தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

வீட்டு வேலைகளில் குழந்தைகளை அவசியம் ஈடுபடுத்துங்கள்!

வீட்டு வேலைகளில் குழந்தைகளை அவசியம் ஈடுபடுத்துங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டு வேலைகளில் குழந்தைகளை அவசியம் ஈடுபடுத்துங்கள்!

பெற்றோர் கவனத்துக்கு...

குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தலாமா? எந்த வயதில் என்னனென்ன வேலைகளில் ஈடுபடுத்தலாம்? - பெற்றோர்களின் இதுபோன்ற குழப்பங்களுக்குத் தீர்வு தருகிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் ஷஃபி.

``ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய `ஹார்வர்டு கிராண்டு ஸ்டடி' ஆய்வு முடிவுகள், `குழந்தைகளை அன்றாட வீட்டுப்பணிகளிலிருந்து விலக்கிவைப்பது பெரும் அபத்தம்.

வீட்டு வேலைகளில் குழந்தைகளை அவசியம் ஈடுபடுத்துங்கள்!

அப்படிச் செய்தால் குழந்தைகளின் பலவகையான ஆற்றல்களின் ஆக்கங்கள் குறையும்' என்று அறிவுறுத்துகிறது. மேலும் மன தைரியம், வெற்றி தோல்விகளைப் பகுத்தறியும் பக்குவம், உடனிருப்போருடன் உறவாடும் உளவியல் போன்றவற்றைத் தீர்மானிப்பது வீட்டில் செய்யும் வேலைகளே என்றும் நிரூபித்திருக்கிறது அந்த ஆய்வு.

பொதுவாக, இரண்டு வயதுக்குள் குழந்தைகள் தன் தட்டில் இருக்கும் சாப்பாட்டை எடுத்து சாப்பிடத் தொடங்குவார்கள்/தொடங்க வேண்டும். பெற்றோர்போல ஆபீஸ் கிளம்புவது, சமைப்பது என இமிடேட் செய்ய ஆரம்பிப்பார்கள். மூன்று வயதாகும் குழந்தை, தன்னந்தனியாக கழிவறை சென்றுவருவதை அவர்களின் வேலையாக்க வேண்டும்.

பெற்றோர் கவனத்துக்கு...
பெற்றோர் கவனத்துக்கு...

கழிவறையில் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ள நான்கு வயதுக் குழந்தையைப் பழக்குங்கள். ஐந்து வயதுக் குழந்தை தனது பள்ளிக்கூடப்பை மற்றும் சாப்பாட்டுக்கூடையை மறக்காமல் பள்ளியிலிருந்து எடுத்துவர வேண்டும். ஆறு வயதுக் குழந்தை படித்து முடித்ததும் பள்ளிக்கூடப்பையை எடுத்து, உரிய இடத்தில் வைக்கவும், உலர்ந்த துணியை மடித்து வைக்கவும் கிச்சனில் காய்கறிகளைக் கழுவித்தரவும் உதவ வேண்டும். இதுபோன்ற சிறிய வேலைகளையும், சுயதேவைகளையும் செய்ய அனுமதிக்கவில்லையென்றால் குழந்தைகளின் ஆக்கமும் ஊக்கமும் தடைபடலாம்” என்கிற மருத்துவர், ``பொத்தி பொத்தி வளர்க்க நம் குழந்தைகள் என்ன ஆர்கிட்ஸ் பூக்களா?'' என்கிற கேள்வியோடு தொடர்கிறார்.

``வீடு என்றால் வேலைகளை எல்லோரும் பகிர்ந்துகொள்ளத் தான் வேண்டும் என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். தண்ணீர் பாட்டிலை தானே நிரப்புதல், உணவுத் தட்டை தானாகவே எடுத்துவந்து உணவை வாங்கிச் சாப்பிடுதல், தலைவாருதல், ஷூ பாலிஷ் போடுவது, விடுமுறை நாள்களில் வீட்டின் சுற்றுப்புறங்களைச் சுத்தம் செய்தல், செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், கார், பைக்குகளைச் சுத்தப்படுத்த உதவுதல், படுக்கை உறை மாற்றுதல், வாஷிங் மெஷினில் அவர்கள் துணிகளை எடுத்துப் போடுதல், வெயிலில் உலர்ந்த துணிகளை மடித்து வைத்தல், சமையலுக்குக் காய்கறி கழுவுதல், குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தம் செய்தல், சமையலறைப் பொருள்களை அடுக்குதல் என அவர்கள் வயதுக்குரிய சின்னச்சின்ன வேலைகளைச் செய்ய வையுங்கள். துணிகளை இஸ்திரி செய்தல் போன்ற அபாயகரமான வேலைகளைச் செய்ய அனுமதிக்காதீர்கள்.

வீட்டு வேலைகளில் குழந்தைகளை அவசியம் ஈடுபடுத்துங்கள்!

அதேநேரம் அவர்களை அன்றாட வாழ்வியலிலிருந்து அந்நியப்படுத்திவிடாதீர்கள். அவர்கள் விரும்பும்படி மீன் வளர்த்தல், பறவை, நாய்க்குட்டி, பூச்செடிகளை வளர்த்து அவற்றைப் பராமரிக்க வையுங்கள். அப்படி அவர்கள் செய்ய ஆரம்பிக்கும் வேலைகளில் குறைகள் காண்பதை விட்டுவிட்டு, ஊக்கப்படுத்தி சரியாக செய்ய வையுங்கள். முடிந்தவரை தொலைக்காட்சி, கணினி விளையாட்டுகள் போன்ற செயற்கையான விஷயங்களில் அவர்கள் மனம் அதிகளவில் ஈடுபடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். எந்தச் சூழ்நிலை என்றாலும் தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள உங்கள் குழந்தை களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதற்குப் பெற்றோரின் ஒத்துழைப்பும் அரவணைப்பும் அவசியம் தேவை!''

வீட்டு வேலைகளும் குழந்தைகளும் பற்றி மருத்துவர் ஷஃபி பேசும் வீடியோவைக் காணவீடியோவை http://bit.ly/Drshafi என்ற link-ல் காணலாம்.

வீட்டு வேலைகளில் குழந்தைகளை அவசியம் ஈடுபடுத்துங்கள்!

உங்கள் மொபைலில் இந்த QR code - ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.