லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

வினு விமல் வித்யா: நர்ஸ்தானே ரியல் ஹீரோ!

 சானியா மிர்ஸா
பிரீமியம் ஸ்டோரி
News
சானியா மிர்ஸா

சஹானா

வழக்கம்போல வீடியோ கால் மூலம் விமலையும் வித்யாவையும் அழைத்தாள் வினு.

“எப்படி இருக்கீங்க... வித்யாக்கா ஆபீஸ் போக ஆரம்பிச்சிட்டீங்க போல, எப்படிப் போகுது வேலை?”

“ஆமாம் வினு, ஒரு வாரமா போயிட்டிருக் கேன். வெயில் காலத்தில் முகமூடியுடன் வேலை செய்யறது கஷ்டமா இருக்கு. எப்படித்தான் டாக்டர், நர்ஸ் எல்லாம் மணிக்கணக்கா வேலை செய்யறாங்களோ... ரியலி கிரேட்! அவங்களுக்கு இந்தச் சமூகம் ரொம்பக் கடமைப்பட்டிருக்கு” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேச ஆரம்பித்தார் வித்யா.

“இங்கிலாந்து மருத்துவமனை ஒன்றில் மிகப் பெரிய ஓவியம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தை பேட்மேன், ஸ்பைடர்மேன் பொம்மைகளைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, ரியல் ஹீரோவான ஒரு நர்ஸ் பொம்மையைக் கையில் வைத்திருப்பது போல் அழகான ஓவியம். `சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி. கறுப்பு வெள்ளையாக இருந்தாலும் இது ஒளி வீசும்' என்ற வாசகங்களும் அந்த ஓவியத்தில் இருக்கின்றன. பார்த்தீங்களா?'’ என்று அரட்டையில் இணைந்தாள் விமல்.

வினு விமல் வித்யா: நர்ஸ்தானே ரியல் ஹீரோ!

“நானும் பார்த்தேன் விமல். அட்டகாசமாக இருந்தது அந்த ஓவியம். ஜோன் பயஸ் மிகப் பிரபலமான அமெரிக்கப் பாடகி. இத்தாலியில் கொரோனா பாதிப்பால், அடுக்கு மாடிவாசிகள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்த காட்சி உலகம் முழுவதும் வைரலானது. இதை மிக அழகான ஓவியமாகத் தீட்டியிருந்தார் ஜோன். இத்தாலியைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டித் தரும்படிக் கேட்டது. தன்னுடைய ஓவியத்தை நூறு பிரதிகள் எடுத்து, தானே கையொப்பமிட்டு விற்பனை செய்தார். இதன் மூலம் கிடைத்த சுமார் 35 லட்ச ரூபாயை இத்தாலி தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறார் ஜோன்” என்று நிறுத்தினாள் வினு.

“அடடா! ஜோன் பயஸ் மிகச் சிறந்த இசைக் கலைஞர். ஆனாலும், தன்னை ஒரு போராட்டக்காரர் என்று சொல்லிக்கொள்வதையே விரும்புகிறார். வியட்நாம் போரில் ஈடுபட்ட அமெரிக்காவை எதிர்த்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார். சிறைக்கும் சென்றிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறார்” என்று வித்யா சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்தாள்் விமல்.

 ஜோன் பயஸ்
ஜோன் பயஸ்

“நானும் ஜோனைப் படித்திருக்கிறேன். `வி ஷல் ஓவர் கம்’ (நாம் வெல்லுவோம்)பாடலை அமெரிக்காவில் பிரபலமாக்கியவர் இவர். லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட மார்ட்டின் லூதர் கிங் பேரணியில் இந்தப் பாடலைப் பாடி எழுச்சிகொள்ள வைத்தவர். ஒபாமா பதவியேற்றபோது வெள்ளை மாளிகையில் இந்தப் பாடலைப் பாடினார். மார்ட்டின் லூதர் கிங்கின் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கர் அதிபராகும் கனவு நிறைவேறியதற்காகவே இதைப் பாடியதாகச் சொன்னார்” என்றார் வித்யா.

“ஆமாம் வித்யாக்கா. மார்ட்டின் லூதர் கிங் மட்டுமில்லை, நோபல் பரிசு வென்ற இசைக் கலைஞர் பாப் டிலான், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உட்பட ஏராளமான பிரபலங்கள் ஜோனின் நண்பர்கள். அற்புதமான பெண். ஒரு காலத்தில் இவருடைய இசை ஆல்பங்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன. இன்னிக்கு இவர் பாடல்களைக் கேட்கணும்” என்றாள் விமல்.

“டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஃபெட் கப் ஹார்ட் அவார்டு வாங்கியிருக்கிறார். பதிவான 17,000 ஓட்டுகளில் 10,000-க்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்று, இந்த விருதைத் தட்டிச்சென்றிருக்கிறார் சானியா. இந்த விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறிய சானியா, விருது தொகையை தெலங்கானா அரசின் கொரோனா நிவாரணத்துக்கு வழங்கிவிட்டார். அதே போல பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செஞ்சிட்டு வருவது ஆறுதலா இருக்கு” என்ற வித்யா தண்ணீர் பருகினார்.

 ஜோன் பயஸ் ஓவியம்
ஜோன் பயஸ் ஓவியம்

“நடிகை ரோகிணி கும்மிடிப்பூண்டி வழியே நடந்து சென்ற தொழிலாளர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கார். தமிழ் சினிமாவில் வில்லனாகக் கலக்கிய சோனு சூத், ரியல் ஹீரோவாக ஆகியிருக்கார். மத்தியப் பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் ஊருக்குப் பேருந்தில் அனுப்பி வைத்திருக்கிறார். இந்தியாவில் ஒரு தொழிலாளர்கூட நடக்கக் கூடாது. அதுவரை நான் பேருந்தை அனுப்பி வைப்பேன் என்று கூறி, எல்லோர் மனத்தையும் கவர்ந்துவிட்டார். பிரகாஷ் ராஜ், சூர்யா போன்றவர்களும் உதவி செய்து வருகிறார்கள்.”

“அரசாங்கம் செய்ய வேண்டியதைத் தனிமனிதர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் வசிக்கும் கேப்டன் டாம் முர்ரே தன் நூறாவது வயதில் கொரோனாவுடன் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்ட முடிவெடுத்தார். இதற்காகத் தன் தோட்டத்தை நூறு முறை சுற்றி வந்தார். நடக்க முடியாததால் நடைவண்டி உதவியுடன் சுற்றி வந்தார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு 300 கோடிக்கும் அதிகமான நிதி ஒன்றரை மாதத்தில் குவிந்துவிட்டது. இதற்காக கின்னஸ் சாதனையும் படைத்துவிட்டார் டாம் முர்ரே. அமர்க்களமா இருக்குல்ல?” என்றார் வித்யா.

 ரியல் ஹீரோ நர்ஸ் பொம்மை
ரியல் ஹீரோ நர்ஸ் பொம்மை

“சூப்பர் வித்யாக்கா. நீங்க ரெண்டு பேரும் இதைக் கவனிச்சீங்களா, அண்டார்டிகா பனிப்பாலைவனம் இப்போ பச்சையாகக் காணப்படுகிறது. புவி வெப்பமாவதைத் தொடர்ந்து அண்டார்டிகாவின் பனி உருக ஆரம்பித்தது. இப்போது எங்கு பார்த்தாலும் பச்சைப் பாசி படர்ந்திருக்கு. இது நல்லதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.”

“பூமியின் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கு. ம்ம்ம்... ஏற்கெனவே உடல்நலப் பிரச்னைகள் இருப்பவர்களுக்குக் கொரோனா தொற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதைப் பார்க்கிறோம். ஆனால், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 19 வயது டேனியலி என்ற பெண், மூன்று நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இப்போது கொரோனாவும் அவரைத் தொற்றிக் கொண்டது. சிகிச்சை எடுத்து முழு உடல்நலத்துடன் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இந்தச் செய்தி பலருக்கும் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது” என்று மணி பார்த்தாள் விமல்.

 சானியா மிர்ஸா
சானியா மிர்ஸா

”நிச்சயம் நம்பிக்கை தருது விமல். அடுத்த இதழுக்காவது நாம் நேரடியாக மீட் பண்ணுவோமா?” என்று கேட்டார் வித்யா.

“நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பாளர்கள் அதிகமாகும்போது நிலைமை எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது வித்யாக்கா. தொலைக்காட்சி விவாதங்களை நடத்தும் பெண்களையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண்களையும் ஆண் பங்கேற்பாளர்கள் நடத்தும் விதம் அதிர்ச்சியளிக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியிலேயே இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால் இவர்கள் பிற இடங்களில் எப்படி நடந்துகொள்வார்கள்?” என்று கோபத்துடன் கேட்டாள் வினு.

 டாம் முர்ரே
டாம் முர்ரே

“அவர்கள் சிந்தனையிலேயே மாற்றம் வந்தால்தான் நிலைமை மாறும் வினு. சரி, எனக்கு வேலை இருக்கு. மீண்டும் சந்திப்போம்” என்று விடைபெற்றாள் விமலா.

வினுவும் வித்யாவும் பை சொல்ல, இணைப்பு துண்டிக்கப்பட்டது.

(அரட்டை அடிப்போம்!)