Published:Updated:

கல் மாஸ்க் டூ N95 மாஸ்க் - ஓர் வரலாற்றுப் பயணம்!

மாஸ்க்
மாஸ்க்

தற்போது நோய் காரணமாக அதிகரித்திருக்கும் மாஸ்க் (முகக்கவசம்) அணியும் பழக்கம் பண்டைய காலத்தில் மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்த ஒன்றாகவே இருந்துள்ளது.

ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா உயிர்க்கொல்லி நோயின் காரணமாக மக்களின் வாழ்க்கை முறையில் பல மாறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்திருக்கிறது. இந்த நேரத்தில் முகக்கவசமும், சானிடைசரும் மக்களின் அத்தியாவசியத் தேவையாக மாறியிருக்கின்றன. அதிலும் முகக்கவசம் அணிவது மக்கள் மேற்கொள்ளும் சுயதற்காப்பு சுகாதார நடவடிக்கைகளில் முதன்மை இடம் வகிக்கிறது. குறிப்பாக வீட்டை விட்டு வெளியில் செல்பவர்களுக்கு முகக்கவசம் இன்றியமையாத ஒன்றாக மாறியிருக்கிறது. விதவிதமான டிசைன்களில் 'மாஸ்க்' தயாரித்து விற்பது தற்போது அதிகரித்திருக்கிறது. மாஸ்க் தயார்செய்து விற்பது சிறுதொழிலாகப் பலராலும் செய்யப்பட்டு வருகிறது.

முகக்கவசம் அணியும் பழக்கம் பண்டைய காலத்தில் மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்த ஒன்றாகவே இருந்துள்ளது. துன்பம், மகிழ்ச்சி, கோபம் என அந்தக் கால மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆகச்சிறந்த கருவியாக 'முகக்கவசங்கள்' இருந்துள்ளன.

மனித உருவம் கொண்ட முகமூடி
மனித உருவம் கொண்ட முகமூடி

அந்தக் காலத்தில் முகமூடி என்பது பாதுகாப்பு, மாறுவேடம், பொழுதுபோக்கு, நம்பிக்கை, சடங்கு மற்றும் நடைமுறை நோக்கங்கள் பலவற்றிக்காகப் பழங்கால மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று நாம் மூக்கு மற்றும் வாய் பகுதிகளை மட்டும் மறைக்கும் வண்ணம் தயாரான முகக்கவசங்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்தக் காலத்தில் மக்கள் முகம் முழுவதையும் மூடி மறைத்துக்கொள்ளும் வகையில் முகக்கவசங்களை அணிந்திருந்தனர். முகமூடிகள் பழங்கால மக்களின் இறை வழிபாட்டிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. மனிதர்களை கடவுளிடத்தில் கொண்டு சேர்க்கும் இறைக் கருவியாகவும் முகமூடிகள் போற்றப்பட்டன. இப்படியான பல சுவாரஸ்யமான தகவல்கள் முகக்கவசங்களுக்குள் பொதிந்துள்ளன.

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் தொல்லியல் துறையினர் கண்டெடுத்த 'கல் முகமூடி'தான் இன்றளவும் மிகவும் பழைமையானதாகக் கருதப்படுகிறது. அந்தக் கல் முகமூடியின் வயது சுமார் 9000 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்கால மக்கள் பயன்படுத்திய முகக்கவசங்கள் சிலவற்றைக் குறித்து விரிவாகப் பாப்போம்.

கல் முகமூடி

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் மலைப்பகுதியில் கண்டெக்கப்பட்ட இந்த வகை முகமூடி உலகின் மிகப் பழைமையான முகமூடியாகக் கருதப்படுகிறது. பிங்க் மற்றும் மஞ்சள் சேன்ட் ஸ்டோனால், நியோலிதிக் யுகத்தில் இது செய்யப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இறந்த முன்னோர்களின் நினைவாக மக்கள் இவற்றைப் பயன்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மண்டை ஓடு முகமூடி/நம்பிக்கை முகமூடி

நியூகினியா காட்டு மனிதர்கள் இறந்தவர்களின் மண்டை ஓடுகளை முகமூடிகளாக அணிந்து நடனமாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவற்றில் இறந்தவர்களின் ஆவி இருப்பதாக நம்பி முழு நிலவுக் காலங்களில் அந்த முகமூடிகளை அணிந்து நடனமாடி இறந்த உறவினர்களின் ஆவிக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அந்த வழிபாட்டிற்குப் பின் அந்த முகமூடிகளை தம் இல்லங்களில் பொக்கிஷமாகப் பாதுகாக்கின்றனர். இந்தப் பழக்கம் இன்றளவும் அங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

சாமுராய் முகமூடி
சாமுராய் முகமூடி

எகிப்தியர்களின் மரண முகமூடி

பண்டைய காலத்தில் உலகின் பல பகுதிகளில் இந்த மரண முகமூடி பயன்பாட்டில் இருந்துள்ளது. அதில் குறிப்பாக எகிப்தியர்கள் பயன்படுத்திய மரண முகமூடிகள் உலகளவில் பேசப்பட்டது. எகிப்தியர்கள் மத்தியில் இறப்பிற்குப் பின்பு இறந்தவர்களின் ஆன்மா பூத உடலைக் காண மீண்டும் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படி வரும்போது ஆன்மா தன் உடலைக் கண்டறிய ஏதுவாக இறந்தவர்களின் தோற்றத்தில் முகமூடிகள் தயாரிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு அணிவிக்கப்பட்டன. அதேபோல் இன்றளவும் மெக்ஸிகோ நகரத்தில் மக்கள் வருடத்திற்கு ஒருமுறை இவ்வகையான 'மரண முகமூடிகளை' அணிந்து இறந்துபோன தங்கள் உறவினர்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

சாமுராய் முகமூடிகள்/போர் முகமூடிகள்

சாமுராய் முகமூடிகள் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ஜப்பானியர்கள் போரில் தங்கள் எதிரிகளின் மன தைரியத்தை உடைத்து அவர்களை நிலைகுலையச் செய்ய, இரும்பு மற்றும் லெதர் கொண்டு தயாரான இவ்வகையான சாமுராய் முகமூடிகளைப் பயன்படுத்தினர். பண்டைய காலத்தில் மக்கள் கல், கட்டை, இரும்பு, செம்பு மற்றும் இதர உலோகப் பொருள்களால் தயாரான முகமூடிகளைப் பயன்படுத்தினர். ஆனால் பிற்காலத்தில் நாகரிக வளர்ச்சியின் காரணமாக முகமூடிகள் பயன்பாடு கணிசமாக குறைந்து போனதாகவும் பின்பு மீண்டும் சில காலங்களுக்குப் பின் முகமூடி அணியும் பழக்கம் மக்களின் கலாசாரத்தோடு ஒன்றிணைந்து விட்டதாகவும் வரலாறு கூறுகிறது. என்னதான் ஒருபுறம் டிஜிட்டல் யுகத்தில் மனிதர்கள் நவநாகரிக மேனிகளாய்த் திரிந்தாலும், மறுபுறம் அவர்களின் பாரம்பர்யமும், பண்பாடும் கலாசாரமும் அவர்களோடு சேர்ந்து பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இன்றளவும் இந்தியாவில் தொடங்கி சீனா வரையிலும் உலகின் பல்வேறு நாடுகளில் முகமூடி கலாசாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நவீன வாழ்க்கைமுறையில் உலக மக்கள் பின்பற்றும் சில முகமூடி கலாசாரங்களைப் பார்க்கலாம்.

வெனிஸ் நகரத்தின் 'திருவிழா முகமூடிகள்'

மக்கள் நிற, தோற்ற வேறுபாடுகள், உயர்வு தாழ்வு போன்றவற்றை வெறுத்தனர். அதன் காரணமாக திருவிழா சமயங்களில் ஒரே மாதிரியான முகமூடிகளை அனைவரும் அணிந்து ஏற்றத்தாழ்வுகளைக் கலைந்து ஒற்றுமையாக விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இன்றளவும் மக்கள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தத் திருவிழா முகமூடிகளை அணிந்து ஏற்றத்தாழ்வின்றி விழாவினைக் கொண்டாடுகின்றனர்.

சீனாவின் புத்தாண்டு முகமூடிகள்

சீனாவின் புத்தாண்டு முகமூடிகள் உலகப் பிரசித்தி பெற்றவை. புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்கும் பொருட்டு சீனர்கள் டிராகன் மற்றும் மனித உருவிலான பிரமாண்ட முகமூடிகளை அணிந்து கொள்கின்றனர். அதன் மூலம் அவர்களின் வாழ்வு செழிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

வெனிஸ் நகரத்தின் 'திருவிழா முகமூடிகள்'
வெனிஸ் நகரத்தின் 'திருவிழா முகமூடிகள்'
இந்த முகமூடிகள் அணியும் கலாசாரம் குறித்து ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவிடம் பேசினோம்.

"இன்று நாம் உயிர்க்கொல்லி கொரோனா மீதான அச்சத்தின் காரணமாகப் பாதுகாப்பு முகக்கவசங்களை அணிந்துகொண்டிருக்கிறோம். இந்த முகக்கவசக் கலாசாரம் நம் இந்திய மக்களுக்குக் கொஞ்சம் புதிதுதான். ஆனால் நாளடைவில் நமக்குப் பழகிவிடும். இன்று நாம் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசங்களை அணிந்து உலாவிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்களின் முகமூடி பயன்பாடு அப்படியல்ல. பண்டைய காலத்தில் மக்கள் மருத்துவக் காரணங்களுக்காக முகக்கவசங்களைப் பயன்படுத்தியது மிகவும் குறைவுதான். அதைத் தவிர்த்து அந்தக் காலத்து மக்களின் இறை நம்பிக்கையிலும், கலாசாரத்திலும் முகக்கவசங்கள் பெரும் முக்கியத்துவத்தை பெற்றிருந்தன. ஆரம்ப காலகட்டத்தில் பழங்குடியின மக்கள் தங்கள் இறை வழிபாடுகள் மற்றும் சடங்குகளில் உடலில் வர்ணம் தீட்டிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இன்றளவும் ஆப்பிரிக்கா, அமேசான் போன்ற நாடுகளில் காட்டுப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படி உடலில் வண்ணம் தீட்டிக்கொண்டதுதான் நாளடைவில் முகமூடிகள் உருவாக விதையாய் அமைந்தது. காலப்போக்கில் மக்களின் கலாசாரத்தோடு முகமூடிகளும் பல்வேறு வடிவங்களில் சேர்ந்தே பயணிக்கத் தொடங்கின. கல் முகமூடிகள், தங்கம் மற்றும் இதர உலோகங்களால் ஆன முகமூடிகள், மரக்கட்டைகளால் ஆன முகமூடிகள் எனப் பண்டைய மக்கள் பல வகையான முகமூடிகளைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இன்றளவும் சீனா, இத்தாலி, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் முகமூடிகளை தங்கள் கலாசாரத்தின் ஓர் அங்கமாகத்தான் பார்க்கின்றனர். குறிப்பாக இந்தியாவிலும் ஹிமாசல் பகுதியின் பிரிமிட்டிவ் முகமூடிகள், கேரளாவின் கதகளி முகமூடிகள் மற்றும் ச்சௌ (chhau) முகமூடிகள் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கின்றன.

ஓவியர் ட்ராட்ஸ்கி மருது
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது
மாஸ்க் அவசியம்... எந்த மாஸ்க் சரி... கிளவுஸ் தேவையா..? சந்தேகங்களுக்கு மருத்துவ விளக்கம்

சினிமாவின் தொடக்க காலகட்டத்தில் முகமூடிகள் பெரும் பங்காற்றின. நடிப்பவர்களின் குணத்திற்கேற்ப உருவத்தினைக் கொண்ட முகமூடிகளைப் பயன்படுத்தினர். குறிப்பாக புரட்சியாளர்கள் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பெரும்பாலும் முகமூடிகளை அணிந்தே திரையில் தோன்றுவர். முகமூடிகளை நம்மால் வெறும் சாதாரணப் பொருளாகக் கருதிவிடமுடியாது. அது நம் முன்னோர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை பறைசாற்றும் ஆகச்சிறந்த கருவி. ஆதிகாலத்தில் கல், கட்டை எனத் தொடங்கிய முகமூடிகள் பரிணாமப் பயணம் இன்று நம்மிடையே N95, W95 என்று உருவத்தாலும், செயல்திறனாலும் பல மாற்றங்கள் அடைந்திருக்கிறது. நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் பார்ப்பேன்... குறிப்பாக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு பொது இடங்களுக்குச் செல்ல முடிவெடுத்தால் முகக்கவசங்களை அணியாமல் செல்ல மாட்டார்கள். அவர்கள் தங்கள் நலனைக் காட்டிலும் மற்றவர்கள் உடல் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர். இந்த நிலை நமக்கும் தற்போது வந்திருக்கிறது. முகக்கவசங்களை இது போன்ற நோய்த்தொற்று காலத்தில் மட்டும்தான் அணிய வேண்டும் என்றில்லை. பொது இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அணிந்து கொள்வது எப்போதும் சிறந்தது என்பேன். நோய்ப் பரவலின் ஆரம்ப நிலையில் நம் மக்களுக்கு முகமூடிகளை அணிவது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறியிருக்கிறது. மக்கள் முகமூடிகளோடு வாழத் தொடங்கிவிட்டனர். முகக்கவசங்களும் நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்துவிட்டது" என்றார்.

நோய்த் தொற்று பரவாமலிருக்க முகக்கவசம் அணிவது அவசியம். பாதுகாப்போடு இருப்போம்.

அடுத்த கட்டுரைக்கு