27 லட்ச ரூபாய்க்கு அன்பளிப்புகள்...அரச குடும்பத்துக்கு ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் ட்ரீட்!

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவிற்காக தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரண்மனை ஊழியர்களுக்காக சுமார் 620 பரிசுப் பொருள்களை வாங்கியுள்ளாராம் ராணி. மேலும், இதில் அவர் தனிப்பட்ட முறையில் தன் கைப்பட எழுதிய வாழ்த்து அட்டைகளும் அடங்கும்.
கிறிஸ்துமஸ் மாதம் வந்தாலே, லண்டன் மக்களுக்குக் கொண்டாட்டம்தான். அதிலும் அரச குடும்பத்தினருக்கு டபுள் ட்ரீட். தன்னுடைய மக்களின் கொண்டாட்டத்திற்கு எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பாராம் எலிசபெத் ராணி.

மேலும், ஆண்டுதோறும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கிறிஸ்துமஸ் விருந்துக்கு முறையாக அழைத்து பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியாகக் கொண்டாடித் தீர்ப்பார் என்கிறார்கள் அரண்மனை ஊழியர்கள்.
``பொதுவாகவே கிறிஸ்துமஸ் நாளன்று அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பக்கிங்ஹாம் அரண்மனையிலுள்ள பிரத்யேக அறையில் தங்களின் பரிசு மற்றும் வாழ்த்து அட்டைகளை ராணியிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். பரிசுப் பொருளைக் கொடுப்பதோடு, `வருடம் முழுவதும் நீங்கள் செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்' எனக்கூறி ஒவ்வொருவரையும் வாழ்த்துவது வழக்கம்" என்று முன்னாள் அரச ஊழியர் ஒருவர் அந்நாட்டுப் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

ராணியின் தாத்தா ஐந்தாம் ஜார்ஜால் இந்த வழக்கம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவிற்காக தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரண்மனை ஊழியர்களுக்காக சுமார் 620 பரிசுப் பொருள்களை வாங்கியுள்ளாராம் ராணி. மேலும், இதில் அவர் தனிப்பட்ட முறையில் தன் கைப்பட எழுதிய வாழ்த்து அட்டைகளும் அடங்கும்.
பொதுவாகவே இந்தப் பரிசுப் பொருள்கள் புத்தக டோக்கனாகவோ அல்லது அரண்மனை பரிசுக் கடையிலிருந்து வாங்கிய சிறிய நினைவுப் பரிசுகளாகவோ இருக்கும். அதுமட்டுமன்றி, ஒவ்வோர் ஆண்டும் அரண்மனைக்குள் தனிப்பட்ட வகையில் வருடாந்திர ஷாப்பிங் செய்வாராம் ராணி. இதற்காக லண்டனிலுள்ள முன்னணி டிபார்ட்மென்டல் ஸ்டோர் உரிமையாளர்கள் தங்களின் சிறந்த பொருள்களை எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு வருவது வழக்கம்.

அதெல்லாம் சரி, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசுகளுக்காக ராணி ஒதுக்கிய பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? 30,000 பவுண்ட்ஸ் அதாவது 27 லட்ச ரூபாய்க்கும் அதிகம்!
மெர்ரி கிறிஸ்துமஸ்!