தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

முதல் பெண்கள்: 108 நடன கரணங்களை ஆடிய முதல் பெண் சுவர்ணமுகி

சுவர்ணமுகி
பிரீமியம் ஸ்டோரி
News
சுவர்ணமுகி

மேடையில் தோன்றி ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும், மக்கள் மனத்தில் பசுமை மிளிரும் நினைவுகளுடன் நீங்காத இடம் பிடித்த நடன மங்கை சுவர்ணமுகி.

“பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த நிகழ்ச்சி அது. பால சரஸ்வதியம்மா நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக டிரஸ்ஸிங் ரூமில் தயாராகிக்கொண்டிருந்த என்னிடம் சொன்னார்கள். படபடப்புடன்தான் ஆடி முடித்தேன். முன் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்துப்பார்த்தவர், நிகழ்ச்சி முடிந்ததும் மேடையேறி என்னை கட்டியணைத்துக் கொண்டார். கன்னத்தில் முத்தங்கள் தந்து, ‘என் கண்ணே… என்ன அழகாக ஆடுகிறாய்? உனக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது’ என்று ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார்.”

- சுவர்ணமுகி

மேடையில் தோன்றி ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும், மக்கள் மனத்தில் பசுமை மிளிரும் நினைவுகளுடன் நீங்காத இடம் பிடித்த நடன மங்கை சுவர்ணமுகி. தமிழகம் முழுக்க... ஏன், உலகம் முழுக்க அவரது நடனத்தைக் கண்டு மெய்ம்மறந்து போகாதவர்களே இல்லை எனலாம். புகழின் உச்சத்தில் இருந்த சுவர்ணமுகி, திடீரென கிறிஸ்துவத்துக்குள் நுழைந்து, நடனத்தைக் கைவிட்டார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி பக்த மீராவுடன் தன் சினிமா வாழ்க்கையை விட்டுவிலகி இசைத் துறையில் நுழைந்து தனக்கென வேறோர் அடையாளம் தேடிக்கொண்டாரோ, அது போல சுவர்ணமுகியும் இன்று `வெரோனிகா’ என்ற பெயருடன் தனித்துவத்துடன் பிறர் நலனுக்காக வாழ்கிறார்.

அவரைத் தொடர்புகொண்டபோது, “உலகே கொரோனாவால் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறது. எத்தனையோ பேர் நம்மைச் சுற்றி உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடிய நோயிலிருந்து உலகம் விடுதலை பெற வேண்டும் என்று உபவாச ஜெபம் இருக்கிறேன். கொரோனாவால் யாரும் உயிரிழக்கக் கூடாது, உலகில் யாருக்கும் எந்தக் கெடுதலும் ஏற்படக் கூடாது” என்று பேசத் தொடங்குகிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ‘போன்லெஸ் வொண்டர்’ என்றே உங்களைப் பாராட்டியிருக்கிறார். எப்படி இப்படி ஆட முடிந்தது?

என் மூன்று வயது முதல் தினம் காலை 4 - 4.30 மணிக்கே கரணப்பயிற்சி தொடங்கிவிடும். அப்பா சம்பதி பூபாலும் அம்மா ரஞ்சனியும் சேர்ந்து எனக்குப் பயிற்சி தருவார்கள். கரணங்கள் (கை கால், உடல் என அனைத்தையும் ஒருங்கிணைத்த அசைவு, அதன் ஓர் உறைநிலைத் தருணம்) செய்வதில்தான் எனக்குப் பயிற்சி. இதைச் செய்வது மிகக் கடினம். உடல் முழுக்க வலி இருக்கும். அதிலும் அர்க்களம் என்ற கரணம் செய்ய அம்மா என் காலை தன் காலால் அழுத்தி நிற்பார். அப்பா என் உடலைப் பின்னோக்கி வளைத்து என் கைகளால் தரையைத் தொட வைப்பார். எத்தனையோ நாள் வலியில் துடித்திருக்கிறேன்.

மாலை வேளைகளில் நடனப்பயிற்சி எடுத்துக்கொள்வேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் அப்பாவிடம், ‘எனக்கு நடனம் வேண்டாம், நான் டாக்டராக ஆசைப்படுகிறேன்’ என்று சொன்னேன். அப்போது அவர், `நீ டாக்டர் ஆவது எளிது, யார் வேண்டுமானாலும் டாக்டர் ஆகலாம். ஆனால், உன்னைப் போல நடனமாட யாராலும் முடியாது. இதை நீ ஒரு நாள் உணர்வாய். உன் விருப்பம்... நீயே யோசித்து என்ன வேண்டும் என்று நாளைக்குச் சொல்' என்று சொன்னார். நிறைய சிந்தித்தேன். அன்றே மாலை 7 மணி பயிற்சிக்கு, சலங்கை கட்டிக்கொண்டு சென்று அவர் முன் நின்றுவிட்டேன்.

108 கரணங்களையும் ஆடக் கூடியவர் நீங்கள். எப்படி இது சாத்தியமானது?

அப்பா பூபால் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகேயுள்ள நாயுடு பேட்டையைச் சேர்ந்தவர். நட்டுவனார். துரைசாமி என்பவரிடம் நடனம் கற்றவர். திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

ஏ.வி.எம் நிறுவனத்தின் சில படங்களில் நடன இயக்குநர்கள் ‘ரஞ்சனி - பாலன்’ என்று அவர்களின் பெயர் வரும். சிற்ப சாஸ்திரமும் நாட்டிய சாஸ்திரமும் கற்ற அப்பாவுக்கு, கரணங்கள் மேல் பெரும் ஈடுபாடு இருந்தது. பொனங்கி ஶ்ரீ ராம அப்பாராவ் என்பவர் எழுதிய கரணங்கள் பற்றிய நூல்கள் மற்றும் சிற்ப, நாட்டிய சாஸ்திரங்களைக் கொண்டு கரணங்கள் பற்றிய ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். நிறைய கோயில்களுக்குச் சென்று சிற்பங்களைக் கண்டு ஆராய்ந்தார். 108 கரணங்களையும் மகளான எனக்கு எப்படியாவது கற்றுத்தந்துவிட வேண்டும் என்பதை சவாலாக எடுத்துக் கொண்டு பயிற்சி தந்தார். கரணங்களை ஆடுவது வெறும் சர்க்கஸ் அல்ல!

நெல்லூரில் முதன் முதலில் மேடையில் ஆடி முடித்தபின் மக்களின் கைத்தட்டலைப் பார்த்து பயந்து, என்னைக் கிண்டல் செய்கிறார்கள் என்று எண்ணி அழுதுகொண்டே டிரஸ்ஸிங் ரூமுக்குள் ஓடிவிட்டேன். அதன்பின் அம்மாவும் அப்பாவும் ரசிகர்கள் என்னைப் பாராட்டியதாகச் சொன்னபோதுதான் புரிந்துகொண்டேன். அன்று நெல்லூர் கலெக்டர் எனக்கு வெள்ளித்தட்டு ஒன்றைப் பரிசளித்தார். மகிழ்ச்சியாக உணர்ந்தேன். முதலில் நடனத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லைதான். ஆனால், மக்களின் மகிழ்ச்சி, ஆரவாரம், அவர்கள் தரும் உற்சாகம், என்னைப் பாராட்டி வரும் செய்திகள் என்று தொடர்ந்தபோது நடனம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துப்போனது.

இளம் வயது நினைவுகள்..?

சிறு வயதில் மயிலாப்பூரில் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீட்டுக்குப் பின்புறம் குடியிருந்தோம். எங்கள் வீட்டுக்கு எதிரே சில்ட்ரன் கார்டன் பள்ளி இருந்தது. அதனுள் இருந்த பிருந்தாவன் ஹாஸ்டலில் அப்பா நடன வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார். பள்ளி நிர்வாகி எல்லன் சர்மா என்மீது பிரியமாக இருப்பார். அவரின் மூத்த மகள் கீதா சர்மா என் உயிர்த்தோழி. சமீபத்தில் அவர் இறந்தபோது நான் உடைந்து போனேன் (சொல்லும்போதே அவர் குரல் கம்முகிறது)... அதே பள்ளியில் என்னுடன் படித்தவர் நடிகை ஶ்ரீவித்யா. ஒருகட்டத்தில் தொடர்ச்சியாக ஆடுவதால் பள்ளிப்படிப்பை முடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அப்பா என்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளியில் மெட்ரிக் முடிக்க வைத்தார்.

சுவர்ணமுகி
சுவர்ணமுகி

குடியரசுத் தலைவரான டாக்டர் ராதா கிருஷ்ணன் வீட்டுக்கு ஆசி வாங்க, அப்பா என்னை அழைத்துச் சென்றார். ஜிப்பா அணிந்து சென்ற என்னைப் பார்த்த ராதாகிருஷ்ணன், ‘என்னைப் பார்க்க வரும் டான்சர்கள் முழு ஒப்பனையுடன், சலங்கை கட்டிக்கொண்டு வருவார்கள். நீ இவ்வளவு சிம்பிளாக வந்திருக்கிறாயே’ என்று வியந்தார். ஆடிக்காட்டிவிட்டு அவர் அருகே சோபாவில் அமர்ந்தேன். இன்னும் ஆச்சர்யப்பட்டு, ‘நேருவே எனக்கு எதிரில்தான் அமர்ந்திருப்பார். நீ எங்கே அமர்ந்திருக்கிறாய், பார்த்தாயா?’ என்று சிரித்தார். அவரது முதல் மாத சம்பளத்தில் 1,000 ரூபாயை எடுத்து பணமுடிப்பாக என் கைகளில் தந்து ஆசீர்வதித்தார். அப்பாவோ உடனே அந்தப் பணத்தை எங்கள் குழுவினருக்குப் பிரித்துத் தந்துவிட்டார். ‘அவர்கள்தான் உனக்காக வாசிக்கப் போகிறவர்கள். அவர்கள் மகிழ்ந்து உன்னை ஆசீர்வதித்தால் உனக்கு நல்லது’ என்று அப்பா சொல்லிவிட்டார். `இப்படி எல்லாவற்றையும் கொடுத்துவிட்டீர்களே...' என்று அம்மா வருத்தப்பட்டபோது, ‘உன் மகள் இதைவிட பல மடங்கு சம்பாதிப்பாள்; அதை உன்னால் எண்ணக்கூட முடியாது’ என்று அப்பா சொன்னார்.

நடன வாழ்க்கை..?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே என் நிகழ்ச்சிகள் ‘புக்’ ஆகிவிடும். சில நாள்களில் மூன்று, நான்கு நிகழ்ச்சிகள் வரை இருக்கும். ஓர் இடத்தில் ஆடிவிட்டு அடுத்த இடத்தில் ஆடச் செல்வதற்குள் அங்கு இன்னொரு வாத்தியக் குழு தயாராக இருக்கும். நான்கு வாத்தியக் குழுக்கள் ‘சுவர்ணமுகி அண்டு பார்ட்டி’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் மாறிமாறி இயங்கி வந்தார்கள். ஃப்ளூட் ராகவன், கோபிநாத், நடராஜன், சுப்பையா, முனுசாமி என்று இன்றும் அவர்கள் அனைவரையும் நினைவில் வைத்திருக்கிறேன்; அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் குடும்பங்கள் மேல் அளவுகடந்த பிரியம் உண்டு. நான் மேடையேறும் முன்பே குழுவினர் அனைவருக்கும் ஊதியம் தந்து ‘செட்டில்’ செய்துவிடுவார் அம்மா.

`இப்படி எல்லாவற்றையும் கொடுத்துவிட்டீர்களே...' என்று அம்மா வருத்தப்பட்டபோது, ‘உன் மகள் இதைவிட பல மடங்கு சம்பாதிப்பாள்; அதை உன்னால் எண்ணக்கூட முடியாது’ என்று அப்பா சொன்னார்.

`ராஜரிஷி' என்ற தமிழ்ப்படத்தில் நடனம் ஆடினேன், `புன்னமி நாக்' என்ற தெலுங்குப் படத்தில் நான் ஆடிய பாம்பு நடனம் மக்களை வெகுவாக ஈர்த்தது. தமிழில் `பௌர்ணமி நாகம்' என்ற பெயரில் வெளியான படம், இந்தியிலும் வெளிவந்தது. நிறைய படங்களில் ஆடியிருக்கிறேன். எல்லாவற்றிலும் மரபு நடனம்தான். என் மயில் மற்றும் பாம்பு நடனங்கள் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. நான் மேடை ஏறும்முன்பே கைகளைத் தட்ட தொடங்கிவிடுவார்கள் ரசிகர்கள். கரணங்களுடன் நடனத்தை இணைத்து, அப்பா சொல்லித்தந்த புதிய தஞ்சைப் பாணியில் ஆடிவந்தேன். 108 கரணங் களை உள்ளடக்கிய நடனத்தை ஆடிய ஒரே நபர் நான்தான்;

முதல் நபரும் நான்தான்!

1977-ம் ஆண்டு, ரோம் நகரில் நடைபெற்ற சர்வதேச நடனப் போட்டிகளில் முதல் பரிசு வென்றேன். பிரான்ஸில் ஒருமுறை நடந்த நிகழ்ச்சியில் கைகொள்ள முடியாத அளவுக்கு மலர்ச்செண்டுகள் தந்தார்கள். மலர்ச்செண்டுக்குவியல் என் உயரத்தையும் தாண்டி இருந்தது. என் ஆடலைக் கண்டு, ஒரு நாட்டில் ‘பிராவோ பிராவோ’ என்று கை தட்டுவார்கள். இன்னொரு நாட்டில் தொடைகளில் தட்டி மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள். சிலவற்றில் ‘ஸ்டாண்டிங் ஒவேஷன்’ தருவார்கள். நானும் ரசிகர்கள் மேல் பெரும் அன்புடன் இருந்தேன். கலை விமர்சகர் சுப்புடு ஐயா என் நடனத்தைப் பார்த்து ‘அருமையாக இருக்கிறது’ என்று பாராட்டியிருக்கிறார்.

“1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி என் இதயத்தைவிட்டு நீங்காத நினைவுள்ள நாள். அன்று முன்னாள் முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் என்னை தமிழக அரசின் `அரசவை நர்த்தகி'யாக நியமித்து, சிறப்பு செய்தார்; தங்கத்தட்டும் பணமுடிப்பும் அளித்தார்.

1982-ம் ஆண்டு, இலங்கையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் ஆடினேன். மற்ற நடனக் கலைஞர்கள் நேரில் பார்க்கும்போது என்னிடம் இனிமையாகவே நடந்து கொண்டார்கள். வேறு எதையும் கவனிக்கும் அளவுக்கு எனக்கு அப்போது நேரமில்லை. தொடர்ந்து நிகழ்ச்சிகளுக்காக ஓடிக்கொண்டே இருந்தேன். ஒரே பாணியில் நடனம் ஆடினால் அயர்வு ஏற்படும் என்பதாலும், என் கலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாலும் பலரிடம் நடனம் கற்றுக்கொண்டேன். கிட்டப்பா பிள்ளை, பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கல்யாணம் பிள்ளை ஆகியோரிடம் வெவ்வேறு பாணி நடனங்கள், கலாநிதி நாராயணனிடம் முக பாவம் என்று தொடர்ச்சியாக என்னை மேம்படுத்திக்கொண்டேன். என்னவெல்லாம் கற்றுக்கொண்டால் என் நடனம் நன்றாக இருக்கும் என்று நினைத்தேனோ, அவற்றையெல்லாம் கற்றேன்.

1976 மே 30 அன்று அப்பா இறந்துபோனார். அதன் பின்பும் தொடர்ந்து ஆடிவந்தேன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் மக்களை மகிழ்விக்க என் ஆடல் தொடர்ந்தது.

1988-ம் ஆண்டு என்னதான் நடந்தது?

1988-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று என் வாழ்க்கையில் பெரும் மாற்றம் வந்தது. அன்றுதான் நான் கடவுளைக் கண்டுகொண்டேன். என் வாழ்க்கையை இனி அவருக்கு அர்ப்பணிப்பது, அவர் விருப்பப்படி வாழ்வது என்று முடிவெடுத்தேன். இத்தனை ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்தோம். பார்க்கும் எல்லோருக்கும் பார்வை ஒன்றாக இருக்காது என்று உணர்ந்தேன். இனி மேடைகளில் ஆடப் போவதில்லை என்று அறிவித்தேன்.

தங்கை உஷா முதலில் கிறிஸ்துவ மதம் தழுவினார். அதன்பின் நான் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன். `வெரோனிகா சுவர்ணமுகி' என்று பெயரை மாற்றிக்கொண்டேன். ஆனால், 1988 முதல் 1991-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்திருந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொடுத்தேன். என்னால் யாரும் நஷ்டம் அடையக் கூடாது என்று தெளிவாக இருந்தேன். சுவர்ணமுகி அண்டு பார்ட்டி கலைந்துபோனது. என்னை சார்ந்த குழுவினர் ஒவ்வொருவரிடமும் அவர்கள் வீடு சென்று விளக்கி மன்னிப்பு கோரினேன். எல்லோரும் என்னைப் புரிந்துகொண்டார்கள்.

மண வாழ்க்கை..?

என் மாமா ஜான் ஜேம்ஸ் துபாயில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கமாண்டோ பயிற்சிப் பணி செய்துகொண்டே ஊழியம் செய்துவந்த என் கணவர் சௌரி ராஜுவைப் பார்த்தார். அவர் நல்ல துணையாக இருப்பார் என்று அம்மாவிடம் பேசினார். 1991 மார்ச் 11 அன்று என்னைப் பெண் பார்க்க அவர்கள் வீட்டிலிருந்து வந்தார்கள். நாங்கள் இருவரும் பேசினோம். `நடனம் என் வழியல்ல, ஊழியமே என் வழி' என்று நான் சொன்னதை அவர் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார். எங்கள் இருவருக்கும் அதுவே பிடித்தமானதாக இருந்தது. அடுத்த நாள் சென்னை துறைமுகத்திலிருந்த கப்பல் ஒன்றில் நான் முன்பே ஒப்புக்கொண்டிருந்த என் நடன நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. அதற்குப் பிறகு நான் ஆடப்போவதில்லை என ஏற்கெனவே அறிவித்திருந்தேன். அந்த நடனத்தைக் காண வருமாறு அவரை அழைத்தேன். மறுத்துவிட்டார்.

`உலகமே என் நடனத்தைப் பார்க்கக் காத்துக்கிடக்கும்போது இப்படி ஒரு மனிதரா' என்று வியந்தேன். நான் நடனமாடி சம்பாதிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்காததும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 1991 ஏப்ரல் 20 அன்று எங்கள் திருமணம் நடைபெற்றது. ஒலிவியா ஹெப்சிபா என்ற அழகிய பெண் குழந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டேன்.

இப்போது கற்றுக்கொள்ளும் பெண்களுக்கு நான் சொல்ல விரும்பும் கருத்து இதுதான்... பயிற்சி செய்யுங்கள்... விடா முயற்சியும் கடும் பயிற்சியும் மன திடமும் இருந்தால் மட்டுமே நடனத்தில் வெற்றிபெற முடியும்!

எங்கள் வீட்டின் மாடியில் ஆலயம் ஒன்றை அமைத்திருக்கிறோம். வாரம் ஒரு நாள் புறக்கணிக்கப்பட்ட நோயாளிகள் 100 பேருக்கு நாங்களே சமைத்து உணவளிக்கிறோம். ஏழை எளிய மக்களுக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகிறோம். மன நிறைவுடன் இருக்கிறோம். மருத்துவப் படிப்பு முடித்த என் மகள் அன்பும் கருணையும் கொண்ட அன்னை தெரசா போல வருவாள் என்று நம்புகிறேன்.

கலை வாரிசு..?

108 கரணங்களையும் யாருக்காவது கற்றுத்தர வேண்டும் என்று 15 ஆண்டுக்காலம் நடனம் கற்பித்து வந்தேன். இத்தாலி, பிரான்ஸ் என வெளிநாட்டிலிருந்து வந்து கேட்டையா, வெரூஷ்கா, சிவனேசன் போன்றோர் பாலேயுடன் ஆட கரணங்களைக் கற்றுக்கொண்டார்கள். இங்குள்ள மாணவ மாணவிகளுக்குக் கற்றுத்தர முயன்றும், 108 கரணங்களையும் யாராலும் ஆட முடியவில்லை; உடலை வருத்தும் கலை என்பதால் பெற்றோர் பெரும்பாலும் இலகுவாகச் சொல்லித் தாருங்கள், கடினமானவை வேண்டாம் என்று என்னிடம் சொல்லிவிடுவார்கள்.

ஒரு முறை சுதாராணி ரகுபதி அவர்கள் நாரத கான சபாவில் கரணங்கள் பற்றிய சொற்பொழிவு ஒன்றை நடத்தினார். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அவருடன் சேர்ந்து கரணங்கள் பற்றிய என் பாணியை அவரிடம் பகிர்ந்து நான் சொல்ல, அவர் அவற்றை எழுதிக்கொண்டார். பின்னர் அவருடைய சொற்பொழிவில் நான் கரணங்களைச் செய்து காட்டினேன். இப்போது கற்றுக்கொள்ளும் பெண்களுக்குச் சொல்ல விரும்பும் கருத்து இதுதான்... `பயிற்சி செய்யுங்கள்... விடா முயற்சியும் கடும் பயிற்சியும் மன திடமும் இருந்தால் மட்டுமே நடனத்தில் வெற்றிபெற முடியும்.'

உலகே பெரும் நோயால் அவதிப்படுகிறது. இந்தக் கொடிய நோய் நம்மைவிட்டு விரைவில் அகலட்டும் என்று எல்லோரும் சேர்ந்து கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.

108 கரணங்களையும் விரிவாக ஆய்வு செய்து, அவை அனைத்தையும் உள்ளடக்கிய, புதுமையான நடன பாணியை உருவாக்கிய சம்பதி பூபாலின் மரபுக் கலை, சுவர்ணமுகியின் அர்ப்பணிப்பு இரண்டுமே காற்றோடு கரைந்துவிட்டது. தனக்கென வாழாமல், வாழ்க்கையைப் பிறருக்காக வாழும் பெரியோர் மத்தியில் சுவர்ணமுகியின் பெயர் என்றும் நிலைத்திருக்கும். மனிதம் நிரம்பிய சிறு குழந்தை போலவே இருக்கிறார் சுவர்ணமுகி. அவருக்கென அவர் அமைத்துக் கொண்டிருக்கும் உலகில் மகிழ்வாக அவர் சிறகடித்துப் பறக்கட்டும். நாட்டியத் தாரகை சுவர்ணமுகியின் கலையம்சம் காலம் உள்ளமட்டும் நம் நெஞ்சில் இடம் பிடித்திருக்கும்!