`வாழ்க்கைக்கும் VCR ப்ளேயர்ல இருப்பது மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் இல்ல?!' - `முதல்வன்' படத்துக்காக எழுத்தாளர் சுஜாதா எழுதிய வசனம் இது!
வாழ்க்கைக்கு ரீவைண்ட் பட்டன் தேவையோ இல்லையோ, இந்த வார #Hermoney-ல் நாம் பார்க்கப்போகும் விஷயத்துக்கு ரீவைண்ட் பட்டன் வேண்டும். ஏனெனில், இந்த அத்தியாயத்திலும் நாம் பார்க்கப்போவது, சென்ற வாரத்தில் பேசிய யுபிஐ (UPI - Unified Payment Interface) பற்றித்தான்.
குட்டி ரீகேப்
எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், யுபிஐ என்பது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் முறை. இதன் மூலம் சில நொடிகளுக்குள் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு, நெட் பேங்கிங்கில் லாகின் செய்யாமலேயே எளிதாகப் பணம் பரிமாற்றம் செய்ய முடியும்.

கூடவே டிரெயின் டிக்கெட், சினிமா டிக்கெட்டுகள் தொடங்கி, பார்கோடு அடிப்படையில் கடைகளில் பணம் செலுத்துவது வரையிலும் நம் அனைத்து வகை செலவினங்களையும் இதன் மூலமாகக் கையாளலாம் என்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது யுபிஐ குறித்து இன்னும் சில தகவல்களைப் பார்க்கலாம்.
`நாம் பிறருக்குப் பணம் அனுப்பவும், பிறரிடம் இருந்து பணத்தைப் பெறவும் பயன்படும் முகவரியான விர்ச்சுவல் ஐடி பற்றி போன வாரம் அடிக்கோடிட்டு காட்டி இருந்தீர்கள். அதைப் பற்றி விளக்கிச் சொல்ல முடியுமா?' என்றதுடன் மேலும் சில சந்தேகங்களை வாசகிகள் கேட்டிருந்தனர். அவற்றுக்கான பதில்கள் இதோ...
விபிஏ – (VPA-Virtual Payment Address)
உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த யுபிஐ ஆப்பை டவுன்லோடு செய்யவும்.
உங்களுக்குக் கணக்கெதுவுமில்லாத வங்கியின் ஆப்பையும்கூட பயன்படுத்த முடியும்.
நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவைதான்...
ஆப் (App) ரெஜிஸ்ட்ரேஷனின்போது கொடுக்கும் மொபைல் எண்ணும், வங்கியில் கணக்கை ஆரம்பிக்கக் கொடுத்த எண்ணும் ஒரே எண்ணாக இருக்க வேண்டும்.
யுபிஐ ஆப்பை டவுன்லோடு செய்ததும் உங்கள் வங்கியின் பெயர், அக்கவுன்ட் நம்பர், டெபிட் கார்டு எண், கார்டு காலாவதியாகும் மாதம் மற்றும் வருடம் குறித்த விவரங்களைப் பதிய வேண்டும்.
கூடவே mPIN எனப்படும் டிரான்ஸ்சாக்ஷன் பாஸ்வேர்டையும் உருவாக்க வேண்டும்.

mPIN (mobile banking Personal Identification number) என்றால் என்ன? அதை எப்படி உருவாக்குவது?
ஏடிஎம்மை பயன்படுத்தி பணம் எடுக்க எப்படி நான்கு முதல் ஆறு இலக்கங்கள் கொண்ட ஏடிஎம் பின் தேவையோ, அதே போலத்தான் யுபிஐ பயன்படுத்தவும் எம்.பின் அவசியமாகிறது.
ஒவ்வொரு முறை UPI app-ஐ பயன்படுத்தும்போதும் லாகின் பாஸ்வேர்ட் போன்ற பின்னையும் மற்றும் பணப் பரிமாற்றத்தின்போது mPIN-ஐயும் கொடுக்க வேண்டும்.
mPIN கொடுக்காத பட்சத்தில் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணத்தை அனுப்பவும், QR ஸ்கேனர் மூலம் கடைகளில் பணத்தைச் செலுத்தவும் முடியாது. சுருக்கமாகச் சொன்னால் பணப் பரிமாற்றம் எதுவும் செய்ய இயலாது. யுபிஐ-யை இயக்க இயலாது.
விபிஏ (VPA - Virtual Payment Address) - அறிமுகம்
நமக்கு யாரேனும் பணம் கொடுக்க வேண்டும் எனில், வழக்கமாகக் கொடுப்பதுபோல வங்கிக் கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோடு போன்ற எந்த விவரங்களையும் கொடுக்காமல் VPA-ஐ கொடுத்த மாத்திரத்தில் நம் கணக்குக்கு பணம் வந்து சேரும் என்பதை, சென்ற வாரமே சஞ்சய் ராமசாமி உதாரணத்தின் மூலம் பார்த்திருந்தோம்.
VPA... சில புரிந்துணர்வுகள்...
ஒவ்வொரு அக்கவுன்டுக்கும் ஒரே ஒரு VPAதான் இருக்க முடியுமா அல்லது ஒரே VPAஐ பல்வேறு கணக்குகளுக்கு பயன்படுத்தலாமா?
உங்களிடம் பல வங்கிக் கணக்குகள் இருந்தாலும் அவை அனைத்துக்கும் ஒரே ஒரு VPA-யை உருவாக்கி அதை உங்கள் கணக்குகள் உடன் இணைக்க முடியும். அதுபோலவே ஒரே ஒரு கணக்குக்கு பல VPAகளையும் உருவாக்க முடியும்.

இதைச் சொன்னதும் ஒரு கேள்வி எழலாம். `என் பல வங்கி கணக்குகளுக்கு ஒரே VPAஐ தான் இணைத்துள்ளேன். அப்படியெனில், என் வங்கிக் கணக்கை விட்டுப் போகும் பணம் எந்தக் கணக்கிலிருந்து போகும் மற்றும் எனக்கு வர வேண்டிய பணம் எந்தக் கணக்குக்கு வரும்?'
ஒரு VPA-யை பல்வேறு வங்கிக்கணக்குகள் உடன் இணைக்கும்போது டிஃபால்ட் ஆகக் குறிப்பிட்ட ஒரு வங்கிக் கணக்கைத் தேர்வு செய்துகொள்ளும் வசதி உண்டு. உதாரணமாக, Avalhermoney@vpa என்பது VPA. A, B, C என்ற 3 கணக்குகளுக்குமான VPA எனும் பட்சத்தில், மேற்சொன்ன மூன்றில் ஏதாவது ஒரு கணக்கை டிஃபால்ட் கணக்காகப் பயன்படுத்தலாம். இப்படிச் செய்யும்போது, உங்களின் எந்த வங்கிக் கணக்கு டிஃபால்ட் வங்கிக் கணக்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறதோ, கணக்குக்கு வரும் பணமும், கணக்கில் இருந்து வெளியே போகும் பணமும் மேற்சொன்ன அந்த அக்கவுன்டில் இருந்து மாத்திரமே வந்து போகும்.
நம் வங்கி பேலன்ஸுக்கு ஏற்றாற்போல் இந்த டிஃபால்ட் கணக்கை மாற்ற முடியுமா?
எப்போது வேண்டுமானாலும் எளிதாக மாற்றலாம்.
யுபிஐ-யால் கிடைக்கும் வேறு சில பலன்களைப் பார்க்கலாம்...
இதில் இன்டர்நெட் பேங்கிங்கின் மூலம் செய்யும் பரிவர்த்தனைபோல ஒவ்வொரு முறையும் ஓடிபி ஜெனரேட் ஆவதில்லை. ஓடிபி இல்லாமலேயே நம்
mPIN-ஐ பயன்படுத்திய மாத்திரத்தில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
கடைகளில், வணிக நிறுவனங்களில் யுபிஐ பயன்படுத்தும்போது VPAa-ஐ கொடுக்காவிட்டாலும், QR code-ஐ ஸ்கேன் செய்வதன் மூலமாகப் பரிவர்த்தனையை சுலபத்தில் செய்ய முடியும்.
மோசடிகளைத் தடுக்கும் விதமாக இரண்டு கட்ட அங்கீகாரம் தேவைப்படும் விதமாகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உங்களின் mPIN விவரங்கள் தெரிந்தால் மாத்திரமே பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.
ஒரே VPA-ஐ பல வங்கிக் கணக்குகளுக்கு பயன்படுத்தும்போது எந்தக் கணக்குக்கு பணம் வந்து போகிறது என்பது பணத்தை அனுப்புபவருக்குத் தெரியாது.

hermoney@sbi என்ற VPA-ஐ பல்வேறு வங்கிக்கணக்குகள் உடன் இணைத்திருக்கும் பட்சத்தில், இந்த ஒரே VPA-ஐ ஆக்சிஸ் உள்ளிட்ட மற்ற வங்கிக் கணக்குகளின் VPA-வாகப் பயன்படுத்தலாம்.
யுபிஐ-யினால் சாதகங்கள் மட்டும்தான் உள்ளனவா, பாதகங்கள் இல்லையா என்ற கேள்வி எழலாம்.
சாதகங்கள் இருக்குமிடத்தில் பாதகங்களும் இருக்கும்தானே? அதுபோன்ற சில பாதகங்களும் உண்டு. அவை என்ன என்பதையும், அவற்றை எவ்விதம் களையலாம் என்பதையும் அடுத்த வாரம் பார்க்கலாம்.