Published:Updated:

`டிஜிட்டல்' தீபிகா, `பட்ஜெட்' நளினி... உங்கள் சம்பளத்தைப் பாதுகாக்க யார் ஃபார்முலா பெஸ்ட்? #HerMoney

#HerMoney
News
#HerMoney

`வாம்மா மின்னல்' என்றதும் சட்டெனத் தோன்றி சடுதியில் மறைந்திடும் என்பது நிஜத்தில் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, சம்பளம் என்ற பெயரில் நம் வங்கிக் கணக்கில் வந்து விழும் பணத்துக்கு வெகுவாகப் பொருந்தும். #Hermoney - 6

Published:Updated:

`டிஜிட்டல்' தீபிகா, `பட்ஜெட்' நளினி... உங்கள் சம்பளத்தைப் பாதுகாக்க யார் ஃபார்முலா பெஸ்ட்? #HerMoney

`வாம்மா மின்னல்' என்றதும் சட்டெனத் தோன்றி சடுதியில் மறைந்திடும் என்பது நிஜத்தில் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, சம்பளம் என்ற பெயரில் நம் வங்கிக் கணக்கில் வந்து விழும் பணத்துக்கு வெகுவாகப் பொருந்தும். #Hermoney - 6

#HerMoney
News
#HerMoney

#Hermoney-ல் இதுவரை எழுதிய அத்தியாயங்களுக்கு இடையிலான சில ஒற்றுமைகளுள் ஒன்று, சினிமாவை மேற்கோளாகக் காட்டி ஒரு விஷயத்தை எழுதுவது என்று நெல்லையைச் சேர்ந்த நண்பர் கோபால் மெசேஜ் அனுப்பி இருந்தார்.

என்னதான் #Hermoney என்ற ஹேஷ்டேக் உடன் எழுதினாலும் இத்தொடரை ஆண்களும் தொடர்ச்சியாக வாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கோபால் சொன்னதைப் போலவே இந்த வார கட்டுரையையும் ஒரு சினிமா உதாரணம் கொண்டே தொடங்கப் போகிறேன்.

20+ ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றளவும் நம்மிடம் பிரபலமாக இருக்கும் ஒரு வசனம்... `மாயி' படத்தின் `வாம்மா மின்னல்'!

`வாம்மா மின்னல்' என்றதும் சட்டெனத் தோன்றி சடுதியில் மறைந்திடும் என்பது நிஜத்தில் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, சம்பளம் என்ற பெயரில் நம் வங்கிக் கணக்கில் வந்து விழும் பணத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.

தினக்கூலி வாங்குவோர் தொடங்கி 5, 6 இலக்கங்களில் சம்பளம் வாங்கும் மாத சம்பளக்காரர்கள் வரையிலும் மின்னல் போல வந்து போகும் பணத்தைப் பற்றி அங்கலாய்க்காதவர்கள் குறைவு என்று துணிந்து சொல்லலாம்.

#HerMoney
#HerMoney

``இதோ இப்போதான் வந்துச்சு… திடீர்னு பார்த்தா வந்த சுவடே தெரியாம அக்கவுன்ட் காத்தாடுது பாஸு.”

``சம்பளம் வந்துச்சே கொஞ்சம் அள்ளலாம்னு நினைச்சு அக்கவுன்ட் பேலன்ஸ் பார்த்தா... அள்ளறதை விடுங்க சிஸ்டர்... கிள்ளுறதுக்குக்கூட அங்க ஒண்ணும் இல்ல.”

இப்படியெல்லாம் சொல்வோர் ஏராளம்.

இன்னும் சிலரோ, ``சம்பளம் எல்லாம் வந்தது சார்... எப்போ, எப்படி, எதுக்கு செலவாச்சுனே தெரியல, ஆனா செலவாகி விட்டது. இதை எப்படி கன்ட்ரோல் பண்ண… தெரியல...“ என்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள்... வந்த வேகத்திலேயே செலவழிந்து விடும் சம்பளப் பணம் என்பது `மாயி' பட மின்னல் மாதிரிதானே?

என் தோழி நளினிக்கு ஒரு வழக்கம் உண்டு. சம்பளம் வந்ததும் அந்த மாத செலவுகளுக்கான பணம் என ஒரு தொகையை மொத்தமாக எடுத்துவிடுவாள். பால், காய்கறி, பேப்பர், கேபிள், பெட்ரோல் போடுவது என எல்லா பரிவர்த்தனைகளும் கரன்சி மாத்திரமே! டிஜிட்டல் இந்தியா கான்செப்ட்டுக்குள் வராத இந்திய பிரஜை அவள்.

வெளியூரில் இருக்கும் வீட்டு ஓனரின் வங்கிக் கணக்குக்கு வாடகை பணம் போடுவதற்கும் ஈ.பி பில் கட்டுவதற்கு மாத்திரமும்தான் அவள் தன் வங்கிக் கணக்கை பயன்படுத்துவாள். இதற்கான காரணம் என்னவென்று கேட்டபோது அவள் சொன்னது, `ஏன் எதுக்குன்னு தெரியாம நான் பாட்டுக்கு கார்டை இஷ்டத்துக்கு தேய்ச்சு தேய்ச்சு விடுவேன். அப்புறம் கணக்கு போட்டு டேலி பண்றதுக்குள்ள மண்டை காய்ந்துவிடும். ஆனா, மொத்தமாக எடுத்துட்டு செலவு பண்ணினா பிரச்னை இல்ல. மாதத் தொடக்கத்தில் எவ்வளவு எடுக்குறேன்னு எனக்குத் தெரியும் இல்ல?

salary
salary

அதோட, இருப்புக் குறைய குறைய அநாவசியமான செலவு பண்றேனோ என்ற கேள்வி எனக்குள் வர ஆரம்பிச்சுடும். அதனால நான் செலவு பண்றது குறைந்துவிடும்” என்றாள்.

இதை அவள் சொல்லும்போது, `அருணாச்சலம்' படத்தில் மூன்று டேபிள்கள் நிறைய கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டிருந்த பணம் குறைந்து குறைந்து ஒரு கட்டத்தில் வெறும் டேபிள்கள் மாத்திரமே இருக்குமே... அந்தக் காட்சிதான் என் கண்ணுக்கு முன் வந்து போனது.

மற்றுமொரு தோழியான தீபிகாவோ இவளுக்கு நேர் எதிர் துருவம். ஆறு ரூபாய்க்கு ஆபீஸ் கேன்டீனில் டீ குடிப்பது தொடங்கி லட்சம் மதிப்பில் ஆபரணங்கள் வாங்குவது வரை பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவை நிறைவேற்ற வந்த பிரதிநிதி போலத்தான் இருப்பாள்.

டிராஃபிக் சிக்னலில் எதிர்ப்படும் பிச்சைக்காரரிடம்கூட, `பேடிஎம் இருக்கா?' எனக் கேட்டு பத்து ரூபாய் அனுப்புவாளோ என நம்மை பதற்றப்படுத்தும் அளவுக்கு டிஜிட்டல் மணியில் டீலிங் செய்பவள்.

அவளின் நுகர்வு கலாசாரமும் பணத்தை செலவழிக்கும் முறையும் முற்றிலும் வேறு. மாதக் கடைசியில் சம்பளம் வந்ததும் (ஆம், பல பன்னாட்டு நிறுவனங்களில் மாதக்கடைசி கையை கடிக்காது. மாத மத்தியில்தான் பிரச்னை. ஏனெனில் சம்பளம் 24 முதல் 30 தேதிகளுக்குள் வந்துவிடும்),

``வாடகை, கரன்ட் பில், கேபிள், இ.எம்.ஐ என எல்லா மாதமும் வரும் ஃபிக்ஸட் செலவுகள் போக மிச்ச பணம் முழுவதையும் மறுநாளே RD, FD, மியூச்சுவல் ஃபண்ட், இன்னும் பிற சேமிப்புகள் என ஆட்டோ டெபிட் ஆகுற மாதிரிதான் நான் செட்டப் பண்ணி இருக்கேன். இது போக மிஞ்சும் பணத்தில் கொஞ்சம் மட்டும் ஒரு கணக்கில் வெச்சுக்கிட்டு மீதியை அப்படியே இன்னொரு கணக்குக்கு அனுப்பிவிடுவேன்.

digital payment
digital payment

அந்தப் பணத்தை மறந்திடுவேன். செலவுக்கெல்லாம் ஒரு அக்கவுன்ட், சேமிப்புக்கு இன்னொரு அக்கவுன்ட். சேமிப்பு அக்கவுன்ட்டோட டெபிட் கார்டு தொடங்கி செக் புக் வரை என்கிட்ட எதுவுமே கிடையாது. என் அம்மாகிட்டதான் இருக்கு. இந்த ஏற்பாட்டை பார்த்தா உனக்கு முட்டாள்தனமா தோணலாம். ஆனா, இது மூலமாதான் நான் என்னோட நுகர்வு கலாசாரத்தை கடிவாளம் போட்டு கன்ட்ரோல் பண்றேன்'' என்கிறாள்.

இரண்டு தோழிகளும் அவர்களின் பணத்தை, செலவினங்களை கையாளும் விதம் வேறு என்றாலும் இருவருக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது... அதைக் கவனித்தீர்களா? ஏதேனும் செய்தாவது பணம் செலவழிப்பதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அது.

அபத்தமாகத் தோன்றினாலும் இதன் பின்னால் இருக்கும் உளவியலை கொஞ்சம் மெனக்கெட்டால் நம்மால் சற்று புரிந்துகொள்ள முடியும்.

நளினி சொன்னது சிறந்ததா, அல்லது டிஜிட்டல் தீபிகாவின் டீலிங்ஸ் சிறந்ததா என்ற கேள்வி எழுகிறதா? நிதி ஆலோசகர்கள் சொல்லும் பெஸ்ட் பிராக்டீஸ்களுடன் இவர்கள் இருவரையும் பொருத்திப் பார்ப்போம்...

- சேமிப்புக்கு எனத் தனியாக வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள்.

- செலவுகளை மடைமாற்றி விட ஒரு கணக்கும், சேமிப்புக்கென தனியாக மற்றொரு கணக்கும் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

- இதைச் சொன்னதும் உடனே, ̀ஒவ்வொரு வங்கியிலும் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிவிட்டு மினிமம் பேலன்ஸ் வேற மெயின்டெய்ன் பண்ணனுமா?' என்ற கேள்வி எழலாம். மக்கள் மனதில் இருக்கும் பொதுவான புத்தி, சேமிப்புக் கணக்கு என்றதும் அது அரசு அல்லது தனியார் வங்கி ஒன்றில்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம். நம்மூரில் இருக்கும் தபால் நிலையங்களில்கூட சேமிப்புக் கணக்கை எவரும் எளிதாகத் தொடங்கலாம்.

 money
money

- மேலே பார்த்த உதாரணங்களில் இருக்கும் டிஜிட்டல் தீபிகாவா நீங்கள்? அப்படி எனில் உங்களின் சிவிவி (CVV) எண் நீங்கலாக உங்களின் கார்டு குறித்த பிற விவரங்களை நீங்கள் எப்போதும் உபயோகப்படுத்தும் செயலிகளில் ஆட்டோ சேவ் செய்ய வேண்டிவரும். இதற்கு, செலவுகளை சமாளிக்கவென தொடங்கிய வங்கி கணக்கை மாத்திரம் உபயோகிப்பது நல்லது.

- இதைச் செய்வதன் மூலம் நம் வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை இன்றைய தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு திருட முடியாதபடியும், நமக்கே தெரியாமல் வேறு வகைகளில் உபயோகிப்பதற்கான வாய்ப்புகளையும் தடுக்கலாம்.

- `சின்னத்தம்பி' படத்தில் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஆறு மணிக்கு மேல வேலை செய்ய மாட்டேன் என கவுண்டமணி சொல்லுவது போல, எடுத்தே தீர வேண்டும் என்ற நிலை வந்தால் ஒழிய சேமிப்புக்கு என ஒதுக்கிய பணத்தில் கை வைக்காதீர்கள்.

- வாடகை/இஎம்ஐ, கரன்ட் பில், மளிகை, காய்கறி, இதர செலவுகள் என ஒவ்வொரு மாதத்துக்கும் ஆகும் செலவினங்களுக்கான பணத்துடன் கொஞ்சம் உபரி பணத்தைத் தவிர மீதி பணம் முழுவதையும் சேமிப்புக்கு எனத் தொடங்கிய கணக்கில் தூக்கிப் போடலாம். கையில் இருந்தால் செலவழித்துவிடும் சாத்தியங்கள் அதிகம்.

- ஆர் டி, எஃப் டி, மியூச்சுவல் ஃபண்டு, அவசர காலத்துக்கான கையிருப்புப் பணம் முதலிய சேமிப்புகளுக்கான பணத்தை சம்பளம் வாங்கிய ஒரு வார காலத்துக்குள் சென்று சேருமாறு பார்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில், கணக்கில் பணம் இருந்தால்தானே இதைச் செய்யலாமா அதைச் செய்யலாமா என்று யோசித்து செலவழிக்க?

- ஒவ்வொரு மாதமும் நமது வருமானத்தில் 30% சேமிப்புக்கென போக வேண்டும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். அந்த 30%ஐ அதிகரிக்க முடியுமா என்று பார்க்க வேண்டுமே தவிர, குறைக்க பார்க்காதீர்கள்.

money
money

- நிலையான மாத சம்பளம் தவிர்த்து உங்களுக்கு கிடைக்கும் போனஸ், பிற இன்சென்டிவ்களில் பாதியை அல்லது பெரும்பகுதியை 3 - 5 வருடங்களுக்கு எடுக்க முடியாதவாறு மியூச்சுவல் ஃபண்டில் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்டில் அல்லது வேறு ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இது எதிர்கால சேமிப்பு குறித்த திட்டமிடுதலுக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும்.

மேற்சொன்னவை எல்லாம், மின்னலாய் மறையும் முன் சம்பளத்தை, வருமானத்தை தகுந்த இடத்துக்கு மாற்றுவதற்கான சில பரிந்துரைகள் மட்டுமே. இவற்றுள் உங்களுக்கு எது பொருந்துமோ அதைத் தெரிவு செய்து சிந்தித்து சேமியுங்கள்.