லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

இது ஒரு மாயாஜால உலகம்! - சுஷீலா ராமன்

சுஷீலா ராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
சுஷீலா ராமன்

இசையிலே தொடங்குதம்மா...

``இசைக்கான வரையறைகளைவிட்டு விலகி நிற்பதே என் இசையின் முக்கிய நோக்கம்’' என்கிறார் சுஷீலா ராமன்.

அண்மையில் வெளிவந்த ‘ஜிப்ஸி’ திரைப்படத்தில் தனியிசைப் பாடகராகக் கவனம் ஈர்த்த இசைக்கலைஞர் இவர். தமிழ்ப் பண்பாட்டிசையை மேற்கத்திய இசையுடன் கலந்து சுஷீலா அளித்த ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ பாடலும், படத்தில் இடம்பெறாமல் தனியாக வெளிவந்த ‘உள்ளம் உருகுதய்யா’ பாடலும் ஜிப்ஸியின் உயிரோட்டத்துக்கு வலு சேர்த்தவை. இசை போலவே உற்சாகமாகப் பேசுகிறவரிடம் எல்லாம் கேட்போம்.

“என் பூர்வீகம் தமிழகம்தான். ஆனா, பிறந்தது லண்டன். வளர்ந்தது இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும். பெற்றோர் தஞ்சாவூர்க்காரர்கள். அதனால், அவர்களே எனக்கு ஆசான்களாகி, இயல்பிலேயே எனக்குள் இருந்த இசை ஆர்வத்தை வளர்த்தெடுத்தார்கள்.

என் பூர்வீக இந்திய இசையோடு, நான் பார்த்தும் கேட்டும் வந்த மேற்கத்திய இசையைக் கலந்து பரிசோதனை பண்ண ஆசைப்பட்டதன் விளைவுதான் இப்போது எனக்கான அடையாளமாகியிருக்கிறது. இசை என்பது ஒரு மாயாஜால உலகம். அதற்குள்ளே போய்விட்டால் திரும்ப வெளியே வர யாராலும் முடியாது'' என்கிற சுஷீலா, டீன் ஏஜ் பருவத்திலேயே தன் பாடல்களை மேடையேற்றிவிட்டார். இதுவரை எட்டு ஆல்பம் இசைத்திருக்கிறார். இந்திய இசைக்கலைஞர்கள் உட்பட பல நாட்டு இசைக்கலைஞர்களோடும் பணிபுரியும் வாய்ப்புகள் கிடைத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறார்.

சுஷீலா ராமன்
சுஷீலா ராமன்

“தனியிசை என்பது எந்த வெளிக்குள்ளும் அடங்காத ஒரு விஷயம். ஓர் இசைக் கலைஞர் சுதந்திரமாக, தன் பாணியில், தன்னுடைய முந்தைய படைப்புக்கே சவால் விடும் விதத்தில் புத்திசையை உருவாக்கி, மற்ற கலைஞர்களுடன் அந்தக் கலையை பகிர்ந்துகொள்ள வேண்டும். இசையும் ஒரு மொழிதானே... உங்களுக்கான இசையில் தனித்து அறியப்பட வேண்டுமானால், உங்களுக்கே உரிய ஒரு பாணியை உருவாக்குவது அவசியம். செய்த விஷயத்தையே திரும்பத் திரும்ப செய்வது பயன் தராது.

நான் வளர்ந்த இங்கிலாந்தில் தனியிசைக்கு ஆழ்ந்த பாரம்பர்யம் உண்டு. அதை ஆதரிக்கவும் கொண்டாடவும் தனிக்கூட்டமும் உண்டு. ஆனாலும், இசையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துவதும் சவாலான விஷயம்தான்” என்கிற சுஷீலா, தன் தனித்துவம் பகிர்கிறார்.

சுஷீலா ராமன்
சுஷீலா ராமன்

“இசைக்கான வரையறை என்பது எதுவுமே இல்லை. அதிலிருந்து விலகியிருக்கிற இசைதான் என்னுடையது. அதனால், எந்தவொரு கலாசார இசையையும் காப்பாற்றியே ஆகவேண்டிய பொறுப்பு எனக்கு இல்லை. என்னுடைய இசை ஆர்வமானது ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் பல கலாசாரங்களின் கலவை. என் இசை எல்லாருக்குமானது. எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் அது எல்லா இடங்களுக்கும் பயணிக்கும்” என்கிறவர், தமிழ் இசையை எப்படி தன் இசையில் பயன்படுத்தி கொள்கிறார்?

“சின்ன வயதிலிருந்தே இடம்பெயர்ந்து கொண்டே இருப்பதால், என்னுடைய இசையும் மாறிக்கொண்டே இருக்கிறது. 2005-ம் ஆண்டு, எனக்கு தஞ்சையில் இந்திய முறைப்படி திருமணம் நடந்தது. காதல் திருமணம்தான். இப்போது கணவரும் நானும் சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்.

என் இசை எல்லாருக்குமானது. எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் அது எல்லா இடங்களுக்கும் பயணிக்கும்.
சுஷீலா ராமன்

கிட்டத்தட்ட 15 வருஷங்கள் முன்பு தமிழ் இசைக்கலைஞர்களோடு என்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தேன். தமிழ் இசையின் பல பரிமாணங்களை அறிந்தபோது என் வியப்பு அதிகமானது. தமிழ் இசையில் என் ஆசான் தர்மபுரம் சுவாமிநாதன்... அவர்தான் எனக்கு தேவாரம், திருவாசகம் முதலானவற்றை சொல்லிக்கொடுத்தார். கே.பி.சுந்தராம்பாள் அம்மாவின் வாரி சாகப் பாராட்டப்படும் கோவை கமலா அம்மாவிடமும் இசை படித்தேன். அவருடைய கம்பீரக் குரல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். பல இசைப் பயணங்களுக்குப் பிறகு, இப்போது இந்தோனேஷிய கலைஞர்களோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.”

சுஷீலா ராமன்
சுஷீலா ராமன்

`ஜிப்ஸி’ பட வாய்ப்பு குறித்து...

`` `ஜிப்ஸி’ படத்தின் நாயகன் ஒரு நாடோடி. இசையோடு இணைந்தவன். அப்படி இருக்கும்போது, இசை அந்தப் படத்துக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை உங்களால் உணர முடியும். அதனால், தனியிசைக் கலைஞர் ஒருவரை படத்துக்குள் கொண்டுவர இயக்குநர் ராஜுமுருகன் விரும்பினார். அதற்கான தேடலில் இருந்தபோது வாரணாசியில் என் இசைத்தட்டு கிடைத்ததாம். அப்படியே கதைக் குள்ளே எனக்கான பாத்திரத்தை உருவாக்கி, நடிக்க அழைத்ததோடு, இரண்டு பாடல்களை உருவாக்குவதற்கான வாய்ப்பும் தந்தார். சினிமாவுக்குள் தனியிசை இடம்பெறும்போது, அதற்கான வெளி ஒரு வட்டத்துக்குள் சுருங்கி விடுமோ என்கிற பயம் எனக்கிருந்தது. ஆனால், எங்களுக்கான பூரண சுதந்திரத்தைக் கொடுத்து, எங்கள் பாணியில் தனித்துவமான பாடல்கள் அமைப்பதற்கான வெளியைக் கொடுத்தார் இயக்குநர். அதனால்தான், பாரதியாரின் ‘ஆசை முகம்’ பாடலுக்கு தனியிசை மூலமா ஒரு புது அர்த்தம் கொடுக்க முடிஞ்சது. படத்தில் ‘உள்ளம் உருகுதய்யா’ பாடல் ஒரு கனமான இடத்தில் வரும். தணிக்கைக்குழு பல காட்சிகளை நிராகரித்ததால் என்னுடைய பாடலும் இடம்பெறவில்லை. அரசியல் குறுக்கிடாத ‘ஜிப்ஸி’யை மக்கள் முழுமையாகப் பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்கு உண்டு.”

எந்தப் பாகுபாடும் இல்லாமல் இசை எல்லாரையும் இணைக்கும்... பிரச்னைகளுக்குத் தீர்வாக இசையும் இருக்கும் என்கிற கருத்தை ‘ஜிப்ஸி’ சொல்லியிருக்கிறதே... அது பற்றி?

``இசை என்பது ஒரு கூட்டு முயற்சி; சமூக அனுபவம். உண்மையான இசை எப்போதுமே அரசியலுக்கு அப்பாற்பட்டது. பொய்யாகத் திணிக்கப்படும் முரண்களை உடைக்கும் வல்லமை இசைக்கு உண்டு. தனியிசை உருவாக்குவதற்குக் கற்பனையும் ஒருமித்த உணர்வும்தான் தேவை. ஒரு கும்பல் கோஷம் எழுப்பும்போது அதுவும் இசையாகிவிடும். சிலவேளை அது மிரட்டவும் செய்யும். உண்மையான இசை மனத்திலிருந்து மர்மமாக உருவாகும். அதைக் கட்டுப்படுத்த முடியாது. பொய்யாகத் திரிக்கப்படும் முரண்களை அது தகர்க்கும். இதைத்தான் ‘ஜிப்ஸி’ உடைத்துப் பேசியது. அது மக்களுக்கும் சரியான முறையில் போய் சேர்ந்திருக்கும் என நம்புகிறேன்” என்கிறார் சுஷீலா தீர்க்கமாக.