முதல் பெண்கள்: ஆங்கிலத்தில் சுயசரிதை எழுதிய இந்தியாவின் முதல் பெண் எழுத்தாளர் கிருபாபாய் சத்தியநாதன்

கிருபாவுக்கு ஆங்கிலத்தின் மேல் பெரும் காதலை உண்டாக்கியவை பாஷ்காரின் தீவிர வாசிப்பும் உலக அனுபவமும்தான்
“திருமணமே வாழ்க்கையின் குறிக்கோள் என்பது எல்லாப் பெண்களின் கருத்தல்ல. ஆண்களில் நிறைய பேர் ஆங்கிலேயருடைய ஒழுக்கத்தையும் உடையையும் பாணி யையும் பின்பற்றுகிறீர்கள். ஆனால், அவர்களுடைய அகன்ற மனப்பாங்கை நீங்கள் பின்பற்றாமலிருப்பது எனக்கு வெறுப்பாக இருக்கிறது. அவர்கள் ஆண்களுக்கு சமமான இடத்தையும் உரிமையையும் பெண்களுக்குத் தருகிறார்கள். பெண்களின் பெருமை, சுயநலமின்மையை அறிந்தே அவர்கள் பெண்களுக்கு அதிக மதிப்பைத் தருகிறார்கள் என்று
சொல்லிவிட்டு அவனை விட்டு விலகிப்போய்விட்டேன்'' - தன் சுயசரிதையில் கிருபாபாய் சத்தியநாதன் கிருபாபாயின் குடும்பமே இப்படியொரு தெளிவை அவருக்கு அளித்திருக்கிறது. 1862-ம் ஆண்டு, இன்றைய மகாராஷ்டிர மாநிலத்தின் அகமத் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஹரிபந்த் ராய் கிஸ்தி - ராதாபாய் தம்பதியின் 13-வது குழந்தையாகப் பிறந்தார் கிருபாபாய். அந்தணர் சமூகத்தைச் சேர்ந்த ஹரிபந்த், கிறிஸ்துவத்துக்கு மதம் மாறி, மத போதகராகப் பணியாற்றியவர். அவர் மனைவி ராதாபாய் இந்துவாக இருந்தாலும், மதம் மாறி ஹரிபந்தை மணந்தவர். துரதிர்ஷ்டவசமாக கிருபா பிறந்து இரண்டே ஆண்டுகளில் தந்தை ஹரிபந்த் இறந்துபோனார். தந்தையை இழந்த சிறுமியை சகோதரர் பாஷ்கார் கிஸ்தி அரவணைத்து வளர்த்தார். கிருபாவின் வாழ்க்கையில் அவரது முக்கிய முடிவுகள் அனைத்தும் பாஷ்காரின் வழிகாட்டலில் தான் நடந்தன. படிப்பில் படுசுட்டியான கிருபாவுக்கு ஆங்கிலத்தின் மேல் பெரும் காதலை உண்டாக்கியவை பாஷ்காரின் தீவிர வாசிப்பும் உலக அனுபவமும்தான்.
துரதிர்ஷ்டத்தின் தொடர்ச்சியாக... அண்ணன் பாஷ்கார் காசநோய் கண்டு இறந்துபோக, சிறுவயதிலேயே மும்பையில் உள்ள உண்டுஉறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டார் கிருபா. பெரிதும் மனம் வருந்தியிருந்த கிருபாவுக்கு அங்கிருந்த ஆங்கிலேய, அமெரிக்க மிஷனரி பெண்கள் பெரும் ஆறுதலாக இருந்தார்கள். இங்கிலாந்தில் மருத்துவம் படிக்கும் வகையில் பணக்காரப் பெண்மணி ஒருவர் கிருபாவின் கல்விச் செலவில் பாதியை ஏற்கத் தயாராக இருக்கிறார் என்று தெரிவித்தார் அமெரிக்க மருத்துவ மிஷனரி பெண் ஒருவர். மீதிச் செலவை அவர்கள் சார்ந்திருந்த மிஷன் செய்வது என்றும் முடிவானது. ஒருவேளை இங்கிலாந்தில் கிருபா படித்துவிட்டால், உயர் படிப்புக்கு அவரை அமெரிக்கா அழைத்துச் செல்வதாகவும் அந்த மிஷனரி பெண் தெரிவித்தார்.

தந்தை, சகோதரன் என்று குடும்பத்தினர் அடுத்தடுத்து நோயால் இறந்துபோனதைக் கண்டு வருத்தப்பட்ட கிருபா, மருத்துவப் படிப்பின் மேல் பெரும் ஆசை கொண்டிருந்தார். ஆனால், சிறுவயது முதலே அடிக்கடி நோய்வாய்ப்படும் மகளை இங்கிலாந்து போன்ற குளிர் பிரதேசத்துக்கு அனுப்ப அந்தக் குடும்பம் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர், நண்பர் ஒருவர் அறிவுறுத்தியபடி, அன்றைய மதராஸ் மாகாணத்தின் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் கிருபாவைச் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது. கிருபாவைத் தாக்கும் தொடர் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து மதராஸின் வெப்பம் காக்கும் என்று குடும்பத்தினர் நம்பினார்கள்.
`முதல் பெண்கள்' வரிசையில் தன் இரு மனைவிகளையும் நிறுத்தி அழகு பார்த்திருப்பவர் சாமுவேல்.
பெட்டியுடன் மதராஸில் வந்து இறங்கிய கிருபாவை வில்லியம் தாமஸ் சத்தியநாதன் குடும்பம் ஏற்று ஆதரவளித்தது. அவர் அப்போதைய சிந்தாதிரிப்பேட்டை சீயோன் ஆலயத்தில் மதபோதகராகப் பணியாற்றி வந்தார். அவர் மனைவி அன்னா சத்தியநாதன் தன் சொந்த மகளைப் போலவே கிருபாவை கவனித்துக்கொண்டார். மராத்திய மொழி மற்றும் ஆங்கிலம் மட்டுமே அறிந்திருந்த கிருபா, தமிழ் கற்றுக்கொண்டார்.
`நாங்கள் ஓர் அறையைக் கடந்து இன்னொரு அறைக்குப் போய்க்கொண்டிருக்கையில் மாணாக்கன்மார் மெதுவான சத்தங்களுடன், ‘அடேயப்பா, அந்தப்புரப் பெண்ணப்பா’, ‘அசல் பிராமணத்தி’, ‘ஆணைப் பாரா பெண்ணப்பா’ என்றெல்லாம் சொல்லியது என் காதில் விழுந்தது. வகுப்பில் கிட்டத்தட்ட 200 முகங்களைக் கண்டேன். என்னைப் பார்த்தவுடன் அனைவரும் ‘கொய்யோ’ என்று ஓலமிட்டார்கள். சத்தம் அடங்க கால் மணி நேரம் ஆனது. என்னை அழைத்துச் சென்ற பெரியவர், ‘தைரியத்தை விடாதே, சீக்கிரம் அவர்கள் பழகிப்போவார்கள்’ என்று சொல்லிவிட்டுப்போனார்' என்று அவர் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் முதல் நாள் வகுப்புக்குச் சென்ற அனுபவத்தை சுயசரிதையில் விளக்கியுள்ளார் கிருபா.
வகுப்பில் முதல் மாணவியாக ஓராண்டு மருத்துவப் படிப்பை முடித்த நிலையில் மீண்டும் நோய்வாய்ப்பட்டார் கிருபா. அவரது சொந்த அனுபவங்களை சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் இதழில் 1877-1878-ம் ஆண்டுகளில் எழுதினார். இந்த அனுபவங்களின் தொகுப்பே பின்னாளில் அவரது சுயசரிதையான `சகுணா'வாக 1890-ம் ஆண்டு அவரின் கணவரால் வெளியிடப் பட்டது. இதன் மூலம் `இந்தியாவின் முதல் பெண் ஆங்கில சுயசரிதை எழுத்தாளர்' என்ற சிறப்பைப் பெற்றார் கிருபாபாய்.
கிருபாவின் படிப்புக்கு அத்துடன் முற்றுப்புள்ளி விழுந்தது. குன்றிய உடல்நலம் தேற கிருபா 1879-ம் ஆண்டு, புனே நகரிலுள்ள தன் சகோதரியின் வீட்டுக்குச் சென்றார். 1881-ம் ஆண்டு, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்ற வில்லியம் தாமஸ் சத்தியநாதனின் மகனான சாமுவேல் சத்தியநாதனை அங்கு சந்தித்தார். காதல் வயப்பட்டார். மெலிந்து உடல்நலம் குன்றியிருந்த இந்தப் பெண்ணை, இருதரப்புப் பெற்றோரின் சம்மதத்துடன் விரும்பித் திருமணம் செய்துகொண்டார் சாமுவேல்.
திருமணத்துக்குப் பின் உதகையின் பிரீக்ஸ் நினைவுப் பள்ளியில் தலைமையாசிரியர் பதவிக்கு சாமுவேல் நியமிக்கப்பட்டார். உதகையின் இதமான குளிர் கிருபாவின் உடல்நிலையை மீட்டெடுத்தது. அங்கு சர்ச் மிஷனரி சொசைட்டி அமைப்புடன் இணைந்த கிருபா, இஸ்லாமியப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கி நடத்தினார். மற்ற பெண்களைவிட இஸ்லாமியப் பெண்களும், அந்தண விதவைகளுமே அதிகம் பாதிக்கப் படுகிறார்கள் என்று உணர்ந்திருந்தார் அவர். அங்குள்ள பிற பள்ளிகளிலும் அவ்வப்போது வகுப்புகள் எடுத்துவந்தார். மலைவாழ் தோடர் இன மக்களைச் சந்தித்து உரையாடிய அனுபவத்தை முதன்முதலில் ‘சவுத் இந்தியா அப்சர்வர்’ இதழில் ‘ஏ விசிட் டு தி தோடாஸ்’ என்ற கட்டுரையாக எழுதினார். இதன் தொடர்ச்சியாக ‘அன் இந்தியன் லேடி’ என்ற புனைபெயரில் `நேஷனல் இந்தியன் ஜர்னல்' போன்ற பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார்.
மூன்றாண்டுக்குப் பிறகு ராஜமுந்திரியி லுள்ள வேறு பள்ளிக்கு சாமுவேல் மாற்றப்பட்டார். அப்பகுதியின் வெப்பம் கிருபாவின் உடல்நிலையை மோசமாக்க, கும்பகோணத்துக்கு இடமாறுதல் பெற்றார்கள். 1886-ம் ஆண்டு. ஒருவழியாக மதராஸுக்குத் திரும்பினார்கள். 1890-ம் ஆண்டு. பதிப்பிக்கப் பட்ட கிருபாவின் ‘சகுணா’வை வாசித்த விக்டோரியா மகாராணி, அவரது எழுத்தால் ஈர்க்கப்பட்டு அவர் எழுதிய பிற நூல்கள் மற்றும் கட்டுரைகளை அனுப்பக் கூறினார்.
1892-ம் ஆண்டு, கிருபா சாமுவேல் தம்பதிக்கு மகன் பிறந்தான். விரைவிலேயே நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தழுவினான். அதே ஆண்டு, கிருபாவுக்குப் பெரும் ஆறுதலாக இருந்த சாமுவேலின் தாயும் இறக்க, அடுத்தடுத்த இழப்புகளால் கிருபாவின் உடல்நிலை இன்னும் மோசமானது. உடல்நிலை தேற மும்பை சென்ற கிருபாவுக்கு அங்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்குக் காசநோய் இருந்ததை உறுதிசெய்த மருத்துவர்கள், அதை குணப்படுத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்கள்.
சாமான்யர்கள் இந்தச் செய்தி கேட்டு நொறுங்கிப்போயிருப்பார்கள். கிருபா இதை எதிர்நோக்கி இருந்தாரா என்று தெரிய வில்லை. இடைவெளியின்றி தன் அடுத்த புதினத்தைக் கையில் எடுத்தார். ‘கமலா’ உருப்பெறத் தொடங்கியது. கமலாவின் கதைக்கரு, திருமணத்துக்குப் பின்னான கிருபாவின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. பின்னர் சாமுவேலின் பெற்றோருக்கு நினைவஞ்சலிகள் எழுதத் தொடங்கினார். மாமியார் அன்னாவின் நினைவுக்கட்டுரையை முடிக்கும்வரைகூட காலன் கிருபாவை விட்டுவைக்கவில்லை. 1894 ஆகஸ்ட் 3 அன்று மரணமடைந்த கிருபாவுக்கு அப்போது வயது 32 மட்டுமே.
`தன் அரிய திறனை நாட்டின் நலனுக்கு அர்ப்பணித்தவர் கிருபா. இந்தியாவின் முதல் பெண் நாவலாசிரியர் என்கிற பெருமையைப் பெற்றுத்தந்த சகுணா, கமலா நாவல்கள் அவரது நெஞ்சத்தூய்மையையும், நல்லெண்ணத்தையும் இறைப்பற்றையும் தெரிவிக்கின்றன' என்று கிருபாபாயின் நினைவாக தான் வழிபட்டுவந்த சிந்தாதிரிப்பேட்டை சீயோன் தேவாலயத்தில் நினைவுப்பலகை ஒன்றை சாமுவேல் வடித்திருக்கிறார்.
கிருபாவின் நினைவாக இன்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் சிறந்த மாணவருக்கு கிருபாபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது; ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவிக்கான கிருபா பாய் நினைவு தங்கப்பதக்கத்தை சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிவருகிறது. கிருபாபாய் நினைவு தங்கப்பதக்கத்தை 1898-ம் ஆண்டு வென்ற ஹேனா ரத்தினத்தை சாமுவேல் இரண்டாவதாக மணமுடித்தார். மறைந்த மனைவி கிருபா எழுதிய ‘கமலா’ என்ற நாவலின் நினைவாக ஹேனாவுக்கு கமலா என்று பெயர்சூட்டி மகிழ்ந்து வாழ்ந்தார்.
`முதல் பெண்கள்' வரிசையில் தன் இரு மனைவிகளையும் நிறுத்தி அழகு பார்த்திருப்பவர் சாமுவேல். ஆங்கிலத்தில் சுயசரிதை எழுதிய இந்தியாவின் முதல் பெண் எழுத்தாளர் கிருபாபாய் மற்றும் இந்தியாவில் பெண்களுக்கான முதல் ஆங்கில இதழைத் தொடங்கி நடத்திய நாட்டின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியர் கமலா ஆகிய இரு பெண்களையும் செதுக்கி வழிநடத்தியவர் என்கிற வகையில், இந்தியாவின் தலைசிறந்த ஆண் ‘பெண்ணியலாளர்’ சாமுவேல் சத்தியநாதனையும் பெண்கள் நினைவுகொள்ள வேண்டும்!