Published:Updated:

மதுர மக்கள்: "ஜவ்வு மிட்டாயாலதான் வீடு கட்டினேன்... புள்ளைகளைப் படிக்கவெச்சேன்!"- மாயாண்டி தாத்தா

மதுர மக்கள்: ஜவ்வு மிட்டாய் மாயாண்டி தாத்தா
News
மதுர மக்கள்: ஜவ்வு மிட்டாய் மாயாண்டி தாத்தா

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

Published:Updated:

மதுர மக்கள்: "ஜவ்வு மிட்டாயாலதான் வீடு கட்டினேன்... புள்ளைகளைப் படிக்கவெச்சேன்!"- மாயாண்டி தாத்தா

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

மதுர மக்கள்: ஜவ்வு மிட்டாய் மாயாண்டி தாத்தா
News
மதுர மக்கள்: ஜவ்வு மிட்டாய் மாயாண்டி தாத்தா
மதுரை செல்லூருக்குள் நுழைந்து இங்கே ஜவ்வு மிட்டாய் தாத்தா வீடு எங்க இருக்கு என முகவரி கேட்டால், எல்லாருக்குமே தெரிந்திருக்கிறது. சின்ன புன்னகையுடன் நம்மை வரவேற்கிறார் மாயாண்டி. தன் அறுபத்தி ஏழு வயதில், அரை நூற்றாண்டாக மூங்கில் கம்பும் ஜரிகைபொம்மையுமாக நடந்தே பயணித்த மனிதன். இன்றைய தலைமுறை பார்த்திராத, கடந்த தலைமுறைகள் மறந்தே போன ஜவ்வுமிட்டாயை வீதி வீதியாக விற்று வருபவர் மாயாண்டி. எல்லா காலத்திலும் குழந்தைகள் கொண்டாடும் மனிதர்!

எப்படி இந்த ஜவ்வு மிட்டாய் தொழில கத்துக்கிட்டீங்க?

"இது என் தாத்தா என் அப்பாகிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட விஷயம். எனக்கு சொந்த ஊரு உசிலம்பட்டி, தொழிலுக்காக மதுரை வந்து அம்பது வருஷமாச்சு. இந்த அம்பது வருஷமா ஜவ்வு மிட்டாய் வியாபாரம்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். திருவிழா, விசேஷம்னு ஒரு ஊருக்குள்ள எப்போ எல்லாம் கூட்டம் கூடுதோ அப்போ எல்லாம் ஜவ்வு மிட்டாயும் அவுங்களோட ஒரு கொண்டாட்டமா மாறிடும். அப்போ எல்லாம் தமிழ்நாட்டுல ஏகப்பட்ட ஆளுங்க இருந்தாங்க. இப்போ எல்லாம் முப்பது பேரு இருந்தா கூட அதிசயம்தான்.

ஜவ்வு மிட்டாய் மாயாண்டி தாத்தா
ஜவ்வு மிட்டாய் மாயாண்டி தாத்தா

ஜவ்வு மிட்டாய்ல வித விதமா டிசைன் செஞ்சு தரச் சொல்லி சாப்பிடுறதுலதான் அதை சாப்புடுறவங்களுக்கே சந்தோஷம். மயிலு, வாட்சு கடிகாரம்னு ஒரு டிசைனை செஞ்சு குழந்தைகளோட கன்னத்துல சின்னதா ஒரு பொட்டு வச்சு விடுவேன். அந்தக் குழந்தைகளோட சந்தோஷம்தான் இதுவரை என்ன உயிர்ப்போட வச்சுருக்கு. எனக்கு அறுபத்தி ஏழு வயசாச்சு! இதுல முக்கால்வாசி வாழ்க்கையை குழந்தைகளோடதான் கழிச்சுருக்கேன். அந்தக் குழந்தைகளோட உலகத்துக்குள்ள என்னையும் ஒரு குழந்தையாவே அவுக மாத்திருவாங்க. இந்த குடுப்பினை எத்தனை பேருக்கும் கிடைக்கும் தெரியல! அதெல்லாம் அனுபவிச்சுப்பார்த்தாதான் தெரியும்."

உங்க தினசரி வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கும்?

"கையிலே பொம்மை. மூங்கில் கம்பு அது போக ஆறு எழு கிலோவுல ஜவ்வு மிட்டாயும் சுத்திக்கிட்டு காலையில எட்டு மணிப்போல வீட்டை விட்டு கிளம்பிருவேன். எங்கயாச்சும் திருவிழாவோ இல்ல விசேஷமோ இருக்கான்னு பார்த்துட்டு அந்த ஏரியா பக்கம் போவேன். இல்லைன்னா அன்னைக்கு தேதிக்கு மனசு எங்க போகலாம்னு சொல்லுதோ அங்க வண்டிய விட்டுருவேன். எங்க போனாலும் அது நமக்கு திருவிழா மாதிரிதான். வேடிக்கைக்காக பார்க்க ஆரம்பிப்பாங்க... அப்பறம் நாங்க பேசுற நக்கல் நையாண்டி பேச்சுக்காக கூட்டம் கூடுவாக... அப்படியே நாக்குக்கு இனிப்பா மிட்டாய சாப்புடுவாங்க! தமிழ்நாடு முழுசுமே இந்தக் கால் பயணம் போயிருக்கு. போற எல்லா இடத்துலயும் ஏற்கெனவே பழகுன மனுஷன போலதான் நம்மள ஏத்துக்குவாங்க. அதெல்லாம் எவ்வளவு பேருக்கு கிடைக்கும் சொல்லுங்க?"

ஜவ்வு மிட்டாய் மாயாண்டி தாத்தா
ஜவ்வு மிட்டாய் மாயாண்டி தாத்தா

குழந்தைங்களை எப்படிப் பழக்கப்படுத்திக்கிறீங்க?

"அவுங்கள பொறுத்தவரைக்கும் நாம அவுங்கள குஷிப்படுத்துற ஒரு ஆள். கூடவே இந்த பொம்மையைப் பார்த்தா இயல்பிலேயே அவுங்களுக்கு ஒரு விளையாட்டு சாமான் பார்க்குற ஆர்வம். தெருவுல நம்மள பார்த்த உடனே சுத்தி வந்து நின்னுக்குற எந்தக் குழந்தையும் பணக்கார வீட்டு புள்ளைகளா இருக்க போறது இல்லை. என்ன சுத்தி இருக்க பிள்ளைகள், அவங்க வேடிக்கை பார்க்க வந்தா கூட சின்னதா ஒரு வாட்ச் செஞ்சு கையில கட்டி விட்டுறேன். காசு வேணாம்னு சொல்லிடுவேன். அதுக எங்க போயி நிக்கும்ங்க காசுக்கு? நமக்கே தெரியும்... கொஞ்சம் காசு பணம் உள்ள ஆளா இருந்தா எக்ஸ்ட்ரா அஞ்சு ரூபா வாங்கிக்குவேன். அந்த அஞ்சு ரூபா எக்ஸ்ட்ரா குடுக்குறதால அந்தப் பணக்கார கஸ்டமரும் குறைஞ்சுர போறது இல்ல. அஞ்சு ரூபா மிட்டாயை, இல்லாத குழந்தைக்கு ஓசியா குடுக்குறதால நானும் குறைஞ்சு போயிட போறது இல்ல!"

தினம் நடையா நடக்கணுமே, வீட்டுல உங்க கஷ்டத்த பத்தி எதாச்சும் சொல்லுவாங்களா?

"வேலையில எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. என்ன நடையா நடக்கணும். அதுவும் எனக்கு பெரிய கஷ்டம் இல்லை. நாலு மனுஷ மக்களன்னு தேடி போயி பார்க்குறேன், இந்த தொழில்லதான் வீடு கட்டுனேன். என் புள்ளைகளைப் பட்டப்படிப்பெல்லாம் படிக்க வச்சேன். இப்போ எனக்கும் பேரக்குழந்தைகள் வந்துருச்சு. ஒரு நிறைவான வாழ்க்கைதான் இந்த ஜவ்வு மிட்டாயால வாழ்ந்துருக்கேன். எங்க அப்பாவுக்கு அப்பறம் இந்த வேலைய நான் எடுத்துக்கிட்டேன். ஆனா எனக்கு பிறகு என் பசங்களுக்கு இந்த வேலை பார்க்க விருப்பம் இல்ல. அவுக எல்லாம் பெரிய படிப்பு படிச்சுட்டாக... சரி, இது நம்மளோட போகட்டும்னு விட்டுட்டேன். வெளியாலுக வேற யாரும் கத்துக்குவாங்களான்னு யோசிச்சு பார்த்தா அப்படி யாருக்கும் பெருசா ஆர்வம் இருக்குமான்னும் தெரியல..."

ஜவ்வு மிட்டாய் மாயாண்டி தாத்தா
ஜவ்வு மிட்டாய் மாயாண்டி தாத்தா

தமிழ்நாட்ட தவிர வேற எங்கெல்லாம் பயணப்பட்டு இருக்கீங்க?

"அப்போ அப்போ மகாராஷ்டிரா, ஆந்திரானு கெளம்பி போயிருயிவேன். அங்க எல்லாம் இங்க விட இன்னும் அதிகமா இந்த ஜவ்வு மிட்டாயை கொண்டாடுவாங்க. ஆரம்பத்துல மொழி பிரச்னை இருந்துச்சு... அப்பறம் குழந்தைகள் மூலமாவே மொழி கத்துக்கிட்டேன். இப்படிப் பயணத்துல புது புது ஜனங்கள பார்க்குறேன், பழகுறேன். அவுங்க என்னய அவுக வீட்டுல ஒரு ஆளா பாக்குறாங்க."

தெளிவான உச்சரிப்பு, நல்ல நகைச்சுவை இதெல்லாம் எப்படி?

"என்ன பண்றது? வாடிக்கையாளரைக் கவரணும்ல... அதுக்காகவே மிமிக்ரி பண்ணுவேன், பாட்டு பாடுவேன்... அது போக என்னோட பொம்மைக்கு நானே மேக்கப்போடுவேன். எப்படின்னாலும் எனக்கு பின்னால் கூட்டத்தைச் சேர்த்துருவேன். இதெல்லாம் பார்த்து சினிமா வாய்ப்புகளும் அப்போ அப்போ வரும். நேரம் கிடைக்கிறப்போ போயி நடிச்சுக்குடுத்துட்டு வந்துருவேன்."