Published:Updated:

சித்ரா மாதிரி நீங்களும் ஸ்மார்ட்டா கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம் தோழிகளே... எப்படி? #HerMoney

#HerMoney
News
#HerMoney

கிரெடிட் கார்டு என்பது நண்பனா, பகைவனா? அதை வைத்துக்கொள்ளலாமா கூடாதா? இப்படி எழும் பல கேள்விகள் குறித்த ஓர் அலசல்.

Published:Updated:

சித்ரா மாதிரி நீங்களும் ஸ்மார்ட்டா கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம் தோழிகளே... எப்படி? #HerMoney

கிரெடிட் கார்டு என்பது நண்பனா, பகைவனா? அதை வைத்துக்கொள்ளலாமா கூடாதா? இப்படி எழும் பல கேள்விகள் குறித்த ஓர் அலசல்.

#HerMoney
News
#HerMoney

`கடன் அன்பை முறிக்கும்' என்ற தமிழரின் மனநிலையைப் புரட்டிப்போடச் செய்ததில் கடன் அட்டைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. முன்பெல்லாம், `இங்கு கடன் கொடுக்கப்படாது', `கடன் சொல்லாதே', `கடன் அன்பை முறிக்கும்' போன்ற போர்டுகளை பெரும்பான்மையான கடைகளில் பார்த்திருப்போம்.

2004 - 2005-ம் ஆண்டுக்குப் பிறகு, கடன் அன்பை முறிக்கும் போர்டுகள் மறையத் தொடங்கி, `இங்கு கடன் அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படும்' போர்டுகள் பரவலாக வரத்தொடங்கியது எனலாம். ஒரு காலத்தில், `இவரின் வருமானம் என்ன? இவருக்கு இருக்கும் பிற கடன்கள் என்ன?' என, பெண்ணுக்கு வரனைத் தேர்ந்தெடுப்பதுபோல தகுதிகள் பார்த்து கொடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு, இப்போது ஏதேனும் ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கிய உடனேயே இலவச இணைப்பாக நமக்குக் கிடைக்கிறது.

#HerMoney
#HerMoney

தொடக்கத்தில் கடன் அட்டைகள் என்பவை மக்களின் அந்தஸ்தைக் காட்டும் சின்னமாக இருந்தன. கடன் அட்டை@கிரெடிட் கார்டு என்பது உயர் மத்தியதர மற்றும் பணக்காரர்களுக்கானதாக மட்டுமே இருந்த காலம் அது. அதாவது, இன்றுபோல அன்று அது எல்லோருக்குமானதாக இருக்கவில்லை.

`பிரைம் கஸ்டமர்' எனப்பட்ட, கடன் வாங்கத் தகுதி இருப்பதாக வங்கிகளால் கருதப்பட்ட பொருளாதார அடுக்கில் இருந்த குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினருக்கு மாத்திரமே கொடுக்கப்பட்ட கடன் அட்டை, 2004 - 2005-ம் ஆண்டுக்குப் பிறகு, மாத சம்பளக்காரர்கள் கையிலும் தவழத் தொடங்கியது. இன்றோ கிரெடிட் கார்டு என்பது பெரும்பான்மையான மக்களின் வாழ்வில் ஓர் அங்கம்.

`எந்தக் கடனும் இல்லாத மாப்பிள்ளைக்குத்தான் என் மகளைக் கட்டிக் கொடுப்பேன்' என்ற காலம் மலையேறி , `மாப்பிள்ளை அமெக்ஸ் கிரெடிட் கார்டு வச்சிருக்காருல..?' எனப் பூரிக்க ஆரம்பித்தனர் பெற்றோர்கள்.

`கிரெடிட் கார்டின் மூலம் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் இளைஞர் தற்கொலை முயற்சி' என்ற செய்தி பீதியைக் கிளப்பும் அதே நேரத்தில், `கிரெடிட் கார்டு மூலமாக கேஷ்பேக் ஆஃபர்ல வாங்கினேன். அதனால 4,300 மிச்சம்' எனச் சிரித்தபடி சக்சஸ் ஸ்டோரி சொல்லும் நபர்களையும் பார்க்கிறோம். இதில் எது உண்மை? கிரெடிட் கார்டு என்பது நண்பனா, பகைவனா? அதை வைத்துக்கொள்ளலாமா கூடாதா? இப்படி எழும் பல கேள்விகள் குறித்த ஓர் அலசல்.

#HerMoney
#HerMoney

கடன் அட்டை - அடிப்படை விளக்கம்

டெபிட் கார்டுக்கும் கிரெடிட் கார்டுக்குமான முக்கியமான வித்தியாசம் - உங்களின் சேமிப்புக் கணக்கில் பணத்தைப் போட்டுவிட்டு உங்களுக்குத் தேவைப்படும்போது அதை கார்டை வைத்து செலவு செய்ய முடிவது டெபிட் கார்டு; அக்கவுன்டில் பணம் எதுவும் இல்லை, ஆனாலும் வங்கி வழங்கியிருக்கும் கார்டைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட தொகையை எடுக்கவும், குறிப்பிட்ட அளவுக்கு அந்த கார்டைப் பயன்படுத்திப் பொருள்களை வாங்கவும் முடிகிற வசதியைக் கொடுப்பதுதான் கிரெடிட் கார்டு.

கொரோனா காலத்தில் மக்கள் கிரெடிட் கார்டு உபயோகப்படுத்துவது 35% அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மற்றொருபுறம், ஆண்கள் அளவுக்குப் பெண்கள் கிரெடிட் கார்டுகளை உபயோகிக்கிறார்களா என்றால்... இல்லை. கிரெடிட் கார்டை உபயோகப்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாகவே இருக்கிறது.

இல்லத்தரசிகள் தொடங்கி வேலைக்குப் போகும் பெண்கள் வரையிலும், `நமக்கு இதெல்லாம் சரி வராதுப்பா' என்று ஒதுங்கும் ஒரு விஷயமாகவே கிரெடிட் கார்டு இன்றுவரை இருப்பதற்கான காரணம் என்ன?

1. கிரெடிட் கார்டைப் பற்றிய அச்சமும் புரிந்துணர்வு இன்மையும்.

2. கடன் வாங்காமல் கௌரவமாக வாழ வேண்டும் என்ற பெண்களுக்கே உண்டான பாதுகாப்பு மனநிலை.

சரி… யாரெல்லாம் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தலாம்.

- வரவுக்கு மீறி செலவு செய்யாத பெண்ணா நீங்கள்?

- ஆசைக்கும் தேவைக்குமான வித்தியாசத்தை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நுகர்வு கலாசாரத்தைக் கடிவாளம் போட்டு கையாளத் தெரிந்த தோழியா நீங்கள்?

- வங்கிக்குக் கட்ட வேண்டிய தவணைகள், வீட்டின் இன்ன பிற செலவுகளுடன் தொடர்புடைய தவணைகள் என எல்லாவற்றையும் குறிப்பிட்ட தேதிக்குள் தவறாமல் கட்டும் பழக்கம் உடையவரா?

- உங்களுக்கு உங்களின் வருமானத்தைத் திட்டமிட்டு செலவு செய்யும் சாமர்த்தியமும் ஒழுங்கும் இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு உங்களின் பதில் ஆம் எனில், நீங்கள் தாராளமாக கிரெடிட் கார்டை உபயோகிக்கலாம் தோழிகளே!

கிரெடிட் கார்டு பற்றிய பிற தகவல்களைப் பார்ப்பதற்கு முன், அது தொடர்பான சில சொற்களை முதலில் பழகுவோமா?

#HerMoney
#HerMoney

கிரெடிட் லிமிட்

ஒருவருக்கு கிரெடிட் கார்டு மூலமாக வாங்கும் திறன் எவ்வளவு என்ற உச்சவரம்புதான், கிரெடிட் லிமிட் எனப்படுகிறது. உங்களின் வயது, மாத வருமானம், ஏற்கெனவே இருக்கும் கடன்கள், கட்டும் EMI மற்றும் உங்களின் கிரெடிட் ஸ்கோர் ஆகியவை உங்களுக்கான கிரெடிட் லிமிட்டை நிர்ணயிக்கும் காரணிகள்.

பில்லிங் டேட்

உங்களின் கடந்தகால பரிவர்த்தனைகள் அனைத்தையும் பட்டியலிட்டு நீங்கள் கட்ட வேண்டிய தொகை இத்தனை என்பதற்கான பில் தயாராகும் நாள்.

பேமென்ட் டியூ டேட்

பில்லில் குறிப்பிடப்பட்ட உங்களின் கடந்தகால பரிவர்த்தனைகளுக்கான பணத்தை நீங்கள் கட்ட வேண்டிய நாள்.

அவ்வளவுதான்! கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சியில் பிரதானமாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகளை கற்றுக் கொண்டாயிற்று. இனி கிரெடிட் கார்டின் பில்லிங் சுழற்சியைப் பற்றியும், அதைக் கணக்கிடும் முறையைப் பற்றியும் பார்க்கலாம்.

உதாரணமாக, உங்களின் கிரெடிட் கார்டுக்கான பில் ஜெனரேஷன் தேதி ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எனில், அதே மாதத்தில் 19-ம் தேதி அல்லது 20-ம் தேதி நிலுவைத் தொகையை கட்ட வேண்டியிருக்கும். அதே நேரம், அந்த மாதத்தின் 2-ம் தேதியிலிருந்து நீங்கள் கார்டின் மூலம் வாங்கும் பொருள்களுக்கான பில்லானது, அடுத்த மாதம் 1-ம் தேதி அன்று அன்றுதான் உங்களிடம் இருந்து வர வேண்டிய பற்றுத் தொகையாகக் கணக்கிடப்படும்.

மேலும், பில்லுக்கான தொகையை செலுத்த வேண்டிய கெடு, அடுத்த மாதம் 20-ம் தேதி ஆக இருக்கும். அதாவது, நீங்கள் கார்டை உபயோகித்த 48 நாள்கள் கழித்துதான் நீங்கள் வாங்கிய பொருளிற்கான பணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் கால அவகாசம் 48 நாட்கள் (நிறுவனங்களைப் பொறுத்து ஓரிரு நாள்கள் மாறுபடுமே தவிர, பெரிய அளவில் மாற்றம் இல்லை). இந்த 48 நாள்களுக்குள் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டி எதுவும் கிடையாது.

working women/ Representational Image
working women/ Representational Image
Photo Courtesy: Pixabay

வரவுக்குள் செலவழிப்பதில் சுய ஒழுங்குடன் இருக்கும் பலருக்கும், இந்த 48 நாள்கள் என்பது நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்தான் தோழிகளே. கிரெடிட் கார்டை உபயோகிக்கும் அல்லது உபயோகிக்க விரும்பும் பெண்கள் கருத்தில்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்... இந்த பில்லிங் சுழற்சிதான். பில்லிங் தேதி நபருக்கு நபர், வங்கிக்கு வங்கி மாறுபடும். உங்களுக்கு உங்களின் வங்கி கொடுத்திருக்கும் பில்லிங் தேதியை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் உங்களின் செலவினங்களை கிரெடிட் கார்டின் மூலம் திட்டமிட்டு செய்யும்பட்சத்தில், `பில்லிங் சூனியம்' வைத்துக் கொள்வதிலிருந்து நிச்சயம் தப்பிக்கலாம். இதை இன்னும் எளிமையாக விளக்க சித்ராவை அறிமுகப் படுத்துகிறேன்.

சித்ரா... தனியார் நிறுவனமொன்றின் மாத சம்பளதாரர். சென்னையில் வசிக்கும் நடுத்தர வர்க்க குடும்பம். 2020-ல் லாக்டௌன் தொடங்கிய இரண்டாவது மாதம் முதல் அவள் வேலை பார்த்த நிறுவனம் சம்பளக் குறைப்பை அமல்படுத்தியது. 20% வருமான குறைப்பு, அவளது குடும்பத்தின் பட்ஜெட்டை பெருமளவு பாதித்தது. ஆனால், சித்ராவின் சமயோசிதமும், செலவினங்களைக் கையாள்வதில் இருந்த ஒழுங்கும், கூடவே அவளது கிரெடிட் கார்டும் துண்டு விழுந்த பட்ஜெட்டை சரிசெய்ய அவளுக்குக் கைகொடுத்தன.

எப்படி ?

அவளது பில்லிங் டேட் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி. பில்லில் வந்த தொகையை செலுத்த வேண்டிய கெடு ஒவ்வொரு மாதமும் 26-ம் தேதி. ஜூன் மாதத்துக்கான மளிகைப் பொருள்களை ஆன்லைனில் ஜூன் மாதம் 8-ம் தேதி வாங்கினார். அவரின் கணக்கில் இருந்த பணத்தின் இருப்பில் பைசாகூட குறையவில்லை. மாறாக, அடுத்த பில்லிங் சைக்கிளில்தான், அதாவது ஜூலை மாதம் 7-ம் தேதியன்றுதான், ஜூன் 8-ம் தேதி சித்ரா வாங்கிய மளிகை சாமான்களுக்கான தொகை பில் செய்யப்பட்டது. மேலும் அவர் அந்த பில்லுக்கான கட்டணத்தை செலுத்தியதும் ஜூலை மாதம் 26-ம் தேதி!

#HerMoney
#HerMoney

யோசித்துப்பாருங்கள்... ஏறக்குறைய 48 நாள்களுக்குப் பின்புதான், எவ்வித வட்டியும் இல்லாமல் சித்ரா தான் வாங்கிய மளிகை சாமானிற்கான அசலான பணத்தைக் கொடுத்தார்.

இப்போது சொல்லுங்கள் தோழிகளே...

பக்கா திட்டமிடலுடன் குடும்பத்தையும் அதன் நிதி நிர்வாகத்தையும் ஒழுங்குடன் திறம்பட கையாளும் சாமர்த்தியம் உள்ள பெண்களால் கடன் அட்டைகளை சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதில் சந்தேகம் இல்லைதானே?!