லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

முதல் பெண்கள்: பானுமதி ராமகிருஷ்ணா

பானுமதி ராமகிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
News
பானுமதி ராமகிருஷ்ணா

மூன்று மொழிகளில் திரைப்படங்கள் தயாரித்து இயக்கிய முதல் பெண்; திரைப்பட ஸ்டூடியோ அமைத்து நிர்வகித்த முதல் பெண்

“எனக்கு சினிமாவே சுத்தமாகப் பிடிக்காது என்று நான் யாரிடம் சொன்னாலும், அவர்கள் அதிர்ந்து பார்ப்பார்கள். உண்மை அதுதான். எனக்கு சினிமா பிடிக்காது.

1938-ம் ஆண்டு நான் நடிக்கத் தொடங்கும்போது என்னைப் போல நாடகங்கள் மற்றும் சினிமாக்களில் நடிக்கும் பெண்களை இங்கு யாரும் மதிக்க மாட்டார்கள். என் மனத்தில் ஏனோ அது அழுத்தமாகப் பதிந்துவிட்டது. என் பணியை முன்னிட்டு என்னை தாழ்வாகவே கருதினார்கள் என்று எண்ணினேன். ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பெண்ணாக, மிடில் கிளாஸ் மனைவியாக, மிடில் கிளாஸ் தாயாக வாழவே விரும்பினேன். இன்றும்கூட நான் மிடில் கிளாஸ் வாழ்க்கைதான் வாழ்கிறேன். நவீன படாடோபமான சினிமா வாழ்க்கையை நான் வெறுக்கிறேன்...”

- பானுமதி ராமகிருஷ்ணா, ரிடிஃப் வலைதளத்துக்கு அளித்த பேட்டி - 1999 ஜூன் 5.

`அஷ்டாவதானி' பானுமதி 1925 செப்டம்பர் 7 அன்று அன்றைய மதராஸ் மாகாணத்தின் ஓங்கோல் பகுதியை ஒட்டிய தொட்டவரம் என்ற கிராமத்தில் பொம்மராஜு வெங்கட சுப்பையா - சரஸ்வதம்மா தம்பதி யின் மகளாகப் பிறந்தார். தியாகராஜர் கீர்த்தனைகளை அழகாகப் பாடக்கூடிய வெங்கட சுப்பையா, தன் குழந்தைகளுக்கு இசை கற்றுத்தந்தார். நண்பனின் மகளான 13 வயதான சிறுமி பானுமதியை தான் தயாரித்து இயக்கவிருக்கும் `வர விக்கிரயம்' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்கவைக்க முயற்சி செய்தார் தயாரிப்பாளர் சிந்தஜல்லு புல்லையா. மகளின் குரல் வளத்துக்குக் கிடைத்த மரியாதை இது என்று எண்ணினாலும் சுப்பையா அவ்வளவு எளிதில் ஒப்புதல் தரவில்லை. நடிகைகள் மேல் மக்கள் கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியை அவர் நன்கு அறிந்தவர். மகளுக்குத் திருமணம் நடக்காது என்று அச்சமுற்றார். `படத்தில் கதாநாயகனே கிடையாது' என்று சொல்லியே அவரை சம்மதிக்க வைத்தார் புல்லையா. சுப்பையாவின் ஆசைப்படி கதாநாயகனே இல்லாமல் படம் தயாரானது.

ஈஸ்ட் இந்தியா ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் படமாக கொல்கத்தாவில் இரண்டு மாதங்கள் எடுக்கப்பட்டது, `வர விக்கிரயம்'. பானுமதிக்கு 350 ரூபாய் ஊதியம் தரப்பட்டது. திரையில் முதல் பாடலைப் பாடும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. `பலுகவேமி நா தெய்வமா' என்ற தியாகராஜரின் கீர்த்தனையைப் பாடினார். படம் சூப்பர்ஹிட்!

அடுத்தடுத்து பானுமதிக்கு நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன. அடுத்த படத்தில் கதாநாயகன் உண்டு. சுப்பையா தன் மகளைக் கதாநாயகனோ வேறு யாருமோ தொடக் கூடாது, நெருக்கமான காட்சிகளோ, கட்டிப்பிடிக்கும், முத்தக் காட்சிகளோ இருக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் நடிக்க அனுமதித்தார்.

பானுமதி ராமகிருஷ்ணா
பானுமதி ராமகிருஷ்ணா

சிறுமி பானுமதிக்கோ காதல் காட்சிகளில் நடிக்கக் கொஞ்சமும் விருப்பமில்லை. “என் இரண்டாவது படம் படுதோல்வி. காரணம், என்னால் காதல் காட்சிகளில் ஊன்றி நடிக்க முடியவில்லை; அது போலியாகத் தெரிந்தது. காதல் காட்சிகளில் என்னைக் கட்டாயப்படுத்தி காதலிக்கவைத்தார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டேன். என் கையை கதாநாயகன் பற்றினாலே அத்தனை சீற்றம் கொண்டேன்” என்று பின்னாளில் பேட்டி ஒன்றில் கூறினார் பானுமதி. இந்தச் சிக்கலால் அடுத்தடுத்து வந்த இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவின.

1942-ம் ஆண்டு `கிருஷ்ண பிரேமா' என்ற படத்தில் நடிக்க பானுமதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படப்பிடிப்பில் பி.எஸ்.ராமகிருஷ்ண ராவ் என்ற இளம் உதவி இயக்குநரைச் சந்தித்தார்; அவர் மேல் காதல் கொண்டார். 17 வயதான அழகிய புகழ்பெற்ற நடிகை தன்னை ஒருதலையாகக் காதலித்ததைக்கூட அறியாமல் இருந்தார் ராமகிருஷ்ண ராவ். இதனிடையே சுப்பையா தன் மகளுக்குப் பணக்கார வரன் தேடி முடிவு செய்யும் நிலைக்கு வந்தார். திருமணத்துக்கு ஒத்துழைக்க மறுத்து, `திருமணம் செய்துகொண்டால் ராமகிருஷ்ண ராவை மட்டுமே செய்துகொள்வேன்' என்று தன் தங்கையின் மூலம் தெளிவுபடுத்தினார் பானுமதி.

ராமகிருஷ்ண ராவை வீட்டுக்கு அழைத்து மகளைத் திருமணம் செய்துகொள்வதற்குச் சம்மதமா என்று சுப்பையா கேட்க, தன்னை பானுமதி காதலிக்கும் விஷயம் தெரிந்து அதிர்ந்துபோனார் ராமகிருஷ்ண ராவ். ஏழை உதவி இயக்குநரான தன்னால் பணக்கார நடிகையைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும், அப்படித் திருமணம் செய்தால் குடிசையோ, மரத்தடியோ எது தன் வீடோ அங்குதான் பானுமதி வந்து வாழ வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். திருமணத்துக்குப் பின் நடிக்கவோ, பாடவோ அவருக்கு அனுமதி தரப்போவதில்லை என்றும் சொல்லிவிட்டு வெளியேறினார்.

ராமகிருஷ்ண ராவின் மேல் பானுமதியின் காதல் இன்னும் தீவிரமானது. ராமகிருஷ்ணா வின் வளர்ப்புத் தாய் உதவியுடன் பெற்றோர் சம்மதம் இன்றி பானுமதி ராமகிருஷ்ணாவை 1943 ஆகஸ்ட் 8 அன்று கரம்பிடித்தார். சிறு குடிசை ஒன்றில்தான் அவர்கள் வாழ்க்கை தொடங்கியது; மகன் பரணி பிறந்தான். நடிப்பு, பாட்டு எல்லாம் மறந்து எளிய வாழ்க்கை வாழ்ந்தார் பானுமதி. ஆனால், `சுவர்க்க சீமா' என்ற திரைப்படத்தைத் தயாரிக்க முனைந்த பி.என்.ரெட்டி தன் படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

ராமகிருஷ்ணாவை மீண்டும் மீண்டும் சந்தித்து பானுமதியை நடிக்க அனுப்புமாறு வேண்டினார். மனைவியின் விருப்பமே தன் விருப்பம் என்று ஒதுங்கினார் ராமகிருஷ்ணா. மகன் பரணிக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும் என்று எண்ணிய பானுமதி, நடிக்க ஒப்புக்கொண்டார்.

‘மதுரை வீரன்’ படத்தில் எம்.ஜி.ஆரோடு காதல் காட்சிகளில் நடித்ததைவிட, சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக மோதியதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

1945-ம் ஆண்டு வெளிவந்த `சுவர்க்க சீமா' படத்தில் பாடி, நடித்து, இசையமைத்துக் கலக்கினார் பானுமதி. 1949-ம் ஆண்டு கிருஷ்ணன் - பஞ்சு இயக்கிய `ரத்ன குமார்' என்ற தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தில் நடிக்கும்போதே கதாநாயகர் பி.யு.சின்னப்பாவுக்கும் பானுமதிக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டதாகக் கூறுகிறார் திரை வரலாற்று ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன். பீடி புகைக்கும் பழக்கமுள்ள சின்னப்பாவைப் பற்றி தயாரிப்பாளரிடம் முறையிட்டு, செட் உள்ளே அவர் புகைப்பதை நிறுத்தினார் பானுமதி என்று கூறுகிறார் தியடோர். அந்த அளவுக்கு ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவர் பானுமதி. சொந்தப் படங்கள் தயாரிக்கும் ஆர்வம் வர, `பரணி பிக்சர்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார்.

அதோடு, தான் ஈட்டிய பணத்தைக்கொண்டு ஏன் ஸ்டூடியோ ஒன்றை அமைத்து நிர்வகிக்கக் கூடாது என்று எண்ணினார் பானுமதி. வயல்கள் சூழ்ந்திருந்த பகுதியில் பரணி ஸ்டூடியோஸ் உருவானது. அதன் முழுப் பொறுப்பும் பானுமதியிடம் இருந்தது. நாட்டின் முதல் பெண் சினிமா ஸ்டூடியோ நிறுவனர் என்ற பெருமையைப் பெற்றார்.

`சண்டி ராணி' என்ற திரைக்கதையை எழுதினார் பானுமதி. 1953-ம் ஆண்டு பரணி பிக்சர்ஸ் வெளியீடாகவே தெலுங்கு, இந்தி, தமிழ் என்று மூன்று மொழிகளிலும் பானுமதியின் கதை, தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்தது சண்டி ராணி. இதில் இரட்டை வேடமிட்டு கலக்கியிருந்தார் பானுமதி. பெரும் வெற்றி பெற்றது இந்தத் திரைப்படம்.

1954-ம் ஆண்டு வெளிவந்த `சக்ரபாணி' என்ற தெலுங்குப் படத்துக்கு இசையும் அமைத்தார். ‘பத்து மாத பந்தம்’ என்ற திரைப்படத்தில் அவர் பாடிய `லெட் மீ டிரை வென் ஐ'ம் புளூ' என்ற ஆங்கில பாப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

பெரும்பாலும் மனத்தில்பட்டதைப் பேசும் பழக்கம் கொண்டவர் பானுமதி என்பதால், அவர் மேல் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவற்றைப் பற்றிய எந்தக் கவலையும் அவருக்கு இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி என்று தமிழகத்து ஜாம்பவான்கள் முதல் என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ் என்று ஆந்திர சூப்பர் ஹீரோக்கள் வரை அனைவருடனும் படங்களில் நடித்தார்.

16 திரைப்படங்களை இயக்கினார்; எண்ணற்ற பாடல்களைப் பாடினார்.

`ரங்கூன் ராதா', `லைலா மஜ்னு' போன்ற திரைப்படங்களில் அவர் பாடி நடித்த பிரிவுத் துயர் பாடல்கள் நெஞ்சை உருக்குபவை என்று சொல்கிறார் தியடோர். அறிஞர் அண்ணாவை ஈர்த்ததும் `ரங்கூன்ராதா' தான். `நடிப்புக்கு இலக்கணம்' என்றே பானுமதியை அழைத்தார் அண்ணா.

1962-ம் ஆண்டு வெளிவந்த `அன்னை' என்ற திரைப்படத்துக்காக தேசிய விருது வென்றார். `அந்தஸ்துலு', `பல்நதியுத்தம்' போன்ற தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததற்காகவும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றார் பானுமதி.

நடிப்பு, இசையமைப்பு, பாடல், கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, ஸ்டூடியோ நிர்வாகம் என்று பல துறைகளில் கலக்கியவர், எழுத்துத் துறையையும் விட்டுவைக்கவில்லை. தன் முதல் சிறுகதையை 14 வயதில் எழுதினார். அதன்பின் தொடர்ச்சியாக திரைக்கதைகள் எழுதியவர், `அத்தகாரி கதாலு' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக ஆந்திர மாநில சாகித்ய அகாதமி விருதை வென்றார். `நாலோ நேனு' என்ற தன் சுயசரிதையையும் எழுதி வெளியிட்டார். இந்த நூலுக்கு 1994-ம் ஆண்டு தேசிய எழுத்தாளர் விருதும் வென்றார்.

1966-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது, 1984-ம் ஆண்டு கலைமாமணி விருது, அதே ஆண்டு ‘பகுகல தீரதி ஶ்ரீமதி’ விருது, 1985-ம் ஆண்டு ஆந்திர அரசின் ரகுபதி வெங்கையா விருது, 1986-ம் ஆண்டு நந்தி விருது, 1992-ம் ஆண்டு தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருது, 2001-ம் ஆண்டு பத்மபூஷண் விருது என்று விருதுகள் வரிசையாக பானுமதியைத் தேடி வந்தன.

வார்த்தைக்கு வார்த்தை `அம்மா' என்றே அவரை அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அவர் சிறு வேடங்களில் நடித்த காலத்திலேயே திரைத்துறையை கலக்கிய லேடி சூப்பர் ஸ்டார் பானுமதி! முதல்வரானபின் பானுமதியை தமிழக அரசு இசைக்கல்லூரியின் முதல்வராக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். ‘மதுரை வீரன்’ படத்தில் இருவரும் காதல் காட்சிகளில் நடித்ததைவிட, சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷமாக மோதியதுபோல நடித்தது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகப் பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார் பானுமதி.

குழந்தைகள் மேல் அலாதி அன்புகொண்ட பானுமதி `பக்த துருவ மார்க்கண்டேயா' என்ற குழந்தைகள் படத்தைத் தயாரித்து இயக்கினார். இதில் நடித்தவர்கள் அனைவரும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளே. 1965 முதல் 1970 வரை சில்ட்ரன்'ஸ் ஃபிலிம் சொசைட்டி செயற்பாட்டாளராகவும் இருந்தார்.

தன் பெயரில் பானுமதி ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி என்ற பள்ளியைத் தொடங்கி ஏழைக் குழந்தைகளுக்கு தரமான இலவசக் கல்வி கிடைக்க வழிசெய்தார்.

40 ஆண்டுகளாக ரெட் கிராஸ் சொசைட்டியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1998-ம் ஆண்டு `பெல்லி கனுகா' என்ற திரைப் படத்தில் இறுதியாக நடித்தார்.

1992-ம் ஆண்டு வெளிவந்த ‘செம் பருத்தி’ என்ற திரைப்படத்தில் நினைவில் நீங்கா வேடமேற்று நடித்திருந்தார். 2005 டிசம்பர் 24 அன்று தன் எண்பதாவது வயதில் இறந்தார் பானுமதி.

“திறமையைக் கண்டு மக்கள் பயந்து போகிறார்கள். என்னால் முடியாதது எதுவுமே இல்லை என்பதை ஒருகட்டத்தில் அவர்கள் தெரிந்துகொண்டார்கள். அவர்களால் என்னை எதிர்க்க முடியவில்லை. என் கணவரும் திரைத்துறையில் இருந்ததால், அவரும் என் திறமையை உணர்ந்து மதித்தார்.

உண்மையைச் சொன்னால் என்னைக் கண்டு ஆண்கள் பயந்தார்கள். இன்றும் என்னைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள். காரணம், நான் யாரைக் கண்டும் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை. நான் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்... ஆண்டவன் எனக்குத் திறமையைத் தந்திருக்கிறான்; எனக்கு அதுபோதும்.

இவை எல்லாவற்றையும்விட, ஒரு நடிகையாக நான் வாழ்க்கையில் எதையும் இழக்கவில்லை. நான் விரும்பியது, என் கணவர் விரும்பியது இரண்டுமே எங்களுக்குக் கிடைத்தன.

ஒரு மிடில் கிளாஸ் பெண்ணைப் போல வாழ ஆசைப்பட்டேன்; 60 ஆண்டுக் காலம் நடிகையாக இருந்த பின்பும் அப்படியே வாழ்கிறேன். கவர்ச்சி, பணம், புகழ், பெயர் எதுவுமே என்னைப் பாதிக்கவில்லை. நான் என்னவாக ஆசைப்பட்டேனோ, அதுவாகவே இருக்கிறேன். என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிம்மதி அதுவே!”

- பானுமதி ராமகிருஷ்ணா