்காலம் குறித்த அச்சத்தை அதிகரிக்கிறது.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய போஸ்கோ சட்டம் - 2012 நடைமுறைக்கு வந்ததில் இருந்து குழந்தைகள் மீதான குற்றங்கள் குறைந்திருக்க வேண்டும். மாறாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. பாலியல் ரீதியான செய்கைகள், ஆபாசமாகப் பேசுவது, திட்டுவது, குழந்தைகளின் அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது அல்லது அவர்களை கட்டாயப்படுத்தி மற்றவர்களின் உறுப்புக்களை தொடவைப்பதுகூட இச்சட்டத்தின்படி கடுமையான தண்டனைக்குள்ளாக்கும் குற்றம்.

குழந்தைகள் வன்கொடுமை
குழந்தைகள் வன்கொடுமை

ஆனால், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா சமீபத்தில் போஸ்கோ சட்டத்தை அடிப்படையாக கொண்டு வழங்கிய தீர்ப்புகள் நம்மை சட்டத்தின்மீதும் நம்பிக்கை இழக்கச் செய்வதாக இருக்கிறது.

”உடலோடு உடல் சேர்ந்தால் மட்டுமே குற்றம் எனவும் சிறுமிகளை ஆடைகளோடு தொடுவது பாலியல் துன்புறுத்தல் இல்லை” என்றும் கூறி அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்கள்.

இந்த தீர்ப்பு மட்டுமல்ல, குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள தற்காப்பு கலைகள் அவசியம் என நாடே பேசிக்கொண்டிருக்கும் நிலையில், "தற்காப்பு கலைகள் கடுமையான எதிர்விளைவுகளை உண்டாக்கும்" என தீங்கு இழைப்பவர்களுக்கு சாதகமாக கமல்ஹாசன் பேசியதும், அதேபோல் பலரின் மனநிலை இருப்பதையும் காணமுடிகிறது.

ஆரம்பம் எங்கே?

அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பதும், அளவுக்கதிகமான கண்டிப்பும், குழந்தைகளிடத்தில் சரியான உரையாடல்கள் இன்மையும், குழந்தைகளை வீடு, பள்ளி, பொது இடங்கள், பயணங்கள் என எல்லா இடங்களிலும் பாலியல் வன்கொடுமை போன்ற பெரும் ஆபத்துகளில் மிக எளிதாக சிக்க வைக்கிறது.

இதில் ஆண், பெண் குழந்தைகள் என்ற விதிவிலக்கில்லை. நாட்டில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் குழந்தைகளில் 90 சதவிகிதம் பேருக்கு தங்களுக்குத் தீங்கு இழைக்கும் நபர்கள் ஏற்கனவே அறிமுகமானவராக இருக்கிறார்கள் என்கிற தகவல்தான் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. குழந்தைகளுக்கு வீட்டில் தாத்தா, சித்தப்பா, மாமா, பெரியப்பா, அண்ணன்கள் ஏன் அப்பாக்களால்கூட பிரச்னை ஏற்படக்கூடும் 'மகத்தான' காலத்தில் வாழ்கிறோம்.

இந்த வன்முறைகளைப் பற்றி அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் பேசினால், அவர்கள் சிறுவர்களாக கூட்டுக் குடும்பங்களில் இருந்தபோதுகூட யாருக்கும் இவை நிகழ்ந்ததே இல்லை என்கிறார்கள். உண்மையில் இப்போதுதான் இவை அதிகரித்திருக்கிறது என்றால் அதற்கான காரணங்கள் என்ன?
Child Abuse
Child Abuse

சினிமாவின் தாக்கம்!

உடலளவிலும் மனதளவிலும் உறவுக்குத் தயாராக இல்லாத 18 வயதுக்கும் குறைவாக இருப்பவர்களை நாம் மைனர்... சிறுவர், சிறுமியர் என்கிறோம். ஆனால், 14 – 17 வயதுள்ள சிறுமிகளை ஹீரோயின்களாக நடிக்க வைப்பது, பத்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்குக் காதல் இருப்பது போல் காட்டுவது, பன்னிரண்டு, பதிமூன்று வயதில் பூப்பெய்தும் சிறுமிமேல் முறைப்பையனுக்கு காதல் ஏற்படுவதுபோல் காட்டுவது இவையெல்லாம் திரைப்படத்தின் பங்கு.

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் கண்ட ஒரு சம்பவம் ஏற்படுத்திய மன உளைச்சலில் இருந்து இன்னமும் மீள முடியவில்லை. இருபதுகளில் இருக்கும் ஒரு இளைஞன் தனது முறைப்பெண் பூப்பெய்திய செய்தியை பதிவிடுகிறான். அதில் அவனது நண்பர்கள் மிக ஆபாசமாக அந்தச் சிறுமியை குறித்தும் அவளது உடலைக் குறித்தும் கமென்ட் செய்கிறார்கள். இதைப் படிக்கும் அந்த இளைஞன் அதே எண்ணத்துடன் அச்சிறுமியை அணுகும்போது அங்கு பாலியல் அத்துமீறல்களும், மறுக்கும் பட்சத்தில் பெரும் குற்றங்களும் வீட்டுக்குள்ளேயே நிகழும் ஆபத்திருக்கிறது.

தமிழ் இலக்கியவாதிகள் மட்டும் சளைத்தவர்களா என்ன? தமிழின் முன்னோடி எழுத்தாளர் ஒருவர் எட்டாவது படிக்கும் பதிமூன்று வயது சிறுமியின் உடலை வர்ணித்தும், கல்லூரி மாணவன் ஒருவன் அவளுடன் உறவில் இருந்ததாகவும் எழுதி உள்ளார். இந்த வக்கிரத்தை படிக்கும் அவரின் வாசகர்கள் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவார்கள் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது. அதைவிட தனது வக்கிர புத்தியை தூய்மைவாத அடிப்படையில் இன்னமும் பறைசாற்றிக் கொள்ளும் ஒரு மனிதன் தான் பார்க்கும் ஒவ்வொரு பெண்குழந்தையையும் இப்படிதானே அணுகுவான் என்றும் யோசிக்கவேண்டி இருக்கிறது.

இன்னமும்கூட கிராமங்களில் ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அல்லது பூப்பெய்தியதிலிருந்து இவருக்குத்தான் திருமணம் செய்யப் போகிறோம் என்று சாதி, சொத்து எனப் பல்வேறு காரணங்களுக்காக பெரியவர்கள் முடிவுசெய்து பேசுவது பெண் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவதற்கான வழிமுறை. ஒருவேளை அந்தக் குழந்தை வளர்ந்து அவளுக்கு அவனைப் பிடிக்காமல் போகும்பட்சத்தில் அந்த ஆணின் எதிர்வினைகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நாம் நாளும் செய்திகளில் படித்துக்கொண்டிருக்கிறோம்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image
தலித் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளில் சாதியின் பங்கு பெருமளவில் இருக்கிறது. இந்தியா முழுவதிலுமே சாதிய பிரச்னைகளில் அதிகம் பாதிக்கப்படுவது தலித் பெண்களும் குழந்தைகளும்தான்.

பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இங்கு ஆபத்தில்லை... இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளில் ஆண் குழந்தைகளின் சதவிகிதம் பெண் குழந்தைகளைவிட அதிகம் என்றும் இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்பு அறிக்கை சொல்கிறது. குழந்தைகள், பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும்போது அவர்களை மீட்டவுடன் செய்ய வேண்டிய முதல் காரியம் ஒரு மருத்துவரிடம் காண்பிப்பது. பிறகு காவல் துறையில் புகார் அளிப்பது. ஆனால், நம் சமூகத்தில் காவல்துறையில் புகார் அளிப்பது, குழந்தை இறந்துபோனால் மட்டுமே நடக்கிறது.

உடல் நீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும், கவுன்சிலிங்கும் அவசியம். ஆனால் வெளியில் சொன்னால் மானம், கௌரவம் போய்விடும் என்று குழந்தையை வீட்டுக்குள்ளே பூட்டி வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கே தண்டனை கொடுக்கப்படுகிறது (#VictimBlaming and #VictimShaming). இது சரி என்றும், இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற விதிவிலக்குகள் கிடையாது என்பதையும்தான் பாவக்கதைகளில் ஒன்றான `வான்மகள்' சொன்னது. இதை இயக்கியவர் மிகவும் நவீனமாகப் படங்கள் எடுக்கக்கூடிய கெளதம் வாசுதேவ் மேனன்.

”கெடுத்தவனுக்கே அவளை கட்டி வைக்கணும், இல்லன்னா அந்த பொண்ணு செத்துடனும்”, "கற்பு போச்சுன்னா மானம் போயிடும். உடனே உசுர விட்ரனும்” என்று இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமா சொன்னதின் #எலைட் வெர்ஷன்தான் வான்மகளில், "பெண்ணின் உடல் கோயில். குடும்ப கௌரவம் அந்த கோயிலுக்குள் இருக்கிறது” என்று கௌதம் மேனன் சொல்வதும்.

தேவதைகள்?!

பெண் குழந்தை
பெண் குழந்தை

சமீப காலமாக பெண் குழந்தைகளை கொண்டாடும் மனநிலை அதிகமாக இருக்கிறது. இது நல்லதுதானே என்று நினைக்கலாம். முன்பு பெண்களை கடவுளாக பார்க்கிறோம் என்று சொல்லி புனிதங்களை அவள்மேல் ஏற்றி வைத்து அடிமையாக்கியதின் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் பெண் குழந்தைகளை தேவதைகளாகக் கொண்டாடுவதும்.

பாலியல் வன்கொடுமைகள் பற்றிய செய்திகள் வரும்போதேல்லாம் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கும், எப்படித் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கும் அட்வைஸ் வழங்கப்படுகின்றன. எப்போதாவது பெரிய குற்றங்கள் செய்பவர்கள் மட்டுமே கைதாகி பெரும் தண்டனைக்கு உள்ளாகிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளுமே ஏதோ ஒரு கட்டத்தில் சிறிய அளவிலாவது இது போன்ற துன்பங்களுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாலியல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகளுக்கு சாகும் வரையில் மனிதர்கள் மீதான பயம், அவநம்பிக்கை, மன உளைச்சல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இந்தக் கொடுமைகளை செய்பவர்கள் எல்லோரும் வேற்றுகிரகவாசிகளா என்ன? நம் வீட்டில் நம்மிடையே இருப்பவர்கள்தான். `அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கக்கூடும்... பிறகு எப்படி செய்ய முடிகிறது?' என்கிற ஆதங்கம் எல்லோருக்குமே உண்டு.

எங்கள் தெருவில் இரு குழந்தைகளுக்குத் தாயான பெண்ணொருத்தி பக்கத்துவீட்டில் இருக்கும் பன்னிரண்டு வயது சிறுமியிடம் நெருங்கிப் பழகினார். அவருடைய கணவர் வேறு ஊரில் வசித்து வந்ததால் பல நாட்கள் பக்கத்துவீட்டு சிறுமி அந்தப் பெண்ணின் வீட்டிலேயே தூங்கிவிடுவாள். நாளாக ஆக பணம், தேவையான பொருட்கள் போன்றவற்றை மிகச் செல்லமாக வளரும் அந்த சிறுமியின் வழியாக அவள் பெற்றோரிடம் இருந்து பறிக்க ஆரம்பித்தாள். ஆனால், பண விஷயத்தை தவிர வேறு எந்தச் சந்தேகமும் யாருக்கும் வரவில்லை. சிறுமிக்கு படிப்பில் நாட்டமில்லாதது பற்றி தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தபோதுதான் அந்தப் பெண்ணால் அச்சிறுமி பாலியல் உறவுக்குப் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறாள் என்று தெரிந்தது. இதுபோன்ற குற்றங்களை ஆண்கள் மட்டுமே செய்வார்கள் என்கிற பொதுப்புத்தியும் ஆபத்தானது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
(Representational Image)

கொச்சியில் நடந்த உலகளவிலான கலை விழாவில் (#KochiMuzirisBiennale), ”நினைவில் இருக்கும் முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது” பற்றிய கேள்விக்கான பதில்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில் 90% பேர் முதல் பாலியல் குற்றம் வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களால் நடத்தப்பட்டது என்று கூறியிருந்தது இந்த உலகம் முழுவதுமே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லையோ என்கிற அவநம்பிக்கயை ஏற்படுத்துகிறது.

பொதுவாக ஒரு குழந்தையிடம் எதை செய்யக்கூடாது என்கிற புரிதல் நம் சமூகத்தில் கிடையாது. பாலியல் துன்புறுத்தல் என்றவுடன் குழந்தைகளின் பிறப்பு உறுப்பை தொடுவது என்பதை மட்டும் நினைத்துக் கொள்கிறோம். ஒரு குழந்தைக்கு அறிய தெரியாத வயதில் அநாவசியமாக தொடுவது, கிள்ளுவது, கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பதுகூட பாலியல் சீண்டல்கள்தான். பெற்றோர்களே ஆனாலும்கூட குழந்தைகளை கொஞ்சுவதற்கு ஒரு அளவு உண்டு. நாம் அன்பினால் செய்யும் காரியங்களுக்குப் பழக்கப்பட்ட குழந்தைகளுக்கு வெளியிலிருந்து கிடைக்கும்போது அன்பா, ஆபத்தா எனப் பிரித்து உணர முடியாது.

மதிப்பெண் வன்முறை!

ஆறு மாதக் குழந்தைக்கு யூ-டியூப்பில் ஆங்கில ரைம்ஸ் காட்டுவதில் தொடங்குகிறது குழந்தைகள் மீதான மதிப்பெண் வன்முறை. குழந்தைகள்தான் குடும்பத்தின் உயிர்நாடி. குறிப்பாக தமிழ்க் குடும்பங்கள் குழந்தைகளைச் சுற்றியே இயங்குகிறது. பெண்குழந்தைகள் இருந்துவிட்டால் அது Dad’s Little Princess-கள் வாழும் வீடு. இவை எல்லாம் அக்குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும் வரை. பிறகு?

மூன்று வயதில் லட்சங்களில் கட்டணம் செலுத்தி பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தைக்கு ஆங்கில ரைம்ஸ் உச்சரிப்பு சரியாக இல்லை என கூறி பள்ளி நிர்வாகம் தொடர்ந்து சொல்லி வந்ததால் பள்ளியை மாற்றிவிட்டு Speech Therapist-யிடம் அலைந்த கதைகள் பத்தாண்டுகள் முன்பே கோவை மாதிரியான இரண்டாம் கட்ட நகரத்தில் நடந்திருக்கிறது. பெருநகரங்களில் பெரும்பாலான குழந்தைகள் அறிவு வளர்ச்சி, பேச்சு தொடர்பாக ஒருமுறையேனும் மருத்துவரிடம் செல்வது இன்று சகஜமாகியிருக்கிறது.

குழந்தைகள்
குழந்தைகள்

தனி மனிதனாக எவ்வளவு தெளிவுடன் யோசித்தாலும் சமூகத்துக்குள் வரும்பொழுது இந்த சமூகத்தை எதிர் கொள்ளவே பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். இதை எப்படி கையாள்வது என்று தெரியாத இளம் பெற்றோர்கள் அந்த அழுத்தத்தில் குழந்தைகளை திட்டவும், அடிக்கவும் செய்கின்றனர். பொதுவாக கற்றல் குறைபாடு, பேச்சு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறிது அதிக அன்பும், கவனமும் தேவைப்படுகிறது. மாறாக மருத்துவரிடம் அலைவதாலும், பெற்றோர்களின் நெருக்கடியாலும் குழந்தைகளுக்கு அழுத்தமே மிஞ்சுகிறது.

”எல்லா குழந்தைகளும் ஒன்றுபோல கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் தனித் திறமையுடன் இருக்கும்” என்று வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்ட் செய்யும் பெற்றோர்கள் நிஜத்தில் தன் குழந்தையை பந்தய குதிரையைப்போல நினைத்துக் கொள்கிறார்கள்.

பல பெற்றோர்களுக்கும் இன்று ரேஸில் ஜெயிக்கும் குதிரைகளைப்போல் 'Bright' ஆன பிள்ளைகளே தேவையாக இருக்கிறது. சமூகத்தின் `Survival' கோட்பாடுகளுக்கு ஒத்துப்போகாத குழந்தைகளின்மீது பெற்றோர்களுக்கு ஒவ்வாமையும், விலகலும் இருந்துகொண்டே இருக்கிறது. நமது அவசரத்திற்கு புகை போட்டு பழுக்க வைக்க, குழந்தைகள் ஒன்றும் வாழைப்பழங்கள் அல்லவே??

நாம் பட்ட சிரமங்களை நம் பிள்ளைகள் படக்கூடாது என்றெண்ணி குழந்தைகளை பாதுகாப்பாகவும், வசதியாகவும் வளர்க்கிறோம். அளவுக்கு அதிகமாக செல்லமும், கேட்கும் பொருட்களையும் வாங்கிக் கொடுக்கிறோம். இப்படி வளரும் குழந்தைகளுக்கு பிரச்னை என்னவென்றால் தங்களை கொஞ்சும் யாரிடமும் அவர்கள் எளிதில் அடைக்கலம் ஆகிறார்கள். தேவதை எனும் வார்த்தைக்கு மிக எளிதாக மயங்கி விடுகிறார்கள். ஒரு குழந்தையை வசப்படுத்துவதற்கு சாக்லேட், ஐஸ்கிரீம் போதும் என்ற அளவில்தான் குழந்தைகளின் மனம் இருக்கிறது.

ஒரு குழந்தைக்கு முதன் முதலில் வன்முறையை அறிமுகம் செய்து வைப்பது பெற்றோர்கள். குழந்தையை அடிப்பதன் மூலம் `அடிப்பது சரி' என நேரடியாக கற்றுக்கொடுக்கிறோம். நாம் செய்வதை குழந்தைகள் மற்ற குழந்தைகளிடம் செய்கிறது. இன்றைய பெற்றோர்களுக்கு கண்டிப்பு என்பது அடிப்பதுதான். அதேபோல் குழந்தைகளின் முன்னால் பெரியவர்கள் சண்டையிட்டுக் கொள்வது குடும்ப அமைப்பின்மீது அவநம்பிக்கை கொள்ள செய்யும் மிக மோசமான முன் உதாரணம்.

குழந்தைகள்
குழந்தைகள்

ஐந்து வயது குழந்தை ஆன்லைன் கிளாஸ் புரியாததால் அடிவாங்கும் அவலங்கள் நம் வீடுகளில் இந்த லாக்டெளனில் நடக்கிறது. மதிப்பெண் பட்டியலை பெற்றோர்களிடம் காட்டி அடிவாங்கிய #80sKids இன்று தங்கள் பிள்ளைகளுக்கு அதையே செய்வது ஆச்சரியமளிக்கிறது. குழந்தைகளை கண்டிக்கத் தகாத வார்த்தைகளால் திட்டும் பழக்கம் படித்து, பெரிய வேலையில் இருப்பவர்களிடம்தான் அதிகம் இருக்கிறது.

சிறிய விஷயங்களுக்குகூட கண்டிப்புடன் இருக்கும் பெற்றோர்களிடத்தில் குழந்தைகளுக்கு விலகல் ஏற்படுகிறது. அவர்கள் எதையும் சொல்வதற்கான தயக்கம் கொள்கின்றனர். பொய் சொல்லவும், தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கவும் தொடங்குகின்றனர். நகரங்களில் குடும்பங்கள் தனித்தனி தீவுகளாக உள்ள இன்றைய காலகட்டத்தில் செல்போனையும், கம்ப்யூட்டரையும் இரண்டு வயதில் எளிதாக கற்றுக்கொள்ளும் நம் குழந்தைகளுக்கு பத்து வயதானாலும் மனிதர்கள், வெளியுலகம் பற்றிய நடைமுறை அனுபவ அறிவு வளர்வதில்லை.

மாற்றம் நமது கல்வி முறையில் தொடங்கி குடும்பங்கள்வரை நிகழவேண்டும். குழந்தைகளை தெய்வமாகவும், தேவதைகளாகவும் கொண்டாடவேண்டியதில்லை. அவர்களை நம்பிக்கைமிக்க மனிதர்களாக வளர்த்தெடுப்பதே அவசியம். குழந்தைகளுக்கான சுதந்திரமும், பாதுகாப்பும் மிக மிக முக்கியம். அதுபறிபோனால் எதிர்காலம் இருண்டகாலமாகிவிடும்!