
மகளிர் மருத்துவப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் மருத்துவர்; வேலூர் கிறிஸ்துவ மிஷன் கல்லூரி மற்றும் லேடி ஹார்டிங் கல்லூரிகளின் முதல் இந்திய முதல்வர்; திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையின் முதல் இந்திய சூப்பரின்டெண்டென்ட்
“மருத்துவப் பணிக்கு, குறிப்பாக செவிலியர் பணிக்கு இந்தியப் பெண்கள் பெரும்பாலும் விரும்பி வருவதில்லை. இறுக்கமான பணிச் சூழலாலும், செவிலியராக வருபவர்கள் கிறிஸ்துவ கன்னிகாஸ்திரீகளைப் போன்ற தோற்றம் பெறுகின்றனர் என்று மக்கள் தவறாகக் கருதுவதாலும் செவிலியர் பணியைத் தவிர்க்கிறார்கள்.”
- ஹில்டா
ஹில்டாவின் கதையை அவர் தாத்தா புலிப்பாக்க ஜகன்னாதமிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். கோதாவரி ஆற்றங் கரையின் சாமலதீவு கிராமத்தில் 1826-ம் ஆண்டு, தீவிர வைணவக் குடும்பத்தில் பிறந்தவர் புலிப்பாக்க ஜகன்னாதம். அவருடைய 12-வது வயதில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பைத் தேடி, குடும்பம் விசாகப்பட்டணத்துக்குக் குடிபெயர்ந்தது. அங்குள்ள கனடிய மிஷன் போர்டு பள்ளியில் ஆங்கில மிஷனரிகளிடம் கல்வி பெற்ற ஜகன்னாதம், பைபிளின் மேல் ஆர்வம்கொண்டார். மிஷனரி ஜான் ஹே என்பவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த ஜகன்னாதம், ஒருகட்டத்தில் கிறிஸ்துவத்துக்கு மதம் மாற விருப்பம் தெரிவிக்க, கலவரம் வெடித்தது.
எனினும், 1847 ஏப்ரல் 28 அன்று கிறிஸ்துவத்துக்கு மதம் மாறினார் ஜகன்னாதம். குடும்பம் அவரைத் தலைமுழுகியது.
கிறிஸ்துவரான ஜகன்னாதம் லண்டன் மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, அதன்பின் போதகரானார். வேலமா சாதியைச் சேர்ந்த எலிசா ஆஸ்பர்ன் என்ற இந்திய கிறிஸ்துவ ஆசிரியரைஆங்கிலேய மிஷனரிகள் ஜகன்னாதமுக்கு மணமுடித்து வைத்தனர். இந்தத் தம்பதியின் மூத்த மகளான எலிசா ஹாரியட்டுக்கு தானியல் லாசரஸ் என்ற ஆசிரியரை மணமுடித்து வைத்தார்கள். ஜகன்னாதமின் இரண்டாவது மகளான ஆனி வார்ட்லா ஜகன்னாதம் தான் இந்தியாவின் முதல் கிறிஸ்துவப் பெண் மருத்துவர். துரதிர்ஷ்டவசமாக 30 வயதுக்குள் காசநோயால் பாதிக்கப்பட்ட ஆனி, 1894-ம் ஆண்டு இறந்து போனார். ஜகன்னாதமின் முதல் மகள் எலிசா - தானியல் லாசரஸ் தம்பதியின் 12 பிள்ளைகளில் கடைசிப் பெண்ணாக ஹில்டா மேரி, 1890 ஜனவரி 23 அன்று விசாகப்பட்டணத்தில் பிறந்தார்.
தந்தை லாசரஸ் பணியாற்றிய கனடிய மிஷன் போர்டு பள்ளியில் படிப்பை முடித்த ஹில்டா, விசாகப்பட்டணத்திலுள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் எஃப்.ஏ படிப்பை முடித்தார். திறமை சாலியான மகளை மேற்படிப்புக்கு மதராஸ் அனுப்பினார் லாசரஸ். மாநிலக் கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்ற ஹில்டா, மருத்துவப் படிப்பின் மீதுகொண்ட ஆர்வத்தால் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அத்தை ஆனி இறந்த காரணமா அல்லது அடுத்தடுத்து அவருடன் பிறந்த சகோதர சகோதரிகள் சிலர் இறந்து போனதாலா? மருத்துவப் படிப்பின் மேல் ஹில்டாவுக்கு ஏன் இத்தனை ஆர்வம் ஏற்பட்டது என்று அறிய முடியவில்லை. மதராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.சி.எம் முடித்தார். ‘மிட்-வைஃபரி’ படிப்பில் தங்கப்பதக்கமும் பெற்றார்.
லண்டன் மற்றும் டப்ளின் ராயல் சர்ஜன்ஸ் கல்லூரிகளில் தாய்சேய் நல மருத்துவ மேற்படிப்பு படித்து முடித்தார். மெலிந்த உருவமும் தென்னிந்திய நிறமும் கொண்டிருந்த ஹில்டாவை, `லிட்டில் பிளாக் டாக்டர்' என்றே இங்கிலாந்து மருத்துவர்கள் அழைத்தனர். 1917-ம் ஆண்டு, லண்டனிலிருந்து மகளிர் மருத்துவப் பணிகளுக்கு (டபிள்யூ.எம்.எஸ்) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய மருத்துவரானார். டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் மகளிர் நல மருத்துவராகத் தன் பணியைத் தொடங்கினார். இடையே 1913-ம் ஆண்டு, இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நிச்சயிக்கப்பட்ட மணமகன் மரணமடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பின் இறுதிவரை வாழ்வில் திருமணம் பற்றிய சிந்தனைகள்கூட அவருக்கு எழவில்லை. மக்கள் பணி மட்டுமே மனத்தில் கொண்டு செயலாற்றி வந்தார்.

லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில காலம் பணியாற்றியவர், பணி நிமித்தம் நாடு முழுக்க உள்ள பல மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றார். செவிலியர் சேவை மீதும் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீதும் பெரும் அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார் ஹில்டா. நாடு முழுக்க உள்ள பல மருத்துவமனைகளில் செவிலியர், ‘தாய்’ மற்றும் மிட்-வைஃபாகப் பணியாற்றும் பெண்களின் நிலையை மேம்படுத்தவும், முறையான பயிற்சி அளிக்கவும் வழிவகை செய்தார். காந்தியின் மேல் பெருமதிப்பு கொண்டிருந்த ஹில்டா, சிறு வயது முதலே கதராடைகளையே உடுத்திவந்தார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தை அக்கறையுடன் கவனித்து வந்தவர், கிறிஸ்துவ மிஷனரிகள் மற்றும் ஐரோப்பியப் பெண்கள் கோலோச்சும் நாட்டின் மருத்துவத்துறைக்கு இந்தியப் பெண்கள் இன்னும் அதிக ஈடுபாட்டுடன் பணியாற்ற வர வேண்டும் என்ற உள்ளார்ந்த அக்கறை கொண்டிருந்தார்.
1921-ம் ஆண்டு, மதராஸ் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையின் (கோஷா மருத்துவமனை) முதல் இந்திய பெண் சூப்பரின்டெண்டென்டாக 1927-ம் ஆண்டு பொறுப்பேற்றார் ஹில்டா. 1940-ம் ஆண்டுவரை மதராஸில் பணியாற்றியவர் அதன்பின் டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவமனையின் முதல்வராகப் பணியாற்றினார். 1941-ம் ஆண்டு, ஆறாம் ஜார்ஜ் மன்னரது ‘வெனரபிள் ஆர்டர் ஆஃப் செயின்ட் ஜான்’ விருது வழங்கி அவரை கௌரவித்தது ஆங்கிலேய அரசு. அடுத்த ஆண்டே ‘கேசர்-ஐ-இந்து’ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. மூன்றாண்டுப் பணிக்குப் பின் மகளிர் மருத்துவப் பணிகளின் தலைமை மருத்துவ அதிகாரியாகவும் பொறுப்பேற்றார்.
1945-ம் ஆண்டு, இந்திய மகளிர் மருத்துவர்கள் அசோசியேஷனின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
மென்மையான பேச்சு, யாரையும் தீர்க்கமாகக் கண்கள் பார்த்துப் பேசும் நேர்மை, சுற்றுப்புறத்தை கவனமாக ஆராய்ந்தபடி நடை என்று சுறுசுறுப்பாகவே எப்போதும் இருப்பார் ஹில்டா.
1946-ம் ஆண்டு, இந்தியாவின் மருத்துவத்துறையில் அடுத்த 40 ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுத்த சர் ஜோசப் போரெ தலைமையிலான இந்திய மருத்துவ சர்வே மற்றும் முன்னேற்றக் கமிட்டியின் உறுப்பினராக ஹில்டா நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு இரண்டாம் உலகப் போர் நேரத்தில் அவர் ஆற்றிய அயராத மருத்துவப் பணியைப் பாராட்டி 1946 ஜூன் 16, அன்று அவருக்கு ஆங்கிலேய அரசு, கவுரவ லெஃப்டினன்ட் கர்னல் - எம்.ஈ.ஓ (மோஸ்ட் எக்சலன்ட் ஆர்டர்) பட்டம் வழங்கி கௌரவித்தது. இந்திய மருத்துவப் பணிகளின் துணை டைரக்டர் ஜெனரல் பதவியும் வகித்தார், ஹில்டா.
1947-ம் ஆண்டு, அரசுப் பணியிலிருந்து ஓய்வை எதிர்பார்த்துக் காத்திருந்த ஹில்டாவின்மீது வேலூர் கிறிஸ்துவ மருத்துவமனையைத் தோற்றுவித்து வழிநடத்தி வந்த ஐடா ஸ்கட்டரின் பார்வை அழுத்தமாக விழுந்தது. ஓய்வு பெற ஓராண்டு இருக்க ஐடா, ஹில்டாவை வேலூரில் இயங்கிக்கொண்டிருந்த சி.எம்.சி நிறுவனங்களை வழிநடத்த அணுகினார். ஏற்கெனவே சி.எம்.சி-யின் பணிகளில் தன்னார்வமாக தன்னை இணைத்துக்கொண்டு ‘ஃபிரெண்ட்ஸ் ஆஃப் வேலூர்’ மூலம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க உதவியை சி.எம்.சி-க்குக் கொண்டு வந்திருந்த ஹில்டாவை, ஐடா ஸ்கட்டர் தன் மருத்துவமனையை விடுமுறையில் நிர்வகிக்க அழைத்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை.
இந்திய மருத்துவப் பணிகளிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஹில்டா, வேலூர் சி.எம்.சி-யின் முதல் இந்திய முதல்வராக 1947-ம் ஆண்டு, கோடைக்காலத்தில் பணியைத் தொடங்கினார். அங்கே பொருளாதார சிக்கல், பணியாளர் தட்டுப்பாடு... அதோடு, அப்போதுதான் மதராஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்புக்கான மூன்றாம், நான்காம், ஐந்தாம் ஆண்டுகளுக்கான அனுமதியும் கிடைத்திருந்தது. விடுதலை பெற்ற இந்தியாவைக் கட்டமைக்க, அதன் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்த அப்போதைய பிரதமர் நேரு, சி.எம்.சி போன்ற கிறிஸ்துவ நிறுவனங்களுக்கான அத்தனை உதவிகளையும் செய்யப் பணித்தார்.
1948-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வேலூர் கல்லூரிக்கு நிதி திரட்ட அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார் ஹில்டா. சி.எம்.சி-க்கு அளித்த தன் முதல் அறிக்கையில் அங்கு நிலவிய சிக்கல்களை அவர் எடுத்துரைக்கிறார். `மாணவர்களைப் பயிற்றுவிக்கப் போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை; மருத்துவமனையை வெற்றிகரமாக நடத்த போதுமான பொருளாதார வசதி இல்லை' என்று எழுதுகிறார். இந்த சிக்கலான சூழலில் நிதி திரட்ட அமெரிக்கா சென்றவர், 1949-ம் ஆண்டு நாடு திரும்பி, வேலூரில் சிக்கல்களை சமாளித்தார். அவருடன் பணியாற்றிய ஃப்ராங்க் லேக், `டாக்டர் ஹில்டாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். சோர்வடையும் போது மிகக் கடுமையாக நடந்து கொள்கிறார்' என்று தன் நண்பருக்குக் கடிதம் எழுதுகிறார். அந்த அளவுக்கு அவரது பணி சுமை மிகுந்ததாக இருந்திருக்கிறது.

ஹில்டாவின் அசுர முயற்சியால் 1950-ம் ஆண்டு, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரிக்கு அரசு அங்கீகாரம் கிடைத்தது. தேவையற்ற செலவினங்களைக் குறைத்தது, தேவையற்ற புதிய நியமனங்களைத் தவிர்த்தது என்று ஹில்டா மருத்துவமனையைத் திறம்பட நிர்வகித்தார். 1950-ம் ஆண்டு, குடும்பையா மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பதவியேற்ற பின்னும், கௌரவ மருத்துவராக வேலூரில் தன் பணியைத் தொடர்ந்தார் ஹில்டா. அவரது சமூகப் பணியைப் பாராட்டி இந்திய அரசு 1961-ம் ஆண்டு அவருக்கு பத்ம விருது வழங்கி கௌரவித்தது.
1970-ம் ஆண்டுக்குப்பின் விசாகப் பட்டணத்துக்குத் திரும்பியவர் அங்குள்ள லண்டன் மிஷன் மெமோரியல் சர்ச்சில் தன்னை இணைத்துக்கொண்டு சமூகப் பணியாற்றத் தொடங்கினார். தேவாலயத்தில் தன் சகோதரி நினைவாக `கிளாடிஸ் மெமோரியல் ஹால்' என்ற கூடத்தை நிறுவினார். `மென்மையான பேச்சு, யாரையும் தீர்க்கமாகக் கண்கள் பார்த்துப் பேசும் நேர்மை, சுற்றுப்புறத்தை ஆராய்ந்தபடி நடை என்று சுறுசுறுப்பாகவே எப்போதும் ஹில்டா இருப்பார்' என்று குறிப்பிடுகிறார், அவருடன் நல்ல நட்பு பாராட்டிய திருமதி சந்திரமதி மோசஸ். இறுதிவரை வெள்ளை கதர் சேலையே அணிந்துவந்தார் ஹில்டா. தான் படித்த கனடா மிஷன் போர்டு பள்ளியின் நிர்வாகக் குழுவில் பணியாற்றியவர், தன் சொத்தில் பெரும் பங்கை அதற்கு எழுதிவைத்தார்.
இவைதவிர பைபிள் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். `ஒவ்வோர் ஆண்டும் பைபிள் சொசைட்டி விழாவில் ஸ்டால் அமைத்து தான் ஆசையாக வளர்த்த குரோட்டன்ஸ் மற்றும் மலர்ச் செடிகளை விற்று முழு பணத்தையும் சொசைட்டிக்குத் தரும் வழக்கம் கொண்டவர் ஹில்டா' என்றும் எழுதுகிறார் சந்திரமதி. அது போலவே சி.எம்.சி-யிலிருந்து ஓய்வு பெறும்போது அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய ஆறு மாத கால ஊதியத் தொகை ‘பர்ஸை’ வாங்க மறுத்து, அதை மருத்துவமனை பயன்பாட்டுக்கே திருப்பி வழங்கினார்.
1978 ஜனவரி 24 அன்று விசாகப்பட்டணத் தில் மறைந்தார் ஹில்டா. அவரது நினைவாக திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை யிலும், விசாகப்பட்டணம் அரசு மருத்துவமனை யிலும் ‘லாசரஸ் வார்டுகள்’ உள்ளன. அவரது லாசரஸ் பங்களா இருந்த இடத்தில் இப்போது லாசரஸ் மருத்துவமனை செயலாற்றுகிறது.
சி.எம்.சி வளாகத்தில் ஹில்டாவின் வீட்டை ஒட்டிய வீட்டில் வளர்ந்த மருத்துவர் சுரேகா, `ஹில்டாவும் என் அம்மாவும் மிக நெருங்கிய தோழிகள். தனி நபராக இங்கு தங்கியிருந்த ஹில்டாவுக்குத் துணையாக அவர் வீட்டில் தான் அம்மா பெரும்பாலும் இரவுகளைக் கழிப்பார். அன்பும் கருணையும் நிறைந்த மருத்துவராகத் தான் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவரைப் போல சமூக அக்கறையும் சேவை மனப்பான்மையும் கொண்ட மருத்துவரை இதுவரை நான் பார்த்ததில்லை' என்று சொல்கிறார். இந்திய மருத்துவத்துறைக்கு மறக்க முடியாத பங்களிப்பை ஹில்டா விட்டுச் சென்றிருக்கிறார். அது, மக்கள் பணி!