தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ரத்தம் கொடுத்த அம்மா... வலி தீர்க்கும் மகள்... இரண்டு மருத்துவர்களின் கதை!

 சேது பாஸ்கர் - மல்லிகா திருவதனன்
பிரீமியம் ஸ்டோரி
News
சேது பாஸ்கர் - மல்லிகா திருவதனன்

அம்மா & மகள்

ஒரு வீட்டில் இரண்டு தலைமுறை மருத்துவர்கள் இருப்பது புதிய விஷயம் இல்லை. ஆனால், இந்த அம்மா - மகள் மருத்துவர்கள் சேவையில் சற்று வித்தியாசமானவர்கள்.

அம்மா, சேது பாஸ்கர் நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர். சி.எம்.சி-யின் முதல் பேட்ச் மாணவி. மகப்பேறு நேரத்து மரணங்களைத் தடுப்பதற்காகவே இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தவர். இப்போது இவருக்கு 95 வயதாகிறது.

மகள், மல்லிகா திருவதனன் புற்றுநோய் மருத்துவர் மற்றும் நீண்ட காலம் நோயுற்றவர் களின் மனம் மற்றும் உடல்வலிகளைப் போக்குபவர். நோயாளிகளின் மனங்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமென்று தன் துறையையே மாற்றிக்கொண்டவர்.

இருவருமே மருத்துவத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர்கள். இவர்களிடம் உரையாடிய போது...

உங்கள் காலத்து மருத்துவம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் சேது அம்மா?

``இப்போது போல அப்போது சிறப்பு மருத்துவர்கள் தங்கள் துறைசார்ந்த மருத்துவம் மட்டுமே பார்த்ததில்லை. நான் மகப்பேறு மருத்துவர் என்றாலும் தேள் கொட்டியவர்கள், பாம்பு கடித்தவர்கள்கூட என்னிடம் சிகிச்சைக்காக வருவார்கள். அவர்களுக்கும் சிகிச்சை செய்வேன். குழந்தைகளுக்கு வருகிற சிரங்குகளுக்கான களிம்புகூட ஸ்டாக் வைத்திருப்பேன். அந்தக் காலத்து மனிதர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு டாக்டர் என்றால் கடவுள் மாதிரி. மருத்துவர்களால்தான் தங்களுக்கு நோய் குணமாகும் என்பதை முழுமனதாக நம்புவார்கள். இப்போது கொரோனா வார்டுகளில் பணியாற்றுகிற மருத்துவர்களுக்கு என்ன மரியாதை கிடைக் கிறதோ, அதேபோன்ற மரியாதை எங்கள் காலத்தில் எல்லா மருத்துவர்களுக்கும் கிடைத்தது.''

 சேது பாஸ்கர் - மல்லிகா திருவதனன்
சேது பாஸ்கர் - மல்லிகா திருவதனன்

மயக்கவியல் நிபுணரான நீங்கள் வலி நீக்கும் துறையில் துறைக்கு மாறியதற்கு என்ன காரணம் மல்லிகா மேடம்?

``நான் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, நோயாளிகளின் வேதனைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கேற்றபடி செயல்பட வேண்டும் என ஆசைப்பட்டேன். ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், நோயாளிகளுடன் நெருங்கிப் பழக வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நூறு சதவிகிதம் முடியவில்லை. இப்படியே 21 வருடங்கள் ஓடிவிட்டன. இதில் கடைசி ஐந்து வருடங்கள் என் மனம் ‘இப்போது செய்துகொண்டிருக்கிற மருத்துவம் உனக்கான களமில்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

இந்த நிலையில்தான் என் அப்பாவுக்குக் கடுமையான முதுகுவலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். துணைக்கு நான்தான் தங்கியிருந்தேன். அப்போது அந்த மருத்துவ மனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைப் பார்த்தேன். அங்கு சிகிச்சைக்குப் பிறகு உடல்வலி, மனவலியோடு படுக்கையில் கிடந்தவர்களின் வேதனை என் தூக்கத்தை அழித்துவிட்டது.

ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருந்த துறையில் நோயாளிகளுடன் நெருங்கிப் பழக முடியாமல் தவித்துக்கொண்டிருந்த எனக்கு, `இப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதுதான் என் வாழ்க்கை' என்று தோன்றியது. உடனே அந்தத் துறைக்கான பயிற்சிகளை எடுக்க ஆரம்பித்தேன்.

பிறகு சென்னையில் `ல‌க்ஷ்மி பெயின் அண்டு பேலியேட்டிவ் கேர்’ என்கிற டிரஸ்ட்டை, ஒரே எண்ணமுடைய சில மருத்துவர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தேன். இங்கு முழுக்க முழுக்க இலவச சிகிச்சைதான். பத்து நாள்கள் வரை இங்கேயே தங்கியும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். ஒரு டாக்டராக என் பேஷன்ட்களின் உடல்நிலையைத் தெரிந்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தில் ஒருவராக அவர்களின் மனநிலை, பொருளாதார நிலையையும் தெரிந்து ஆறுதல் சொல்கிறேன். ஒரு மருத்துவர் நோயாளிகளுடன் நிறைய பேச வேண்டும். அதுதான் நோயாளிகளின் முதல் தேவை. அதைக் கடந்த 20 வருடங்களாக நூறு சதவிகிதம் செய்து வருகிறேன்.''

வீட்டில் பிரசவம் பார்க்கிற அந்தக் காலப் பழக்கத்தை மறுபடியும் சிலர் ஆதரிப்பது பற்றியும், செவிலியர் பிரசவம் பார்த்ததால் சிசு இறந்துவிட்டது என எழுகிற குற்றச்சாட்டுகள் பற்றியும் மருத்துவர் சேது பாஸ்கரிடம் கேட்டோம்.

“பிரசவம் என்பது பெண்களுக்கு எல்லாக் காலத்திலுமே மறுபிறப்புதான். வீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படுகிற உயிரிழப்புகளைத் தடுக்கத்தான் அந்தக் காலத்தில் நானெல்லாம் மகப்பேறு மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்தேன். அந்தக் காலத்திலும் சரி, மகப்பேறு மருத்துவம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் சரி, வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது செய்யக் கூடாத ஒன்று. குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பை சுருங்கவில்லையென்றால் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த முடியாது. இது உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தி விடலாம். வீட்டில் பிரசவம் பார்ப்பது கூடவே கூடாது. பிரசவம் பார்ப்பதற்கென்றே பயிற்சிபெற்ற சீனியர் நர்ஸ்கள் தாராளமாக பிரசவம் பார்க்கலாம். அதிலொன்றும் பிரச்னையில்லை.”

டாக்டர்களிடம் மனம்விட்டுப் பேச முடிந்தாலே நோயாளிகளின் பாதி நோய் போய்விடும்.

டாக்டரைப் பார்த்தாலே பாதி நோய் போய் விடுகிறதே... இதன் காரணம் என்ன?

“இதுவொரு பாசிட்டிவ் உளவியல். நோயாளிகளைப் பேச அனுமதிக்கிற மருத்துவர் களிடம் இந்த உணர்வு முழுமையாகக் கிடைக்கும். நோயாளிகளைப் பேசவிட வேண்டும். அதிலிருந்தே அவர்களுடைய பிரச்னைகளைக் கண்டுபிடித்து விடலாம். டாக்டர்களிடம் மனம்விட்டுப் பேச முடிந் தாலே நோயாளிகளின் பாதி நோய் போய்விடும். இதை டாக்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் டாக்டர் மல்லிகா திருவதனன்.

பேஷன்ட் - டாக்டர் உறவு எப்படியிருக்க வேண்டும்?

“டாக்டர்களிடம் எதையும் மறைக்கக் கூடாது என்பார்கள் இல்லையா... நோயாளிகள் அப்படி எதையும் மறைக்காத அளவுக்கு டாக்டர்கள் நடந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்” என்கிற சேது பாஸ்கரிடம், அவரது மருத்துவ வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் பற்றிக் கேட்டோம்.

“அது நான் ஈரோட்டில் பணி செய்து கொண்டிருந்த நேரம். அப்போதெல்லாம் வலி நன்கு வந்த பிறகுதான் மருத்துவமனைக்கே வருவார்கள். அந்தப் பெண்ணும் அப்படித்தான் வந்தார். நான்தான் பிரசவம் பார்த்தேன். குழந்தை பிறந்த பிறகு நஞ்சுக்கொடி விழாத தால், அந்தப் பெண்ணுக்கு ரத்தப்போக்கு நிற்கவேயில்லை. அந்தக் காலத்தில் இப்போதுபோல உடனே ரத்தம் கிடைப்பதும் கடினம். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பெண்ணுக்கும் எனக்கும் ஒரே ரத்த வகை என்பதால் நானே ரத்தமும் கொடுத்து காப்பாற்றினேன்” என்கிறார் மலரும் நினைவுகளுடன்.

கொரோனா காலத்தில் மட்டுமல்ல; டாக்டர்கள் எக்காலத்திலும் கண்ணெதிரே வாழ்கின்ற தெய்வங்கள்தானே!