இலங்கையில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான `மிசஸ் ஶ்ரீலங்கா' அழகுப் போட்டியின் பட்டம் சூட்டும் விழாவில் நடந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தப் போட்டியில் முதலில் புஷ்பிகா டி சில்வா என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் குறுக்கிட்ட முன்னாள் `மிசஸ் ஶ்ரீலங்கா' வெற்றியாளரும், கடந்த ஆண்டு `மிசஸ் வேர்ல்டு' பட்டம் பெற்றவருமான கரோலின் ஜூரி சில்வா, `எனக்கு ஒரு கோரிக்கை உள்ளது' என மைக்கில் கூறினார். தொடர்ந்து, `திருமணமாகி இருக்க வேண்டும் என்பதே போட்டிக்கான நிபந்தனை, விவாகரத்தாகி இருக்க வேண்டும் என்பது அல்ல' என்று கூறி, வெற்றிக் களிப்பில் இருந்த சில்வாவின் தலையில் சூடப்பட்டிருந்த கிரீடத்தை பலவந்தமாகக் கழற்றி, அதனை மேடையில் நின்ற இரண்டாவது வெற்றியாளருக்கு (ரன்னர் அப்) அணிவித்தார். கிரீடத்தை பெற்றுக் கொண்டவர் நடுவர்களுக்கு நன்றி தெரிவிக்க, கண்ணீர் மல்க மேடையில் இருந்து இறங்கினார் சில்வா. இந்தச் சம்பவங்களால் நிகழ்ச்சி மேடையிலும், அரங்கிலும் குழப்பமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. கலவர சூழல் உண்டானது.

`மிசஸ் வேர்ல்டு' போட்டி திருமணமான பெண்களுக்காக 1984-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இந்தப் போட்டியில் வெல்பவர்கள், அந்தந்த நாட்டின் சார்பாக உலக அளவிலான `மிசஸ் வேர்ல்டு' போட்டியில் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில், திருமணம் ஆனவர்களுக்கான `மிசஸ் ஶ்ரீலங்கா' போட்டியில் கலந்துகொண்ட சில்வா, அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் விவாகரத்தானவர் என்பதால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள தகுதியிழக்கிறார், எனவே அவர் வெற்றியும் செல்லாது என்று கூறி ஜூரி அவரது கிரீடத்தை போட்டி மேடையிலேயே பலவந்தமாக அகற்றினார். ஆனால், `சில்வா தன் கணவருடன் சேர்ந்து வாழவில்லை என்றாலும் சட்டபூர்வமாக விவாகாரத்து பெறவில்லை, எனவே அவர் `மிசஸ் ஶ்ரீலங்கா' பட்டத்துக்குத் தகுதியானவர், அவர்தான் வெற்றியாளர்' என விளக்கம் அளித்துள்ளனர் இந்தப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சம்பவத்தை அடுத்து கடந்த திங்கள் கிழமை தனது முகநூலில் சில்வா, `தனிப்பட்ட காரணங்களுக்காக நானும் என் கணவரும் பிரிந்திருக்கிறோம். நாங்கள் விவாகரத்து பெற்றிருந்தால் என்னால் ஆரம்பத்திலேயே போட்டியில் பங்குகொள்ள முடியாமல் போயிருக்கும்' எனத் தெரிவித்தார்.
`மிசஸ் ஶ்ரீலங்கா' போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில், `சென்ற வருட `மிசஸ் வேர்ல்டு' ஜூரியின் செயலுக்கு நாங்கள் மனதார வருந்துகிறோம். சில்வா இந்த ஆண்டின் `மிசஸ் ஶ்ரீலங்கா'வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது செல்லும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விழா நடந்த அரங்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இலங்கை காவல்துறையினர் ஜூரியை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, `சில்வா விவாகரத்தானவராகவே இருந்தாலும், போட்டியில் பங்குபெற அது ஏன் தகுதி நீக்கமாகக் கொள்ளப்பட வேண்டும்? பெண்களுக்கான அழகுப் போட்டிகளில் போட்டியாளர்களின் தனிப்பட்ட உறவு நிலை ஏன் கணக்கில்கொள்ளப்பட வேண்டும்?' என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்த விதிமுறைகள் பிற்போக்குத்தனமாக உள்ளன எனப் பலரும் குரல் கொடுத்து, மாற்று வழிகளை ஆலோசிக்க வலியுறுத்துகின்றனர்.