Published:Updated:

How to: கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? | How To Control Anger?

Angry
News
Angry

கோபம் ஏற்படுவதற்கு, நம்மால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை செய்யமுடியவில்லையே என்ற இயலாமையும், நாம் சொல்வதை யாரும் கேட்பதில்லை என்ற ஆற்றாமையும், பழிவாங்கும் எண்ணமும்தான் பல நேரங்களில் காரணமாக இருக்கின்றன.

Published:Updated:

How to: கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? | How To Control Anger?

கோபம் ஏற்படுவதற்கு, நம்மால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை செய்யமுடியவில்லையே என்ற இயலாமையும், நாம் சொல்வதை யாரும் கேட்பதில்லை என்ற ஆற்றாமையும், பழிவாங்கும் எண்ணமும்தான் பல நேரங்களில் காரணமாக இருக்கின்றன.

Angry
News
Angry

இங்கு பலருக்கும் கோபம் வருவது ஒரு பிரச்னையாக இருக்கும். ‘கோபப்படக்கூடாதுனுதான் நினைக்கிறேன், கோபத்தை கட்டுப்படுத்தணும்னு நினைக்கிறேன், ஆனா முடியல’ என்பார்கள் சிலர். அமிலமாக வந்து விழும் வார்த்தைகள், பொருள்களை தூக்கி எறிவது, வன்முறை என கோபத்தின் அளவைப் பொறுத்து அதன் வெளிப்பாடும் மாறும்.

ஆனால், கோபத்தால் நாம் சாதிக்கப்போவது ஒன்றும் இல்லை என்பதுடன், அதனால் இழப்பதுதான் நிறைய இருக்கும். எனவே, நம் கோபத்தை கையாள நாம் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம். அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார், மனநல ஆலோசகர் அபிநயா.

கோபம்
கோபம்

* கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு முன்பு, நாம் நம் கோபத்தின் தன்மையை பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியம். நமக்கு எதற்காக கோபம் வருகிறது, நாம் சரியான விஷயங்களுக்குத்தான் கோபப்படுகிறோமா, அல்லது கோபம் கொள்ள வேண்டும் என்பதற்காகக் கோபப்படுகிறோமா என்று சிந்திக்க வேண்டும்.

* கோபத்துக்குப் பின் அதையே நினைத்து குற்ற உணர்வும் வேண்டாம். மனிதர்களுக்குக் கோபம் இயல்பானதே. ஆனால் அது சரியான காரணத்துக்காக இருக்க வேண்டும். அதை வெளிப்படுத்தும்போது, நாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

* எப்பொழுதெல்லாம் கோபப்படுகிறீர்களோ, முதலில் அதை ஒப்புக்கொள்ளுங்கள். `நான் கோபமெல்லாம்படலை...’ என்று நியாயப்படுத்தாதீர்கள். `ஆமா கொஞ்சம் ஓவராதான் கோபப்பட்டுடேன்’ என்ற ஏற்பு இருந்தால்தான், அதை சரிசெய்யும் தீர்வை நோக்கி நகர முடியும்.

* கோபம் ஏற்படுவதற்கு, நம்மால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை செய்யமுடியவில்லையே என்ற இயலாமையும், நாம் சொல்வதை யாரும் கேட்பதில்லை என்ற ஆற்றாமையும், மற்றும் பழிவாங்கும் எண்ணமும் என... இந்த மூன்றும்தான் பல நேரங்களில் காரணமாக இருக்கின்றன. உங்களுக்கு அதிகமான கோபம் எதனால் ஏற்படுகிறது என்பதை, ஓய்வாக இருக்கும் நேரங்களில் யோசித்து, உங்களுக்கு கோபம் ஏற்படுத்தும் அந்தச் சூழலை சரிசெய்யுங்கள்.

கோபம்
கோபம்

* தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இவை புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதுடன் மனதை ஒருமுகப்படுத்தவும், உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உதவும்.

* டிவி, சமூக வலைதளங்களில் வன்முறை காட்சிகளைப் பார்ப்பதை தவிருங்கள். ஃபீல் குட் விஷயங்களாகப் படியுங்கள், கேளுங்கள், பாருங்கள்.

* மனிதர்களுடன் அதிகமாகப் பழகுங்கள், பகிருங்கள். பயணங்களை மேற்கொள்ளுங்கள். அது ஒரு நாளாக, ஒரு மணி நேரமாக இருந்தாலும் பயணம் செய்யுங்கள். அருகில் உள்ள பூங்காவிற்குக் கூட செல்லுங்கள். மனிதர்களிடமும் உலகத்திடமும் நாம் அதிகம் நெருங்கும்போது, நம் மீது நாம் கொண்டுள்ள இறுக்கம் விலகும். அனைத்தையும், அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வசப்படும்.

* புத்தகங்கள் படியுங்கள். குறிப்பாக, தத்துவம், தன்னம்பிக்கை, நகைச்சுவை, சுவாரஸ்யமான கதைகள் எனப் படிக்கும்போது அது உங்களை இலகுவாக்கும்.

* எந்த ஒரு விஷயத்தையும் உங்கள் கோணத்தில் இருந்து மட்டுமே பார்க்காமல், மற்றவர்களின் கோணங்களில் இருந்தும் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுடைய பார்வை விரிவடையும், மற்றவர்களை புரிந்துகொள்ளும் பக்குவம் கூடும், கோபம் குறையும்.

மனநல ஆலோசகர் அபிநயா
மனநல ஆலோசகர் அபிநயா

* தினமும் ஒரு 20 நிமிடங்கள் உங்களுக்கு என ஒதுக்குங்கள். அந்நேரத்தை உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் செலவிடுங்கள். அது உங்களை உங்களுக்குப் பிடிக்க வைக்கும்; உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.

* மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றும்போது நிச்சயமாகக் கோப குணம் குறையும். நீங்கள் உங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்தும், கோபத்தை உங்களால் கட்டுப்படுத்தவில்லை எனில் மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.