Published:Updated:

"அவர்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்!" - சீனர்களின் லைஃப்ஸ்டைல்

சுபஶ்ரீ மோகன்
சுபஶ்ரீ மோகன்

சீனர்கள்னாலே, அசைவம் மட்டுந்தான் சாப்பிடுவாங்கன்னு நிறைய பேர் நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, அது முழு உண்மையில்லை.

நம் பிரதமரும் சீன அதிபரும் சந்தித்து உரையாடிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் நாமெல்லாரும் இருக்கிறோம். அவர்களின் உணவுகள், உறவுகள், ஆரோக்கியம், சீனத்துப்பட்டு என்று நாம் தெரிந்துகொள்ள பலப்பல வாழ்வியல் விஷயங்கள் இருக்கின்றன. இவை குறித்து சீனாவில் ஐந்து ஆண்டுகள் வசித்த அனுபவம் கொண்டவரும் அந்நாட்டின் வாழ்வியல் குறித்து 'சீனா அண்ணன் தேசம்' என்ற புத்தகத்தை எழுதியவருமான சுபஶ்ரீ மோகனிடம் பேசினோம்.

இந்தியா- சீனா
இந்தியா- சீனா

''சீனர்கள் உறவுமுறைகளுக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பாங்க. முக்கியமா குடும்பத்துல இருக்கிற வயதானவர்களுக்கு... சொன்னா, ஆச்சர்யப்படுவீங்க, விழாக்களுக்கு மட்டுமல்லாம சினிமா, மார்க்கெட்னு எங்கே போனாலும் வீட்டுப் பெரியவங்களையும் அழைச்சிட்டுத்தான் போறாங்க. நடக்க முடியாத வயசானவங்களை வீல்சேர்ல உட்கார வெச்சாவது அழைச்சிட்டுப் போறதை நானே பல தடவை பார்த்து வியந்திருக்கேன். இங்கே பெரும்பாலும் வீட்டுக்கு ஒரு குழந்தைதான் இருக்கிறதால, பெண்கள் திருமணம் முடிச்சு போறப்போ அவங்க பெற்றோரைத் தங்களோட அழைச்சிட்டுப் போறதையும் பார்த்திருக்கேன்'' என்றவர், குடும்பங்களில் ஆண்களின் பொறுப்புகளைப்பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

''சீனாவிலேயும் நம்ம நாடு மாதிரியே கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே வேலைக்குப்போறாங்க. அதனால, குழந்தைகளைக் குளிக்க வைக்கிறதுல ஆரம்பிச்சு ஸ்கூல், கிரச்னு அழைச்சிட்டுப் போய் விடறது வரைக்கும் ஆண்கள் முழு சப்போர்ட் பண்றாங்க. குடும்பங்களைப் பொறுத்தவரை பெண்களோட ராஜ்ஜியம்தான்னு சொல்லுவேன்.

உணவுப்பழக்கத்தைப் பொறுத்தவரைக்கும் அவங்க புரதச்சத்துக்காக நிறைய அசைவ உணவுகள் சாப்பிடுறாங்க. ஆனா, மாமிசத்தைப் பொரிச்சு சாப்பிடற பழக்கம் சீீனர்களிடம் இல்லவேயில்லைன்னுதான் சொல்லுவேன். அதே மாதிரி பொரிச்ச நூடுல்ஸ் சீனர்கள் சாப்பிட மாட்டேங்கிறாங்க. அசைவத்தில் ஆரம்பிச்சு நூடுல்ஸ் வரைக்கும் எல்லாத்தையுமே வேக வைச்சுதான் சாப்பிடுறாங்க. இனிப்புகளும் அதிகமாக சாப்பிட மாட்டேன்றாங்க. சீனா, இயற்கை வளம் கொழிக்கிற நாடுங்க.

நல்ல விளைச்சல் கொண்ட தேசம் அது. அதனால, பச்சைக்காய்கறிகள், கீரைகள், பழங்கள்னு சாலட் நிறைய சேர்த்துப்பாங்க. சீனர்களோட சமையல் யூடியூப் சேனல்கள்ல பார்த்தீங்கன்னா, வீட்டு வாசல்ல இருக்கிற கீரை, தோட்டத்துல இருக்கிற பழங்கள், தாமரைத்தண்டுன்னு எல்லாமே சாப்பிடுவாங்க. அதெல்லாம் நிஜம். அசைவ உணவுக்குச் சமமாக காய்கறிகள் சாப்பிடுறாங்க சீனர்கள்'' என்கிற சுபஶ்ரீ, சீனர்களின் உணவுமுறைப்பற்றி இன்னொரு இன்ட்ரஸ்ட்டிங் தகவலையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

''சீனர்கள்னாலே, அசைவம் மட்டுந்தான் சாப்பிடுவாங்கன்னு நிறைய பேர் நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, அங்க புத்தமதத்தை ஃபாலோ பண்றவங்க துளிகூட அசைவம் சேராம, ஏன் வெங்காயம், பூண்டுகூடச் சேர்த்துக்காம சாப்பிடுறாங்க. நமக்கும் அவங்களுக்கும் இருக்கிற ஒற்றுமைகள்ல ஒண்ணாதான் இதை நான் பார்க்கிறேன்.

பெருவாரியான சீனர்கள் ரொம்ப ஃபிட்டா இருப்பாங்க. இதுக்குக் காரணம் நான் முன்னாடியே சொன்ன மாதிரி புரதம் அதிகமா சாப்பிட்டு, மாவுச்சத்து உணவுகளை பெரும்பாலும் தவிர்ப்பதுதான் காரணம். அவங்க இன்னமும் சைக்கிள் ஓட்டற பழக்கத்தை விடலை. அப்புறம் அவங்களோட கிரீன் டீ பழக்கம். ஒரு நாளைக்கு 30 கோப்பை கிரீன் டீயாவது குடிச்சிடுறாங்க. அவங்களோட ஃபிட்னஸ்க்கும் சரும அழகுக்கும் இதுதான் காரணம்னு நினைக்கிறேன்.

அன்று இந்தியாவுக்கு நிகரான வளர்ச்சி... இன்று எங்கோ போய்விட்ட சீனா... எப்படி?

அப்புறம் சீனத்துப்பட்டு. அவங்களோட பட்டு, நம்மளோடது மாதிரி ஜரிகையோட, கனமா இருக்காது. நைலக்ஸ் புடவை மாதிரி லைட் வெயிட்டாத்தான் இருக்கும். ரொம்ப சுலபமாகக் கட்டிக்கலாம். நான்கூட ரொம்ப ஆசையா ரெண்டு சீனப்பட்டு வாங்கி வெச்சிருக்கேன்'' - உற்சாகமாகச் சிரிக்கிறார் சுபஶ்ரீ மோகன்.

அடுத்த கட்டுரைக்கு