
சஹானா
ஜூம் ஆப் மூலம் விமலையும் வித்யாவையும் அரட்டைக்கு அழைத்தாள் வினு.
“எல்லோரும் எப்படி இருக்கீங்க... சென்ற இதழ் அவள் விகடனில் நம்ம மூணு பேரையும் அட்டகாசமா வரைஞ்சிருந்தார் பாலகிருஷ்ணன். ஆமா வித்யாக்கா... இர்ஃபான் மறைவால் நீங்க ரொம்ப வருத்தத்தில் இருந்திருப்பீங்க...” என்று அரட்டையைத் தொடங்கினாள் வினு.
“ஆமாம், எப்பேர்ப்பட்ட கலைஞர்! லஞ்ச் பாக்ஸ், இந்தி மீடியம், பிக்கு போன்ற படங்களை எல்லாம் மறுபடியும் பார்த்தேன் வினு. அவர் தொடர்பா வந்த கட்டுரைகளைப் படிச்சேன். இர்ஃபானும் அவர் மனைவி சுடபா சிக்தரும் ஒன்றாகத் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள்; நல்ல நண்பர்கள். `என் மனைவி எந்த விஷயத்தையும் என்னைவிடச் சிறப்பாகப் புரிந்து கொள்வார். அவரது அறிவும் கற்பனைத் திறனும் மிக அழகாகக் கதைகளிலும் திரைப்படங்களிலும் வெளிப்படும். என் மனைவியைக் கண்மூடித்தனமாக நான் நம்பலாம்' என்று சொல்லியிருக்கிறார் இர்ஃபான்!” - பெருமூச்சுவிட்டார் வித்யா.

“நல்ல நடிகர் மட்டுமில்லை... நல்ல கணவர், நல்ல மனிதர். அவர் சாக்லேட் பாய் கிடையாது. ஆனாலும், வினுவிலிருந்து வித்யாக்கா வரை ஏராளமான பெண்களுக்கு இர்ஃபானைப் பிடித்திருக்கிறது. நடிப்பு மட்டுமல்லாமல் அவரது சிந்தனை, செயல் எல்லாம் சேர்ந்துதான் இவ்வளவு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கு. சரி... கொரோனா காலத்தில் ஆப்பிரிக்க நாடுகள் எப்படி இருக்கின்றன என்பதைக் கவனிச்சுட்டு வரேன். அதில் இரண்டு விஷயங்களை உங்களுக்குச் சொல்லியே ஆகணும்” என்ற விமல், எலுமிச்சை ஜூஸைப் பருகினாள்.
“அக்னி ஆரம்பிச்சிருச்சு, என்ன வெயில்... விஷயத்தைச் சொல்லு விமல்” என்றார் வித்யா.
“ம்... கென்யாவில் வசிக்கும் கிட்சாவோ கணவரை இழந்தவர். துணி துவைத்து சொற்ப வருமானத்தை ஈட்டி வந்தார். கொரோனாவால் அந்த வேலையும் இல்லை. எட்டுக் குழந்தைகளின் பசியைப் போக்க அவரால் முடியவில்லை. அழும் குழந்தைகளைச் சமாளிப்பதற்காக, பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, கற்களைப் போட்டு கொதிக்க விடுவார். வெந்தவுடன் சாப்பிடத் தருவதாகச் சொல்வார். குழந்தைகளுக்கும் இந்த உண்மை புரியும். அழுதபடியே உறங்கிவிடுவார்கள். இந்தக் கொடுமையைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அரசாங்கத்துக்குச் சொல்லி, உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.''
“ஐயோ... ரொம்ப கஷ்டமா இருக்கு விமல். சின்ன வயசுல `கல்குழம்பு’ என்று ஒரு கதை படிச்சிருக்கேன். அதுவே நிஜமா நடந்திருக்கு என்பது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு வித்யாக்கா. இன்னொரு விஷயமும் இதே மாதிரிதானா? எனக்குத் தாங்கும் சக்தி இல்லை” என்று கண்கலங்கினாள் வினு.

``இல்லே இல்லே... இது ஹேப்பியான நியூஸ். சியரா லியோன் நாட்டின் கல்வி அமைச்சர் டாக்டர் டேவிட் மொய்னினா செங். தன்னுடைய 10 மாதக் குழந்தையை முதுகில் சுமந்துகொண்டே ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டார். இந்த போட்டோ வைரலானது. `இதை என் மனைவி செய்திருந்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதையே ஓர் ஆண் செய்யும்போது வைரலாகி விடுகிறது. என் நண்பர்கள் இதுவரை தங்கள் குழந்தைகளின் டயபரைக்கூட மாற்றியதில்லை. இந்த போட்டோ மூலம் ஆணுக்கும் குழந்தை வளர்ப்பில் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, தங்களை மாற்றிக்கொண்டால் நல்லது. அதனால் இதுபோன்ற போட்டோக்களைப் பகிரச் சொல்லியிருக்கிறேன். ஆப்பிரிக்க நாடுகளில் - அதுவும் சியரா லியோனில் சமத்துவம் என்பது கானல்நீர்தான். மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்க வேண்டும்' என்கிறார் டேவிட்.”
``ஓ... கல்வி அமைச்சருக்கு ஒரு பூங்கொத்து! ஆம்பர் ரோஸ் ஐசக் என்ற 26 வயது ஆப்பிரிக்க அமெரிக்கர் நியூயார்க்கில் வசித்தார். தன்னுடைய முதல் பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே திறமையற்ற மருத்துவர்கள் இருப்பதாக ட்வீட் செய்த நான்கு நாள்களில் சிசேரியன் பிரசவத்தின்போது உயிரிழந்துவிட்டார். இவரின் இணையர் ப்ரூஸ், இது 100 சதவிகிதம் தடுக்கக்கூடிய மரணம் என்றும், ரோஸ் அமெரிக்கராக இருந்திருந்தால் கூடுதல் கவனிப்பு கிடைத்து உயிருடன் இருந்திருப்பார் என்றும் சொல்கிறார். இவருடைய கருத்தை முற்றாக நிராகரிக்கவும் முடியாது. அமெரிக்கர்களைவிட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பிரசவத்தின்போது அதிகமாக உயிரிழக்கிறார்கள். இதில் 60 சதவிகித மரணங்களைத் தடுத்திருக்க முடியும் என்கிறது ஓர் ஆய்வு அறிக்கை. இந்தக் காலத்தில் எவ்வளவு கொடுமையான விஷயம் இது...” என்றார் வித்யா.
“அதிர்ச்சியா இருக்கு வித்யாக்கா. இந்தக் காலத்தில் பிரசவ மரணங்கள் பெருமளவில் குறைந்துவிட்டன. அலட்சியத்தால் இப்படி உயிரிழப்பு ஏற்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும். என்ன வினு ரொம்ப பிஸியா? ஒரு வாரமா நீ வரைஞ்ச படம் எதையும் காணோமே...” என்று விமல் கேட்டதும், வினுவின் முகத்தில் புன்னகை.
“நான் வரையறதை விடுங்க, விமல். இரானைச் சேர்ந்த ஃபாத்திம் ஹமாமியின் ஓவியங்களைப் பார்த்ததும் பிரமிச்சுப் போயிட்டேன். 30 வயது ஹமாமியின் உடல் 80 சதவிகித அளவுக்கு முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கு. ஆனாலும், கால் விரல்களின் மூலமே பிரமாதமான ஓவியங்களைப் படைக்கிறார் என்பதை நினைக்கும்போது, அவரது திறமையை என்னவென்று சொல்வது? இப்போது பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓவியத்தை வரைந்து அசத்தியிருக்கிறார். ஏற்கெனவே சார்லி சாப்ளின், ஷாரூக் கான் போன்றவர்களை வரைந்து உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார்” என்று சொல்லிக்கொண்டே அந்த வீடியோவை ஷேர் செய்தாள் வினு.

“அடடா... கிரேட்!” என்று விமலும் வித்யாவும் ஒரே நேரத்தில் உற்சாகமாகக் கத்தினார்கள்.
“வினு, உன் ஃபிரெண்ட் கல்யாணத்துக்குக் கேரளா போகணும்னு சொல்லிட்டிருந்தியே, அந்தக் கல்யாணத்தைத் தள்ளி வெச்சிட்டாங் களா?” என்று கேட்டார் வித்யா.
“முதலில் தள்ளிவைக்கிற ஐடியாவில்தான் இருந்தாங்க. ஆனா, இந்த கொரோனா எப்ப முடிவுக்கு வரும்னு தெரியாததால் வீட்டிலேயே திருமணத்தை சிம்பிளா நடத்தி முடிச்சிட்டாங்க. ஜூம் மூலமா நான்கூட கல்யாணத்தில் கலந்துக்கிட்டேன்” என்று சிரித்தாள் வினு (லாக் டெளன் திருமணங்கள் பற்றி அவள் விகடன் இந்த இதழில் பக்கம் 10-ல் படியுங்கள்).
“இப்படித்தான் உலகம் முழுவதும் கல்யாணங்கள் கொரோனா காலத்தில் நடந்துகிட்டிருக்கு வினு. நான் `தப்பட்' என்ற இந்தித் திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் பார்த்தேன். இந்தியாவில் கணவன், மனைவியை அடிக்கிறதை வன்முறையில் சேர்க்க மாட்டாங்க. `அடிக்கிற கைதான் அணைக்கும்'னு ஈஸியா சொல்லிடுவாங்க. 90 சதவிகித இந்தியப் பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது கணவனிடம் அடி வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பிரச்னையைத்தான் இந்தப் படம் பேசியிருக்கு. `பிங்க்' படத்துக்குப் பிறகு டாப்ஸி பன்னுவின் முக்கியமான படமாக இது இருக்கும்” என்றாள் விமல்.
“அடித்துவிட்டு கணவன் ஸாரிகூடச் சொல்லவில்லை. வீட்டிலுள்ளவர்களும் எதுவும் பேசவில்லை. அடி வாங்கிய பெண்ணின் வீட்டிலும் இது பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை. நம் சமூகம் எப்படி இருக்கிறது பாருங்கள். படத்தில் டாப்ஸி எடுக்கும் முடிவைப் பார்த்து, பல பெண்களின் எண்ணங்களில் மாற்றம் வருகிறது. அவசியம் பாருங்க வித்யாக்கா.”
“ஓ... நிச்சயம் பார்க்கறேன் வினு. இந்த லாக் டெளனில் உலகம் முழுவதும் பெண்கள் மீது வீடுகளில் நிகழ்த்தப்படும் வன்முறை அதிகமாகியிருக்கு. வருமானம் இல்லை. வீட்டில் முடக்கம். அந்தக் கோபம் எல்லாம் பெண்கள் மேல்தான் திரும்புது. கொரோனா கொடுமையோடு இதையெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு” என்று வருத்தத்துடன் சொன்னார் வித்யா (அவள் விகடன் `நமக்குள்ளே' பகுதியை பக்கம் 97-ல் படியுங்கள்).
“இந்த ஊரடங்கு நேரத்தில் நிறைய பெண்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருகிறார்கள். அவர்களைப் பற்றிய ஒரு கட்டுரை அவள் விகடனில் (பக்கம் 26) வெளிவந்திருக்கு.
அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர் மாலினி ஹேமா. பழங்குடி மக்கள் குறித்து முனைவர் பட்டம் பெற்ற மானுடவியலாளர். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கிவருகிறார். நண்பர்களின் பொருளுதவியால் இது சாத்தியமானதாகச் சொல்லும் ஹேமா, தன்னுடைய முயற்சிக்கு உதவிய பழங்குடிப் பெண்களால்தான் இது சாத்தியம் என்கிறார்.''
“நல்ல விஷயம். இன்னிக்கு ரொம்ப நேரம் அரட்டையடிச்சுட்டோம். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. மீண்டும் மீட் பண்ணுவோம். பை வித்யாக்கா, பை விமல்!” என்று இணைப்பைத் துண்டித்தாள் வினு.
(அரட்டை அடிப்போம்!)