உலகின் மகிழ்ச்சியான நாடு எது... இந்தியாவுக்கு என்ன இடம்?! #InternationalDayOfHappiness

2018-ல் இருந்து 2020-வரை மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
2013-ம் ஆண்டு முதல் மார்ச் 20 தேதியை உலக மகிழ்ச்சி தினமாக அறிவித்தது ஐநா. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும். 2021-ம் ஆண்டின் அறிவிப்பு நேற்று வெளியானது.
2018-ல் இருந்து 2020-வரை மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. ஜிடிபி, சமூக ஒற்றுமை, உடல்நலம், தனிமனித சுதந்திரம், பெருந்தன்மை குணம் மற்றும் ஊழல் ஆகியவற்றைக் கணக்கிட்டு அவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபின்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நார்வே, சுவீடன், லக்ஸம்பர்க், நியூசிலாந்து மற்றும் ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்திருக்கின்றன. ஃபின்லாந்து தொடர்ந்து நான்காவது முறையாக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருக்கிறது. 149 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 139-வது இடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் ஆஃப்கானிஸ்தானும் அதற்கு முந்தைய இடத்தில் ஜிம்பாப்வேவும் இருக்கின்றன.