கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் உலகின் ஆறாவது பெரும் பணக்காரரான செர்ஜி பிரின் தன் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இம்முடிவின் மூலம் உலக பணக்காரர்களான பில் கேட்ஸ் மற்றும் ஜெப் பெசோஸ்க்கு அடுத்தபடியாக விவாகரத்து செய்த பணக்காராக மாறியுள்ளார் செர்ஜி பிரின்.
நீதிமன்ற ஆவணங்களின்படி ‘சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகள்’ என்ற காரணத்தைக் காட்டி நிக்கோல் ஷனாஹனை விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறார். இத்தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். தாங்கள் பிரிந்த விவரங்களை ரகசியமாக வைக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தபோதிலும், உலகின் பணக்கார தம்பதிகள் என்பதால் இச்செய்தி பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. மேலும் அவர்களது குழந்தை யாரின் பாதுகாப்பில் இருக்க அனுமதிக்கப்படும் என்பது பற்றி பல்வேறு குழப்பங்கள் இன்னமும் நிலவி வருகின்றன. இதற்கு முன் 2015-ம் ஆண்டில் அன்னீ என்ற பெண்ணுடனான பிரினின் முதல் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
புளூம்பர்க் பில்லியனர்ஸின் தகவல்படி 48 வயதான பிரின் 94 பில்லியன் டாலர் சொத்துக்களை கொண்டுள்ளார். 1998ஆம் ஆண்டு லாரி பேஜ் உடன் இணைந்து கூகுள் நிறுவனத்தை நிறுவிய இவர்கள் இருவரும் 2019-ம் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். ஆனால் இப்பொழுதும் கூகுளின் பங்குதாரர்களாக இவர்கள் தொடர்ந்து உள்ளார்கள். பில் கேட்ஸ் மற்றும் ஃபிரெஞ்சு கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவெடுத்தபோது அவர்கள் பிரிப்பதற்காக இருந்த மொத்த சொத்துக்கள் $145 பில்லியன். அதேபோல அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் ஸ்காட் விவாகரத்தின்போது பிரிப்பதற்கு $137 பில்லியன் சொத்துக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கலிபோர்னியாவின் மிகப்பெரிய சட்ட நிறுவன பார்ட்னரான மோனிகா மஸ்லே கூறுகையில் "விவாகரத்து ஒப்பந்தத்தில் கொடைக்குணம் ஒரு பங்கை கொண்டிருக்கக்கூடும். பிரின் மனைவி ஷனஹான் 'பியா எக்கோ பவுண்டேஷன்' என்னும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் நோக்கம் ‘நீண்ட ஆயுள் மற்றும் சமத்துவம், குற்றவியல் நீதி சீர்திருத்தம் மற்றும் ஆரோக்கியமான வாழக்கூடிய உலகம்’. ஜெப் பெசோஸின் மனைவி ஸ்காட் விவாகரத்துக்குப் பிறகு உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பில்லியன் கணக்கில் டாலர்களை கொடையாக வழங்கினார். பில்கேட்ஸ் தம்பதியினரும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்னும் அறக்கட்டளையின் மூலம் உலகின் மெகா நன்கொடையாளர்களாகத் தங்கள் சொத்தின் பெரும் பங்குகளை நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது" என்றார் அவர்.