கோடை காலத்தில் உடலுக்கு, சருமத்திற்கு, கேசத்திற்கு என நிறைய நிறைய மெனக்கெடல்களில் ஈடுபடுவோம். ஆனால் குளிர் காலத்தில் பெரும்பாலும் அப்படியான எந்த பராமரிப்பையும் நாம் மேற்கொள்வதில்லை. மற்ற காலங்களை போலவே குளிர் காலத்திலும் சருமத்தில் பல பிரச்னைகள் ஏற்படும். அவற்றில் முக்கியமானது, சருமம் கருமையடைவது. குளிர்கால சூழ்நிலையால் கருமையடையும் சருமத்தை வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு எளிய முறையில் சரிசெய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கடலைமாவு
அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் தயிர், ஒரு டேபிள்ஸ்பூன் கடலைமாவு சேர்த்து நன்றாகக் கலந்து எடுத்துக்கொள்ளவும். இதனை சருமத்தில் தடவி மென்மையாக 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவு பெறும்.

உருளைக்கிழங்கு
ஓர் உருளைக்கிழங்கை எடுத்து அதனை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். இந்தத் துண்டுகளை, முகத்தில் நிறம் மாறியிருக்கும் இடங்களில் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை தேய்க்கவும். சிறிது நேரத்தில் தண்ணீர் கொண்டு முகத்தை கழுவவும். இதனை தினம் செய்து வந்தால் சரும நிறம் மாறுவதுடன், கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையம் நீங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும்.
தேங்காய்ப்பால்
ஒரு சின்ன கிண்ணத்தில் 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை தேங்காய்ப்பாலை எடுத்துக் கொள்ளளவும். இதில் காட்டனை நனைத்து, சருமத்தில் முழுவதும் அப்ளை செய்யவும். நன்றாகக் காயும்வரை வைத்திருந்து, மென்மையான க்ளன்சர் (cleanser) கொண்டு கழுவவும். தேங்காய்ப்பாலில் உள்ள சத்துகள் உங்களுடைய சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை சரியான முறையில் பராமரிப்பதால் சருமம் நல்ல நிலையில் இருக்கும்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன்
குளிர்காலத்தில் ஏற்படும் சரும நிற மாற்றத்தை போக்க மற்றொரு பயனுள்ள கலவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன். எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது; மற்றும் தேன் ஒரு சிறந்த கழிவுநீக்க பொருள். இவை இரண்டையும் சேர்த்து கலக்கும்போது, வறண்ட மற்றும் நிற மாற்றம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகின்றன. இந்த கலவையை 30 நிமிடங்களுக்கு முகத்தில் அப்ளை செய்திருந்து வைத்திருந்து, பின்னர் கழுவலாம். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம்.

ஓட்ஸ் மற்றும் மோர்
இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் அல்லது ஓட்மீலை அரை கப் தண்ணீரில் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். அதில் 2-3 டீஸ்பூன் மோர் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் தேனையும் சேர்க்கலாம். இந்த பொருள்களை நன்கு கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். அதை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் வட்டங்களாகத் தடவவும்.தேய்த்து சுமார் 20 நிமிடங்கள் வரை சருமத்தில் அப்படியே இருக்கட்டும். ஓட்ஸ் சிறந்த முறையில் இறந்த செல்களை நீக்கி சருமத்தை சுத்தப்படுத்தும். மோரில் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இது சருமத்தின் கருமை நிறத்தை நீக்கும், சருமத்தை மென்மையாக்கும் மற்றும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்