Published:Updated:

NRI-கள் வங்கிக்கணக்குகளை பயன்படுத்துறதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா? #HerMoney

#HerMoney
News
#HerMoney

`ஒருவர் வெளிநாடு போவதை வங்கிக்கு எதுக்குச் சொல்லணும்? சொல்லாட்டாதான் என்ன?' எனக் கேட்கத் தோன்றுகிறதா தோழிகளே? இதில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

Published:Updated:

NRI-கள் வங்கிக்கணக்குகளை பயன்படுத்துறதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா? #HerMoney

`ஒருவர் வெளிநாடு போவதை வங்கிக்கு எதுக்குச் சொல்லணும்? சொல்லாட்டாதான் என்ன?' எனக் கேட்கத் தோன்றுகிறதா தோழிகளே? இதில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

#HerMoney
News
#HerMoney

கூடிய விரைவில் வேலைக்காக அயர்லாந்துக்குச் செல்லும் தோழியிடம் இருந்து அழைப்பு. `இங்கிருக்கும் தனது வங்கிக் கணக்குகளை மூட வேண்டுமா? அல்லது வெளிநாட்டில் இருந்தபடியே அவற்றை இயக்க முடியுமா? இங்கு இந்தியாவில் வாழும் குடும்பத்துக்கு எப்படி பணம் அனுப்ப? மற்றும் வருவாயை எப்படி முதலீடு செய்ய? இப்படி பல கேள்விகளை அடுக்கினாள் அந்த வருங்கால என்.ஆர்.ஐ (NRI).

``நான் அங்க சம்பாதிக்கிறதை இங்கே அனுப்புவதற்கு, முதலீடு செய்வதற்கு என்னென்ன விதிமுறைகள்? அது சுலபமா, இல்ல பிரச்னைகள் ஏதேனும் வருமா?” என்றபோது சூப்பர் ஸ்டாரின் `சிவாஜி' படத்தில், ``இந்தியாவுக்கு உள்ள பணத்தைக் கொண்டு வந்ததற்கு RBI கிளியரன்ஸ் வாங்கிட்டீங்களா?” எனக் கேட்கும் காட்சி மனக்கண்ணில் வந்து போனது. உடனடியாக அவள் செய்ய வேண்டியவை எவை என எதிர்கால NRI-க்கு விளக்கிய விஷயங்களை இங்கேயும் சொல்கிறேன் தோழிகளே!

#HerMoney
#HerMoney

நண்பர் மணி, திறமையும் உழைப்பும் கலந்த மனிதர். தொடர் முயற்சியால் ஜெர்மனியில் வேலை கிடைத்தது. வயதான அம்மா, அப்பா எனக் குடும்பத்தை இங்கேயே விட்டுவிட்டு, அம்மா செய்து கொடுத்த பொடிகள் மற்றும் ஊறுகாய் சகிதமாக ஜெர்மனிக்குச் சென்றார். வேலையில் சேர்ந்து சில மாதங்கள் கழித்து சொந்த வீடு வாங்கும் கனவும் வர, வீட்டுக்கடன் குறித்து விசாரிக்க தன் தந்தையை இங்கிருக்கும் வங்கி ஒன்றுக்கு அனுப்பினார். அதுதான் மணி தனது ஃபிக்ஸட் டெபாசிட் (FD), ரெக்கரிங் டெபாசிட் (RD), சேவிங்ஸ் அக்கவுன்ட் என அவர் தனது பலவகையான சேமிப்புகளையும் வைத்திருந்த வங்கி.

வீட்டு லோன் பற்றி விசாரிக்க வங்கியை அணுகியவர்களுக்குக் கிடைத்தது பேரதிர்ச்சி. மணி தனது என்.ஆர்.ஐ ஸ்டேட்டஸை, அதாவது வெளிநாட்டில் வேலை கிடைத்து இந்தியாவை விட்டுப் போனதை பற்றிய விவரங்களை வங்கிக்குத் தெரிவிக்கவில்லை என்பதை அறிந்துகொண்டார் அவரின் தந்தை.

`இதென்ன வெறும் வங்கிக் கணக்குதானே? மாமனா, மச்சானா, அங்காளி, பங்காளியா? அவர் வெளிநாடு போனதை வங்கிக்கு எதுக்குச் சொல்லணும்? சொல்லாட்டாதான் என்ன?' எனக் கேட்கத் தோன்றுகிறதா தோழிகளே? இதில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

ரெசிடென்ட் இந்தியனாக இந்தியாவில் வசிக்கும் இந்தியர், தான் NRI ஆனதை அல்லது ஆகப்போவதை அவர் கணக்கு வைத்திருக்கும், பணப் பரிவர்த்தனைகள் செய்யும் வங்கிக்கு நிச்சயம் சொல்ல வேண்டும். `சரிப்பா இந்த விவரமெல்லாம் தெரியாது. நாங்க அப்போ சொல்லல. அதான் இப்போ சொல்லிட்டோமே' எனத் தப்பிக்க முடியாதபடி விதிமுறைகள் நம்மூரில் உள்ளன. ரெசிடென்ட் இந்தியனாக இருந்து, தான் தொடங்கிய வங்கிக் கணக்கை கணக்கு வைத்திருப்பவர் இல்லாதபோது அவரின் குடும்பத்தினர் பயன்படுத்துவதற்கு பவர் ஆஃப் அட்டார்னி எனப்படும் POA இருக்கும் பட்சத்திலும், ஒருவேளை அது பெற்றோர், உடன்பிறந்தோர், வாழ்க்கைத் துணையுடனான ஜாயின்ட் அக்கவுன்ட்டாக இருக்கும் பட்சத்திலும் பிரச்னையில்லை. அப்படி இல்லாவிடில் அவர்கள் சந்திக்கப்போவது நூடுல்ஸ் போன்ற சிக்கல்களை. மணிக்கும் அவை அனைத்தும் நடந்தன.

FEMA (Foreign Exchange Management Act) எனப்படும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளுக்குப் புறம்பாக வங்கிக் கணக்கை பயன்படுத்தியதாகச் சொல்லி மணியின் குடும்பத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஏனெனில், மணி இல்லாத சமயத்தில் அவரது தனிநபர் சேமிப்புக் கணக்கை பெற்றோர் தங்களின் சில பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தினர். என்.ஆர்.ஐ ஆனதைப் பற்றி வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை பற்றி தாங்கள் அறியாதததையும், அத்தனை வருடங்களாக அவர்கள் அவ்வங்கி உடன் செய்த பெரும் பரிவர்த்தனைகள் பற்றியும் எடுத்துச் சொல்லி, கூடவே சட்ட வல்லுநரின் உதவியுடன் அபராதத் தொகையை குறைப்பதற்குள் மணியின் பெற்றோர் அனுபவித்த மன உளைச்சல்களும் எதிர்கொண்ட சட்ட சிக்கல்களும் ஏராளம்.

#HerMoney
#HerMoney

மணி செய்த தவறுதான் என்ன? ஜெர்மனிக்கு செல்வதால் தான் NRI ஆகப்போவதை/ஆனதைப் பற்றிய தகவலை வங்கிக்குச் சொல்லாதது மட்டுமே அறியாமையால் மணி செய்த தவறு. அதை அவர் சொல்லியிருந்திருக்கும் பட்சத்தில் RR எனப்படும் ரெகுலர் ரெசிடென்ட் (Regular resident) அக்கவுன்ட் ஆக இருக்கும் அவரின் வங்கிக் கணக்குகளை சம்பந்தப்பட்ட வங்கியே NRO அல்லது NRE அக்கவுன்ட் ஆக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் மாற்றும் வழிமுறைகளையும் அவருக்கு விளக்கியிருக்கும். அவரும் ஆலோசனைகளை பின்பற்றி குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளை தொடங்கியிருக்கலாம்.

அல்லது தனது கணக்குகளை க்ளோஸ் செய்துவிட்டு அவ்வங்கி உடனான தொடர்பை துண்டித்து இருக்கலாம். ஆனால், அவருக்கு நடந்ததோ வேறு. தமிழ் சினிமா மற்றும் உலகமயமாக்கலின் உபயத்தால் NRI என்ற பதம் பற்றி தெரிந்த அளவுக்கு, NRIகளின் பணப் பரிவர்த்தனைக்கு பெரிதும் பயன்படும் NRE மற்றும் NRO பற்றி நமக்குத் தெரியாதுதான். அதென்ன என்.ஆர்.ஈ (NRE), என்.ஆர்.ஓ (NRO)?

இந்தியாவில் வசிக்கும் இந்தியருக்கு சேமிப்பு, நடப்பு, ஓவர் டிராஃப்ட், ஃபிக்ஸட் டெபாசிட் எனப் பலவகை கணக்குகளை தேவைக்கேற்ப வைத்துக்கொள்ளும் வசதிகள் இருப்பதுபோல, NRI எனப்படும் தாய்நாட்டை விட்டு வேறு நாட்டில் வேலை பார்ப்பவர் களுக்கு அங்கிருந்தபடியே வங்கிக் கணக்கினை இயக்க வழிவகுக்கும் கணக்குகள் NRE மற்றும் NRO. இவை இரண்டுடன் FCNR எனப்படும் கணக்கு இருந்தாலும் பிரதானமாக புழக்கத்தில் இருப்பவை NRE மற்றும் NROதான்.

NRE – NRO... ஒரு எழுத்துதானே வித்தியாசம் என நினைக்கலாம். O - E எழுத்துகள் மட்டுமல்ல, இரண்டு வகை கணக்குகளுக்கு இடையில் பல வித்தியாசங்கள் உண்டு. அவற்றைப் பார்ப்போம்.

Bank
Bank
Photo by Eduardo Soares on Unsplash

NRE (NON RESIDENT EXTERNAL ACCOUNT)

இந்தியாவில் வசிக்காத, அயல்நாட்டில் வசிக்கும் இந்தியப் பிரஜை தனது வெளிநாட்டு வருவாயை இந்தியாவுக்கு அனுப்பவும், சேமிக்கவும், முதலீடு செய்யவும் வழிவகுப்பது NRE கணக்கு.

NRO (NON RESIDENT ORDINARY ACCOUNT)

வெளிநாட்டு வாழ் இந்தியர், தான் வெளிநாட்டில் ஈட்டிய வருவாயையும், இந்தியாவில் தனக்கிருக்கும் சொத்துகள் மற்றும் முதலீடுகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் முதலீடு செய்யவும், சேமிக்கவும் வழிவகுப்பது NRO கணக்கு.

உதாரணமாக, இந்தியரான எங்கள் வீட்டு ஓனர் வேலை நிமித்தமாக வசிப்பது சிங்கப்பூரில். எங்கள் வீட்டுக்கான மாத வாடகையை நாங்கள் செலுத்தும் அவரது வங்கிக் கணக்கு NRO கணக்கு. அதாவது NRI ஒருவர் இந்தியாவில் இருக்கும் தனது முதலீடுகள், தொழில்கள், சொத்துகள் மூலம் ஈட்டும் வருவாயை டெபாசிட் செய்ய வழிவகுப்பது NRO கணக்கு.

இரண்டு கணக்குகளுக்குமான அடிப்படை வித்தியாசம் யாதெனில், இந்தியாவில் அவர் ஈட்டும் வருவாய் + கூடவே அயல்நாட்டு வருவாயை சேமிக்கப் பயன்படும் கணக்கு NRO. அயல்நாட்டில் ஈட்டிய பணத்தை மாத்திரமே சேமிக்கவும், இந்தியாவில் முதலீடு செய்யவும் முடியும் என்றிருப்பது NRE கணக்கு.

NRE சிறப்பு அம்சங்கள்

  • ஒரு NRE கணக்கு மூலம் நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து உங்களின் வருவாயை இங்கு இந்தியாவுக்கு கொண்டுவரவும், முதலீடு செய்யவும் முடியும்.

  • அந்நிய செலவாணியில் டெபாசிட் செய்யப்படும் தொகை அன்றைய தினத்துக்கான எக்ஸ்சேஞ்ச் ரேட் என்னும் அந்நிய செலவாணிக்கு ஈடான இந்திய ரூபாயாக மாற்றப்படுகிறது. எப்படி வெளிநாட்டில் ஈட்டும் வருவாயை இங்கு முதலீடு செய்ய முடிகிறதோ, அதுபோல இந்தியாவிலிருந்து அதே NRE கணக்கின் மூலமாகப் பணத்தை உங்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குக்கும் திருப்பி அனுப்ப முடியும்.

  • கூடவே இக்கணக்கை தனக்கோ அல்லது மற்றொருவருக்கோ கடன்களைப் பெறுவதற்கான செக்யூரிட்டி ஆகவும் பயன்படுத்தலாம்.

இதை தனி நபராகவோ, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட NRIகளுடன் சேர்ந்த ஜாயின்ட் அக்கவுன்ட்டாகவோ இயக்கலாம்.

  • போலவே இந்தியாவில் வசிக்கும் ஒருவரை பவர் ஆஃப் அட்டார்னி மூலம் கணக்கின் பிற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கவும் முடியும்.

 Banking
Banking
  • கணக்கில் முதலீடு செய்யும் பணத்துக்கான அசல் மற்றும் முதலீட்டின் மூலம் ஈட்டிய வருவாய் ஆகியவற்றுக்கு, கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்பதைப்போல, இந்தியாவில் வருமான வரி கட்டத் தேவையில்லை.

  • இத்தனை ப்ளஸ் பாயின்டுகள் இருந்தாலும், NRE கணக்கிலிருக்கும் பணத்தைக் கொண்டு செய்யப்படும் முதலீடுகளுக்கான வட்டி விகிதம் குறைவு.

  • மேலும் அந்நிய செலவாணிகளுக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பை சார்ந்தே NRE கணக்குகள் லாபமானதாகவும் நஷ்டம் ஏற்படுத்துவதாகவும் மாறலாம்.

  • ஃபாரின் கரன்சி எனப்படும் அந்நிய செலவாணியில் மாத்திரமே பணத்தை டெபாசிட் செய்ய முடியும். மேலும் பணத்தை எடுக்கும் பொழுது இந்திய ரூபாயாக மாத்திரமே எடுக்க முடியும்.

NRO சில விளக்கங்கள்...

  • இதிலும் NRE போலவே அந்நிய செலவாணியில் டெபாசிட் செய்யப்படும் தொகை அன்றைய தினத்துக்கான எக்ஸ்சேஞ்ச் ரேட் என்னும் அந்நிய செலவாணிக்கு ஈடான இந்திய ரூபாயாக மாற்றப்படுகிறது.

  • இந்தியாவில் ஈட்டப்படும் வருவாய்க்கு வருமான வரி உண்டு. அதிலும் NRO கணக்குகளுக்கான வருமான வரி 30% எனச் சொன்னால் மலைப்பாக இருக்கும்; ஆனால் அதுதான் நிஜம்! மேலும் NRO கணக்கில் முதலீடு செய்யும் பணத்துக்கான அசல் மட்டும் முதலீட்டின் மூலம் ஈட்டிய வருவாய் ஆகியவற்றுக்கு வருமான வரி உண்டு.

  • இதிலும் பணத்தை வெளிநாட்டு கணக்குக்கு வெளிநாட்டு கரன்சியிலேயே அனுப்பும் வசதி உண்டு என்றாலும், ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை மாத்திரமே அனுப்ப முடியும். வரியும் உண்டு.

  • எப்படி வெளிநாட்டு வருவாயை இங்கு முதலீடு செய்ய முடிகிறதோ, போலவே இந்தியாவிலிருந்தும் நிதியை வெளிநாட்டு கணக்குக்கு அனுப்புவதும் சாத்தியம்.

  • இதில் இருக்கும் பணத்தைக் கொண்டு செய்யப்படும் முதலீடுகளுக்கான வட்டி விகிதம் குறைவுதான் எனினும் அவை NRE-ஐ விட சற்று அதிகம். இதிலும் NRE போலவே பவர் ஆஃப் அட்டார்னி (POA) யின் மூலம் கணக்கின் பரிவர்த்தனை களை இந்தியாவிலிருந்தும் அயல்நாட்டிலிருந்தும் மேற்கொள்ள நபர் அல்லது நபர்களை நியமிக்க முடியும். மேலும் NRI மற்றும் NRI அல்லாதோருடன் கூட்டுக் கணக்கையும் தொடங்கலாம்.

  • NRE போலல்லாது இங்கு அந்நிய செலாவணி மற்றும் இந்திய ரூபாயை டெபாசிட் செய்யலாம். ஆனால், பணத்தை எடுக்கும் பொழுது அது இந்திய ரூபாயாக மாத்திரமே எடுக்க முடியும்.

நோட் இட்...

  • ஒருவரே NRE, NRO முதலிய இரண்டு கணக்குகளையும் திறக்கலாம்.

  • NRO கணக்கிலிருந்து NRE கணக்குக்கும் NRE கணக்கிலிருந்து NRO கணக்கிற்கும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்.

  • NRE கணக்கிலிருந்து மற்றொரு NRE கணக்குக்கு பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

  • போலவே NRI ஆக இருப்பவர் ரெசிடென்ட் ஆஃப் இந்தியா (ROI) ஆனதும், அதாவது தாயகம் திரும்பியதும், சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று NRE மற்றும் NRO கணக்குகளை RRA – REGULAR RESIDENT ACCOUNT எனப்படும் ரெசிடென்ட் கணக்காக மாற்றிக் கொள்வதும் அவசியம்.

#HerMoney
#HerMoney
  • NRI ஆனதை அல்லது NRI ஆக இருந்து மீண்டும் நிரந்தரமாகத் தாயகம் திரும்பியதை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அறிவிக்காதபட்சத்தில் எதிர்கொள்ள வேண்டிய சட்ட சிக்கல்களும் அபராதத் தொகையும் அதிகம். அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரையிலும்கூட அபராதம் விதிக்கப்படலாம். கூடவே உங்களின் கணக்குகளும் முடக்கப்படலாம்.

  • இதுமட்டுமல்லாது NRI ஆனதை மறைத்த பின் உங்களின் கணக்கின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி தொகை அபராதமாக விதிக்கப்படும்.

கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தில் வெளிநாடு போனால்தான் இதெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்காதீர்கள் தோழிகளே! It’s never too late to learn anything!