Published:Updated:

குடும்பத்தில் பணம் பத்தி பேசினாலே சண்டையில் முடியுதா... நீங்க பண்ற தப்பு இவைதான்! #HerMoney

#HerMoney
News
#HerMoney

திருமணத்துக்குப் பின்பு உறவு வைத்துக்கொள்வதைப் பற்றிக்கூட பேச அனுமதிக்கும் பல குடும்பங்களில், திருமணத்துக்குப் பின்பான தம்பதிகளின் நிதி தொடர்புடைய இலக்குகளைப் பற்றிப் பேச அனுமதிப்பதில்லை. ஏன் இந்த முரண்?

Published:Updated:

குடும்பத்தில் பணம் பத்தி பேசினாலே சண்டையில் முடியுதா... நீங்க பண்ற தப்பு இவைதான்! #HerMoney

திருமணத்துக்குப் பின்பு உறவு வைத்துக்கொள்வதைப் பற்றிக்கூட பேச அனுமதிக்கும் பல குடும்பங்களில், திருமணத்துக்குப் பின்பான தம்பதிகளின் நிதி தொடர்புடைய இலக்குகளைப் பற்றிப் பேச அனுமதிப்பதில்லை. ஏன் இந்த முரண்?

#HerMoney
News
#HerMoney

சுப்ரியா 24 வயது யுவதி. அறிவு, திறமை, சூழலுக்கு ஏற்ற நிதானம், வேலையில் முன்னேற வேண்டுமெனும் ஆர்வம் என எல்லாமும் இருந்த துறுதுறுப் பெண். சுப்ரியாவுக்குப் பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்திருந்த திருமணம், நின்றுபோனது. அதற்கு அவள் சொன்ன காரணம், அதிர்ச்சி அளித்தது.

``நிச்சயத்திருந்த மாப்பிள்ளையிடம் எதிர்கால சேமிப்பு, முதலீடுகள் குறித்த நிதித் திட்டமிடல் பற்றிப் பேசினேன். `இப்பவே என் சம்பாத்தியத்தை கன்ட்ரோல் பண்ண பார்க்குறியா...'னு கேட்டார். அவர் வீட்ல நான் இதெல்லாம் கேட்கிறேன்னு சொன்னார். உடனே அவங்க, `பொண்ணா வளர்த்திருக்கீங்க? எங்க பையனை இப்பவே பிரிக்கப் பார்க்குறா...’னு சீறி கல்யாணத்தையும் நிறுத்திட்டாங்க.

குடும்பத்தில் பணம் பத்தி பேசினாலே சண்டையில் முடியுதா... நீங்க பண்ற தப்பு இவைதான்! #HerMoney

என் ஆண்டு வருமானம் என்ன? மாத டேக் ஹோம் எவ்வளவு, லோன், இ.எம்.ஐ இருக்கா, திருமணத்துக்குப் பின்னும் என் பெற்றோருக்கு என் வருமானத்தின் மூலம் நிதி உதவி ஏதேனும் செய்ய வேண்டியிருக்குமா என என் சம்பளம் குறித்த எல்லாமே அவங்க கேட்டாங்க. அதைக் கொஞ்சம்கூட தப்பாக எடுத்துக்காம நாங்க பதில் சொன்னோம். ஆனா, `நம்ம எதிர்கால நிதித் திட்டமிடல் பற்றிப் பேசணும்'னு நான் ஆரம்பிச்சதே அவங்களுக்குப் பொறுக்கலை'' என்ற சுப்ரியா, அடுத்ததாகக் கேட்ட கேள்விதான் இப்போது வரையிலும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.

``திருமணத்துக்குப் பின்னான பாலியல் உறவு, குழந்தை திட்டமிடல் பத்தியெல்லாம்கூட பேச அனுமதிக்கும் பல குடும்பங்கள்ல, திருமணத்துக்குப் பின்பான தம்பதிகளின் நிதி தொடர்புடைய இலக்குகளைப் பத்தி பேச அனுமதிக்கிறதில்லை. ஏன் இந்த முரண்?''

அவள் சொன்னதை யோசித்தேன். `ஹனிமூன் பிளான் பண்ணிட்டீங்களா? எப்ப குழந்தை பெத்துக்கப் போறோம்னு பிளான் பண்ணிட்டீங்களா?’ என்றெல்லாம் அந்தரங்க பிளான்களைப் பற்றி வெளிப்படையாகக் கேட்கும் உறவுகளும் நட்புகளும், `உங்களின் நிதி சார்ந்த இலக்குகளை பிளான் பண்ணிட்டீங்களா?' எனக் கேட்பதே இல்லை. இவ்வளவு ஏன், `அதை பிளான் பண்ணுங்க' என்ற அட்வைஸைக்கூட சிறு விதையாக விதைப்பதில்லை. சற்று ஆழமாக யோசித்தால் இந்தச் சிக்கலில் பெரிதும் உழல்வது திருமணமான தம்பதிகளுமே என்பது புரியும்.

கணவன் - மனைவிக்கு இடையே யுத்தத்தைக் கிளப்பும் விஷயமாக என்றென்றைக்கும் இருப்பவற்றுள், பணத்துக்கு பிரதான இடம் உண்டு. ஆனால், இது எவ்வளவு முக்கியம் என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதைப் பற்றிப் பேசுவதற்கான சூழல் பல வருடங்களாகச் சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கிடையே கூட இங்கு இருப்பதில்லை.

லாட்டரிச் சீட்டுகள் பிரபலமாக இருந்த காலம் அது. எதிர்வீட்டில் குடியிருந்த மணி சித்தப்பாவின் வருமானத்தின் பெரும்பகுதி லாட்டரிக்குப் போனது. வீட்டில் சண்டைகளும் கூடின. ஒரு கட்டத்தில் சித்தி வரவு செலவு பற்றி பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்தலாம் என்றபோது, கிணற்றடியில் இருந்த வாளியால் சித்தியை சித்தப்பா அடித்ததைப் பார்த்த நாள், இந்தக் கட்டுரையை எழுதும் இந்த நொடியில்கூட கண்முன்னே வந்து போகிறது.

#HerMoney
#HerMoney

பிரபு மற்றும் லதா ஆசை ஆசையாய் விரும்பி திருமணம் செய்து கொண்ட தம்பதி. தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து உழைத்தனர். வீட்டு லோன், கார் லோன், இ.எம்.ஐ-க்கள், குழந்தைகளின் எதிர்காலம் என எல்லாமும் ஒரு கட்டத்தில் கழுத்தை நெரிக்க, `இனிமே பட்ஜெட் போட்டுதான் குடும்பம் நடத்தணும்' என்று பிரபு சொன்னது சண்டையாக மாறி, வார்த்தைகள் தடித்து, பரஸ்பரம் பேசுவது குறைந்து, ஒரு கட்டத்தில் பேசிக்கொள்வதே நின்றுபோய், இப்போது இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகியிருக்கிறார்கள்.

என்ன இது? கட்டுரை எதிர்மறை எண்ணங்களை விதைக்கிறதே எனத் தோன்றுகிறதா? பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். போலவே அது பந்தத்தையும் பதம் பார்க்கும் தோழிகளே! ஆமாம்... கணவன், மனைவியோ, வருங்காலத்தில் கணவன், மனைவி ஆகப்போகிறவர்களோ... 10 எண்ணுவதற்குள் அவர்களுக்குள் சண்டை வரச்செய்யும் சக்தி பணம் என்ற ஒற்றை வார்த்தைக்கு உண்டா இல்லையா?

``காசு பத்தி பேச ஆரம்பிச்சா சண்டை வந்துடும்னுதான் நான் அது பத்தி பேசவே மாட்டேன்...''

``பட்ஜெட் போட உட்கார்ந்தா போதும்.... பாரதப் போர்தான் நடக்கும் வீட்டில...''

``ஒவ்வொரு முறை அவ பட்ஜெட் பத்தி பேசணும்னு சொன்னாலே எரிச்சலாகுது. நான் பண்ற செலவு பத்தி மட்டும்தான் அவ பேசுவா...''

``நான்தான் அவளைவிட ஜாஸ்தி சம்பாதிக்கிறேன்... அப்புறம் அவ என்ன சொல்றது, நான் என்ன கேட்குறது?''

``நான் சம்பாதிக்கிறேன்னு பேருதான்டி. ஆனா, காசு பத்தின எந்த முடிவும் என்னைக் கேட்டு அவர் எடுக்க மாட்டார்...''

இதுபோல பல புலம்பல்கள், ஆதங்கங்கள் நம்மிடமும் இருக்கும். பணம் குறித்த திட்டமிடலை உங்களின் வாழ்க்கைத் துணையுடன் மேற்கொள்ளத் தயங்குவோர் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஓடி ஓடி உழைப்பதும், பணம் சம்பாதித்துச் சேர்ப்பதும், உங்களின் குடும்ப நலனுக்காக எனும் பட்சத்தில் அது குறித்த முக்கிய முடிவு எடுக்கும் தருணங்களில் உங்களின் வாழ்க்கைத் துணையைச் சேர்த்துக்கொள்ளாமல் போவது எப்படிச் சரியாகும்? நிதி தொடர்பான திட்டமிடலில் நீங்கள் சிந்திக்காத, கணிக்காத விஷயங்களை உங்களின் துணை கண்டறிந்து அதைச் சேர்க்க வாய்ப்புகள் உள்ளன.

#HerMoney
#HerMoney

இருவரும் வேலை பார்த்தாலும் அல்லது தம்பதிகளுள் ஒருவர் வேலைபார்த்து சம்பாதித்தாலும், தம்பதிகளுக்கு குடும்பத்தின் நிதி இலக்கு (couple financial goal) என்பது இருக்க வேண்டுமா, இல்லையா? நிச்சயமாக அது வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

தேவன் மற்றும் வைஷாலி தம்பதி, காதலித்து வீட்டை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தவர்கள். திருமணம் முடிந்ததும், `இதற்கு இவ்வளவுதான்' என்ற தீர்மானத்துடன் ஓரளவுக்கு பக்காவாக பட்ஜெட் போட்டு குடும்ப வாழ்க்கையைத் தொடங்கியவர்களுக்குச் சொந்தமாக பெங்களூரில் இரண்டு ஃபிளாட்கள், சேமிப்பில் கணிசமான தொகை. ஒரு ஃபிளாட்டுக்கான கடனை முற்றிலுமாக அடைத்துவிட்டனர். எப்படி இது சாத்தியம் என்றதற்கு அவர்கள் சொல்லும் பல விஷயங்கள் நாம் இதுவரை #Hermoney-ல் பார்த்தவைதான்.

* ``எந்தவிதப் பொருளாதார சப்போர்ட்டும் இல்லாமல் நடந்த திருமணம் என்பதால் முதலில் அவசர கால நிதியைச் சேர்க்க முடிவு செய்தோம்.

* அத்துடன் மாத வருமானத்தில் என்ன ஆனாலும் 30% சேமிப்புக்கு மட்டுமே என்று தீர்மானமாகயிருந்தோம்.

* திடீர் மருத்துவச் செலவுகளை சமாளிக்க ஏற்ற வகையில் மெடிக்கல் பாலிசிகளைத் தேர்வு செய்தோம்.

* போலவே ஆயுள் காப்பீடும் அவசியம் என்பதையுணர்ந்து இருவரின் வருட வருமானத்தை 10-ஆல் பெருக்கி அத்தொகைக்கு ஆயுள் காப்பீடு வாங்கினோம்.

* ஓரளவுக்குக் கையிருப்பு வந்தவுடன் மெதுவாக பங்குச்சந்தையில் கால் பதித்தோம். எங்களின் பலவீனம் பலம் உணர்ந்து குறைந்த அளவு முதலீடுகளை செய்யத் தொடங்கினோம்.

* வரும் வருமானத்தைச் சேர்ப்பது மாத்திரமே வாழ்வின் நோக்கம் என்று இருக்காமல் பயணங்களும், சினிமா முதலிய கேளிக்கைகளும் அவசியமே என்பதை உணர்ந்து இவற்றிற்கெல்லாம் கொஞ்சம் செலவழித்தோம். ஆனாலும், முதல் இரண்டு வருடங்களுக்கு பணத்தைச் சேமிக்கும் விஷயத்தில் ராணுவக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தோம்.

* இவை அனைத்தையும்விட முக்கியம், ஒவ்வொரு காலாண்டிலும் எங்களின் அப்போதைய பொருளாதார நிலை என்ன, முன்னேறி இருக்கிறோமா, பின்னடைவா, போக வேண்டிய தூரம் என்ன போன்ற பல விஷயங்களை அலசி ஆராய்ந்து, எங்களின் தவறுகளைக் களைய நாங்கள் தவறவில்லை'' என்றவர்கள், நினைத்ததைத் திட்டமிட்டபடி நடத்தி முடிப்பது எப்படிச் சாத்தியம் என்பதற்கு சொன்ன பதில்தான் நாம் கற்க வேண்டிய முக்கியப் பாடம்.

``தொடக்கத்தில் சேமிப்பு குறித்த பேச்சுகள் வந்தாலே சண்டைகள் வரும். ஆசை யாரை விட்டது எனும்படி டிராக்கிலிருந்து நாங்களும் விலகிய நாள்கள் உண்டு. பல நேரங்களில் ஒருவருக்கு எனக்கு சேமிப்பாகப்படுவது மற்றவருக்குச் செலவாகவும், ஒருவருக்கு அவசியமானதாகப்படுவது மற்றவருக்கு அநாவசியம் என்றும் தோன்றிய விஷயங்கள் உண்டு. என்ன ஆனாலும், திட்டமிடுதலும் சேமிப்போம் இல்லாமல் போனால் நாம் காலி ஆகிவிடுவோம் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அந்தப் புரிந்துணர்வுதான், 10 ஆண்டுகளுக்குள் இதுதான் நமது ஃபைனான்ஷியல் கோல் என்று எங்களுக்கு நாங்கள் வைத்திருந்த இலக்கில் 75%-ஐ எட்ட உதவியது'' எனச் சொல்லி முடித்தனர்.

#HerMoney
#HerMoney

நிதி தொடர்பான இலக்குகள் எதனால் முக்கியம்?

* உங்களின் எதிர்காலம் குறித்த ஓரளவுக்குத் தீர்மானமான திட்டமிடலுக்கு.

* குழந்தைகளின் படிப்பு, எதிர்காலக் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள.

* ஓய்வு காலத்துக்குப் பின் உங்களின் பொருளாதாரத் தேவைகளுக்குப் பிறரை சாராது வாழ.

* உங்களின் பயணம் தொடர்பான கனவுகள், வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிறு சிறு ஆசைகள், சந்தோஷங்கள், `சாகறதுக்குள்ள இதெல்லாம் பார்த்துடணும்' போன்ற விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள.

எப்படிச் செயல்படுத்தலாம்?

* உங்களுக்கான நிதி இலக்குகளை அமைப்பதற்கான முதல் படி, உங்களின் நிதி இலக்குகள் குறித்த பட்டியலைத் தயாரிப்பதுதான். ஒவ்வொரு தம்பதியும் அந்த ஆண்டுக்கான இலக்கு எனப் பட்டியல் ஒன்றை உருவாக்குவது நல்லது. இது நீங்கள் எவற்றை முக்கியமானதாகக் கருதுகிறீர்கள் என்பதை அறிய உதவும். பட்டியலிடும்போது கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்...

* உங்களின் தனிப்பட்ட இலக்கு.

* உங்கள் துணையின் இலக்கு.

* உங்கள் குடும்பத்துக்கான இலக்கு.

உங்களின் தனிப்பட்ட இலக்கையும், உங்கள் துணையின் இலக்கையும், மேலும் உங்­­­­கள் குடும்பத்தின் எதிர்கால நலனையும் கணக்கில்கொண்டு உங்கள் குடும்ப சூழலுக்குப் பொருந்தும்படியான விஷயங்களை நோக்கி உங்கள் பொருளாதாரத் திட்டமிடுதலை அமைத்துக்கொள்வது முக்கியம்.

டார்கெட் என்பது நபருக்கு நபர், குடும்பத்துக்கு குடும்பம் மாறுபடும் .ஒருவேளை 58 - 60 வயதுக்கு முன்பே நீங்கள் ஓய்வுபெற விரும்பலாம். பெரு நகரத்திலிருந்து வெளியேறி, சொந்த ஊரிலேயே வாழ நினைக்கலாம். இப்போது இருக்கும் வாழ்க்கைத் தரத்தைக் கொஞ்சம் அதிகரிக்க முடிவு செய்யலாம். நீங்கள் இப்போது எட்டும் வருவாயை மனதில்கொண்டு எதிர்கால விலைவாசி, பணவீக்க விகிதம் போன்றவற்றையும் கருத்தில் வைத்து, அதற்கு ஏற்றாற்போல் உங்களின் இலக்கை நிர்ணயுங்கள். இலக்கை நிர்ணயிப்பது மிக முக்கியம். ஏனெனில், இதுதான் நீங்கள் போக வேண்டிய பாதையைத் தேர்வு செய்ய உதவும்.

Money
Money

பட்டியலிடுவது ஓகே. பட்டியலிட்ட பின் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று... அதைப் பற்றி உங்கள் துணையுடன் பேசுவது. இது பற்றிப் பேசுவதற்கான பிரத்யேக நேரத்தை ஒதுக்குங்கள். பேசியதுமே சண்டை வருமே என்று சொல்லாதீர்கள். அர்த்தமற்ற விஷயங்களுக்காக வரும் பூசல்களைக் காட்டிலும் நமது குடும்பத்தின் பொருளாதார எதிர்காலம் குறித்த விவாதங்களுக்குச் சண்டை போடுவதில் தவறில்லை. ஆனால், துணை என்ன சொன்னாலும் அதை மறுப்பேன் என்ற முன் தீர்மானத்துடன் பேச அமராதீர்கள்.

இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று நீங்கள் தயாரித்திருந்த பட்டியலில் இருக்கும் விஷயங்களும், உங்கள் துணையின் பட்டியலும் வேறுபடும் பட்சத்தில், உங்கள் துணை முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களின் முக்கியத்துவத்தையும், அதைச் செய்யாவிட்டால் வரும் பாதகத்தையும் ஆராயுங்கள்.

சொல்லுங்கள் தோழிகளே... `பணத்தைப் பற்றிப் பேசினாலே சண்டை வருதே' என இன்னும் எத்தனை நாள்களுக்கு ஒதுங்குவது? வாழ்க்கையில் முன்னேற நிச்சயமாக நாம் செய்ய வேண்டிய ஒன்று... பொருளாதாரத் திட்டமிடலைக் கணவனும் மனைவியுமாகச் செய்வது. அதை நோக்கிய முதல் அடியை எடுத்து வைப்பது நமது கடமை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

இப்போ இல்லாட்டி எப்பவும் இல்ல!