
அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்
விகடனின் சினிமா விருதுகள் விழா. பிரபலங்களால் நிறைந்திருந்தது பிரமாண்ட அரங்கு. ஜி.வெங்கட்ராமின் பிரத்யேக போட்டோஷூட்டுக்காகப் போடப்பட்டிருந்த செட்டை பார்க்க அங்கே வந்திருந்தார் நிவேதா. இடுப்புக்குக் கீழ் வளர்ச்சியற்ற நிலையிலிருந்த அவரை வீல் சேரில் அமரவைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார், அந்த செட்டை வடிவமைத்திருந்த ஆர்ட் டைரக்டர் தேவா. தன் உதவியாளர்கள் முதல் அரங்கிலிருந்த பிரபலங்கள்வரை பலருக்கும் தன் மனைவியைப் பெருமையோடு அவர் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்த காட்சி அவ்வளவு அழகாக இருந்தது. மாற்றுத்திறனாளி மனைவியைப் பொதுவெளியில் பெருமையோடு காட்ட முற்பட்ட தேவாவின் முகத்திலும் அகத்திலும் அவ்வளவு காதல். நிவேதா, செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வளர்ந்து வருபவர். இருவருக்குமான காதல் கதையைக் கேட்டால் நிவேதாவின் முகம் வெட்கத்தில் சிவக்கிறது.
காதல் கதைக்குச் செல்வதற்கு முன் கொஞ்சம் கண்ணீர்க் கதையும் கேட்போம்.
‘`அப்பா புல்லட் கந்தன். சினிமாவில் ஸ்டன்ட்மேனா இருந்தார். தன் சொந்த அக்கா மகளையே கல்யாணம் பண்ணிக்கிட்டார். அந்தக் கல்யாணத்தின் பலனாதான் நான் இப்படிப் பிறந்தேன்னு சொல்றாங்க. நான்தான் வீட்டுக்கு மூத்தவள். பிறந்து ஒன்றரை வயசுவரைக்கும் நல்லாதான் இருந்தேன். அப்புறம்தான் பிரச்னையே... நடக்கும்போது பேலன்ஸ் இல்லாம விழுவேன். அடிக்கடி ஃபிராக்சர் ஆகும். பிடிமானம் இல்லாம நடக்கவே முடியாத நிலை வந்தது. `கால்சியம் குறைபாடு, அதனால எலும்பு வளர்ச்சியில்லை'னு காரணம் சொன்னாங்க. பார்க்காத டாக்டர்ஸ் இல்லை, செய்யாத ட்ரீட்மென்ட் இல்லை. என்னுடைய பிரச்னைக்குத் தீர்வே இல்லைன்னு தெரிஞ்சும் பல டாக்டர்களும் அலையவெச்சு, பணத்தைப் பிடுங்கினாங்க. ‘உங்க மக வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். ஆஸ்பத்திரிக்குச் செலவு பண்றதைத் தவிர்த்து, அந்தப் பணத்தை அவ பெயர்ல சேர்த்துவையுங்க’னு நல்லவிதமா அட்வைஸ் பண்ணின டாக்டர்ஸையும் பார்த்திருக்கோம்.

அம்மா அப்பா எனக்கு எந்தக் குறையும் வைக்காம இளவரசி மாதிரி வளர்த்தாங்க. ‘எந்த நிமிஷம் எங்கே விழுந்து அடிபடுமோ... அப்புறம் நாங்க பதில் சொல்ல வேண்டியிருக்கும்’னு சொல்லி எந்த ஸ்கூல்லயும் என்னைச் சேர்த்துக்கத் தயாரா இல்லை. பெரிய போராட்டத்துக்குப் பிறகு ஒரு ஸ்கூல்ல சேர்த்தாங்க. அம்மாதான் என்னைத் தூக்கிட்டுப்போயிட்டு, மறுபடி தூக்கிட்டு வருவாங்க.
வீட்டிலிருந்தபோது கட்டில்லேருந்து கீழே விழுந்து ஃபிராக்ச்சரானதால, அதோடு படிப்பை விட்டுட்டேன். அம்மா அப்பா படிக்கவைக்க தயாரா இருந்தாங்க. ஆனா, எனக்கு வெறுத்துப் போச்சு. வீட்டுலயே எனக்கு பாட்டு கத்துக்கொடுத்தாங்க. பத்தாவது வரைக்கும் படிச்சேன். ஏ.ஆர்.ரஹ்மான் சாருடைய மியூசிக் ஸ்கூல்ல ஹிந்துஸ்தானி கத்துக்கிட்டேன்.
ஷார்ட் ஃபிலிம் டைரக்ட் பண்றது, டப்பிங் பேசறதுன்னு நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கேன். டைரக்டர் ராம் மூலமா பாஃப்டா ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ரிசப்ஷனிஸ்ட் வேலை கிடைச்சது. ரொம்ப நேரம் உட்கார முடியாததால அந்த வேலையிலும் நீடிக்க முடியலை.
நினைவு தெரிஞ்ச நாள்வரைக்கும் எனக்கு வீட்டுல வீல்சேர் வாங்கித் தரலை. எங்கே போனாலும் என்னைத் தூக்கிட்டுப் போக அம்மாவும், உலகத்தையே வீட்டுக்குள்ளே கொண்டு வர அப்பாவும் தயாரா இருந்தாங்க. 13 வயசுவரைக்கும் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு அதைத் தொடர எனக்கு விருப்பமில்லை. பெரிய மனுஷியானதும் என் உடம்பில் இயல்பிலேயே ஒரு கூச்ச உணர்வு வந்திருச்சு. மத்தவங்களுக்கு காட்சிப்பொருளா இருக்கிறதுல எனக்கு விருப்பமில்லை. இதுதான் வாழ்க்கைனு ஆயிடுச்சு. இனி கடவுள் விட்ட வழின்னு சொல்லி எல்லா ட்ரீட்மென்ட்டையும் நிறுத்திட்டேன். 18 வயசுல வீல் சேர் கேட்டு அடம்பிடிச்சேன். அப்பவும் அப்பா மறுத்தார்.

‘18 வயசுல ஒரு பொண்ணு அம்மா மேல ஏறி உட்கார்ந்துகிட்டு எல்லா இடங்களுக்கும் போறது எவ்வளவு பெரிய கொடுமைனு யோசிச்சுப் பாருங்க. அம்மாவை உடலளவிலும் என்னை மனசளவிலும் ரொம்பவே பாதிக்குது. நான் காலத்துக்கும் இன்னொருத்தர் உதவியை எதிர்பார்த்தே வாழணுமா, தனியா இயங்கணுமானு நீயே முடிவு பண்ணிக்கோ’ன்னு சொல்லி அழுதேன்.
அதுவரைக்கும் தரையிலேயே உட்கார்ந்திருப்பேன். எங்கேயாவது வெளியில போகணும்னா அம்மா தூக்கிட்டுப் போய் ஆட்டோவில் உட்காரவைப்பாங்க. அந்த நாலஞ்சு அடிகள்தான் நான் பார்க்கிற உலகம்.
என் நிலைமையைப் புரிஞ்சுகிட்டு வீல்சேர் வாங்கித் தந்தார் அப்பா. முதன்முறை நான் வீல்சேர்ல உட்கார்ந்தபோது என் உலகமே விரிஞ்ச மாதிரியும், கால்கள் சரியாயிட்ட மாதிரியும் ஃபீல் பண்ணினேன்’’ - மீண்டும் அதே உணர்வுக்குள் செல்பவரைப் பக்குவமாகத் தூக்கி வீல்சேரில் அமரவைக்கிறார் கணவர் தேவா.
‘`என் ஃபிரெண்ட்ஸுக்கெல்லாம் வரிசையா கல்யாணமாகிட்டிருந்தது. எனக்கும் கல்யாண ஆசை வந்தது. ஊரே என்னை அழகினு சொன்னாலும் அந்த அழகு என் கல்யாணத்துக்கு உதவலை. ‘மாற்றுத்திறனாளியா பிறந்தது என் தப்பா? உறவுக்குள் கல்யாணம் பண்ணிக் கிட்ட அம்மா அப்பா தப்பா தெரியலை. எனக்கு ஒரு வழி காட்டு’ன்னு நான் நம்பும் அம்மன் கோயிலுக்குப் போய் அவ மடியில படுத்துட்டுக் கதறி அழுதேன். அடுத்த வாரமே அவ கண்ணைத் திறந்தாள்.
எங்க வீட்டுக்காரர் தேவா ஃபேஸ்புக்ல எனக்கு ரொம்ப நாள் ஃபிரெண்ட். ஒரு வருஷமா எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கார்போல... எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. அவர் அனுப்பின அத்தனை மெசேஜும் தமிழ்ல இருந்ததால எனக்குப் புரியலை. நான் எடுத்த ஷார்ட் ஃபிலிம்முக்கு ஓவியர் கேரக்டர் தேவைப்பட்டது. என் ஃபிரெண்ட் சொன்னதைக் கேட்டு ஃபேஸ்புக்ல அவரை கான்டாக்ட் பண்ணினேன். அப்பதான் ஒரு வருஷமா அவர் எனக்கு மெசேஜ் அனுப்பினது தெரியவந்தது. நம்பர் கேட்டேன். அனுப்பினார். அப்படியே பேச ஆரம்பிச்சோம். திடீர்னு ஒருநாள் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னார். முதல் திருமணம் தந்த தோல்வி, அதன் தொடர்ச்சியா தற்கொலை முயற்சின்னு அவரும் விரக்தியின் உச்சத்தில் இருந்தார். எதையும் மறைக்காம என்கிட்ட பகிர்ந்துகிட்டார்.
அவருடைய அணுகுமுறை பிடிச்சிருந்தது. வீட்டுல பேசச் சொன்னேன். அம்மா அப்பா சம்மதிச்சாதான் கல்யாணம்னு சொன்னேன். அதுவரைக்கும் உள்ளங்கையில வெச்சுத் தாங்கினதால, இனி இவர் என்னை எப்படிப் பார்த்துப்பாரோனு அப்பாவுக்கு மட்டும் கொஞ்சம் பயமிருந்தது. அவருக்குத் தெரிஞ்ச சினிமா நண்பர்கள்கிட்ட விசாரிச்சிருக்கார். அத்தனை பேரும் சொல்லி வெச்ச மாதிரி என் வீட்டுக்காரருக்கு நல்லவர்னு சர்ட்டிஃபிகேட் கொடுத்த பிறகுதான் அப்பாவுக்கு நம்பிக்கை வந்தது. பிரமாண்டமான நிச்சயதார்த்தம், அதைவிட பிரமாண்டமான கல்யாணம்னு என் கனவு நனவானது. ரிசப்ஷனுக்கு எங்கப்பா எனக்கு கேரவன் ஏற்பாடு செய்திருந்தார். ‘உன் பொண்ணு என்ன ஹீரோயினா... இவ்வளவு ஆடம்பரம் தேவையா’னு கேட்டவங்களுக்கு ‘ஆமாம்... அப்படித்தான்’னு பதில் சொன்னார் அப்பா!
கல்யாணத்துக்குப் பிறகு ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் வந்தோம். அதுக்கு முன்னாடி வரை கூட்டுக்குடும்பத்துல இருந்தேன். தனிக்குடித்தனத்தில் நான்கு சுவர்கள்தான் எனக்குத் துணை. நடமாடுற நிலைமைல இருந்தாலாவது நாலு இடங்களுக்குப் போயிட்டு வர முடியும். நான் என்ன செய்ய முடியும்? சினிமா வேலையில இருக்கறதால ஷூட்டிங் போனா என் கணவர் வீட்டுக்கு வர ரெண்டு மாசம்கூட ஆகும். ஒருகட்டத்தில் வெறுமை என்னை வாட்ட ஆரம்பிச்சது. இயல்பிலேயே எனக்கு குழந்தைகளைப் பிடிக்கும். குழந்தை பெத்துக்கணும்னு ஆசை வந்தது. என்னுடைய நிலைமையில் குழந்தையைச் சுமந்து பெற்றெடுப்பது எவ்வளவு கஷ்டம்னு நினைச்சு, அம்மாவும் என் கணவரும் குழந்தை வேண்டாம்னு சொன்னாங்க. நான் என் முடிவில் உறுதியா இருந்தேன் தத்தெடுக்கும் முயற்சிகள்வரை போனேன். அப்பதான் அந்த அதிசயம் நடந்தது.
எனக்கு எப்பவுமே பீரியட்ஸ் தள்ளித்தள்ளி தான் வரும். பலமுறை பிரக்னன்சி கிட் வெச்சு டெஸ்ட் பண்ணிப் பார்த்து ஏமாந்து போயிருக்கேன். திடீர்னு உடம்பு குண்டாயிட்டே போச்சு. வயிறும் பெருசா இருந்தது. இந்த முறையும் சந்தேகத்தோடு டெஸ்ட் எடுத்துப் பார்த்தேன். பாசிட்டிவ்னு வந்தது. அது உண்மையா இருக்குமா... மறுபடியும் மெஷின் ஏமாத்துதான்னு மனசுக்குள்ள நடுக்கம், பதற்றம். உடனே டாக்டர்கிட்ட போனேன். ஸ்கேன் எடுத்தாங்க. அப்போ நான் அஞ்சரை மாச கர்ப்பம். சந்தோஷம் ஒருபக்கம்... மிச்ச நாள்களை எப்படிக் கடக்கப்போறோம்கிற பயம் இன்னொரு பக்கம்...
டாக்டர் கமலா செல்வராஜை தேடிப் போனேன். என்னை மாதிரி ஒரு பெண்ணுக்கு நல்லபடியா பிரசவம் பார்க்க அவங்களாலதான் முடியும்னு ஒரு நம்பிக்கை. ஆனா, இப்படியொரு பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கிறது அவங்களுக்கும் முதல் முறைன்னு சொன்னாங்க. ‘அஞ்சரை மாசத்தை நீங்க தாண்டிட்டீங்க. மீதி நாள்களை ரெண்டு பேரும் சேர்ந்து கடப்போம்’னு நம்பிக்கை கொடுத்தாங்க.
பிரசவமாகும்வரை உடலளவிலும் மனசளவிலும் நான்பட்ட அவஸ்தைகள் அதிகம். ஒவ்வொரு நாளும் மரண வலி... 29-வது வாரம் ஆபரேஷன் பண்ணி குழந்தையை எடுத்தாங்க. தாரிணி பிறந்த அந்த நொடி, என் வாழ்க்கை முழுமையடைஞ்சதா உணர்ந்தேன். உமையாள்னு கூப்பிடறோம். அவதான் இப்போ என் உலகம்... அவ பிறந்தபிறகு தான் வாழ்க்கை அழகா, அர்த்தமுள்ளதா மாறியிருக்கிறதா ஃபீல் பண்றேன்...’’ - தாவக் காத்திருக்கும் குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறார் நிவேதா. அந்தக் காட்சியை ரசித்தபடியே தொடர்கிறார் தேவா.
‘`என் வாழ்க்கையின் அதிர்ஷ்ட தேவதைகள் இவங்க ரெண்டு பேரும். `சந்திரமுகி' படத்திலும் `23ஆம் புலிகேசி' படத்திலும் வரும் ஓவியங்கள் நான் வரைஞ்சவைதான். இணை கலை இயக்குநராக 40 படங்களுக்கும் மேல பண்ணியிருக்கேன். என் மகள் பிறந்ததும் அவளைக் கைகளில் ஏந்தின அடுத்த நிமிஷம் ஆர்ட் டைரக்டரா எனக்கு முதல் படம் கமிட் ஆச்சு. இப்போ ‘க்’னு ஒரு படத்துல ஆர்ட் டைரக்டரா வொர்க் பண்ணிருக்கேன்.
எனக்கு சோறு போட்ட ஓவியம் என் மனைவியையும் காப்பாத்தும்னு அவங்களுக்கும் வரையக் கத்துக்கொடுத்தேன். மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகணும்னு ஆசைப்பட்டாங்க. இப்போ நமீதா உள்ளிட்ட சிலருக்கு மேக்கப் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. வீல் சேரில் இருக்கும் செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்னு தன்னை அவங்க பெருமையா சொல்லிக்கலாம்.
இவங்களைக் கல்யாணம் பண்ணப் போறேன்னு சொன்னபோது எனக்குப் பழக்கமான சினிமா பிரபலங்கள் பலரும் ‘இது தேவையா... நாளைக்கு நீ சினிமாவில் பெரிய இடத்துக்கு வந்து விருதுகள் வாங்கும்போது இவங்களை எப்படிக் காட்டுவே’ன்னு கேட்டாங்க. அப்படி நான் விருது வாங்கினா அதுக்கு முழுக் காரணமும் என் மனைவியாதான் இருப்பாங்க. அதை என்னால பெருமையா சொல்ல முடியும். வீல்சேரில் இவங்களை உட்காரவெச்சு பின்னாலிருந்து தள்ளிட்டுப்போறது பெரிய விஷயம் இல்லை. எப்போதும் என் வாழ்க்கையில என் வெற்றிக்கு காரணமா முன்னால் நிற்பாங்க என் மனைவி’’ - நெகிழ்ந்து உருகுபவர் தன் கையில் மகளின் உருவத்தை பச்சை குத்தியிருக்கிறார். மனதுக்குள் மனைவியின் மீதான அன்பையும் காதலையும் நிறைத்துவைத்திருக்கிறார்.
‘`மாற்றுத்திறனாளிப் பெண்ணைப் பக்குவமாகவும் அன்பு குறையாமலும் பார்த்துக்க பெற்ற அம்மாவால் மட்டும்தான் முடியும். ‘உங்க அம்மா, அப்பாவைவிடச் சிறப்பா நான் உன்னைப் பார்த்துப்பேன்’னு அன்னிக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை இந்த நிமிஷம்வரைக்கும் மீறலை. அம்மாவின் இடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது. ஆனா, என் கணவர் எனக்கு இன்னோர் அம்மா...’’ - கலங்குகின்றன நிவேதாவின் கண்கள். கண்ணீர் துடைத்துக் கட்டியணைக்கின்றன கணவரின் கைகள்.
தொடரட்டும் அன்பு அத்தியாயம்!