லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

இணைய திரையில் இதயம் கவர்ந்தவை: அழகுக்கலையில் அசாத்திய சாதனை! - மேடம் சி.ஜே.வாக்கர்

மேடம் சி.ஜே.வாக்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
மேடம் சி.ஜே.வாக்கர்

விஜயா ஆனந்த்

நெட்ஃப்ளிக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட வெப் சீரிஸ்... `Self Made: Inspired by the Life of Madam C.J.Walker'.

151 ஆண்டுகளுக்கு முன் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்தாலும், 100 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் வளர்ச்சி பெற்று அமெரிக்காவின் கோடீஸ்வர பிசினஸ் பெண்மணியாகவே மறைந்தார், மேடம் சி.ஜே.வாக்கர்.

படிப்போ பணமோ இன்றி, சொந்த முயற்சியில் தானும் முன்னேறி, ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் முன்னேற்றியவர். தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, போராட்டக்குணம் கொண்ட மேடம் வாக்கரின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது இந்த இணையத் தொடரில்.

யார் இந்த மேடம் வாக்கர்?

1867-ம் ஆண்டு பிறந்தார் சாரா ப்ரீட்லவ். பருத்திக்காடுகளில் வேலை செய்த நேரம் போக கொஞ்சம் படிக்கவும் செய்தார். ஏழு வயதானபோது அம்மாவையும் அப்பாவையும் இழந்தார். ஆதரவற்ற சாரா, சகோதரியிடம் தஞ்சம் அடைந்தார். சகோதரியும் அவர் கணவரும் சாராவை அதிக வேலை வாங்கினர்; மிக மோசமாக நடத்தினர்.

மேடம் சி.ஜே.வாக்கர்
மேடம் சி.ஜே.வாக்கர்

சாராவுக்கு 14 வயதானபோது, இந்தக் கொடுமையான சூழலில் இருந்து தப்பிப்பதற் காகத் திருமணம் செய்துகொண்டார். அடுத்த ஆண்டே ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இரண்டு ஆண்டுகளில் கணவர் இறந்து போனார். குழந்தையைக் காப் பாற்றுவதற்காக வீடுகளில் துணி துவைக்கும், பாத்திரம் கழுவும் வேலைகளைச் செய்தார். பிறகு சமையல் வேலைக்கு முன்னேறினார்.

சாராவின் சகோதரர்கள் முடி திருத்தும் வேலையைச் செய்துவந்தனர். அங்கே வேலைக்குச் சேர்ந்தார். ஓரளவு வருமானம் கிடைத்தது. குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பினார். பகலில் வேலை செய்துவிட்டு, இரவில் கல்வி கற்றுக்கொண்டார்.

மேடம் சி.ஜே.வாக்கர்
மேடம் சி.ஜே.வாக்கர்

சாராவின் கூந்தல் திடீரென்று உதிரத் தொடங்கியது. பாரம்பர்ய முறைப்படி தானே பலவித மூலிகைகளைச் சேர்த்து தைலம் தயாரித்தார். அந்தத் தைலத்தைத் தொடர்ந்து பயன்படுத்தியபோது, முடி உதிர்வது நின்று வளர்ச்சி அதிகரித்தது. சாராவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சத்துள்ள உணவுகளை உண்ண முடியாமல், சுகாதாரம் பேண முடியாமல் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உடல்நலம் - குறிப்பாகக் கூந்தல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. தன் தைலம் மூலம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கூந்தல் பிரச்னையைத் தீர்க்க முடிவெடுத்தார் சாரா.

ஆனி டர்ம்போ மெலோன் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி கூந்தல் தொடர்பான பொருள்களைத் தயாரிக்கும் பிசினஸைச் செய்து கொண்டிருந்தார். அவரிடம் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார் சாரா. அப்போது சார்லஸ் ஜோசப் வாக்கர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. செய்தித்தாள் விளம்பரப் பிரிவில் சார்லஸ் வேலை செய்துவந்தார். சாராவுக்கு சார்லஸ் விளம்பர உத்திகளைச் சொல்லிக் கொடுத்தார். பின்னர் சார்லஸும் சாராவும் திருமணம் செய்துகொண்டனர். சாராவின் பிசினஸ் சில பல சறுக்கல்களுக்குப் பிறகு வளரத் தொடங்கியது. இதனால், தொழில் நுணுக்கம் கற்றுக்கொடுத்த ஆனிக்குப் பொறாமையாக இருந்தது. பலவிதங்களில் சாராவுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். அதையெல்லாம் தாண்டி முன்னேறினார் சாரா.

மேடம் சி.ஜே.வாக்கர்
மேடம் சி.ஜே.வாக்கர்

காலம் நகர்கிறது... `சாரா’ என்று அழைத்த ஆனியை, ‘மேடம் வாக்கர்’ என்று அவரே அழைக்கச் சொல்லும் இடத்தில் சாராவின் எதிர்காலம் பிரகாசமாகிறது.

மேடம் சி.ஜே.வாக்கர்
மேடம் சி.ஜே.வாக்கர்

மேடம் சி.ஜே.வாக்கர் தன் பெயரையே பிராண்டு ஆக மாற்றி க்ரீம், ஷாம்பூ மற்றும் அழகு சாதனப் பொருள்களைத் தயாரித்தார். விற்பனை செய்வதற்கு ஏராளமான முகவர்களை நியமித்தார். வியாபாரம் முன்னேறிக்கொண்டே வந்தது. அதே நேரத்தில் தன் கணவர், மருமகன் போன்ற குடும்பத்து ஆண்களாலேயே ஏமாற்றப்பட்டார். ஆனாலும், சில நல்ல மனிதர்களின் உதவியால் அவருக்கு நிதி கிடைத்தது. தொழில் விஸ்வரூபம் எடுத்தது. புகழ்பெற்ற அமெரிக்கச் செல்வந்தர் ராக்ஃபெல்லர் மாளிகைக்கு அடுத்த மாளிகையை தன் வாழ்விடமாக்கினார்.

அழகுக்கலைப் பயிற்சி, தொழிற்சாலை, விற்பனை, விளம்பரத் துறைகளில் பணி என்று சகலத்துறைகளிலும் ஆப்பிரிக்க அமெரிக்கர் களுக்கு வேலைவாய்ப்பு களை வழங்கினார்.

மேடம் சி.ஜே.வாக்கர்
மேடம் சி.ஜே.வாக்கர்

மகளிடம் பிசினஸைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்தார் மேடம் வாக்கர். அங்கும் தன்னுடைய பொருள்களை அறிமுகம் செய்தார். கிளைகள் இல்லாத பகுதிகளுக்கு அஞ்சல் மூலம் பொருட்களை அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். க்யூபா, ஹைதி, ஜமைக்கா, பனாமா, கோஸ்டாரிகா நாடுகளிலும் இவரது வியாபாரம் பெருகியது.

முதுமையடைந்த அமெரிக்கர்களுக்கு உதவு வதற்காகவும் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். தேசிய அளவில் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களுக்கான மாநாட்டை நடத்தினார். இதன் மூலம் ஏராளமான பெண்கள் வியாபாரத்தில் ஈடுபடும் வாய்ப்பு உருவானது. அவருடைய நிறுவனத்தில் சுமார் 10,000 பெண்கள் வேலை செய்தனர்.

அமெரிக்க இனவெறிக் கும்பல் வெறியாட்டம் ஆடிய 1917 ஜூலை மாதத்தில் மட்டுமே 39 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலியானார்கள். இந்தக் கொடூரத்தை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. 8,000 பேர் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில் மேடம் வாக்கர் பங்கேற்றார். இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்துக்காக ஏராளமான உதவி களையும் செய்தார்.

பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேடம் வாக்கர், ஓரின ஈர்ப்பாளராக இருந்த தன் மகளிடம், திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறார். மகளுக்கோ அதில் விருப்பம் இல்லை. பிறகு அவரே, `உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் திருமணம் வேண்டாம். பெண்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும் என்று நினைக்கும் நான் இதைச் சொல்லிருக்கக் கூடாது' என்று மகளிடம் மன்னிப்பு கேட்டார்.

`பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பிசினஸ் செய்ய வரவில்லை. நானும் என் மக்களும் மற்றவர்களைப் போல முன்னேற வேண்டும் என்ற காரணத்துக்காகவே பிசினஸ் ஆரம்பித்தேன்’ என்றவர், தன்னுடைய சொத்துகளில் மூன்றில் இரண்டு பங்கை அறக்கட்டளைகளுக்கு எழுதி வைத்தார்.

பிசினஸ் ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே கோடீஸ்வரராக மாறிய மேடம் வாக்கர், ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களில் முதல் கோடீஸ்வரர்!

மேடம் சி.ஜே.வாக்கர் 51 வயதிலேயே மரணம் அடைந்துவிட்டாலும் அவரது நிறுவனம் 100 ஆண்டுகளைக் கடந்த பின்னும் அழகுசாதனப் பொருள்கள் துறையில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது.

பிரபல ஹாலிவுட் நடிகையும் ஆஸ்கர், கோல்டன் குளோப் விருதுகளை வென்ற வருமான ஆக்டேவியா லெனோரா ஸ்பென்சர், இதில் மேடம் வாக்கராகவே வாழ்ந்திருக்கிறார். `லிமிடெட் சீரிஸ்' வகையில் வெளியிடப்பட்டிருப்பதால் இந்தத் தொடரை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே காண முடியும்.