கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

ஃபேஸ் டைம்... பேஷ் பேஷ் டைம்!

ஃபேஸ் டைம்...
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபேஸ் டைம்...

லாக் டௌன் முடிந்தபிறகும் இதுபோன்ற போட்டோ ஷூட்டுகளைத் தொடர்ந்து செய்வேன் போட்டோகிராபர் வசந்த் குமார்.

லாக்டௌன் காலகட்டத்தில் பக்கத்துத் தெருவிற்குக்கூடப் போக முடியாத சூழ்நிலையில் சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை முடங்கி யிருக்கிறார்கள். இந்நிலையில் உலக நாடுகளிலுள்ள மாடல் அழகிகளைப் புகைப்படம் எடுப்பதில் செம பிஸி, போட்டோகிராபர் வசந்த் குமார்.

வீட்டிலிருந்தபடியே அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் மாடல் அழகிகளை, ஐ போனின் ‘ஃபேஸ்டைம் (Facetime)’ செயலிமூலம் புகைப்படம் எடுத்து அசத்திக் கொண்டி ருக்கும் 26 வயது கோயம்பத்தூர் இளைஞர் வசந்த் குமாரோடு பேசினேன்.

ஃபேஸ் டைம்... பேஷ் பேஷ் டைம்!

“ `எப்படி வந்தது ஃபேஸ்டைம்’ மூலம் புகைப்படம் எடுக்கும் ஐடியா?”

“டிராவல், ஃபேஷன், திருமணம் எனப் பல்வேறு விதமான போட்டோகிராபியில் பிஸியாக இருந்த எனக்கு, இந்த லாக்டௌன் வெறுமையையே கொடுத்தது. அந்த நேரத்தில், இத்தாலியில் ஒரு புகைப்படக் கலைஞர், சாதாரண வெப் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். ஆனால், அந்தப் புகைப்படங்களின் தரத்தில் எனக்கு திருப்தியில்லை. அதனை எப்படிச் சரிசெய்து தரமான புகைப்படங்கள் எடுக்க முடியும் என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன். கூகுள் டுவோ, ஸ்கைப் உள்ளிட்ட செயலிகளை முதலில் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால், ஃபேஸ்டைம் மட்டும் தான் நான் எதிர்பார்த்த தரத்தைக் கொடுத்தது. அதன்பிறகு உலக நாடுகளிலுள்ள மாடல் களை அணுகி என்னு டைய போட்டோ ஷூட்டை வீட்டிலிருந்தபடியே தொடங்கினேன்.”

ஃபேஸ் டைம்... பேஷ் பேஷ் டைம்!

“வீட்டிலிருந்தபடியே எப்படி இந்த நீண்ட செயல்முறையை நடைமுறைப்படுத்தினீர்கள்?”

“என்னுடைய விளம்பரத்தைப் பார்த்து, உலகளவிலிருந்து ஏராளமான கோரிக்கைகள் வர ஆரம்பித்தன. அதில் சிலரைத் தேர்ந்தெடுத்து, முதலில் அவர்களுடைய பின்புலம், விருப்பம், வீட்டின் அமைப்பு, அந்தந்த நாடுகளில் சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரம், அந்த நேரத்தில் அவர்களின் வீட்டிலிருக்கும் வெளிச்சம் உள்ளிட்டவற்றை வீடியோ கால் மூலம் பார்த்துக் குறித்துக்கொண்டேன். பிறகு வீட்டின் நிறம் மற்றும் போட்டோஷூட் செய்வதற்கேற்ற ஃபிரேம் போன்றவற்றை வைத்து, போட்டோஷூட்டிற்கான உடைகளைத் தேர்வு செய்தோம். இவை எல்லாவற்றையும் சரிபார்த்து, பிறகு ஷூட்டிங்கிற்கான நேரத்தை முடிவு செய்தோம். இந்த ப்ராசஸ் எதற்கும் வெளியே செல்லவேண்டிய அவசியமில்லை, வீட்டிலிருக்கும் உடைகள் மற்றும் பொருள்களே போதும். இருப்பதை வைத்துச் சிறப்பானதைக் கொடுக்க முயற்சி செய்தேன்.”

பிரகதி
பிரகதி

“இதுவரை எத்தனை ஃபேஸ்டைம் போட்டோஷூட் செய்திருக்கிறீர்கள்?”

“40 நாள்களில் 27 ஷூட் பண்ணியிருக்கிறேன். இதுவரை இந்தியா, பாகிஸ்தான், பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் அழகிகளை ‘க்ளிக்’ செய்திருக்கிறேன். அதில் கலிஃபோர்னியாவில் வசிக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம் பிரகதியும் ஒருவர்.”

“இந்தத் தொலைதூர போட்டோகிராபியில் இருக்கும் நன்மை மற்றும் சவால்கள் என்னென்ன?”

“ ஜாதி, மதம், நாடு, இனம், மொழி, வயது என எந்த வித்தியாசமும் இல்லாமல் போட்டோகிராபி மூலம் புதுமையான கலையை உருவாக்குவதுதான் என் நோக்கமாக இருக்கிறது. 17-லிருந்து 65 வயது உள்ளவர்கள்வரை மிகக் குறுகிய காலகட்டத்தில் மாசு, பயண நேரம் உள்ளிட்ட இடையூறுகள் எதுவுமின்றி இந்த ஃபேஸ்டைம் போட்டோ கிராபியில் கவர் செய்ய முடிகிறது.

ஃபேஸ் டைம்... பேஷ் பேஷ் டைம்!

பாகிஸ்தான், எகிப்து, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஷூட் பண்ணியபோது, மொழி மிகப் பெரிய சவாலாக இருந்தது. இந்த இடங்களில் உள்ள க்ளையன்ட்களுக்குப் பொது மொழி என ஒன்று இல்லை. எனக்கும் அவர்களுடைய தாய்மொழி தெரியவில்லை. அதனால், நான் நினைப்பதைச் சொல்வதற்கு மிகவும் சிரமப்பட்டேன். கூகுள் ட்ரான்ஸ்லேஷன் உதவியோடு ஒவ்வொரு வார்த்தையையும் மொழிபெயர்த்துதான் சொல்லவேண்டியிருந்தது. பிறகு, தொடர்ச்சியான இணைய இணைப்பு பெரும்பாலான இடங்களில் கிடைக்கவில்லை. மேலும், வெவ்வேறு நாடுகளில் ஷூட் என்பதால் நேரம் மாறுபடும். இதுபோன்ற சவால்கள்தான் இருந்தன.”

ஃபேஸ் டைம்... பேஷ் பேஷ் டைம்!

“லாக் டௌன் ஃபேஸ்டைம் போட்டோகிராபிக்கும் சாதாரண போட்டோகிராபிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?”

“பொதுவாக நாம் நிறத்திற்கான பேலட் அல்லது கதையை முடிவு செய்தபிறகுதான் அதற்கான உடை மற்றும் பொருள்களை முடிவு செய்வோம். ஆனால் இந்த ஃபேஸ்டைம் போட்டோகிராபியில், இருக்கும் பொருளுக் கேற்றபடி, நிறத்திற்கான கதையை உருவாக்க வேண்டியிருந்தது. நேரடியாகச் சென்று அந்த இடத்தின் தன்மையை உணர்வதை மிஸ் பண்ணினேனே தவிர வேலையைப் பொறுத்தவரை இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாமே போட்டோகிராபிதான். லாக் டௌன் முடிந்தபிறகும் இதுபோன்ற போட்டோ ஷூட்டுகளைத் தொடர்ந்து செய்வேன்.”