பவானி ஆன்ட்டி, ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான தன் கணவர் மறைவிற்குப் பின் தனக்கு வரும் பென்ஷனில் வாழ்பவர். மகள் சுஜாவின் பிரசவத்திற்காக பெங்களூரு வந்திருந்தவர் சொன்ன வார்த்தைகள் இவை...
``1995-ல இவ பிறந்தபோது பிரசவத்துக்கு ஆனது வெறும் 600 ரூபாய்தான். ஆனா இப்போ அதெல்லாம் நினைச்சுக்கூட பார்க்க முடியுமானு வந்தேன். பிரசவ வார்டுக்கு சுஜாவை கூட்டிட்டு போன போதிருந்த பதட்டம்போல், அவ டிஸ்சார்ஜ் ஆகறதுக்கு முன்னாடியும் நான் பதட்டப் பட்டேன்.
ஏன்னா, அவளை சேர்த்திருந்த ஆஸ்பத்திரி 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரியான தரத்துடன் இருந்தது. தரத்திற்கு ஏற்றாற்போல தட்சணையும் இருக்கும் தானேன்னு உள்ளூர ஒரு பயம் இருந்துட்டேயிருந்தது. ஆனா அவளோட ஆபீஸில் இருந்த கேஷ்லெஸ் மெடிக்ளைம் பாலிசியில், செலவு போக 300 ரூபாய் மாத்திரமே கட்ட வேண்டியிருந்தது. என் பிரசவத்துக்கான செலவைவிட இது கம்மி'' என்றார் ஆச்சர்யம் விலகாமல்! சுஜாவின் பிரசவ காலத்தில் அவளின் சேமிப்பிற்கு ரட்சகனாயிருந்தது அலுவலகத்தில் கொடுக்கப்பட்டிருந்த மெடிக்ளைம் பாலிசிதான்.

வீட்டுச் செலவுகள், சேமிப்பு, குழந்தைகளின் கல்விக்கு அடுத்தபடியாக நம் வருமானத்தின் பெரும் பகுதியை நாம் செலவழிப்பது மருத்துவத்திற்குத்தான் என்கிறது ஓர் ஆய்வு. `திடீர் திடீரென வருதாம்' என சந்திரமுகி படத்தில் வடிவேலு சொல்லும் வசனம், எதிர்பாரா மருத்துவ செலவுக்கு வெகுவாகப் பொருந்தும்.
வருமுன் காப்பதே சிறந்தது என நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் அதே நேரத்தில், எதிர்பாராமல் வரும் மருத்துவச் செலவுகள் நம் நிதி நிலையை புரட்டிப் போடாமல் இருக்க நம்மிடம் எப்போதுமே மருத்துவக் காப்பீட்டு பாலிசி இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் மருத்துவ காப்பீடு மட்டும்தான் ஒருவரின் எதிர்பாராத மருத்துவமனை செலவுகள், சிகிச்சை செலவுகளுக்குப் பொறுப்பேற்கிறது.
வீடு, அலுவலகம், தன்னைச் சார்ந்தோர் நலன் என்ற பெயரில் SELF CARE எனும் தன்னலம் பேணுவதை பெண்கள் மறந்து விடுகிறார்கள். பெரும்பாலான இல்லத்தரசிகள் தங்கள் கணவரது அலுவலகத்தில் கொடுக்கும் மருத்துவ காப்பீட்டு பாலிசிகளின் மூலமாகத்தான் சிகிச்சை பெறுகின்றனர். இச்சூழலில் கணவர் திடீரென வேலை இழந்தாலோ, எதிர்பாராத விதத்தில் இறந்தாலோ மனைவி மருத்துவ காப்பீடு வசதியை இழக்க நேரிடும். இதே விதி, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணிற்கும் பொருந்தும்.
கூடவே, அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டை மாத்திரம் உபயோகிக்கும்போது வேலை மாறும்போது அக்காப்பீட்டின் மூலம் பல சமயங்களில் முழுமையாக பயன்பெற முடியாது. இதுபோன்ற சூழலை சமாளிக்கப் பெண்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனத் தனியாக ஒரு மருத்துவக் காப்பீடு எடுப்பது மிகவும் முக்கியம்.

மருத்துவ காப்பீடு... சில விளக்கங்கள்!
காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்தவருக்கும் இடையிலான ஒப்பந்தமே இது. காப்பீடு செய்யப்பட்ட நபர் காப்பீடு செய்யும் தொகைக்கு ஏற்றார்போல் ப்ரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். அந்நபர் செலுத்தும் ப்ரீமியம் தொகைக்கு ஏற்றார்போல காப்பீட்டு நிறுவனம், பணியாளர் மற்றும் பாலிசியில் இணைந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு உண்டான பணத்தை கொடுப்பதுதான் மருத்துவக் காப்பீடு.
ஆயுள் காப்பீடு என்பது எப்படி ஒரு குடும்பத்தின் வருவாய் ஈட்டும் நபரின் இழப்பினால் ஏற்படும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை சமாளிக்க ஓரளவிற்கு உதவுமோ, மருத்துவ காப்பீடு என்பது எதிர்பாராத சமயத்தில் நேரும் பெரும் மருத்துவ செலவுகளில் இருந்து நம்மையும் நம் சேமிப்பையும் பாதுகாத்திட உதவும்.
மருத்துவக் காப்பீட்டின் அவசியம் என்ன?
சூழலியல் மாற்றம், வாழ்க்கை தரத்தில் மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சிகள் உடன் போட்டி போடும் புதுவகை நோய்கள் போன்ற பல காரணங்களால் நோய்கள் நம்மை வீழ்த்தும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். இந்நிலையில் எதிர்பாராமல் வரும் மருத்துவச் செலவுகள் நம் சேமிப்பை மட்டுமல்ல, நம் மன நிம்மதியையும் வெகுவாக அசைத்துப் பார்க்கும். நோயினால் உண்டாகும் உடல் உபாதைகளுடன் மருத்துவச் செலவுகள் பற்றிய மனக் கவலைகளும் சேர்ந்து கொள்வது கொடுமையிலும் கொடுமை. நாம் எடுக்கும் மெடிக்ளைம் எனப்படும் மருத்துவ காப்பீடு அவசர மருத்துவ செலவினங்களை சமாளிக்கும் நம்பிக்கையை நமக்குத் தரும்.

மருத்துவ காப்பீடு பற்றி எழுதும்போது தோழி செல்வியின் வாழ்வில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை எழுதாமல் கடக்க முடியாது.
செல்வி, இல்லத்தரசி. அளவான குடும்பம். சுயதொழில் செய்யும் கணவர், ஓரளவிற்கான சேமிப்பு என்றிருந்த நிலையில் அவளின் மாமனாருக்கு வந்த மாரடைப்பும் அதன் தொடர்ச்சியாக அவருக்குச் வேண்டிய ஆஞ்சியோ பிளாஸ்டியும் அவர்களின் மனநிலை மற்றும் நிதி நிலையை நிலை குலையச் செய்தன.
ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மற்றும் அதற்குப் பின்பான மருத்துவச் செலவுக்காக அவர்கள் செலவழித்த தொகை ஏறக்குறைய ஒன்பது லட்சம். கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும்பாடுபட்டு சேர்த்ததில் முக்கால்வாசி பணத்தை கரைய வைத்தது மாமனாருக்கு வந்த இதய நோய். இதுவே மொத்த குடும்பத்திற்கும் குறைந்தபட்சமாக ஒரு மருத்துவ காப்பீட்டு ஒன்றை செல்வியோ அவளின் கணவரோ எடுத்திருக்கும் பட்சத்தில், மருத்துவச் செலவில் பாதியையாவது அவர்கள் மருத்துவ காப்பீடு மூலமாகப் பெற்றிருக்கலாம்.
இப்போது சொல்லுங்கள். இம்மாதிரியான சூழ்நிலையைத் தவிர்க்க நாம் குறைந்தபட்சம் ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வைத்திருப்பது அவசியமா இல்லையா?
காதலர் தினம் படத்தில் நடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தவர் சொன்னது... ``மெடிக்ளைம் பாலிசி இருப்பது மிக முக்கியம். ஏனெனில் கேன்சர் சிகிச்சைக்கான செலவு மிக அதிகம்”.
காப்பீடு எடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:
- காப்பீடு எடுக்கப்போகும் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் (CSR – Claim settlement Ration) என்று சொல்லப்படும் பாலிசிதாரர்களுக்கு தரப்படும் செட்டில்மெனட் விகிதம் எந்த நிறுவனத்தில் அதிகமாக உள்ளது என்பதை பார்த்து அதனடிப்படையில் முடிவெடுங்கள். இது பற்றிய விவரங்களை ஒவ்வொரு நிறுவனத்தின் இணையதளம் அல்லது ஐ.ஆர்.டி.ஏ.ஐ இணைய தளத்தில் பார்க்கலாம்.
- காப்பீட்டு நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் நெட்வொர்க் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும். மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதா என்பதும் அம்மருத்துவமனைகளின் தரம் மற்றும் மருத்துவ கட்டணங்கள் குறித்த செய்திகளை கவனத்தில் கொள்வதும் முக்கியம்.

- பணமில்லா சிகிச்சை / கேஷ்லெஸ் ட்ரீட்மென்ட்டிற்குண்டான பிரத்யேக விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா என்பதை தொடக்கத்திலேயே பார்ப்பது அவசியம். கேஷ்லெஸ் இல்லை எனும் பட்சத்தில் நாம் நம் கையிலிருந்து கட்டிய பணத்தை திரும்பப் பெறுவதற்கான காத்திருப்பு காலம் என்னவென்று என்ன என்பதையறிவது அவசியம்.
- எந்த நோய்களுக்கு எல்லாம் காப்பீடு கிடையாது, இவற்றிற்கெல்லாம் உண்டு என்று பட்டியலைத் தீர ஆராய வேண்டியது மிக முக்கியம். அத்துடன் குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சையின் உச்சவரம்பு ஏதேனும் இருக்கிறதா என்றறிவதும் முக்கியம்.
- காப்பீடு எடுத்ததும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் எவ்வித சிகிச்சை செலவுகளையும் கிளெய்ம் செய்ய முடியாதபடி வெயிட்டிங் பீரியட் என்று என ஒன்று இருக்கும். எந்த நிறுவனத்தின் பாலிசியில் இந்த காத்திருப்பு காலம் குறைவாக உள்ளதோ அந்த பாலிசியைத் தேர்வு செய்யலாம்.
- ஏற்கனவே இருக்கும் உடல் நோய்களுக்கான (Pre-existing disease) சிகிச்சையும் இக்காப்பீட்டில் அடங்குமா? ஆமெனில் அந்நோய்களுக்கான மருத்துவ செலவுகள் தொடர்பான காத்திருப்பு காலம் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது முக்கியம்.
- தொடர்ச்சியாக வருடம்தோறும் தவறாமல் பிரீமியம் செலுத்திய பின்னும் காப்பீடு என எந்தத் தொகையையும் க்ளையம் செய்யாத பட்சத்தில் நோ கிளைம் போனஸ் (NO CLAIM BONUS) என ஒன்றை பல காப்பீட்டு நிறுவனங்கள் தருகின்றன. அந்த நோ கிளெய்ம் போனஸ் உண்டா என்பதை அறிந்து கொள்வது நல்லது.
- நீங்கள் தேர்வு செய்து இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் சரி வராத பட்சத்தில் அதில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு பாலிசியை மாற்றிக் கொள்ளும் போர்டபிலிட்டி வசதி உள்ளதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

- போலவே ஏற்கனவே உள்ள நோய்களை மறைக்காமல் சொல்ல வேண்டும். இல்லை எனில் சிகிச்சையின் போது அந்நோய் பற்றி தெரிய வந்தால் பணத்தை கிளெய்ம் செய்யும்போது பிரச்சனை உண்டாவதுடன் நாம் எதிர்பார்த்தபடி சிகிச்சைக்கான செலவுகளை காப்பீட்டு நிறுவனம் ஏற்க மறுக்கலாம்.
- பெருநகரங்களில் இருக்கும் மருத்துவச் செலவுக்கும் Tier 2 & Tier 3 எனப்படும் சிறு நகரங்களில் ஆகும் மருத்துவச் செலவிற்க்கும் வித்தியாசம் உண்டு. நீங்கள் வசிக்கும் ஊருக்கு அல்லது நகரத்தில் ஆகும் சராசரி மருத்துவச் செலவின கணக்கிட்டு அதற்கு ஏற்ற தொகைக்கு பாலிசி எடுக்கலாம்.
- கணவன், மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் மற்றும் குழந்தைகள் என்று இருக்கும் பட்சத்தில் 5 முதல் 10 லட்சங்கள் வரையிலும் ஃபேமிலி ஃப்ளோட்டர் (family floater) பாலிசி எடுப்பது நல்லது.
- அம்மா-அப்பா மற்றும் உங்களின் மூதாதையர்களுக்கு குறிப்பிட்ட நோய்த்தொற்று இருந்து வருவதை அறியும் பட்சத்தில் அந்நோய்தொற்று தொடர்பான சிகிச்சை செலவுகள் உள்ளடங்கும் விதமாக பாலிசியை எடுப்பது மிகவும் அவசியம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இன்றைய சூழலில் நோயற்ற வாழ்வு சாத்தியமா எனத் தெரியாது ஆனால் மருத்துவ காப்பீடு எடுப்பதன் மூலம் நாம் சிறுகச் சேர்த்த செல்வம் முற்றிலும் குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். நம் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அதற்குத் தகுந்த தகுந்த படியான மெடிக்ளைம் பாலிசிகளை எடுப்போம். பயன் பெறுவோம்.