ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

“இரக்கம், புறக்கணிப்பு இரண்டும் வேண்டாம்!” - உம்முல் கேர்

உம்முல் கேர்
பிரீமியம் ஸ்டோரி
News
உம்முல் கேர்

தன்னம்பிக்கை

``மூணு வயசுவரை அழுகை என்ற உணர்ச்சியே எனக்கு வரலையாம். என் தலை சரியா நிக்கலையாம். தவழாம இருந்தேனாம். சொல்லப்போனா, என் உடம்புல பெரிசா எந்த இயக்கமும் இல்லையாம். அப்போ மருத்துவ விழிப்புணர்வு இல்லாததால, எனக்கு என்ன பிரச்னைனு என் பெற்றோரால கண்டுபிடிக்க முடியலை. ஆயுர்வேத சிகிச்சை உட்பட எத்தனையோ சிகிச்சைகளுக்கு என்னைக் கூட்டிட்டுப் போயிருக்காங்க எங்கப்பாவும் அம்மாவும். நான் ஓரளவுக்கு வளர்ந்த பிறகுதான், எனக்கு உடல்நலக் குறைபாடு இருக்குனு உணர்ந்தேன். அதுக்காக முடங்கிப் போயிடாம, என்னால முடிஞ்ச அளவுக்கு ஆக்கபூர்வமா செயல்படணும்னு முடிவெடுத்தேன். அதன் பிறகு என் புது உலகம் தன்னால பிறந்துச்சு” - தன் உடல்நலப் பிரச்னை மற்றும் அதனால் ஏற்பட்ட வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றிப் பேசுகிறார் உம்முல் கேர்.

உம்முலுக்குப் பூர்வீகம் பெங்களூரு. இவருக்குப் பிறப்பிலேயே செரிப்ரல் பால்சி குறைபாடு ஏற்பட்டிருந்தது. ஆனால், அதைத் தனது 21 வயதில்தான் அவரால் அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது. அதற்குப் பிறகு அடிப்படையிலிருந்து படிக்க ஆரம்பித்தவர், இன்று வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார்; மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். அந்த நம்பிக்கை மனுஷியின் வார்த்தைகள், விதியை எதிர்க்கும் தெம்பு தருபவை.

``அப்போ நாங்க வீல்சேர்கூட வாங்க முடியாத நிலையிலிருந்தோம். நடக்க முடியாத என்னை, இடுப்புல தூக்கிக்கிட்டேதான் அம்மா சிகிச்சைக்குக் கூட்டிட்டுப்போவாங்க.

21 வயசுவரைக்கும் ஸ்கூல் பக்கம் எட்டிக்கூடப் பார்த்ததில்லை. அதனால வெளியுலகமே தெரியாம இருந்திருக்கேன். என் தாய்மொழியான கன்னடம்கூட சரியாகத் தெரியாது. ஆனாலும், ‘கடவுள் உன்னை இப்படிப் படைச்சுட்டாரே’ங்கிற அனுதாப வார்த்தைகளோ, புறக்கணிப்புகளோ, அவமானங்களோ என்னை அசைத்துப் பார்க்கலை.

சென்னையிலிருக்கும் `வித்யா சாகர்’ என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புல சில வாரங்கள் இருந்திருக்கேன். அந்தத் தொடர்புல அவங்களுக்கு போன் பண்ணிப் பேசினேன். அவங்களோட பேச்சு எனக்கு நம்பிக்கை கொடுத்துச்சு. சென்னைக்கு ஷிஃப்ட் ஆனேன்.

“இரக்கம், புறக்கணிப்பு இரண்டும் வேண்டாம்!” - உம்முல் கேர்

‘வித்யா சாகர்’ அமைப்புக்கு வாழ்க்கை என்னைக் கொண்டுவந்து சேர்த்தப்போதான், எனக்கிருப்பது `செரிப்ரல் பால்சி’ என்ற உடல்நலக் குறைபாடு என்பதையே நான் தெரிஞ்சுக்கிட்டேன். இதுக்கு நிரந்தரத் தீர்வு இல்லைங்கிற நிதர்சனமும் புரிஞ்சுது. நேஷனல் ஓப்பன் ஸ்கூலில் நேரடியா பத்தாவது பரீட்சைக்குப் படிக்க ஆரம்பிச்சேன். நான் மத்தவங்களைப்போல நார்மல் கிடையாது என்பதால், எனக்குப் படிக்கிறதே பெரிய சவால்தான். ஆனாலும், மூணு வருஷத்துல பத்தாம் வகுப்பை முடிச்சேன். பிறகு, ப்ளஸ் டூ முடிச்சேன். சமூகத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும், பிறருக்கு உதவணும்னு சோஷியாலஜி படிச்சேன். அமெரிக்காவில் நடந்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் இந்தியா சார்பில் கலந்துகிட்டேன்.

நான் காலேஜ்ல படிச்சப்போ, `நீ நல்லா பெர்ஃபார்ம் பண்ணினால்தான், இதைக் கேட்க உனக்கு உரிமை இருக்கு’னு ஒரு விஷயத்துக்காக ஒருவர் என்னிடம் சொன்னார். அந்த வார்த்தைக்காக நான் வருத்தப்படலை. ஆனா, சமூகத்துல நியாயமான உரிமைக்காகப் போறாடுறவங்களுக்கு உதவ வக்கீலாக முடிவெடுத்தது அந்தத் தருணத்தில்தான். சட்டப் படிப்பு படிச்சேன். பல்வேறு சவால்களுக்குப் பிறகு, பார் கவுன்சில்ல வக்கீலா பதிவுசெய்தேன். இனி நீதிமன்றத்தில் வாதாடப்போறேன்’’ என்பவர், இப்போதும் ‘வித்யா சாகர்’ இல்லத்தில்தான் வசிக்கிறார்.

‘‘இங்கிருக்கிற `தி டிஸ்எபிலிட்டி லெஜிஸ்லேஷன் யூனிட்’ என்ற பிரிவில் வேலை செய்யறேன். இதன் மூலம் சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்காக பல்வேறு பணிகளைச் செய்யறோம். தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டப் பிரச்னைகளுக்கும் உதவறேன்.

இப்பவும் நான் தொடர்ந்து தெரப்பி எடுத்துட்டிருக்கேன். தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது மொழிகள் எனக்குத் தெரியும். டிக்கெட் புக் பண்றது உட்பட அத்தியாவசிய வேலைகள் பலவற்றையும் செய்வேன். பலமுறை தவறாகவும் செய்தேன். அதையும் மீறிப் பல விஷயங்களைக் கத்துகிட்டு, பிறர் உதவியை எதிர்பார்ப்பதைக் குறைச்சுக்கிறேன்.

செரிப்ரல் பால்சி ஒரு நோயல்ல, ஒருவித உடல்நலக் குறைபாடுதான்கிறதை மக்கள் உணரணும். பொதுவாக மாற்றுத்திறனாளிகளைப் பார்த்து இரக்கப்படுவாங்க அல்லது புறக்கணிப்பாங்க. ரெண்டுமே வேண்டாம். மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்க. முடியாதபட்சத்தில் புறக்கணிப்புகளைக் கைவிடுங்க. அதுகூட எங்க முன்னேற்றதுக்கு நீங்க செய்ற உதவியா அமையும்!’’ - கோரிக்கையாகச் சொல்கிறார் உம்முல்.

பற்கள் பலமாக வேண்டுமா?

“இரக்கம், புறக்கணிப்பு இரண்டும் வேண்டாம்!” - உம்முல் கேர்

`சுக்கு, மருதம்பட்டை, வெள்வேல மரப்பட்டை, மருக்காரைப் பழம், எருக்கன் வேர், ஆவாரைப் பூக்கள், பிரப்பன் கிழங்கு இவற்றைச் சம அளவு எடுத்து, ஒன்றிரண்டாக இடிக்கவும். அவற்றைத் தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, ஆறிய பின் சில வாரங்கள் வாய்க்கொப்புளிக்க, முதியவர் பற்களும் இளைஞர் பற்கள்போல உறுதிபெறும்’ என்கிறது தேரையர் பாடல் ஒன்று.