கிரெடிட் கார்ட், பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக் கடன் அல்லது வேறு எந்த வகைக் கடனாவது வங்கிகளிலிலோ, வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்களிலோ பெற்றுள்ள ஒவ்வொருவர் பற்றியும், சிபில் / பிற கிரெடிட் ஏஜென்சிகளில் தகவல்கள் இருக்கும். சுருங்கச் சொன்னால் இது ஒரு தனிநபரின் நிதித் தொடர்பான மொத்த ஜாதகத்தையும் தெரிவிக்கும். எப்படி... பிறந்த நாள், நட்சத்திரம், பிறந்த நேரம், பிறந்த இடம் எல்லாம் பார்த்து ஒருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறதோ அதுபோல ஒருவரின் வரவு செலவு, கடன், வாராக் கடன், செலுத்தாத கடன், தாமதமாகச் செலுத்திய கடன் மற்றும் இ.எம்.ஐ என நீங்கள் செய்த அத்தனை பரிவர்த்தனைகளையும் கருத்தில் கொண்டு கணக்கிடப்படுவதே கிரெடிட் ஸ்கோர் எனப் போன வாரம் பார்த்தோம்.
சிபில் ஏன் முக்கியம் ?
இவளை /இவனை நம்பி பணம் கொடுக்கலாம் என வங்கிகளுக்கும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கும் உங்கள் மீதான நம்பிக்கையை வரவைப்பதில் சிபிலின் பங்கு முக்கியமானது. நல்ல கிரெடிட் ஸ்கோர் எதனால் இருக்க வேண்டும் என்பதையும், ஒருவேளை கிரெடிட் ஸ்கோர் இல்லாததால் சந்திக்கப்போகின்ற சாதக, பாதகங்களையும் இந்தவாரம் பார்க்கலாம்.

சிபில் ஸ்கோர் குறைவதற்கான காரணங்கள் என்ன?
சிபில் ஸ்கோர் ஒன்றும் அக்ஷய பாத்திரம்போல அள்ள அள்ளக் குறையாத ஒன்றல்ல. கடனே வாங்காமலும், கடன் அட்டையைப் பயன்படுத்தாமலும் இருப்பவரின் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் தெரியுமா?
ஆமாம்! கடன் அன்பை முறிக்கும் என்பது முன்னோர் வாக்குதான். ஆனால், நான் கடன் வாங்குவதும் இல்லை கொடுப்பதும் இல்லை என்று கொள்கை உறவினருக்கோ, நண்பர்களுக்கோ பெறுவதற்கும் கொடுப்பதற்கும் வேண்டுமானாலும் ஓகே. ஆனால், கடன் அட்டையை உபயோகிக்காமல் இருப்பதும் அல்லது வங்கிகளில், வங்கிசாரா நிதி நிறூவனங்களில் எதற்காகவும் கடன் வாங்காமலிருப்பதும் உங்களின் கிரெடிட் ஸ்கோரைக் கூட்டாது. ஏனெனில், ஒவ்வொரு வங்கியிலுமுள்ள கடன் உள்ளிட்ட நமது பொருளாதாரரீதியான செயல்பாடுகளை கணக்கிட்டு மதிப்பீடு செய்யப்படுவதுதான் கிரெடிட் ஸ்கோர் என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.
பொதுவாக சிபில் ஸ்கோரை குறைக்கும் காரணிகள் எவை?
- கிரெடிட் கார்ட் மற்றும் நீங்கள் வாங்கியிருக்கும் பிற வகைக் கடன்களுக்கான தவணைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாகச் செலுத்தாததால்.
- கடன் அட்டையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கிரெடிட் லிமிட்டில் ஒவ்வொரு மாதமும் 40% சதவிகிதத்துக்கும் மேல் பயன்படுத்துவதால்.
உதாரணமாக உங்களின் கிரெடிட் கார்டு லிமிட் 50,000 எனக் கொள்வோம். அதில் 35,000-ஐ ஒரே மாதத்தில் பயன்படுத்தினால் அல்லது தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் 35,000-ஐ பயன்படுத்தி வந்தால் உங்களின் சிபில் ஸ்கோரை அது நிச்சயம் பாதிக்கும்.
- கடன் வேண்டி அடிக்கடி வங்கிகளில் விண்ணப்பிப்பதால். ஆம். கடன் வேண்டி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் ஒரே சமயத்தில் விண்ணப்பிப்பது உங்களின் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும்.
- குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை திருப்பிச் செலுத்தாதவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் நீங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமலிருப்பதாலும் கிரெடிட் ஸ்கோர் குறையும் வாய்ப்புகள் அதிகம்.
- அடமானக் கடன் மற்றும் அடமானமற்ற கடன் (Secured and unsecured loan) விகிதம் சரியாக இல்லாதபோது சிபில் ஸ்கோர் மெதுவாகக் குறையும்.
சில வங்கிகள், சிபில் ஸ்கோர் அடிப்படையில் வீட்டுக்கடன் முதலிய பல கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. எனவே, உங்கள் சிபில் ஸ்கோர் குறையாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

கடன் கேட்டு விண்ணப்பிப்பது கூட ஸ்கோரைக் குறைக்குமா?
ஆமாம். ஒவ்வொரு முறை நீங்கள் கிரெடிட் கார்ட் அல்லது கடனுக்கு விண்ணப்பிக்கும்போதும், உங்களின் கடன் மதிப்பீடு பற்றிய விவரங்கள் குறித்து சிபிலில் நீங்கள் கடன் கேட்டு விண்ணப்பித்த குறிப்பிட்ட அந்த வங்கியால் பார்க்கப்படும். அப்படி வங்கியால் / வங்கிகளால் உங்களின் சிபில் ஸ்கோர் அடிக்கடி பார்க்கப்படுவது எதிர்மறையான ஒன்றாகும். ஆதலால், ஆண்டுக்கு 2 - 3 முறைக்கும் மேல் கடனுக்காக விண்ணப்பிக்க வேண்டாம். ஏனெனில், ஒவ்வொரு முறை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போதும் அது குறித்த தகவல்கள் சிபிலில் பதியப்படுவதால் நீங்கள் அணுகும் / அணுகிய மற்ற வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுக்கத் தயங்கும்.
சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி?
- இதுவரை கடன் பெறாதவரென்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் கிரெடிட் கார்ட் அல்லது சிறிய தொகையை கடன் பெற்று அதைச் சரியான முறையில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் திருப்பிச் செலுத்துங்கள்.
- ஏற்கெனவே வாங்கிய கடன்களில் நிலுவைத் தொகையிருந்தால் அதை முழுமையாக செலுத்திய பின் அடுத்த கடனை வாங்குங்கள்.
- குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு பல வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. ஆனால், சில தனியார் நிதி நிறுவங்கள் சற்றுக் கூடுதலான வட்டிக்கு கடன் கொடுக்கின்றன. அதன் மூலம் தாமதமில்லாமல் சரியாக மாதத் தவணையைக் கட்டி வர வேண்டும். நகைக்கடன் வாங்குவதும் அதை ஒழுங்காகத் திரும்ப செலுத்துவதும் கூட இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
- பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் ஃபிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு ஃபிக்சட் டெபாசிட் தொகையில் 50 - 70 சதவிகிதம் வரை கிரெடிட் லிமிட் வைத்து கிரெடிட் கார்டுகளைத் தருகின்றன. ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு செலவு செய்து அதைச் சரியாகத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எக்காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக் கூடாது.
- அடமானக் கடன் மற்றும் அடமானமற்ற கடன் என்ற கலவையில் கடன் பெற்று அதை முறையாகத் திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.

நம் சிபில் ஸ்கோரை நாம் அடிக்கடிப் பார்ப்பதால் ஸ்கோர் குறையுமா?
நமது சிபில் ஸ்கோரை நாமே குறிப்பிட்ட கால இடைவெளியில் பார்ப்பதால் அது குறையுமா என்றால் இல்லை. அவ்வப்போது சிபில் ஸ்கோர் பார்த்துவிடுவது சிறந்தது. அப்போதுதான் தவறுகள் ஏதும் ஏதும் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அது பற்றிச் சொல்லி திருத்தும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஏனெனில், சில நேரங்களில் நாம் வாங்காத கடனெல்லாம் தவறுதலாக நம் கணக்கில் வைத்து விடும் சம்பவங்களும் உண்டு.
சிபில் அறிக்கையில் தவறுகளைக் கண்டறிவது எப்படி?
கோடிக்கணக்கான மக்களின் தரவுகளைக் கொண்ட தரவுதளம்தான் சிபில். ஏற்கெனவே சொன்னது போல வங்கிகளிடமிருந்தும், வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து வரும் தரவுகளின் அடிப்படையில்தான் நமது சிபில் ரிப்போர்ட் தயாரிக்கப்படுகிறது. வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளில் பிழை இருப்பதாலோ, ஹியூமன் எரர் எனப்படும் மனிதர்கள் செய்யும் தவறுகளாலும் சில சமயம் நமது சிபில் தவறான தரவுகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதிக அளவில் தவறுகள் நேர்வதாகப் பெரும்பாலனவர்கள் சொல்வது, தவறான இருப்பு, நிலுவைத் தொகை, பெர்சனல் இன்பர்மேஷன் எனப்படும் உங்களின் பெயர் வயது பாலினம் உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருக்கலாம்.
நீங்கள் வாங்கிய திரும்பி செலுத்திய கடன்கள் பற்றிய தரவுகளில் தவறுகள் நேரலாம். உதாரணமாக, குறிப்பிட்ட தேதிக்குள் நீங்கள் கட்டிமுடித்த தவணை தொகை அல்லது கடன் தொகையானது இன்னும் செட்டில் செய்யப்படவில்லை என்று இருப்பதாகக் கொள்வோம். இந்நிலையில், சம்பந்தப்பட்ட வங்கியையும் வங்கியை அணுகுவதும் அதே சமயத்தில் சிபிலிடம் இதைப் பற்றி ஆன்லைனில் புகாரளிப்பதும் முக்கியம்.
- போலவே நிலுவைத்தொகை தவறுதலாக குறிப்பிடப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. ஏனெனில், உங்களிளுக்குக் கடன் கொடுத்த வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனத்துக்கு நீங்கள் திரும்பச் செலுத்திய பணம் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கி சிபில் நிறுவனத்துக்கு தெரிவிக்கவில்லையெனில் இது போன்ற தவறுகள் நேரலாம்.
- உங்களின் பெயரிலிருக்கும் மொத்தமான கடன் நிலுவைத் தொகை சரியாக உள்ளதா என்பதை சரிபார்ப்பதும் அவசியம்.

சிபில் அறிக்கையில் கண்டறிந்த பிழைகளை சரிசெய்வது எப்படி?
- சிபில் இணையதளத்தில் சென்று உங்களின் சிபில் அறிக்கையில எந்த எந்த தரவில் பிரச்னை என்பதைப் பற்றி விரிவான புகார் கொடுங்கள். புகார் கொடுத்ததும் அதற்கு அக்னாலேஜ்மென்ட் நம்பர் ஒன்று வழங்கப்படும். தவறான தரவுகள் குறித்து புகாரளிக்கும் போதே உங்களின் பெயர் வயது பாலினம் உள்ளிட்ட பிற தரவுகள் அனைத்தையும் சரி பார்த்துக் கொள்வது. நல்லது ஒருவேளை அவற்றில் ஏதேனும் தவறு இருக்கும்பட்சத்தில் அவற்றையும் சுட்டிக்காட்டி அதையும் உடனடியாகத் திருத்தச் சொல்லலாம்.
- நீங்கள் புகாரளித்தவுடன் சிபில் நிறுவனமானது எந்த தரவில் பிழை என்று சொல்லி இருக்கிறீர்களோ அது சம்பந்தப்பட்ட வங்கியை / வங்கி சாரா நிதி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்கும். நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்; வங்கியிலிருந்து பதில் வந்தால் மாத்திரமே சிபில் அதை நமக்கு பதிலாக அளிப்பதுடன் சிபில் ரிப்போர்ட்டில் உள்ள பிழைகளையும் சரிசெய்யும். இன்றைக்கிருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவை அனைத்தும் நடந்தேறினாலும், சிபில் ரிப்போர்ட்டில் இருக்கும் பிழைகளை சரி செய்ய குறைந்தபட்சம் பத்து நாள்கள் முதல் அதிகபட்சமாக 30 நாள்கள் வரை ஆகலாம்.

- புகார் கொடுத்த மாத்திரத்தில் சிபில் நிறுவனம் உங்கள் விவரங்களில் எந்த மாறுதலையும் செய்யாது. முறையான ஆவணங்களுடன் நீங்கள் கடன் பெற்ற / பெற்றிருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகி பிரச்சனையை எடுத்துச் சொல்லி புகாரளிப்பதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். தேவையான நடவடிக்கையை உங்கள் வங்கி மேற்கொண்டு, சிபில் ரிப்போர்ட்டிலிருக்கும் தவறுகளை சரி செய்துவிடும். நினைவில் கொள்ளுங்கள். போன அத்தியாயத்தில் சொன்னதுபோல வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள்அளிக்கும் தரவுகளை வைத்து மாத்திரமே சிபில் ரிப்போர்ட் உருவாக்கப்படுகிறது.