Published:Updated:

இதெல்லாம் செய்தால் கிரெடிட் கார்டு உங்களுக்கு வில்லனாகவும் மாறலாம்... அலெர்ட் தோழிகளே! #HerMoney

#HerMoney
News
#HerMoney

`சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது' என்பது எதற்குப் பொருந்துமோ இல்லையோ, கிரெடிட் கார்டுக்கு நிச்சயம் பொருந்தும். அளவுக்கு மீறினால் அமிர்தம் மட்டுமல்ல, கிரெடிட் கார்டும் கெடுதலே.

Published:Updated:

இதெல்லாம் செய்தால் கிரெடிட் கார்டு உங்களுக்கு வில்லனாகவும் மாறலாம்... அலெர்ட் தோழிகளே! #HerMoney

`சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது' என்பது எதற்குப் பொருந்துமோ இல்லையோ, கிரெடிட் கார்டுக்கு நிச்சயம் பொருந்தும். அளவுக்கு மீறினால் அமிர்தம் மட்டுமல்ல, கிரெடிட் கார்டும் கெடுதலே.

#HerMoney
News
#HerMoney
``கிரெடிட் கார்டால் நன்மைகள் மட்டும்தான் விளையுமா? அது என்ன உட்டோப்பியன் உலகா... உள்ளபடியே எல்லாமே பெர்ஃபெக்ட்டாக இருக்க? அதன் மூலம் எத்தனை தீமைகள் என்பதைப் பற்றி ஏன் சொல்லவில்லை?”

- முந்தைய #HerMoney அத்தியாயம் வாசித்த தோழி ஒருவர் இப்படிக் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாகவும், முந்தைய அத்தியாயத்தின் நீட்சியாகவும் இந்த அத்தியாயத்தில் கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தாதபட்சத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

கிரெடிட் கார்டு கெடுதல் தருமா?

நிச்சயமாக!

`சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது' என்பது எதற்குப் பொருந்துமோ இல்லையோ, கிரெடிட் கார்டுக்கு நிச்சயம் பொருந்தும். அளவுக்கு மீறினால் அமிர்தம் மட்டுமல்ல, கிரெடிட் கார்டும் கெடுதலே.

#HerMoney
#HerMoney

செய்யக் கூடாதவை...

- உங்களின் மாத வருமானத்தில் 50% தாண்டி கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். போலவே உங்களின் கிரெடிட் லிமிட்டுக்கு 50%க்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் கார்டை உபயோகிக்காதீர்கள். அதிகபட்சமாக 30% - 45% கிரெடிட் லிமிட்டை பயன்படுத்தினால் போதும். இதைத் தாண்டி போகும்போது நீங்கள் உங்களின் சுமையைக் கூட்டிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

- பில்லிங் சைக்கிளை சரியாகக் கணக்கிடத் தவறி கார்டை உபயோகித்தால் `பில்லிங் சூனியம்' வைத்துக்கொள்வீர்கள் என்பதை போன வாரம் பார்த்தோம். இந்த பில்லிங் சைக்கிளை பிரதானமாகச் சொல்வது எதனால்?

பில்லிங் சைக்கிளை சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட தேதிக்குள் கிரெடிட் கார்டு பில்லைக் கட்டத் தவறும்பட்சத்தில், லேட் பேமென்ட் சார்ஜஸ், அதாவது தாமதமாகப் பணத்தைக் கட்டியதற்காக நீங்கள் செலுத்தப்போகும் அபராதத் தொகை பல மடங்கு.

- முன்பெல்லாம் மாதத்துக்கு இவ்வளவு லேட் பேமென்ட் சார்ஜஸ் எனக் கணக்கிட்ட பல வங்கிகள், இப்போதெல்லாம் நிலுவையில் இருக்கும் தொகையின் அளவைப் பொறுத்து நாளொன்றுக்கு அல்லது வாரம் ஒன்றுக்கு இத்தனை என்ற விகிதத்தில் வட்டி வசூலிக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் நிலுவைத் தொகையின் மீது கணக்கிடப்படும் வட்டியானது நீங்கள் பொருளை வாங்கிய நாள் தொடங்கி நீங்கள் பணத்தை திருப்பிச் செலுத்தும் நாள் வரைக்குமாகக் கணக்கிடப்படும்.

உதாரணமாக ஜூலை 2-ம் தேதி வாங்கிய பொருள்களுக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி பணம் கட்ட வேண்டும் எனும் பில்லிங் சைக்கிளில் பணம் கட்டத் தவறினால், அந்நிலுவைத் தொகைக்கான வட்டியானது ஜூலை 2 முதல் நீங்கள் பணத்தை திருப்பிச் செலுத்தும் நாள் வரையிலும் கணக்கிடப்படும். ஒரு கட்டத்தில் அசலைவிட நீங்கள் கட்ட வேண்டிய வட்டி அதிகமாயிருக்கும்.

போலவே, நிலுவையிலிருக்கும் தொகைக்கான வட்டிக்கு ஜிஎஸ்டி என 18% வரை கூடுதலாக வசூலிக்கப்படலாம். அத்துடன் பழைய பாக்கியை அடைக்காமல் நீங்கள் உங்கள் கார்டை உபயோகிக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனியாக வட்டியும், கூடவே ஜிஎஸ்டி-யும் கணக்கிடப்படும்.

#HerMoney
#HerMoney

- பேமென்ட் டியூ டேட்டை தவறவிடக் கூடாது என்பதைப்போல செய்யவே கூடாத முக்கியமான ஒன்று, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் பழக்கம். வீட்டுக் கடனுக்கான வட்டி (தோராயமாக ) 8%, கார் லோனுக்கு 10%, பர்சனல் லோனுக்கு 12% என்று வைத்துக்கொள்வோம். ஆனால் கிரெடிட் கார்டின் மூலமாக ஏடிஎம்மில் நீங்கள் பணம் எடுக்கும்போது உங்களிடமிருந்து வங்கி வசூலிக்கும் வட்டி விகிதமானது 24% முதல் 40% வரை என்பது தெரியுமா? என்ன கேட்கவே மலைப்பாக இருக்கிறதா? நிஜம்தான் தோழிகளே! உண்மையைச் சொன்னால், கந்து வட்டி, மீட்டர் வட்டி அளவுக்குக் கொடுமையானது கிரெடிட் கார்டின் மூலம் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது.

உதாரணமாக, நீங்கள் ஏடிஎம்மில் இருந்து கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி 1,000 ரூபாய் எடுத்தால் குறைந்தபட்சம் அதில் 200 ரூபாய் பிராசஸிங் கட்டணமாக வங்கியால் எடுத்துக்கொள்ளப்படும். உங்கள் கைக்கு வரும் அசலான பணம் 800 ரூபாய் மட்டுமே. ஆனால், நீங்கள் வட்டி கட்டப் போவதோ ஆயிரம் ரூபாய்க்கு. மேலும் உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வட்டி விகிதம் 24% முதல் 40% வரை இருக்கும். முடிந்தவரை ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பதைத் தவிர்க்கவும். கையறு நிலை, வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் பணத்தை எடுத்தாலும் எத்துணை சீக்கிரம் அதைத் திருப்பிச் செலுத்திவிட முடியுமோ அத்துணை சீக்கிரம் திருப்பிச் செலுத்துவது நல்லது.

- `பேமென்ட் டியூவைத் தவறவிடவில்லை. ஆனால், மினிமம் டியூ அமௌன்ட் நான்தான் கட்டி விட்டேனே...' என்று ஆசுவாசப்படுபவரா நீங்கள்? நீங்கள் செய்தது ஒன்றும் சாணக்கியத் தந்திரம் இல்லை. மினிமம் டியூ போக நீங்கள் கட்டாமல் இருக்கும் பாக்கி நிலுவைத் தொகைக்காகவும் வங்கி வட்டி வசூலிக்கும்.

- இவை அனைத்தையும்விட முக்கியமான ஒரு விஷயம், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் உங்களின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். 300 முதல் 900 வரையில் இருக்க வேண்டிய உங்களின் கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாக வைத்துதான் எதிர்காலத்தில் வங்கிகள் உங்களுக்கு கடன் அளிப்பார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். வீட்டு லோன், பர்சனல் லோன் என எது வாங்க வேண்டுமென்றாலும் உங்களின் வயது, வருமானம் ஆகியவற்றைக் காட்டிலும் உங்களின் கிரெடிட் ஸ்கோர்தான் கடன் பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக இருக்கிறது.

Credit Card
Credit Card
Photo by Ales Nesetril on Unsplash

- பெட்ரோல் போட , ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட, ஹோட்டல்/டிரெயின்/ஃபிளைட் புக்கிங் போன்றவற்றுக்கு தனித்தனியாக கார்டுகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தும் பட்சத்தில் நமக்கு பல சலுகைகளும் தள்ளுபடியும் உண்டுதான் என்றாலும், முடிந்த வரையில் எண்ணற்ற கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

இவற்றைப் போலவே செய்யக் கூடாத மற்றொறு தவறு, ஒரு கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தாமல் உருவாக்கிய கடனை அடைக்க மற்றொரு கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது. இத்துடன் தவிர்க்க வேண்டியது, கிரெடிட் கார்டின் மூலமாக நீங்கள் கடன் வாங்குவது. ஏனெனில், கார்டைப் பயன்படுத்தி நீங்கள் கடன் வாங்கும்போது அதற்கும் பிராசஸிங் ஃபீஸ் என தனியாக ஒரு தொகையை வங்கி வசூலிக்கும். அத்துடன் வட்டி விகிதமும், மேலே ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்குச் சொன்னதுபோல அதிக அளவில் இருக்கும். தவிர்க்க முடியாத சூழல்களால் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை...

*கடனை திருப்பிச் செலுத்தும் கால அளவு என்ன?

* தவணையை தவறவிட்டால் தாமதத்துக்கான கட்டணம் எவ்வளவு?

* கடனை முன்கூட்டியே அடைக்கும் பட்சத்தில் ப்ரீ குளோஸிங் சார்ஜஸ் ஆக நீங்கள் கட்ட வேண்டிய தொகை என்ன?

டெக்னாலஜி விஷயங்கள்... கவனம்!

- ஹோட்டல்களில், ரெஸ்டாரன்ட்களில், வெளியிடங்களில் உங்களின் கிரெடிட் கார்டின் மூலம் பரிவர்த்தனைகள் செய்யும்போது உங்கள் கண்முன்னேயே அவற்றைப் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதைப் பிரதி எடுத்து உபயோகிக்கும் வாய்ப்புகள் இந்த டெக்னாலஜி சூழ் உலகில் அதிகம்.

- கிரெடிட் கார்டின் மூலமாக நீங்கள் வாங்கும் ஒவ்வொன்றிற்கும் போனஸ் பாயின்ட் உண்டு. உங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக போனஸ் பாயின்ட்டுகள் உங்களை வந்து சேரும். அதைத்தாண்டி அதிக போனஸ் பாயின்ட்கள் வேண்டும் என்பதற்காக கார்டைத் தேய்க்காதீர்கள்.

- ஒவ்வொரு மாதமும் வரும் கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்டை முழுவதுமாக சரி பாருங்கள். நீங்கள் பயன்படுத்தாத எதற்கேனும் கட்டணம் வசூலித்திருந்தால் உடனடியாக கஸ்டமர் கேரைத் தொடர்புகொள்ளவும். ஏனெனில், சில வங்கிகள் ஸ்டேட்மென்ட் அனுப்பிய 48 மணி நேரத்துக்குள் பிரச்னைகளைத் தெரிவிக்காத கஸ்டமர்களின் புகார்களைப் பரிசீலிப்பதில்லை.

Credit Card
Credit Card
Pixabay

- உங்களுடைய/உங்கள் கணவருடைய கிரெடிட் கார்டை `இந்த ஒரு தடவை மட்டும்தான் ப்ளீஸ்' எனக் கேட்கும் நண்பர்களுக்கு/தோழிகளுக்கு கொடுப்பதை முடிந்தவரை தவிருங்கள். கடன் மட்டுமல்லாது கடன் அட்டையை இரவல் வழங்குவதும் அன்பை முறிக்கும்.

- பல நேரங்களில் கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்கள் வங்கியில் நீங்கள் பதிவு செய்திருக்கும் மெயில் ஐடியின் இன்பாக்ஸில் விழாமல், ஸ்பேம் ஃபோல்டரில் (Spam folder) பதுங்கும். அதனால் அந்த மெயில் உங்கள் இன்பாக்ஸில் வந்து சேரும்படி பார்த்துக்கொள்வது உங்களின் பொறுப்பே.

- சந்தர்ப்பவசத்தால் மொத்த நிலுவைத் தொகையையும் கட்ட முடியாது எனும் சூழலில், அதிலும் நிலுவைத்தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதை இஎம்ஐ-களாக மாற்றிக் கொள்ளுங்கள். இதன் மூலம் அநாவசியமான கட்டணங்களைத் தவிர்க்கலாம்.

- பில்லிங் தேதியை உங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு. சம்பந்தப்பட்ட வங்கியின் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு உங்களின் வசதிக்கு ஏற்றபடி பில்டிங் தேதிகளையும் பேமென்ட் தேதிகளையும் மாற்றிக்கொள்ளுங்கள்.

- எவற்றை வாங்கினால் அதை இஎம்ஐ அல்லது லோனாக மாற்ற முடியும், எவற்றை மாற்ற முடியாது என்பதை வங்கியிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம்.

- 0% இஎம்ஐ என சில சமயம் வங்கிகள் நம்மை பொருள்களை வாங்கத் தூண்டுவார்கள். நாமளும் ஆசையால் உந்தப்பட்டு பொருள்களை வாங்கிய பின் பார்த்தால், குறிப்பிட்ட தொகை தனியாக பில் செய்யப்பட்டிருக்கும். வங்கியை கேட்டால், `0% இஎம்ஐ-தான். ஆனால் நாங்கள் வசூலித்தது பிராசஸிங் சார்ஜஸ் + ஜிஎஸ்டி' என்ற பதில் வரும்.

எனவே, விளம்பரங்களைப் பார்த்து பொருள்களை வாங்காமல் உங்களுக்குத் தேவை என்றால் மட்டுமே பொருள்களை வாங்குங்கள்.

- சமீபத்தில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை இறங்குமுகமாக இருப்பதால் 3 சவரன் ஆபரணத்தங்கம் வாங்குவதற்காக கார்டை பயன்படுத்திய தோழி ஒருத்தி, பில்லிங் தேதியை ஒழுங்காகக் கணக்கிடாமல் வாங்கிவிட்டாள். ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் அந்த மாதக் கடைசியில் செலுத்த வேண்டும் என ஸ்டேட்மென்ட்டில் வந்தபோது விக்கித்துப் போனவள் மொத்தத் தொகையையும் திருப்பிச் செலுத்த முடியாது என, தங்கம் வாங்கிய தொகையை இஎம்ஐ ஆக மாற்ற முயன்றாள். அப்போது அவளுக்குக் கிடைத்தது பேரதிர்ச்சி. கிரெடிட் கார்டை பயன்படுத்தி நாம் வாங்கும் தங்கத்துக்கான நிலுவைத் தொகையை இஎம்ஐ ஆகவோ, லோனாகவோ மாற்றும் வசதி இல்லை என்றது வங்கி. பின்பு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணத்தை ஏற்பாடு செய்து அந்த மாதத்துக்கான பில் தொகையைக் கட்டினாள்.

card
card

போன வார எபிசோடு கொடுத்த நம்பிக்கையை அடியோடு தகர்க்கும் படியாக இந்த வார எபிசோடில் சொல்லப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன என்று அஞ்சத் தேவையில்லை. இவை எதுவும் உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல தோழிகளே! உங்களுக்கு கார்டை பயன்படுத்தத் தகுதி இருக்கிறதா என்று போன வாரம் பட்டியலிடப்பட்ட விஷயங்களை மீண்டும் வாசியுங்கள்... அதற்கு ஏற்றாற்போல் சிந்தித்து செயல்படுங்கள்.

மீண்டும் சொல்கிறேன்... சரியானபடி திட்டமிட்டு உபயோகிக்கும் பட்சத்தில் கிரெடிட் கார்டு நல்ல தோழியே. ஆனால், அதை உயிர்த் தோழியாக வைத்திருப்பதும், உயிரை எடுக்கும் எதிரியாக மாற்றுவதும் அதை உபயோகிக்கும் நம் கைகளில்தான் இருக்கிறது.